தலைப்பு

திங்கள், 13 ஜூன், 2022

திருப்பதிக்கு சென்றாலும் என்னையே தரிசிக்கிறீர்கள் என்கிறார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!


எவ்வளவு சொல்லியும் தாய் சொல் கேளாது சுவாமி தரிசனம் தவிர்த்து வேறொரு ஷேத்திரம் சென்ற மகனை குறித்து கவலைப்பட்ட தாய்க்கு சுவாமி பகர்ந்த சத்திய வாசக அனுபவப் பதிவு இதோ...

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி சர்வ தேவதா அதீத ஸ்வரூபன். எல்லா இறை வடிவங்களை கடந்த பேரவதாரம் அவர். அதீத என்பதற்கு அனைத்தும் கடந்தது என்று பொருள். அதீதம் என்பதற்கு அளவிற்கு அதிகமான என்ற உட்பொருளும் உண்டு. எல்லா தெய்வங்களை கடந்த பேரவதாரமும்... எல்லா தெய்வங்களை தன்னகத்தே கொண்டு எல்லா தெய்வங்களை காட்டிலும் அதீத சக்தி கொண்டவர் இறைவன் ஸ்ரீ சத்யசாயி. காரணம் அவரே பரப்பிரம்மம். எனவே தான் சுவாமி புட்டபர்த்தியில் இருந்தவரை அந்தக் கோவில் போ.. இந்தக் கோவில் போ.. அந்த மந்திரம் சொல்.. இந்த மந்திரம் சொல் என எந்த பரிகார சமாச்சாரமும் சொன்னதில்லை. எது தவத்தின் கோடியோ.. எது பிறவியின் பயனோ அந்தப் பரம்பொருளே சுவாமி எனும் படியால் சுவாமி அனைவரையும் அன்பு செலுத்துவதையும் ... அனைவருக்கும் சேவை செய்வதையுமே தனது அவதாரத்தின் அடிநாதமாக அமைத்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்காக அவர் உச்சரித்துக் காட்டியது காயத்ரி மந்திரம் மட்டுமே... 


ஆகவே தான் சுவாமி தன்னை மட்டுமே மனிதர்கள் வழிபட வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.. எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அது தன்னையே வந்து சேர்கிறது என்கிறார். 

ஒருமுறை சுவாமி மேல் அதி தீவிர பக்தி கொண்ட ஒரு பெண்மணி புட்டபர்த்தி வருகிறார். தனது மகனை எவ்வளவு வற்புறுத்திப் பார்த்தும் மகன் தாய் சொல் கேளாது புட்டபர்த்தி வரவில்லை. தாயின் அருமையை அவள் இழப்பிற்குப் பிறகே அவளது குழந்தைகள் உணர்கிறார்கள் என்பது உலக அனுபவம். அந்தப் பிடிவாத மகன் புட்டபர்த்திக்கு வராமல் திருப்பதி சென்றுவிடுகிறான். தாய்க்கோ தன் சொல்லை மகன் கேட்கவில்லை என பெருத்த கவலை. கண்ணீரும் கவலையுமாக சுவாமி தரிசனத்திற்காக அமர்கிறார் அந்தப் பக்தப் பெண்மணி. மிகவும் கெஞ்சியபடி கேட்ட தாய்க்கு முதலில் வர சம்மதிக்காமல் பிறகு வருகிறேன் எனச் சொல்லி அதற்குப் பிறகு தான் திருப்பதி செல்லப்போவதாக சொல்லிய மகனின் நினைவலைகள் நெஞ்சில் நிழலாடுகின்றன அந்த அப்பாவி தாய்க்கு.. ஷண சித்தம் ஷண பித்தம் என்பது போல் நடந்து கொண்ட மகனைப் பற்றிய கவலை கண்களை நிரப்பியது. 


சுவாமி காவி நிறத்து அன்னப்பறவையாய் அருகே அழகாய் அசைந்து வருகிறார். அந்தப் பெண்மணியின் அருகே வந்து நிற்கிறார். அந்தப் பெண்மணி முகத்தைப் பார்த்து "ஏன் வேதனையோடு இருக்கிறாய் ? " எனக் கேட்கிறார். தொண்டையை அடைத்த துக்கம் குரல் வழி கொப்பளிக்கிறது. மகன் திருப்பதி சென்றது கூட வருத்தமில்லை.. சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றிருக்கலாமே என்ற ஓர் நியாயமான எண்ணமே அவள் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.. இந்த நிலையில் அதைச் சொல்ல வருகிறாள்.. கண்ணீர் குரலை உடைக்கிறது.. சுவாமி அறியாததேது ?!
அப்போது சுவாமி அந்தப் பெண்மணியின் கண்களை உற்றுப் பார்த்தபடி சொல்கிறார்.. "அம்மா... நான் எப்படி புட்டபர்த்தியில் இருக்கிறேனோ அப்படியே திருப்பதியிலும் இருக்கிறேன் .. வேதனைப்படாதே.. உன் மகன் திருப்பதி போயிருக்கிறான் அல்லவா.. அவன் உண்மையில் என்னிடம் தான் வந்திருக்கிறான்!" என்று சத்தியம் பகர்கிறார். சமாதானம் அடைகிறாள் அந்தப் பக்தப் பெண்மணி.

(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம் -- ஆசிரியர்: ப்ரஷாந்த் பிரபாகர் பாலேகர் .. பக்கம் - 47)இதே போல் இசையரசி எம்.எஸ் அம்மா அவர்கள் புட்டபர்த்திக்கே சென்று கொண்டு இருக்கையில் அவரது கணவர் சதாசிவம் "இப்போல்லாம் இவ திருப்பதிக்கு போறத விட புட்டபர்த்திக்கு போறதுதான் ஜாஸ்தி ஆயிடுத்து" என்று மகாபெரியவரிடம் குறைபட்டுக் கொள்கையில்...
"திருப்பதில இருக்கிறவர் தானே புட்டபர்த்தியிலும் இருக்கார்" என திருப்பதியில் இருப்பவர் தான் புட்டபர்த்தியிலும் இருக்கிறார் என்பதை காஞ்சி மகான் மகா பெரியவரும் பெரும்பாடகி எம்.எஸ் அம்மாவின் கணவரிடம் அதே சத்தியத்தை பகிர்ந்திருக்கிறார்.   பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக