தலைப்பு

புதன், 8 ஜூன், 2022

திரு. SMSK மற்றும் மைசூர் கிருஷ்ணமூர்த்தியின் சாயி அனுபவங்கள்!


ஸ்ரீ சத்ய சாயி கல்வி நிறுவனத்த்தில் பயின்ற மாணவர் SMSK (பெயர் சுருக்கப்பட்டுள்ளது) மற்றும் மைசூரைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் வாழ்க்கையில் நிகழ்ந்த அதி அற்புதமான  சம்பவங்களும், அதன் பின்னணியில் உள்ள ஆழமான ஆன்மீகத் தத்துவங்களும்... 


செயலுக்கான நோக்கம் செயலைவிடவும் முக்கியம்! 

 









🌹இறைவன் பாbவப்ரியன்(Bhaavapriyan):

இறைவனின் சரிதங்களை எடுத்துரைக்கின்றபோது நம் சுவாமி (பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா ) குறிப்பிடும் ஒரு மிக முக்கியமான வாக்கியம் என்னவெனில், "இறைவன் பாbவப்ரியன் (உணர்வை விரும்புகிறவன்), பாbஹ்யப்ரியன் (வெளிப்புற நிகழ்வுகளை விரும்புபவன்) அல்ல".

அந்த அறிவிப்பின் தொடர்ச்சி என்னவென்றால், "இறைவனுக்காக ஒரு பக்தன் தன்னகத்தே வளர்த்துக்கொள்ளும் ஏக்கம் மிகவும் முக்கியமானது". ஒரு சந்தர்ப்பத்தில், மாணவன் ஒருவன் சுவாமியிடம், “சுவாமி, ஒருவர் கடவுளின் அருளைப் பெற்றவர் என்பதை  எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டதற்கு, சுவாமி பின்வருமாறு பதிலளித்தார்.

"தனிப்பட்ட முயற்சிகள்  ஏதுமின்றி இயல்பாகவே ஒருவரிடம் கடவுளைப் பற்றிய  சிந்தனையும்கடவுளுக்கான ஏக்கமும்கடவுளுக்கான தேடலும் இருந்தால்  அவர் கடவுளின் அருளைப் பெற்றவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."


பாரம்பரிய இந்திய நடன வடிவம் - பரதநாட்டியம் -பாவம் அல்லது பாவனையின்  முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. 


சுவாமி யாருடன் அதிகமாகப் பேசுகிறாரோ அல்லது அதிகப்பட்ச நேர்காணல்களை யாருக்கெல்லாம் வழங்குகிறாரோ அவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று சுவாமி ஒருபோதும் கூறவில்லை. அத்தகையவர்கள் மட்டுமே சுவாமிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறுவதில்லை. மாறாக, கடவுள் 'புற நெருக்கத்தை' விட 'அக நெருக்கத்தையே' வலியுறுத்துகிறார். அதாவது வெளிபுறத்தோற்றத்தில் காணப்படும் சமீபத்தை விட, ஒருவரின் உள்ளத்தில் ஏற்படும் இறைவனின் சமீபத்தை சுவாமி வலியுறுத்தி ஊக்குவிக்கிறார்.

 

🌹விவரிக்க முடியாத மர்மம் - 2004:

இப்போது SMSK இன் சிறப்பு அத்தியாயத்தைக் காணலாம்.  SMSK ஒரு அமைதியான மாணவன் - ஒரு வருடம் எனக்கு (இந்த கட்டுரையின் ஆசிரியர் -அரவிந்த் பாலசுப்ரமண்யாவிற்கு) இளையவர். அவர் நன்றாகப் படிப்பார், நன்றாக விளையாடுவார், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் நல்ல கட்டுடலைப் பெற்றவர், ஆனாலும் இயல்பில் மிகவும் மென்மையானவர்; ஒரு மென்மையான பயில்வான் எனலாம். ஆண்டு 2004, சுவாமி (சத்ய சாய்பாபா) தனது தெய்வீகத் திருமுன், நிகழ்ச்சிகளை நடத்த மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த நிகழ்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி மாணவர்களுக்கு தெய்வீக நல்வாய்ப்புகளாக இருந்ததன. சுவாமியும் இச்சமயங்களில்  வாழ்க்கைக்கான பாடங்களைக் கற்பிக்க இந்த சந்தர்பங்களைப் பயன்படுத்தினார்.

 ஒருமுறை நாங்கள் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியான மன்னன் பரீக்ஷித்தின் கதை  குறித்த ஒரு சம்பவம் தான் இங்கே காணவிருக்கிறோம். அதற்குமுன், கதை தெரியாதவர்களுக்கு…சுருக்கமாக மன்னன் பரீக்ஷித்தின் கதை!


பரீக்ஷித் வலிமைமிக்க பாண்டவர்களின் பேரன். தந்தையர்கள் கடவுள் தேடலில் அனைத்தையும் கைவிட்ட பின்பு அந்த ராஜ்யத்தை ஆளத் தொடங்கினார். ஒரு நாள், பரீக்ஷித் வேட்டையாடச் சென்றபோது, வழி தவறினார். களைப்புடனும் தாகத்துடனும் அவர் ஒரு துறவியின் இல்லத்தை அணுகினார், அங்கு ஷமிகா என்ற முனிவர் தியானத்தில் இருப்பதைக் கண்டார். முனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்ததால், தண்ணீருக்கான பரீக்ஷித்தின் வேண்டுகோள்கள் அனைத்தும் அவர் காதில் விழவில்லை. பரீக்ஷித் எரிச்சலுடன், அருகில் இருந்த செத்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் வைத்துவிட்டு நகர்ந்தார். முனிவரின் மகனான ஷ்ருங்கி, தன் தந்தையின் கழுத்தில் கிடந்த பாம்பைக் கண்டு கோபமடைந்து, “இந்த இழி செயலைச் செய்தவன் இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குப் பாம்புக்கடியால் இறந்துவிடுவான்” என்று சாபமிட்டார்.

தூய ஆன்மாவின் வார்த்தைகளுக்குள்ள சக்தி, அந்த வார்த்தைகளை நிறைவேறும். "எப்பொழுதும் சத்தியத்தில் மூழ்கி வாழ்க்கையை நடத்துபவன் சத்தியத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறான், அவன்/அவள் சொல்வதெல்லாம் உண்மையாக மாறும்" என்று சுவாமி கூறுவதை இங்கே நினைவு கூறலாம்!. பரீக்ஷித் தனக்கிடப்பட்ட சாபத்தை அறிந்தார். அதனால் தனது வாழ் நாளின் கடைசி ஏழு நாட்களையும் இறைவனின் மகிமைக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பதில் செலவளிக்க உறுதி பூண்டார். அந்தக் கதைகளே இன்று ஸ்ரீமத் பாகவத புராணமாக உருவெடுத்துள்ளன.

முனிவரின் கழுத்தில் பாம்பை வைக்கும் தாகமுள்ள பரீக்ஷித் வேடத்தில் SMSK நடிக்க வேண்டியிருந்தது. நாடகத்தில் அவருடைய பகுதியோ மிகவும் எளிமையானது - அவர் தன் கழுத்தை இறுக்கிப் பிடித்தவாறு வர வேண்டும், தாகத்துடன் அரற்ற வேண்டும், செத்த பாம்பை முனிவர் கழுத்தில் வைத்து காட்சியை விட்டு வெளியேற வேண்டும். இது வெறும் 30-35 வினாடிகள் நடக்கக்கூடிய சிறிய காட்சியே ஆகும். ஆனால் அன்று மாலையில் நடந்த நாடகப் பயிற்சியின் போது, அவர் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவரது நடிப்பு, நம்பவைக்கும் படியாக இல்லை. ஒரு சாதாரண வேடத்தைக்கூட அவரால் செய்ய முடியவில்லையே என்று  நாடக 'இயக்குநர்கள்' லேசாக எரிச்சல் அடைந்தனர். அவர்கள் SMSK விற்கு கற்பிக்கவும், திருத்தவும், அந்தக் கதாபாத்திரத்தை உணர்த்தவும் முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை, பல முயற்சிகளுக்குப் பிறகு, சென்று ஓய்வெடுக்குமாறும், மறுநாள் மீண்டும் முயற்சிக்குமாறும் SMSKவிற்கு  சொல்லப்பட்டது. மறுநாளே அந்த நாடகம் அரங்கேற இருந்ததால்... காலையில் அவரால் சரியாக நடிக்க முடியாவிட்டால், அவர் மாற்றப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது.


மறுநாள் காலை நாடகப் பயிற்சியின் போது, தாகம் எடுத்த பரீக்ஷித்தாக  அவர் உள்ளே நுழைந்தபோது, அவர் குறைந்தபட்சம் தாகமுள்ளவராகக் காணப்பட்டார். மேலும் தண்ணீருக்கான அவரது வேண்டுகோள் சற்று உறுதியாகக் காணப்பட்டது! எனவே, அவர் அந்த 30 வினாடிகளுக்கான தனது கதாபாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார். ஸ்வாமிக்கு முன்பாக நடிக்கும் வாய்ப்பு ஒரு மகத்தான வாய்ப்பு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அதை இழக்கும்போது ஏற்படும் துக்கம் தான் பெரியது. இந்தப்  பொன்னான வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற பயம்தான் SMSK-ஐ காலையில் சிறப்பாக செயல்பட வைத்தது என்று அனைவரும் நினைத்தனர்.

மாலை வந்தது,  மாணவர்களின் மகிழ்ச்சி பொங்கும் வகையில், நாடக நிகழ்ச்சியை நடத்த சுவாமியும் அனுமதித்தார். SMSK, தனது பாத்திரத்தை அரங்கேற்ற வேண்டிய தருணமும் வந்தது, அதில் மன்னன் பரீக்ஷித் உண்மையில் தாகத்துடன் இருந்தார். அவர் தண்ணீருக்காக கூக்குரலிட்டபோது, ஒரு குவளைத் தண்ணீரை அவருக்கு கொண்டு சென்று கொடுத்துவிடுவோமா என்று பார்வையாளர்கள் இறக்கப்படும் படியாக இருந்தது, அனைவரும் நெகிழ்ந்தனர். கதையின்படி பரீக்ஷித், முனிவரின் கழுத்தில் ஒரு பாம்பை வைத்துவிட்டு நகர்ந்தார்.  இயக்குனர்களைப் பொறுத்த வரையில், SMSK தனது பங்கை நல்லபடி செய்துமுடித்துவிட்டார். மற்ற முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் SMSK வந்த காட்சியானது, பார்வையாளர்களால் சுலபமாக மறக்கப்பட்டது. ஸ்வாமியுடன் குறைந்தது 10,000 பக்தர்கள் அன்று  சாய் குல்வந்த் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். நல்லபடியே உற்சாகமான கரவொலியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

சுவாமி நாற்காலியில் இருந்து எழுந்ததும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  மாணவர்கள் அனைவரும் ஒருங்கே சேர்ந்து நின்றனர். சுவாமி  ஒரு மாணவரைத் தனதருகே வருமாறு சைகை செய்தழைத்தார்,அது வேறுயாருமல்ல... SMSK தான் என்றால் நம்ப முடிகிறதா? பின்னர் தன் தெய்வீகத் திருக்கரத்தின் அசைப்பிலே  ஒரு அழகிய மரகத மோதிரத்தை உருவாக்கினார். அதை SMSKயின் விரலில் மாட்டியபடி மகிழ்ச்சியில், “ஆ! சரியான பொருத்தம்! ” என்றும் கூறினார். அதோடு அந்த சிறப்பு தருணத்தின் தனிப்பட்ட புகைப்படமும் SMSKக்கு பின்னாளில் கிடைத்தது.

நான் (இந்தக் கட்டுரையின் ஆசிரியர் -அரவிந்த் பாலசுப்ரமண்யா) சிந்தனையில் மூழ்கினேன். SMSK சிறப்பாகச் செயல்பட்டது பற்றி சந்தேகமில்லை, ஆனால் அவருடைய கதாபாத்திரம் தலைமைப் பாத்திரமும் அல்ல, அவரொன்றும் மற்ற எல்லோரைவிட அதிகமாகக் கைதட்டல் பெற்றவரும் அல்ல.  அவரை விட சிறப்பாக செயல்பட்ட பலர் இருந்தனர், அவர்களெல்லாம் இப்போது வரிசையாக நின்று, SMSKவிற்கு கிடைக்கும் ஸ்வாமியின் ஆசீர்வாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் எப்படி இந்த நாளினுடைய சிறப்பான பரிசினைப் பெறுகிறார்? ஒரு ஹீரோவாக ஆனார் ? இங்கே நிறைவேற்றப்படும் தெய்வீக நீதி/நியாயம் என்னவோ? என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

  

சுவாமியின் பாராட்டுக்கும் பரிசுக்கும் SMSK தகுதி பெற்ற சூட்சுமம், எனக்கு (இந்தக் கட்டுரையின் ஆசிரியர் -அரவிந்த் பாலசுப்ரமண்யா) விளங்கவில்லை எனினும் பகவானின் ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னாலும் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்று நம்பினேன். அன்று இரவு நீர் அருந்தச் சென்றபோது, வாட்டர் கூலர் அருகில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அன்றைய தினம் அவர் பெற்ற அந்தப் பெரும்பரிசினைக் குறித்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவரை வாழ்த்தினேன். மேலும் அவரது நடிப்பின் ரகசியம் என்ன என்று கேட்டேன்.

அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்; “நாடகப் பயிற்சியின் போது... என்னால் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். ஆனாலும் சுவாமியை மகிழ்விக்க விரும்பினேன். அதனால் நேற்று மாலையில் இருந்து இன்று மாலை வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட நான் குடிக்கவில்லை. நான் உண்மையிலேயே மேடையில்  தாகமாக இருந்தேன்,  அதனால் நாடகத்தின் என் வேண்டுகோள்கள் என் உண்மையான தாகத்தினால் வெளிப்பட்ட கதறல்களே ஆகும்".

இதைக் கேட்டவுடன் நான் (இந்தக் கட்டுரையின் ஆசிரியர் -அரவிந்த் பாலசுப்ரமண்யா) நிஜமாகத் திகைத்துப் போனேன்! இறைவனுக்கு மட்டுமே விளங்கக் கூடிய முழுக்கதையின் மிகச்சிறிய பகுதியை மட்டுமே மனிதர்களாகிய நாம் அறிவோம் என்பதை உணர்ந்தேன். "Bigger Picture" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படக்கூடிய பெரிய(முழுமையான) படத்தைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நான் உறுதியாக நம்பினேன். மேலும் SMSKவிற்கு மானசீகமாக என்னுடைய வணக்கத்தைச்  செலுத்தினேன். அவர் திருப்தியுடன் தண்ணீர்  குடிப்பதைப்  பார்த்து மகிழ்ந்தேன்.


நீங்கள் ஒரு சதுரத்தைப் பார்க்கிறீர்களா அல்லது செவ்வகங்களைப் பார்க்கிறீர்களா?



எவ்வளவு பெரிய படிப்பினை? ஒரு கதாபாத்திரத்தின் திறமையோ, அவர் பங்குபெறும் கால அளவோ அல்லது அவர் பெரும் கைத்தட்டலோ கூட இறைவனுக்குப் பெரிதல்ல. உலக வாழ்க்கை என்னும் நாடகமேடைக்கும் இது பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஒரு செயலை விடவும் செயலுக்குப் பின் உள்ள நோக்கம் புனிதமாகநேர்மையாக  இருக்கும்போது அது இறைவனின் நேரடிப் பாராட்டுதலைப் பெரும் தகுதி பெற்றதாகிறது!

இப்போது, ​​இந்தியாவின் பழைய மைசூர் மாகாணத்தில் எழுத்தராக இருந்த திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின்  கதையை மேற்கோள் காட்டுவது இந்த இடத்தில் சரியானதாக இருக்கும். இந்த குறிப்பிட்ட நிகழ்வானது, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை வரலாறான சத்தியம் சிவம் சுந்தரம் புத்தகத்தின் பகுதி 1 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

🌹 கிருஷ்ணமூர்த்தியின் அனுபவம்- 1942:


கிருஷ்ணமூர்த்தி என்பவர் மைசூர் அரசு செயலகத்தில் சிவில் சர்வீஸ் எழுத்தராக இருந்தார். அப்போது  ஸ்வாமிக்கு வெறும் 17 வயதுதான் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில், சுவாமியினுடைய ஆடை என்பது மேலே ஒரு வெள்ளை அரைக்கை சட்டையும், இடுப்பில் ஒரு வேட்டியும் தான்! . சுவாமியினுடைய  தெய்வீகத்தைப் பலர் நம்பாத சூழலில், கிருஷ்ணமூர்த்தி ஸ்வாமியின் ஆரம்பகால பக்தர்களில் ஒருவராக இருந்தவர். உண்மையைச்  சொல்வதானால், அவர் ஸ்வாமியின் தெய்வீகத்தை ஒரு வேட்டைக்காரரைப் போல் தொடர்வதை வழக்கமாகக்  கொண்டிருந்தார். அவர் பின்வருமாறு சுவாமியிடம் வேண்டுவார்; "நீங்கள் கடவுள் என்று எனக்குத் தெரியும், உங்கள் உண்மையான வடிவத்தை எனக்குக் காட்டுங்கள்!"


அவரைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தபோது,


சுவாமி அவருக்கு ஷீரடி சாய்பாபாவின் படத்தைக் கொடுத்தார், அது அந்த இடத்திலேயே ஸ்வாமி உருவாக்கித் தந்து, அதனைத் தியானிக்குமாறு வழிகாட்டினார். "அந்தப் படத்தைப் பார்த்துக்கொள்" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லிவிட்டு,  வேறு சில பக்தர்களுக்கு  அவர்களின் வீடுகளில் தரிசனம் அளிக்க அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.  அப்போதெல்லாம் வீடுகளுக்கு சென்று சுவாமி தரிசனம் கொடுப்பார் ! (என்ன அழகான தெய்வீக நாட்கள்!)

மதியம் 12 மணியளவில் சுவாமி திரும்பினார். வாசலைத் தாண்டிய போது, உள் அறையில் கிருஷ்ணமூர்த்தி ஒரு பெரிய ஆனந்த கூவலை எழுப்பியவாறு  மயங்கி விழுந்தார்! அவர் ஸ்வாமியைக் கூட பார்க்கவில்லை. சுயநினைவுக்கு வந்தபோது, அவர் நடுநடுங்கியபடி மூச்சுத் திணறினார். மேலும் அவர் கண்களைத் திறக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் அவர் ஸ்வாமியைப் பின்தொடரும் முயற்சியாக அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக முகர்ந்து பார்த்த படி பின்தொடர்ந்தார். 

"தயவுசெய்து! உங்கள் பாதங்களை நான் தொட அனுமதியுங்கள்!" என்று கதறினார் கிருஷ்ணமூர்த்தி.

ஸ்வாமியைத்  தரிசனம் செய்யும் (கிட்டத்தட்ட) அனைவருக்குமே நேர்காணல்கள் கிடைக்கப்பெறும் நாட்கள் அவை. இருப்பினும், கிருஷ்ணமூர்த்திக்கு மட்டும், சுவாமி அவரது விருப்பத்தை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. கிருஷ்ணமூர்த்தியும் தன் பங்கில் பிடிவாதமாக இருந்து, சுவாமியின் தாமரை பாதங்களில் தன் பார்வையைப் பதிக்கும் வரை கண்களைத் திறக்க மறுத்துவிட்டார். இது பல நாட்களாகத்  தொடர்ந்தபோது, கிருஷ்ணமூர்த்தியின் சார்பாக வேறு சில பக்தர்கள் சுவாமியிடம் பரிந்து பேசினர். சுவாமியின் பதில் எளிமையாகவும் உறுதியாகவும் இருந்தது;

"என் பாதங்களைக் கண்டால், அந்த அனுபவத்தின் எழுச்சியைத் தாங்க முடியாமல் அவர் இறந்துவிடுவார்."


🌹 கடலோடு கலப்பதற்கான ஆற்றின் ஏக்கம்!

பின்னர், சுவாமி அவருக்கு விபூதி கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார், இருந்தும் தனது பாதங்களை அவருக்கு காட்டவில்லை. வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும், கிருஷ்ணமூர்த்தியால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. கண்களை மூடிய நிலையில், சுவாமி தங்கியிருந்த சிவில் சர்வீசஸ் பங்களாவை நோக்கி மோப்பம் பிடித்தபடி வந்து சேர்ந்தார். கிட்டத்தட்ட எல்லாக் கதவுகளையும்  ஜன்னல்களையும் தட்டியபடி , வீட்டின் வளாகத்தைச் சுற்றி வந்தார். ஸ்வாமியின் மனம் இளகவில்லை என்று எண்ணி, உண்ணுவதையும் நீரருந்துவதையும் கூட கைவிட்டார்.

 

இதனால் பதற்றமடைந்த பக்தர்கள், கிருஷ்ணமூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு உடல் மற்றும் மனநல சிகிச்சை தேவை என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் இப்போது, ஸ்வாமி அவருக்காக கொஞ்சம் தண்ணீரை அனுப்பினார், அதைப் பருகியபின் அவர் முழு ஆற்றலையும் பெற்று வீடு திரும்பினார். ஆனால் அப்போதும் கூட கிருஷ்ணமூர்த்தி இன்னும் தன கண்களைத் திறக்கவில்லை! அதோடு அனைவரையும் பஜனைப் பாடச்சொல்லி கேட்டுக்கொண்டார்.

பஜனையின் போது கிருஷ்ணமூர்த்தி தனக்குள் என்ன அனுபவித்தார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். பஜன்களுக்குப்  பிறகு, முகத்தில் புன்னகையுடன் அமைதியாகப் படுத்தார், அதன் பின்னர் அவர் ஏழவே இல்லை! அவர் இறைவனின் பாதங்களை அடைந்து விட்டார் ; நதி கடலைக் கண்டு சேர்ந்தது. விவரிக்க முடியாத பேரின்பத்தை அடையப்பெற்ற அந்த ஆன்மா எத்தகு தகுதிவாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும் !

 

 🌹 எனது கதை?


இந்தக் கதையைப் படிக்கும் போதெல்லாம், நான் சுவாமியினுடைய பாதங்களை எண்ணற்ற முறை  தொட்டதை நினைத்துப் பார்க்கிறேன்! கடலைக் கண்ட நதியாய் உணர்ந்து ஐக்கியப்படும் உணர்விற்கும்  எனக்கும் இன்னும் எவ்வளவோ தூரம் இருப்பதாகத் தோன்றுகிறது!  மேலும், இறைவனுக்காக ஏங்கித் தவிப்பதும், முழுத்தீவிரத்தோடு அவரைத் தேடுவதும், அவர் அளிக்கும் 'வாய்ப்புகளை' விட மிகப் பெரிய ஆசீர்வாதம் என்கின்ற உண்மை மேலும் எனக்குள் வலுப்பெறுகிறது.

உண்மையில், ஒரு பக்தனுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு 'வாய்ப்பும்', இறைவனுக்கான தீராத தாகத்தைத் தூண்டுவதற்கேயாகும்.

மூலம் : சாயிராம் திரு.அரவிந்த் பாலசுப்ரமண்யா

தமிழாக்கம்: கவிஞர் சாய்புஷ்கர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக