தலைப்பு

செவ்வாய், 21 ஜூன், 2022

கிறிஸ்துவராக மதம் மாற இருந்த ஒருவர் கிறிஸ்துமஸ் அன்று கேட்ட பாபா உரை!

பல்வேறு வகையான அனுபவங்கள் பல்வேறு விதமான மனிதர்களுக்கு... அவை இன்றளவும் தொடர்கின்றன... அதில் ஒரு சில உன்னத அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...

அனந்தப்பா என்கிற நபர்... பெரும் அப்பாவி... வெகுளி... சேவைத்திலகம் கஸ்தூரி அவரை தன் வீட்டுப் பியூனாக வைத்துக் கொள்கிறார்... அவர் வீட்டில் நிகழும் குருவார பஜனைக்கான பூக்கள் பழங்கள் வாங்குவது எல்லாம் திரு அனந்தப்பா தான்... அனந்தப்பா ஒரு குழந்தை... இறைவன் பாபாவிடம் மனித புத்திசாலித்தனம் செல்லுபடியாவதில்லை... தூய உள்ளத்து அப்பாவிகள் தான் அவரின் சாம்ராஜ்யத்தில் சரணாகதிக்கான சாட்சியாய் நிலைபெறப் போகிறவர்கள்... சேவைத் திலகம் வீட்டில் பஜனைகள் நடைபெறுகிற போது தூங்கி வழிவார் அனந்தப்பா.. ஆரத்தியின் மணி ஒலி கேட்டு விடுக்கென எழுந்து கொண்டு பாபா படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்... பாபா அவருக்கு பல மகிமைகள் நிகழ்த்துகிறார்... பல நேர்காணல் தருகிறார்... அவரை புடம் போடுகிறார்... அப்பாவியான அவர் பாபா சொல்லை சந்தேகமின்றி கேட்டு நடக்கிறார்... தான் புத்திசாலி என நினைக்கிற ஒருவரின் எண்ணம் கூட ஆன்மீக வாழ்க்கைக்கு தடையாக இருக்கிறது... அந்தத் தடை கூட அனந்தப்பாவுக்கு இல்லை... ஒரு முறை பாபா நேர்காணலில் அனந்தப்பாவிடம் யாருக்கும் இதுவரை சொல்லாதவாறு "உடல் நலமில்லாத உன் குழந்தைக்கு வீணாக காசு செலவழித்து மருத்துவம் பார்க்காதே... மருத்துவர்கள் உனக்கு தேவையில்லாமல் செலவு வைக்கிறார்கள்... இன்னும் அவள் ஆயுள் ஓரிரு வாரம் தான்!" என்கிறார் இறைவன் பாபா! மற்றவர் என்றால் அழுது புரண்டு மகளை காப்பாற்று சாமீ என பாசப் பேய் பிடித்து அகோர நர்த்தனம் புரிந்திருப்பர்... ஆனால் அனந்தப்பாவோ "ஆகட்டும் சுவாமி... உங்க சங்கல்பம்!" என்று சொல்லி பாபா திருவார்த்தையில் திடம் கொண்டு விவேகம் பெற்றுவிடுகிறார்... அனந்தப்பாவை போன்ற பக்தர்களே பாபாவுக்கு உண்மையான பக்தர்கள்!


Padma Bhushan S Ramakrishnan(Bhavan's journal) 

ஒருமுறை பவன்ஸ் ஜர்னல் பத்திரிகை ஆசிரியர் ராமகிருஷ்ணன் கிழக்காப்பிரிக்காவில் தொழில் நடத்தியவர்... பம்பாயில் வாழ்ந்த அவரின் மூத்த மகன் மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்று வருகிற போது தான் கிறிஸ்துவத்தை தழுவப் போவதாக தந்தையிடம் சொல்கிறார்... அதிர்ச்சியில் தந்தை வராமல் அடம் பிடித்த தன் மகனை பாபாவிடம் பிடிவாதமாக அழைத்துப் போகிறார்... அன்று கிறிஸ்துமஸ்...  தர்ம ஷேத்ராவில் பாபா கிறிஸ்துவை பற்றி உரை நிகழ்த்துகிறார்... உரை கேட்டுக் கொண்டிருக்கையில் கண்ணீர் உரைநடை அவன் கன்னமெனும் காகிதத்தில் எழுதுகிறது... தந்தையை கட்டி அணைக்கிறார் மகன்... ஹிந்து மதம் அனைத்தையும் உள்ளடக்கிய மதம் என நன்கு தெளிவுபடுத்தி விட்டார் பாபா... அவரின் பேரன்பு ஒழுகும் புன்னகை தரிசனம் தன் இதயத்தை கரைத்துவிட்டதாகவும் திறந்த மனதோடு அவர் பேசுகிறார்... ஓட்டல் மாறி மாறிச் சென்று மெனு கார்டை வாசிப்பதால் மட்டும் ஒருவரின் பசி ஆறுவதில்லை... அந்த மெனு கார்டில் உள்ளதை ருசி பார்க்க வேண்டும்... அது போல் தான் மதங்களும்... எந்த மதமாயினும் அந்த மதக்கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்... வெறும் புறம் மாறுவதால் நம் அகம் மாறாமல் எந்த நன்மையும் நேர்ந்துவிடப் போவதில்லை என்பதை உணர்கிறார் ராமகிருஷ்ணரின் மகன்... 


K. R. Vasudevan (1922-1987)

ஒருமுறை எழுத்தாளர் கே.ஆர் வாசுதேவன் (அவரின் மகனே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் AIDMK திரு மைத்ரேயன்) 1958ல் வேங்கடமுனி வீட்டில் பாபாவை முதன்முதலாக தரிசிக்க நின்று கொண்டிருக்கிறார்... அப்போது ஒரு மூதாட்டி "ஏம்பா நீ இதான் மொத தபா வரியா?" எனக் கேட்கிறார்.. ஆம் என்று அவர் சொல்ல... "இப்படியா வெறுங் கையோடு வருவ?" எனக் கேட்க... அவர் முழிக்க... "சரி..‌ என் கைல ரெண்டு பழம் இருக்கு.. இந்தா புடி.. நீ சாமிக்கு ஒண்ணு கொடு.. நான் ஒண்ணு கொடுக்கறேன்!" என்கிறார் மூதாட்டி... என்ன ஒரு சுயநலமற்ற மனசு... 

"இதே எடத்துலயே நில்லு.. சாமி காருக்கு போறத்துக்கு இப்படித்தான் வருவாரு... நான் உன் பின்னாடி நிக்கறேன்... ஏன்னா.. நீ பாவம் இப்பத்தான் மொத தபா பாக்க வந்திருக்க சாமிய... நான் நெறைய தபா பாத்துருக்கேன்!" என இடம் விட்டு சற்று நகர்ந்து நிற்கிறார்... அது தான் பக்தி..பரந்த இதயத்தோடு பிறருக்கு விட்டுக் கொடுப்பது தான் பக்தி...!


இப்படியே தான் இன்னொரு நிகழ்வும்... பாபாவின் டில்லி விஜயத்தில்... வி.என் வைத்யநாதன் கூட்டம் நடக்க இருந்த இடத்திற்கு முன்னரே செல்கிறார்... மைதான முற்பகுதியில் நிறைய காலி இடம் இருக்கிறது...அப்போது ஒரு முதியவர் பின்னால் நின்றிருக்கிறார்.. அவரைப் பார்த்தபடி "நீங்கள் முன்னாலேயே நிற்கலாமே... நிறைய இடம் இருக்கிறதே!" என வைத்யநாதன் கேட்க... "இல்லப்பா... நான் நேத்திக்கே சாமிய பக்கத்துல தரிசனம் பண்ணிட்டேன்! இன்னிக்கு அந்த இடத்துல தரிசனம் பண்ணாதவங்க பண்ணட்டும்! அதான் இங்கேயே நிக்கறேன்!" என்கிறார்... அந்த முதியவர் அங்கேயா நிற்கிறார்... இல்லை பாபாவின் இதயத்தில் நிற்கிறார்... அவர் சொன்ன வார்த்தையை கேட்டு அதையே கடைப்பிடிக்கிறார் வைத்யநாதனும்...அது தான் பாபாவின் உண்மையான பக்தர்கள் நமக்கு உணர்த்துகிற ஸ்ரீமத் பகவத் கீதை!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 251 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


பிறருக்காக விட்டுக் கொடுப்பதும்... எல்லாவற்றையும் "விட்டு" பாபாவிடம் தன் அகத்தை "கொடுப்பதுமே" பக்தி! அப்படி ஒரு சுயநலமற்ற பக்தி வந்துவிடுமானால் பாபா தானாக தேடி வந்துவிடுகிறார்... பிறகு முக்தி வெகு சிரமமில்லை... அந்த ஞானச்சாலையில் தியானச் சிறகுகள் விரித்து பறந்து வந்து ஆன்மாவை அதன் புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொள்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக