தலைப்பு

வெள்ளி, 17 ஜூன், 2022

பாபாவின் பேரன்பால் புடம் போடப்பட்ட உத்தம சாயி மாணவர்கள்!


பாபாவின் பள்ளி/ கல்லுரி மாணவர்களோடு சேர்த்து பாபா சொல்படி நடக்கும் அத்தனை இளைஞர்களுமே சாயி மாணவர்கள் தான்...‌அவர்களுக்கு பாபாவின் பேரன்பு சமமாகவே பகிரப்படுகிறது... பாபா பதம்தொட்ட அவர்களது தருணங்களும்... அவர்களை பாபா புடம் போட்ட கணங்களும் சுவாரஸ்யமாய் இதோ...


அந்த இளைஞர் பெயர் மயூர் பாண்ட்யா.. பாபாவின் கல்லூரி மாணவர் அல்லர்... ஆயினும் பாபாவை அவதாரம் என அறிந்து கொண்டவர்...அதற்கு முன்னரோ புலன்வழி நாட்டத்தால்... அதன் மயக்கத்தால் பல்வேறு தவறுகளையும் பாவங்களையும் செய்கிறார்... மீண்டும் மீண்டும் செய்து வருகிற உலக செயல்கள் மனிதருக்கு எவ்வித திருப்தியையும் தருவதில்லை... அப்படி இருக்கையில் அவரின் செய்கைகளே "தன் நெஞ்சே தன்னைச் சுடும்!" என்பதாகச் சுடுகிறது...!

அப்போது தான் பாபாவை அவதாரம் என கேள்விப்பட்டு புட்டபர்த்திக்கு வருகிறார்.. அந்தத் தவறுகளிலிருந்தும் தான் மீள வேண்டும்... அத்தனை பாவங்களில் இருந்தும் தான் தடுத்தாட்கொள்ளப்பட வேண்டும் என்ற தீராத வேட்கை அவருக்கு... பாபா தரிசனம் அளிக்கிறார்.. தரிசன வரிசையில்.. அவரது காவி நிற அங்கி காற்றில் அசைகிறது...


 ஆனால் அந்தச் செய்கை அந்த இளைஞர்க்கு செவ்வொளியாக அவர் முகத்தில் அடிக்கிறது... அது அடித்த அடியில் அடியோடு அவர் மனம் தெளிவாகிவிடுகிறது... இனம் புரியாத நிறைவையும் சமாதானத்தையும் அவர் பெறுகிறார்! பாபா அவர் முகத்தைத் கூடப் பார்க்கவில்லை.. எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை... அவரை தடுத்தாட்கொள்ள தனது அசையும் காவி நிற அங்கியே போதுமானதாக இருக்கிறது!


ஒரு மாணவர்... அவர் பெயர் சஞ்சீவ் சௌத்ரி..  "பாபாவுடைய மிராக்கிள் தான் முதன்முதலில் அவரிடம் என்னை இழுத்துச் சென்றது... ஆனால் பாபாவுடைய முக்கியத்துவம் மிராக்கிளால் அல்ல...‌அவரின் கருணையால்... அவரின் அன்பால் என இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்கிறேன்!" என மனம் திறக்கிறார்!


ஒயிட்ஃபீல்ட்'டில் புதிதாக கல்லூரியில் சேர்கிறார் டி.வி.ரமணா... அவருக்கு இருப்பே கொள்ளவில்லை... 4.30 க்கே அதிகாலை எழுவது... குளிர்ந்த நீரில் தசை நடுங்க நடுங்கக் குளிப்பது... பிறகு ரெடியாகி ஓம்காரமாம்... சுப்ரபாதமாம்... மீசை /கிர்தா கிடையாது... சினிமாவா? மூச்... நாவல் கிடையாது... சிகரெட் பீடி... ஷட் அப்.. ஒழுங்கா படி! என ஒழுக்கம் இம்மி அளவும் குறையாமல் கல்லூரி வாழ்க்கை இயங்கி வருகிறது... இதென்ன நரகம் ? என நினைக்கிறார் புது வரவு ரமணா...

ஒருமுறை அவரோடு படித்து வரும் அனைத்து மாணவர்களும் போர்ட்டிகோவுக்கு ஓடுகிறார்கள்... அப்படி என்ன அவசரம்... சொர்க்கத்தில் இருந்து வரும் பறக்கும் தட்டைப் பிடிக்கவா இப்படிப் பறக்கிறார்கள்? என்ற வினாவோடு அவர்களின் பின்னே போகிறார்... 


ஒரு வெள்ளை நிறக் கார் கதவைத் திறந்தபடி பாபா வெளியே வருகிறார்... முகம் முழுக்க முழு நிலா.. புன்னகைப் பிரகாசத்தில் நட்சத்திரம் வெட்கித் தலை கவிழ்ந்து பாபாவுக்கே பாத மலர்களாகும்படி அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபடி வருகிறார்... அது சொர்க்கத்திலிருந்து வரும் பறக்கும் தட்டு அல்ல... சொர்க்கமே நடந்து வருவதாக உணர்கிறார் ரமணா..

"இப்படி ஒரு அன்பு சக்தியா?" என பாபாவின் தரிசனத்தை எண்ணி சாதாரண ஆச்சர்யமல்ல... பேராச்சர்யப்படுகிறார்! அந்த நொடி முதல் அவரின் குறைபட்டுக் கொள்ளும் எண்ணம் குளிர்ந்தது... சிந்தை சிலிர்த்தது... பாபா வகுத்த வாழ்க்கை முறை அடக்குமுறை அல்ல அது ஆன்மீக நெறி... பங்காருக்களை நகைகளாக மாற்றும் சா(சோ)தனைச் சாலை என உணர்ந்து கொள்கிறார்!


ஒருமுறை ஜீவன் என்ற பாபா மாணவர்...ஜீவனே இல்லாமல் காணப்படுகிறார்... அதற்குக் காரணம் பாபாவின் பாராமுகம்... அவர் செய்த தவறுக்குக் கிடைத்த இதமான தண்டனை... ஆனால் ஜீவனே போவதான வலி ஜீவனுக்கு... பாபாவும் ஒயிட்ஃபீல்ட் விட்டு புட்டபர்த்தி கிளம்புகிறார்! சென்றபிறகு மாணவர்களுக்குத் கடிதம் போடுகிறார்... அதில் பாபா "வள வள என தேவையில்லாமல் பிறரோடு பேசிக் கொண்டே இருக்காதீர்கள்... சுவாமி அனைத்தையும் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறேன்! உங்களுக்கு எந்த உதவி எந்த நொடியில் தேவையோ அழையுங்கள்... உங்கள் சாயித்தாய் உங்களுக்கு உதவத் தயாராகவே இருக்கிறேன்!" என்கிறார் பாபா!

அதைக் கேட்ட பிறகு ஜீவன் "சுவாமி என்னை மன்னிக்க மாட்டீர்களா?" தவறு செய்வது மனித இயல்பு.. மன்னிப்பது இறைவன் பாபா இயல்பு... என ஆத்மார்த்தமாக உருகி வேண்டுகிறார்! அவர் உடனே புட்டபர்த்தி நேர்காணல் அறை வாசல் முன் இருக்கிறார்... பாபா கதவைத் திறத்து வெளியே வருகிறார்... "சுவாமி!" என பாதத்தில் விழுந்து அழுகிறார்.. பாபா அவரை தொட்டுத் தூக்குகிறார்... விழித்துப் பார்த்தால் பாபா அல்ல.. சக மாணவன்... என்ன ஆச்சு? எனக் கேட்கிறார்..."ஓ கனவா!" சுவாமி என சொல்லியபடி விழிகளைத் துடைத்துக் கொள்கிறார் ஜீவன்... அப்போது ஒரு கால்.. ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்...

ஓடி ஒருவர் வர... ஜீவனை வார்டன் அழைப்பதாகச் சொல்கிறார்... வார்டனிடம் ஜீவன் எதற்கோ என்னவோ என யோசித்தப்படி செல்கிறார்... புட்டபர்த்தியிலிருந்து தொலைபேசி வந்தது.. துணைப் பிரதமர் வருகிறார்... அவர்களை வரவேற்க சுவாமியே சில மாணவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்.. அதில் நீங்களும் ஒருவர் என ஜீவனைக் கைக்காட்ட... பாபா கருணை தோய்ந்த மகிமையை நினைந்து நிறைந்து ஆனந்தத்தில் வழிந்து போகிறார்.. மாணவர் ஜீவனுக்கு புது ஜீவனே கிடைக்கிறது... ஜீவன் சற்று நேரத்திற்கு முன் கண்ட கனவு நிஜமாகவே நிகழ்கிறது..

இடம் பாபா நேர்காணல் அறை வாசல்... பாபா கதவு திறக்கிறார்... ஜீவன் பாபா பாதத்தில் அழுத படி விழுகிறார்... பாபாவோ தொட்டுத்தூக்கி தோளை அழுத்திப்பிடித்து புன்னகை சிந்தச் சிந்த ஒரு குலுக்குக் குலுக்குகிறார் ஜீவனை... மாணவர் ஜீவனை மட்டுமல்ல அகில உலக ஜீவன்களையும் தொட்டுத் தூக்கி ஆன்மீக சாதனைக்காக நாள் பிடித்து தோள் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்குவதே இறைவன் பாபா தானே!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 75 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


பார்த்த விழி பார்த்தபடி அகம் பூக்க வைப்பதும்... புன்னகைத்துப் புல்லரிக்க வைப்பதும்... பாராமுகம் காட்டி பக்குவப்படுத்துவதும் பாபாவின் திருவிளையாடல்களே! அலகிலா விளையாட்டுடைய பாபாவின் பதம் பிடித்து மனம் பதம் பெறுவதே வாழ்க்கையில் ஒரே ஒரு இலக்கு... இளைஞர்களாகிய ஆன்மீக சாயி மாணவர்களே நம் சனாதன சாரதியின் சாரத்தை தோள்களில் சுமந்தபடி சென்று கொண்டிருக்கும் பாரதீய சாரதிகள்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக