தலைப்பு

செவ்வாய், 14 ஜூன், 2022

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கனவில் உத்தரவிட்டு பாபாவிடம் ஸ்ரீராம தரிசனம் பெற்ற நாகரத்தினம்மா!

இறை ரூபங்கள் எல்லாம் பாபாவிடம் ஐக்கியமாகி இருக்கின்றன என்பதற்கு பாபா தன்னை பல இறை ரூபங்களாக வெளிப்படுத்திக் கொண்டமையே உதாரணமும்... சாட்சியும்... கடலில் நதிகள் இணைந்திருக்கின்றன... தேன் கூட்டில் பல பூக்களின் தேன் துளிகள் கலந்திருக்கின்றன என்பது போல் பரப்பிரம்ம பாபாவிடம் பல இறை ரூபம் இணைந்திருக்கிறது... இதன் ஆழமான உணர்தலில் தான் வேறு  ஸ்ரீராமர் வேறில்லை எனவும் பாபா புகழ்வாய்ந்த பழம்பெரும் பெங்களூர் கலைஞருக்கு உணர்த்திய மகிமா நிகழ்வு இதோ...


1878 நவம்பர் 3 பிறந்த பெங்களூர் நாகரத்தினம்மா புகழ்வாய்ந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்... கலை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்... ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்களின் கலை வெளிப்பாட்டை நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய நெஞ்சுரம் கொண்டவர்... திருவையாற்றில் சங்கீத மும்மூர்த்திகளின் முன்னோடியான ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதியில் கோவிலை எழுப்பியவர்!

ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி  மற்றும் கோவிலில் அம்மையார் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு வாசகங்கள்

 பாடல் மட்டுமல்லாது வயலின் இசையிலும் நடனத்திலும் வல்லுநர்! நிரம்ப சம்பாதித்து வருமான வரிகள் கட்டிய முதல் பெண் கலைஞர்... திருவையாற்றில்  ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா ஏற்பட உதவி செய்து அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிவகைசெய்த பெரும் சாதனைப் பெண்மணி இவர்! பாரதி கண்ட புதுமைப் பெண்ணே இவர்!


மெட்ராஸ் மாகாணத்தில் புகழ்வாய்ந்த இந்த பெங்களூர் நாகரத்தினம் அம்மையார் கனவில் ஒருநாள் சங்கீத மும்மூர்த்தியான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் செல்கிறார்... சுவாமிகள் மேல் மிகவும் பக்தி கொண்டவர் அவர்... அதன் சாட்சியே அம்மையார் எழுப்பிய  ஸ்ரீ தியாகராஜ சன்னதிக் கோவிலும்...‌கனவில் தோன்றிய சுவாமிகள் "கலியுகத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்திருக்கிறார்...அவர் வேங்கட கிரி செல்லும் வேளையில் அவரை தரிசித்து அனுகிரகம் பெற்று வா!" எனக் கட்டளை இடுகிறார்! மெய் சிலிர்த்துப் போகிறது அம்மையாருக்கு.. நம் ஸ்ரீ ராமரா? கலியுகத்திலா? பரவசமாகிவிடுகிறார்! வாய்ப்பாட்டு கலைஞர்கள் அனைவருக்கும் மூலகுரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளே! சுவாமிகள் எப்பேர்ப்பட்ட ஸ்ரீராம பக்தர் என தேசமே அறியும்! "ராமா ராமா!" என அவர் உருகிக் பாடியதால் தான் இன்றளவும் கர்நாடக சங்கீதமே உயிர்ப்போடு திகழ்ந்து வருகிறது... ஆகவே சுவாமிகளே உத்தரவிட்டபடியால் உடனே அம்மையார் வேங்கட கிரி மகாராஜாவிடம் தொடர்பு கொண்டு விபரம் அறிந்து... அந்த நாள் வரை பேராவலோடு காத்திருக்கிறார்... 


பாபா எப்படி இருப்பார்? என்று கூட தெரியாது!  வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்! ஸ்ரீ ராம தரிசனம் சாதாரண நிகழ்வா? பாபா 1951'ல் தனது 25 ஆவது பௌதீக வயதில் வேங்கடகிரி செல்கிற வேளை அவரை அம்மையார் தரிசிக்கையில் பாபா அவருக்கு ஸ்ரீ ராம தரிசனமும்... கை அசைப்பில் ஸ்ரீ ராம விக்ரகமும் தந்தருள்கிறார்.. பெற்றுக் கொண்டு பாபா காலடியில் அமர்ந்து பாவ சமாதி (Bhaava Samaadhi) பேருணர்வு நிலை அடைகிறார்... பாபா அளித்த ஸ்ரீ ராம தரிசனத்திலேயே லயித்துப் போகிறார்! அகத்தில் அந்த தரிசன‌ அனுபவத்தை உணர்கிறார்... வெளியில் கண்ட ஸ்ரீ சத்ய சாயி ராமரை உள்ளே காண்கிறார்... கண்ணீர் மாலை மாலையாக அந்த ரூபத்திற்கே ஆராதனை செய்யப்படுகிறது! ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியான அன்று வேங்கட கிரி அரண்மனையில் பாபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 மணிநேரம் தியாகராஜ கீர்த்தனைகள் இசைக்கிறார் அம்மையார்... பிறகு உயிர் பிரிகையில் உங்கள் பெயரையே உச்சரித்துக் கொண்டு உயிர் உங்களோடு கலந்திட வேண்டும் சுவாமி என ஒரே ஒரு கோரிக்கை விடுக்கிறார்! அது தான் மிக சத்தியமான பக்திப்பூர்வமான கோரிக்கை...! பாபாவும் சம்மதிக்க... அம்மையாரின் அந்திம காலத்தில் ஸ்ரீ தியாகராஜர் சமாதி ஆகி உள்ள திருவையாறிலேயே நிரந்தரமாகத் தங்குகிறார்.. தனது சொத்துக்கள் அனைத்தும் தான்  தியாகராஜருக்காக எழுப்பிய கோவிலுக்கே சமர்ப்பிக்கிறார்... அவரது இறுதி நிமிடங்கள் பாபா சொன்னது போலவே அவரது நாமத்தோடே நிறைந்தது...


 தியாகராஜர் சமாதிக்கு நேர் அருகே... (சுவாமிகளை சதா தரிசனம் செய்து கொண்டிருப்பது போலவே) அவரை அடக்கம் செய்து.. அங்கே ஒரு உருவச்சிலை இன்றளவும் நாகரத்தின அம்மையாரின் பக்தியை நவரத்தினமாய் பிரகாசிக்கிறது! ஆம் பாபாவிடம் ஸ்ரீராம தரிசனம் பெற்றவராய் விளங்கியவர் ஆண்டு 1952ல் தனது 74 ஆவது வயதில் பாபாவோடு ஐக்கியமாகிறார்! 

நம்மை தன்னோடு ஐக்கியம் ஆக்குவதற்காகவே பரப்பிரம்ம பாபா இன்றளவும் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்!


(ஆதாரம் : கருணை பொழியும் ஸ்ரீ சத்ய சாயி / பக்கம் : 107-108/ ஆசிரியர் : பி.எஸ் ஆச்சார்யா & Online Articles)


இப்படி இறை ரூபங்கள் வேறு... தான் வேறில்லை என பாபா தனது ஷிர்டி அவதாரம் முதலே நிரூபித்த சான்றும் அனுபவமும் ஏராளம்! பொற்றாமரையில் பூத்த கந்தனும் தானே... சரஸ்வதி நதியில் கலந்த காகுத்தனும் தானே என பாபா சத்ய பிரம்மமாய் நித்திய நிர்மலமாய் நிலத்திலும் நம் நெஞ்சிலும் நிறைத்திருக்கிறார்! தாகம் எடுப்பவர் தண்ணீரை காதுகளில் விட்டுக் கொள்வதில்லை அது போல் வாழ்வில் ஆன்ம ஞானம் அடைய விரும்புபவர் இறை ரூப பேதங்களால் மனதை நிரப்பிக் கொள்ளாமல் பாபாவிடம் சரணாகதி அடைவதிலேயே குறியாக ஒரே சமதர்ம நெறியாக இருப்பர்!


  பக்தியுடன் 

வைரபாரதி



பெங்களூர் நாகரத்தினம்மா அம்மையாரின் அரிய புகைப்படங்கள்... 




1 கருத்து:

  1. பெயரில்லா19 மே, 2023 அன்று PM 6:12

    தவச்செல்வியும்..தியாகராஜரின் பரம பக்தையுமான..நாகரத்னம்மாள் பெற்ற பாக்யம்..நாமும் பெற்று.. பகவானின் திருவடி அடைய பிரார்த்திப்போம்!!..

    பதிலளிநீக்கு