தலைப்பு

புதன், 29 ஜூன், 2022

ஒரே சமயத்தில் வேங்கடகிரியிலும் கேரள மஞ்சேரியிலும் தனது ஸ்தூல உடம்பில் இருந்த பாபா!

பாபா எங்கும் நிறைந்தவர் என்பது வெறும் வாய் வார்த்தையாலும் பக்தி மிகுதியாலும் சொல்லப்படுபவை அல்ல... அது சர்வ சத்தியம்... அதே நேரத்தில் பாபா தனது ஸ்தூல உடம்பிலும் ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றி சகஜமாய் அருள் புரிந்து செல்பவர் எனும் சத்தியம் விளக்கும் சுவாரஸ்ய சம்பவம் இதோ..

ஹரால்ட்ஸன் எனும் ஒரு உளவியல் விஞ்ஞானி பாபாவின் அற்புதங்களைக் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்துகிறார்.. பாபா அனுபவம் அடைந்தவர்களை நேரில் சென்று விசாரித்து குறிப்பெடுத்துக் கொள்கிறார்... அப்படி அவர் சந்தித்து பதிவு செய்கிற அனுபவம் சிலிர்க்க வைக்கிறது! கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் ஊரில் அங்கே ராம் மோகன் ராவ் தனது குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறது.. அவர்களுக்கு ஒரே மகள்.. பெயர் ஷைலஜா... பள்ளியில் நடைபெற்ற வொர்க் ஷாப்பில் ஷைலஜா மின்சார ஷாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்‌...எட்டே வயது அவளுக்கு... பாவம் கால் எக்ஸிமாவினால் வீங்கிப் போயிருக்கிறது! ஜுரமும் பாலைவன வெய்யிலாய் ஏறிக் கொண்டே போகிறது! வேறொரு கிறிஸ்துவ ஆஸ்பத்திரிகைக்கு கொண்டு சேர்க்கின்றனர்... அப்போதும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை! அது 1964 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி! ஷைலஜா வீட்டில் தூங்கமுடியாமல் அவதிப்படுகிறார்... பூஜையறைக்கு தவழ்ந்து சென்று பாபாவின் திருப்படத்திற்கு முன் கதறி அழுகிறாள்... குழந்தை அவள்.. எப்படி இதனை தாங்க முடியும்.. பிஞ்சு மனம்... குருவியின் தலையில் குடகு மலையை வைத்தால் நசுங்கி விடாதா? பாபாவை தவிர அவளுக்கு யார் துணை வருவார்? யாரும் கதி இல்லை என அந்த சின்னஞ்சிறிய பிஞ்சு அழுகிறது... அந்தக் குடும்பமே பாபா பக்திக் குடும்பம்! ஒரு குடும்பமே பாபாவின் மேல் பக்தியாக இருப்பது என்பது கொடுப்பினை... அப்படியே தூங்கிவிடுகிறாள்.. தாய் மகளை தூக்கி படுக்கையில் கிடத்துகிறாள்...  அடுத்த நாள் அதிகாலை விடியல் விநோதங்களை நிரப்பிக் கொண்டு ஒளிவீசியபடி இருந்தது...


"பயப்படாதே உன்னையும் உன் கணவரையும் உன் குழந்தையையும் காப்பாற்றவே சுவாமி வந்திருக்கிறேன்!" எனும் ஒரு குரல் எழுப்பிவிடுகிறது... தாய் எழுந்து கொண்டு பார்க்கிறாள்... அவளால் அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை... அது கனவு இல்லை... தனது ஸ்தூல உடம்பால் பாபாவின் ஸ்தூல உடம்பைப் பார்க்கிறாள்... அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை... எதிர்பாராத நேரத்தில் மட்டுமே அருள்புரிவது இறைமையின் தர்ம நியதி! எதிர்பார்ப்பு என்பது சுயநலத்தின் வெளிப்பாடு... பக்தி என்பது தன்னையே இறைவனிடம் இழந்து ஆனந்தப் படுகிற நிலை... பக்திக்கும் எதிர்பார்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும்படி விழிநீர் நிறைய பாபாவை தரிசனம் செய்கிறாள் தாய்! அழுகிறாள்... அழுகிற விழிகள் வார்த்தைகளைப் பூட்டிவிடுகின்றன...!


ஷைலஜா எங்கே என்றபடி பாபா அவள் படுத்திருந்த அறைக்குச் செல்கிறாள்... "நீ நேற்று என் படத்தின் முன் என்னை கூப்பிட்டு அழுதாய் அல்லவா அதனால் தான் அதிகாலையே வந்துவிட்டேன்!" என ஷைஷஜாவை எழுப்பிவிட்டு... அவளை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்று அமர்கிறார்! ஷைலஜாவை ஒரு பஜன் பாடல் பாடச் சொல்கிறார்! அவளுக்கு பாடல் தெரியாது போக.. கைவிரல் அசைத்து மலையாள பஜன் பாடல் புத்தகம் சிருஷ்டிக்கிறார்... "உன்னை குணப்படுத்தத் தான் வந்திருக்கிறேன்!" என பாபா சிருஷ்டி விபூதியை தனது கையாலேயே குழந்தை ஷைலஜா காலில் தானே தடவிவிடுகிறார்! துவாபர யுகத்தில் எப்படி சுவாமி தன்னை தரிசனம் செய்ய வந்த நண்பர் சுதாமா (குசேலர்) கால்களுக்கு பாதபூஜை செய்தாரோ... அப்படியே குழந்தை கால்களை தானே தடவி விட்டதும் அதே சுவாமியே என்பதை உணர முடிகிறது!

பக்கத்து வீடுகளில் இருப்பவரையும் அழைத்து வரச் சொல்கிறார்... தாயும் பக்கத்து வீட்டினரை அழைத்துவர... அப்படி தரிசிக்க வந்திருந்தவர்களில் பார்வதி நாயர் என்ற பெண்மணியும் ஒருவர்... "எவ்வளவு நிலம் இருந்தும் என்னால் அரிசி சாதம் சாப்பிட முடியவில்லை பாபா!" என்கிறார் கைகூப்பியபடி... உடனே பாபா ஒரு கோப்பை தண்ணீரில் சில மருந்துப் பொடிகளை சிருஷ்டித்து கலந்து தந்து பருகு என்கிறார்... பருகு என்ற வார்த்தை உருகு என்ற பொருள்'தர.. ஜானகி நாயரும் கண்டேன் அனுமனை என்பதாக ஸ்ரீராமரையே தரிசனம் கண்ட பரவசத்தில் திளைக்கிறார்...!


திருமதி ராவ் வீட்டின் உரிமையாளர் தலையூர்பி மூஸத் என்பவருக்கு காலில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தன... அது தொழுநோயாக இருக்கலாம் என்ற அச்சம் பீடித்திருந்தது... அவர் பாபாவிடம் முறையிட... "கர்மாவின் பயனை ஒன்றும் செய்ய முடியாது!" என பாபா தீர்க்கமாகச் சொல்லிய போதும் அவருக்கு சிருஷ்டி விபூதியை கருணையோடு அளிக்கிறார்!

இப்படி 3 மணிநேரம் அங்கே இருக்கிறார் பாபா! பிறகு "காளஹஸ்திக்கு போக வேண்டும் சுவாமி கிளம்புகிறேன்!" என மறைந்து விடுகிறார்...! அந்தத் தெருவிலேயே பெரிய கூட்டம் சேர்ந்து விடுகிறது.. 3 மணிநேரமும் வைகுண்டத்தில் இருப்பது போல் பரவசப்படுகின்றனர்... அவர்களோடு பாபா அங்கிருந்த அதே சமயத்தில் வேங்கட கிரியில் இருந்து அங்கிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தார் எனும் தகவல் இவர்களுக்கு கிடைக்க மேலும் பரவசப்படுகின்றனர்... அன்று மாலையே பாபா சொன்னது போல் காளஹஸ்தியில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார்!

பாபா எங்கும் நிறைந்திருக்கிறார் என்பது வெறும் காற்று உடம்பால் மட்டுமல்ல ஸ்தூல உடம்பாலும் நிறைந்திருக்கிறார்... அவசியத் தேவை எனில் காட்சியும் தருகிறார் எனும் சத்தியத்தின் திருச்சான்றே மஞ்சேரி அனுபவம்!

(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா / பக்கம் : 190 / ஆசிரியர் : க.நாகராஜன்)


ஒரே விதமான ஒரே நிறமுள்ள சட்டையை மனிதர்கள் வைத்திருப்பர்... குறிப்பாக பக்தர்கள் வெண்சீருடை அணிவது போல்... காவல்துறையினர் காக்கி சீருடை அணிவது போல்... அதைப் போலவே பாபாவின் ஸ்தூல உடம்பும் பல... அது அவருக்கு வெறும் சட்டையே... எந்த சட்டையையும் அவரால் அணிந்து வரமுடியும்... அவரின் அந்த ஸ்தூல வடிவத்திலும்... பல்வேறு வடிவங்களிலும் தோன்ற முடியும்... இன்றளவும் தோன்றிக் கொண்டுமிருக்கிறார்... உடம்பைக் கடந்து போகும் அனுபவங்கள் அடையும் மகான்களுக்கு அந்த அனுபவங்கள் தரும் இறைவன்  பாபாவுக்கு உடம்பு வெறும் ஒரு வாகனம் மட்டுமே! யாராருக்கு எவ்வகையில் அருள் புரிய வேண்டுமோ அவ்வகையில் இன்றளவும் அருள் புரிந்து வருகிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக