தலைப்பு

சனி, 25 ஜூன், 2022

வேங்கடகிரி யுவராஜா கோபால கிருஷ்ணனின் வியப்புமிகு சாயி அனுபவங்கள்!

சாயி அனுபவங்கள் என்பது போதிமரங்கள்... அதில் தலை சாயும் சாமானியரும் கௌதம புத்தராவர் என்பது சர்வ சத்தியம்... அக ரசவாதங்களோடே ஒவ்வொரு பாபா அனுபவமும் நிகழ்ந்த வண்ணம் திகழ்கிறது.. அப்படி ஒரு அனுபவம் ராஜபரம்பரை இளவரசருக்கு நேர்கிறது இதோ...

பிரிட்டிஷ் ஆட்சியில் மிகுந்த சக்தியோடு விளங்கிய அரச குடும்பங்களில் வேங்கட கிரி மகாராஜாவின் அரச குடும்பமும் ஒன்று...! சுதந்திரத்திற்குப் பிறகு தனது ஆட்சி அதிகாரங்களை எந்த விருப்பு வெறுப்புமின்றி இந்திய அரசாங்கத்திற்கு ஒப்படைத்துவிடுகின்றனர்... இரண்டு விஷயம் ஆச்சர்யம்.. ஒன்று மனம் பக்குவப்பட்டு அவர்கள் தனது அதிகாரத்தை விட்டுக் கொடுத்தது.. அந்த பரிபக்குவத்திற்கு பாபாவே காரணம்... மற்றொன்று பாபா தனது 22 ஆவது பௌதீக வயதில் இருக்கும் போதே 'பாபாவே இறைவன்!' என வேங்கட கிரி குடும்பமே உணர்ந்து கொண்டது! இரண்டுமே ஆச்சர்யகரமானவை! இதயம் இறைவனை உணரவே துடிக்கிறது.. ஆனால் மனதின் அகந்தை மாபெரும் திரை போட்டு தடுத்துக் கொண்டிருக்கிறது.. பாபா எனும் இறைவன் தனது கத்திரி ஆயுதத்தால் கிழிக்காமல் அத்திரை எப்படி விலகி இதயம் முத்திரை பதிக்கும்?!


ஆக வேங்கடகிரி மகாராஜா குடும்பத்தினர் சாயி இதிகாசத்தில் தனிப்பெரும் இடம் வகிப்பவர்கள்! அவர்களின் இளவரசர் கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு பாபா நிகழ்த்திய மகிமைகள் ஏராளம்... முதன்முதலாக கனவில் பாபா மாம்பழம் தந்து பர்த்திக்கு வரவழைத்தது.. தந்தியே அனுப்பாமல் பாபா காற்றையே தந்திகளாக அனுப்பி தன் வரவை வேங்கட கிரி அரசருக்கு ஊர்ஜிதப்படுத்தியது என்பவற்றை ஏற்கனவே யுகத்தில் பகிர்ந்திருக்கிறோம்! 
ஒருமுறை விஞ்ஞானி எர்லெண்டர் ஹாரல்ட்ஸன் வீடியோ கருவியை சுமந்து கொண்டு பாபாவின் நேர்காணல் அறைக்குள் நுழையப்பார்க்கிற போது "இது ஒன்றும் சந்தைக் கடையல்ல!" என பாபா அவரை வீடியோ பதிவு செய்ய அனுமதி தரவில்லை... விளம்பரத்திற்கு அப்பாற்பட்ட பரம்பொருள் பாபா.. வெறும் பொருளே சந்தைக்கடையில் விற்பனை ஆகும்.. பரம்பொருளை பக்தியால் அன்றி எந்தப் பொருளாலும் மனிதன் சம்பாதிக்கவே முடியாது!
நேர்காணல் அறையில் தான் பாபா விட மறுத்தாரே தவிர... அந்த விஞ்ஞானி ஒவ்வொரு பக்தரையும் தனித்தனியாக காணொளி பதிவு செய்கிறார் பாபா சங்கல்பத்தினால்... அதில் வேங்கட கிரி யுவராஜா கோபால கிருஷ்ணன் மிக முக்கியமானவர்! 

யுவராஜா கோபாலகிருஷ்ணன் பாபாவின் அருகிலேயே படுத்து உறங்கும் பரம பாக்கியம் பெற்றவர்... வைகுண்டத்தில் துயில்வதைக் காட்டிலும் வைகுண்டத்தோடே துயில்வது தியானத்திற்கு சமமானது அல்லவா!
ஒருமுறை பாபா கோ.கிருஷ்ணனை "பங்காரு என் பாதத்தை தொடு!" என்கிறார்... அவரும் ஆர்வ மிகுதியில் தொட ஷாக் அடிக்கிறது... "உஷ்..சுவாமி ஷாக் அடிக்கிறது!" என கிருஷ்ணன் பதறிச் சொல்ல.. கலியுக கிருஷ்ணனோ புன்னகை ததும்ப ஸ்வரங்களாகச் சிரிக்கிறார்! பிரபஞ்சப் பேராற்றலை நிர்வகிக்கும் பாதம் அல்லவா பாபா பாதம்!



ஒருமுறை பாபா வேங்கட கிரியில் வாசம் புரிகிற போது "என்னைத் தூக்கு!" என்கிறார்... கொடுத்து வைத்த கோபால கிருஷ்ணரும் பாபாவை தொட்டுத் தூக்க முயல... பாபாவின் பௌதீக உடல் எடை பேப்பரை விட குறைந்த எடையோடு இருப்பதை உணர்ந்து பேர்ச்சர்யப்படுகிறார்... அணுவாய் தன்னை சுருக்கிக் கொள்வதும் விஸ்வரூபமாய் தன்னை விரிவுபடுத்துவதும் இறைவன் பாபாவுக்கு சர்வ சாதாரணமான செயலே!
"சுவாமி போட்டிருக்கும் ஆடை என்ன நிறம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?" என பாபா கேட்கிறார்.. "ஆரஞ்சு" என அவர்கள் பதில் சொல்ல.. அது உடனே உஜாலாவில் முக்கி எடுத்தது போல் நீல நிறமாக மாறிவிடுகிறது... "ஓ " எனக் கைகொட்டி சிரிக்கிறார் பாபா...

"உங்களுக்கு என்ன தின்பண்டங்கள் வேண்டும்?" என பாபா கேட்டால் .. அரச குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வர்... அவர்கள் கேட்ட அனைத்தும் நொடிப் பொழுதில் தருகிறார்... இதயமும் நாவும் ரசிக்க ருசிக்க பக்திச் சுவையிலும் அரச குடும்பம் திளைக்கிறது...!

ஒருமுறை யுவராஜா கோபால கிருஷ்ணனிடம் "நீ இனிமேல் புட்டபர்த்தி வராதே! உன் டைம் வேஸ்ட் .. என் டைமும் வேஸ்ட்" என்கிறார்! உடனே கோ.கிருஷ்ணன் கார் மேகங்களுக்குப் போட்டியாய் கண்ணீரை திறந்து விடுகிறார்..."சுவாமி சுவாமி" என அழுகிறார்... உடனே பாபா இன்ன தேதியில் இன்ன இன்ன வார்த்தையை கோபமாக வேங்கட கிரி மகாராஜாவான அவரது தந்தையை எதிர்த்து கோ.கிருஷ்ணன் பேசியதை வரிவிடாமல் பாபா சொல்லி..." அம்மா அப்பாவிடம் சண்டை போடுபவர்கள் என்னிடம் வந்து என்ன பயன்?" எனக் கேட்கிறார்.. உடனே பாபா பாதங்களில் கோபால கிருஷ்ணனின் கண்ணீர் அபிஷேகம் நிகழ்கிறது... "இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை... இனி இப்படி செய்யாதே!" என உத்தரவிடுகிறார் பாபா!



1950ல் பிரசாந்தி நிலையம் கட்டப்படுகிற சமயத்தில் "சுவாமி.. எனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுங்கள்" என கோபால கிருஷ்ணன் பாபாவுடன் செல்லும் கார் பயணத்தில் கோரிக்கை விடுக்க.. பாபா காரை ஓட்டுகிறார்.. 200-300 கார் செல்ல பாபா தனது ஸ்டியரிங்'கில் இருந்து கையை எடுத்து விட .. கார் தானாகவே ஓட.. பிரேக் தானாகப் பிடிக்க... வளைய... வேகமெடுக்க... புல்லரித்துப் போகிறார் கோ.கிருஷ்ணன்!

ஒருமுறை பக்தர்களுக்கு கடிதம் எழுதி அனுப்ப அதன் மேல் ஒட்டுவதற்கு ஸ்டாம்ப் கேட்கிறார் பாபா! ஒரு ஷீட் நிறைய ஸ்டாம்புகள் அவர் கையில் பக்தர்கள் தருகின்றனர்...அதனை அப்படியே வாங்கி சற்று அசைக்கிறார்... அந்த ஸ்டாம்ப் அனைத்தும் பாபாவின் உருவமாக பதிந்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதில் கோபால கிருஷ்ணனும் ஒருவர்! பிறகு பாபா அதனை ஒவ்வொருவருக்கும் தருகிறார்!

ஒருமுறை தசராவின் போது நாராயண சேவைக்காக சமையல் நிகழ்கிறது... மேகமோ இப்போதே குதிப்பேன் என அடம் பிடிக்கிறது.. சமையல் தவத்தை கெடுப்பதற்கே சபதம் இட்ட மேனகை இடி என தான் வந்துவிட்டேன் என்பதாக சப்த சமிக்ஞை இடுகிறது.. சமையலில் ஈடுபடுகிறவர்கள் பதறுகிறார்கள்.. பாபா அங்கே வருகிறார்..எந்தவித முகபாவனையும் காட்டவில்லை... வானத்தை ஒருமுறை பார்க்கிறார்... நீங்கள் சமையலை தொடரலாம் என சைகை காட்டிவிட்டு கூலாக நடந்து செல்கிறார்‌... மழை ததிங்கிணதோம் என பூமியில் வேகமாய் நர்த்தனம் புரிகிறது.. சமையல் செய்பவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்.. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட சமையலை தொந்தரவு செய்யவில்லை.. அவர்கள் நனையவில்லை... பொருட்கள் பாழாகவில்லை...அவர்களைச் சுற்றி மழை ஒரு தண்ணீர்த் தோரணத்தை மட்டுமே அலங்கரித்து கொண்டாடிக் கொண்டே இருக்கிறது... இதை ஆச்சர்யமாய்ப் பார்க்கும் கோபால கிருஷ்ணனின் கண்களில் எப்போது வேண்டுமானாலும் இடி இல்லாதபடி மழை வரலாம் என அவர் முகபாவனை சொல்லிக் கொண்டிருக்கிறது!



ஒருமுறை வேங்கடகிரி அடுத்துள்ள வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க பாபாவோடு கோபால கிருஷ்ணனும் உடன் செல்கிறார்... அங்கே நான்கைந்து மான்கள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன... "ஆஹா.. இப்போது மட்டும் துப்பாக்கி இருந்தால் இந்த மான்களை ஒன்றுவிடாமல் வேட்டையாடி விடுவேன்!" என்கிறார் கோபால கிருஷ்ணன்.. அதைக் கேட்ட சர்வ ஜீவ ரட்சகரான பாபா கோ.கிருஷ்ணனோடு 2 நாட்கள் பேசவே இல்லை... பாபா பேசா நிலை தந்த வலியால் அன்றிலிருந்து வேட்டை ஆடுவதையே விட்டுவிடுகிறார் கோபால கிருஷ்ணன்...!
கருணை கருணை கருணை சார்ந்த இதயமே இறைவன் பாபா! என்பதற்கு பலகோடி திருச்சம்பவங்கள்.. அதில் ஒன்றே இதுவும்! 

(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா / பக்கம் : 126 - 134 / ஆசிரியர் : க.நாகராஜன்) 

பாபாவின் ஒவ்வொரு அசைவும் நமக்கு பகவத்கீதை நிகழ்த்திக் கொண்டே தொடர்கிறது! சற்று விழிப்புநிலையை நாம் தியானத்தின் மூலம் அதிகப்படுத்திக் கொண்டால் பாபா நம் வாழ்வில் நமக்கு நிகழ்த்தும் திருநகர்வை... நமக்குள் ஏற்படுத்தும் ரசவாதத்தை எளிதாக உணர்ந்து கொண்டு விடலாம்! பாபா எது நமக்கு மேன்மை என சங்கல்பிக்கிறாரோ அதுவே சம்பவங்களாக நமக்கு நிகழ்கிறது... அதில் நம் ஆசைகள் செயலற்றுப் போக அகம் பக்குவப்பட்டுவிடுகிறது!

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக