தலைப்பு

புதன், 22 ஜூன், 2022

பாபா தனது சிருஷ்டி விபூதியால் இயக்கிய பிரம்மாண்ட கிரேன்!

பாபாவின் லீலைகள் பல்கிப் பெருகுபவை... அதனை வாசித்து அனுபவிப்பதே ஒரு தவம்... அதில் ஆதிகாலத்து லீலைகள் சுவாரஸ்யமாக இதோ...

ஸ்ரீ ஷிர்டி சாயியே ஸ்ரீ சத்ய சாயி என்பதை பூரணமாக உணர்வதற்கு குறைந்த விழிப்புணர்வு நிலை கூட போதுமானது... தனது ஷிர்டி அவதாரத்தில் பாம்பின் வாயில் சிக்கிக் கொண்டிருந்த தவளையை பாம்போடு பேசியே தவளையைக் காப்பாற்றி.. பாம்புக்கும் தவளைக்குமான பூர்வ வாழ்க்கையை விவரித்து... தவளையின் கடந்த ஜென்ம மனித சரீரத்திற்கு தான் காப்பாற்றுவேன் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது போல் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் பாபா நிகழ்த்திய திருச்சம்பவங்கள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன...

பாபாவின் பால்ய நண்பர்களே மீண்டும் ஜாக், ஜில் எனும் நாய்களாகப் பிறந்து பாபாவை அன்பு செலுத்தியது முதல் பல பக்தர்களின் பூர்வ புண்ணிய பிறவிகளை அனுசரித்தே கருணையைத் தேடித் தேடிப் பொழிந்திருக்கிறார்...

பாபா பரப்பிரம்மமே அல்லாமல் இவை எல்லாம் சாத்தியமே இல்லை! இந்த சம்பவங்களை எல்லாம் நூலாசிரியர் அழகாகக் கோர்த்து விவரிக்கிறார்!


பாபாவின் பேரன்பை நாம் உணர்ந்து கொண்டுவிட்டால் நமது மனக் கசடுகள் கரைய ஆரம்பிக்கின்றன... இப்படி அனுபவித்து அனுபவித்து திருந்தியவர்கள் பற்பலர்...  

முற்காலத்தில் ஒருமுறை சித்ராவதி நதியின் அக்கரையில் சில கொள்ளையர்கள் வசித்து வந்தனர்... அவர்கள்பால் பாபா தனது கருணைப் பார்வை வீசுகிறார்... பாபா யாரிடமும் பேதம் பார்ப்பதில்லை... விஷம் வைத்த கரங்களுக்கு வைர வளையல் அணிவிப்பதே பாபாவின் ஒப்புயர்வில்லா மிக உன்னத ஆன்மீகம்! அந்தக் கொள்ளையர்களை ஒருநாள் அழைத்து விபூதி சிருஷ்டித்து தருகிறார்! தனது கருணை ததும்பிடும் பேரன்பால் முழுமையாக மாற்றுகிறார் .. பிரசாந்தி நிலையத்திற்கு அழைக்கிறார்... மனம் திருந்திய அவர்கள் விவசாயிகளாக மாறுகிறார்கள்... கொள்ளை அடித்தவர்கள் அதற்குப் பிறகு வெள்ளை மனமாகி நெல்லை விதைக்கிறார்கள்...

அதில் ஒருவருக்கு பாபாவே வாட்ச்மேனாகவும் பணி அமர்த்துகிறார்! பாபாவின் பேரன்புக்கும் பாபாவின் கர சிருஷ்டி விபூதிக்கும் அத்தனை மகத்துவம்!


பிரசாந்தி நிலையம் உருவாகிற பொழுது... பிரசாந்தி நிலையம் எப்படி உருவாக வேண்டும் எனும் வரைபடத்தை பாபா கொடுக்கிறார்.. இப்போது பார்க்கிற பிரசாந்தி நிலைய ஆசிரம வடிவமைப்பு முழுவதும் பாபாவின் அருளே! எப்படி துவாபர யுகத்தில் மயனை வைத்து சில நாட்களில் துவாரகையை உருவாக்கினோரோ.. அப்படி... துவாரகை அரண்மனையின் வடிவமைப்பும் சுவாமியுடையதே... அந்த வடிவத்தில் எழுப்பியது மட்டுமே மயன்... மந்திருக்கு தேவையான கர்டர்கள் எடுத்து வர வேண்டும்.. ஆனால் பெனுகொண்டாவிலிருந்து வருகிற போது எதிர்ப்படும் கிராமங்களின் தெருக்கள் அக்காலத்தில் மிகக் குறுகலாக இருந்த காரணத்தினால் எவ்வாறு எடுத்து வருவது என இஞ்சினியர் மிகவும் குழம்பிப் போகிறார்.. சுமந்து வருபவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.. வண்டியே ஆயினும் தெருவில் நுழைந்து வருவது சிரமம்.. ஒரு கிரேன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என இஞ்சினியர் அவர் வீட்டில் இருந்து யோசிக்கிற நொடி... ஒரு பெரிய வண்டியின் சத்தம்.. என்னவென்று அவர் எட்டிப்பார்க்க... அது ஒரு பிரம்மாண்ட கிரேன்... பேராச்சர்யப்படுகிறார்... என்னவென்று அவர் விசாரிக்க... அவர் வாசல் வழியாக வருகிற அந்த கிரேன் மிகச் சரியாக அவர் வாசலில் வந்து இயங்க மறுத்துப் பழுதாகி விடுகிறது... மேலும் ஆச்சர்யப்பட்டு... உடனே பிரசாந்தி நிலையம் சென்று பாபாவிடம் தெரிவிக்க... எப்படி கொள்ளையர்களை தனது சிருஷ்டி விபூதி கொடுத்து விவசாயியாக மாற்றினாரோ அப்படி அந்த கிரேனை இயக்க சிருஷ்டி விபூதி கொடுத்து... கொண்டு போய் அந்த கிரேன் மேல் தூவிடு என்கிறார் பாபா... இஞ்சினியரும் பாபா சொல்படியே தூவ அந்த பிரம்மாண்ட கிரேன் இயங்க ஆரம்பிக்கிறது! 

பாபாவின் கருணையே ஒவ்வொரு ஜீவராசிகளின் வாழ்க்கையை அந்த பிரம்மாண்ட கிரேன் செய்யும் வேலையைச் செய்து அகமாற்றத்தை வரவழைத்து ஒரே தூக்காக தூக்குகிறது!


(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா / பக்கம் : 70 / ஆசிரியர் : க.நாகராஜன்)


மனமே சிறுமை பெருமை என வேறுபடுத்திப் பார்க்கிறதே தவிர ஆன்மீக இதயம் யாவற்றையும் சமமாகவே பார்க்கிறது... அந்த ஆன்மீக இதயத்திலேயே பாபா சிம்மாசனமிட்டு அமர்கிறார்! ஒவ்வொரு அவதாரத்திலும் பாபாவுக்கு ஒவ்வொரு ஆயுதம் தேவைப்பட்டிருக்கிறது.. ஏன் கூர் நகங்களைக் கூட தன் ஆயுதமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.. ஆனால் இந்தக் கலியில் தனது எல்லையற்ற கருணையையே ஆயுதமாகப் பயன்படுத்தி அகமாற்றத்தையே அவதார நோக்கமாக்கி இருக்கிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக