தலைப்பு

சனி, 30 அக்டோபர், 2021

பிறரை அவமானப்படுத்தினால் பக்கத்தில் கூட வரமாட்டார் பாபா என புரிந்து கொண்ட பீட்டர்!

சுவாமி நூலாசிரியர் மர்ஃபெட் புட்டபர்த்தியில் பீட்டர் என்ற சுவாமி பக்தரை எதிர்பாராவிதமாக சந்திக்கிறார்.. அதில் பீட்டர் சொன்ன அனுபவமும்.. பகிர்ந்து கொண்ட ஞானமும் மர்ஃபெட்'டுக்கு மட்டுமில்லை நம் அனைவருக்குமே ஆத்ம ஞானம் ஏற்படுத்தும் மிக முக்கிய பதிவு... சுவாரஸ்யமாக இதோ...


"எதை செய்தாலும் தன்னலமின்றி செய்ய வேண்டும். நல்ல காரியங்களை கூட புகழை விரும்பியோ அதன் பலனை விரும்பியோ செய்யக் கூடாது... செருப்பு தைப்பவர்கள்... மலம் அள்ளுபவர்கள்... துணி துவைப்பார்கள்.. துப்புறவு தொழிலாளர்கள் என அனைத்து தொழிலையுமே மனித சேவையாக பார்த்து... அவற்றையும், அந்தந்த தொழிலை செய்பவர்களையும் சமமாக மதிக்க வேண்டும்" என சுவாமியின் சத்திய ஞானத்தை இதயத்தில் ஏற்கிறார்‌.. சுவாமி எப்பேர்ப்பட்ட இறைவன் என்பதையும் உணர்கிறார் சுவாமி நூலாசிரியரான மர்ஃபெட். இதன் நீட்சியாக சமமாய் அனைவரையும் நடத்த வேண்டும் என்ற தர்ம வாழ்வின் சாட்சியாய் ஒருவரின் அனுபவத்தையும் மர்ஃபெட் கேட்கிற சூழ்நிலையையும் சுவாமி ஏற்படுத்துகிறார். சுவாமி சாதாரண சிருஷ்டி கர்த்தா இல்லை.. சூழ்நிலையையே சிருஷ்டி செய்யும் இறைவன்... எல்லா மனித சம்பவங்களிலும் மறை பொருளாக சுவாமியே நிறைந்திருக்கிறார்! 

 ஒருமுறை மர்ஃபெட் தம்பதிகள் நோய்வாய்ப்படுகிறார்கள். தினந்தோறும் சுவாமி தரிசனத்தில் அவர்களோடு பேசி சிருஷ்டி விபூதி அளித்து தொட்டு அக்கறை செலுத்தி பரம சஞ்சீவினியாய் திகழ்கிறார்... நோய் முற்றிலும் நீங்கி விடுகிறது. அதற்குப் பிறகு சுவாமி தரிசன வரிசையில் இவர்கள் அருகிலேயே வரவில்லை.. முகம் திருப்பியும் அவர்களை பார்க்கவில்லை... இவர்களுக்கு தாங்க முடியாத தவிப்பு.. காரணமே புரியவில்லை... சுவாமியின் எல்லா செயலுக்குமான காரணம் புரிந்து விட்டால் நாமும் சுவாமியாகி விடுவோமே... அஹம் பிரம்மாஸ்மி என்பது சத்திய அனுபவம் தான்... ஆனால் அதை நாம் அனுபவிக்கிற வரையில் ஜீவாத்மா ஜீவாத்மா தான்... பரமாத்மாவின் அங்கம் நாம் என்பதை ஆத்ம சாதனையிலே தான் அனுபவித்து உணர்ந்து கொள்ள முடிகிறது!


புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிற போது எதிர்பாரா விதமாக பீட்டர் ரே எனும் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவரை சந்திக்கின்றனர் மர்ஃபெட் தம்பதிகள். 

      "சுவாமி.. உங்களை நல்ல வழிக்கு கொண்டுவந்துவிட்டார். அதனால் இனி அவர் உங்களைப் பற்றி தனியாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை... அவ்வளவு தான்" என்றார் பீட்டர்.

 நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்குத் தான் தாயிடமிருந்து நொடிக்கொரு தரம் கவனிப்பு தேவை... ஆரோக்கியமான குழந்தைகளுக்கு அத்தனை தூரம் கவனிப்பு தேவை இல்லை அல்லவா.. இதனை மர்ஃபட் தம்பதிகளுக்கு புரிய வைக்கிறார் பீட்டர். 

உங்களுக்கும் இப்படி ஒரு பாராமுக அனுபவம் இருக்கிறதா? என மர்ஃபெட் தம்பதிகள் கேட்கிற போது பீட்டர் தனது மறக்க முடியாத அனுபவத்தை அவர்களிடம் முதன்முதலாக பகிர்ந்து கொள்கிறார்... 

     ஒருநாள் காலை தியானத்தில் அமர்ந்திருந்த பீட்டர் பக்கத்து அறையில் ஏற்பட்ட கூச்சலால் தியானம் செய்யமுடியாமல் மனம் சலித்துப் போகிறார்... எழுந்து வெளியே வந்து மைதானத்தில் அமர்ந்தும் தியானத்தில் அமர்ந்து பார்க்கிறார்.. அவரால் முடியவில்லை... மந்திரை நாடிச் செல்கிறார்.. அனைவரும் வரிசைப்படி அமர்ந்து சுவாமிக்கான தரிசன காத்திருப்பில் இருக்கிறார்கள். பீட்டரும் அவர்களோடு அமர்ந்து கொள்கிறார் .. கண்களை மூடுகிறார்.. அந்த நேரம் பார்த்து கூட்டம் இன்னும் நெருக்கமாகி ஒருவர் பீட்டரின் மேலேயே அமர்ந்து விடும் அளவிற்கு மடியில் அமர முற்படுகிறார்.. ஏற்கனவே அலுப்பாகவும் கடுப்பாகவும் இருந்த பீட்டரின் மன அடுப்பு கொழுந்து விட்டு எரிகிறது. கடுங்கோபத்தில் பீட்டர் மடியில் அமர முற்பட்டவரை ஓங்கி அடித்து விடுகிறார். 


சிறிது நேரத்தில்... சுவாமி வெளியே வருகிறார்... பீட்டரின் மிக அருகில் நெருங்குகிறார்... ஆனால் சுவாமியுடைய பார்வை பீட்டர் மீதே இல்லை... அவரது பக்கத்தில் வந்தும் எங்கேயோ சென்றுவிடுகிறார்.. அப்போதும் பீட்டருக்கு மன அமைதி திரும்பியபாடில்லை...அப்போது இரண்டு பக்தர்கள் பேசிக் கொள்வது பீட்டரின் இரண்டு காதுகளிலும் விழுகிறது...

"சுவாமி அடிக்கடி சொல்லுவாரு... யாரையும் நீ அன்போடும் மரியாதயோடும் நடத்தணம்.. எங்கிட்ட நீ எப்படி நடந்துக்கிறியோ அதே மாதிரி தான் நீ எல்லார்ட்டயும் நடந்துக்கணும்... அதுதான் நீ எனக்கும்... உனக்கும் செய்யிற கடமை... அப்டீம்பாரு" என்று அவர்கள் பேசிய போது பீட்டருக்கு வீசிய காற்றே வீசிய சாட்டைக் கயிறாக மாறியதாக தோன்றியது.. தனது தவறை நினைந்து வருந்துகிறார்... கோபத்தில் பேசிய வார்த்தை கோடரி முனையை விட கூர்மையானது என்கிற உண்மை உணர்ந்து தான் தரிசனத்தின் போது அடித்த தனது கைகளை நொந்து கொள்கிறார்.. மன‌அமைதி இன்னமும் திரும்பியபாடில்லை...

      நேராக தன் அறைக்கு வருகிறார்... பகவத் கீதையை எடுத்துப் பிரிக்கிறார்.. சுவாமி இப்போது சொன்னதையே அப்போதும் சொல்லியிருக்கிற அமர வாசகத்தை வாசிக்கிறார்...

      "ஒவ்வொரு உயிர்ப் பொருளிலும் எவன் என்னை காண்கிறானோ... அழியும் பொருட்களிடத்தும் எவன் அழியா பொருளை உணர்ந்து கொள்கிறானோ... அவனே என்னை உண்மையாக காண்கிறான்"

இதனை உள்ளத்தில் ஏற்றிய அடுத்த நொடி வராமல் அடம் பிடித்த அமைதி ஐக்கியமாகிவிடுகிறது... பீட்டரின் இதய மீட்டர் இப்போது கோளாறு இன்றி ஓடுகிறது!! சுவாமி தினந்தோறும் நமக்கு கீதை உபதேசித்துக் கொண்டு தான் இருக்கிறார்.. அப்போது ஒரே ஒரு குருஷேத்ர போர் மட்டுமே நிகழ்ந்தது.. இப்போது ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு குரு ஷேத்ர போர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.. சுவாமி சொல்கிறபடி நடக்கும் அர்ஜுனர்களாவோம்!! 

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 183 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்) 


ஏளனப்படுத்துதல்... ஒதுக்குதல்... சிறுமைப்படுத்துதல்... பதவியின் பேரால் பிறரை கீழ்மைப்படுத்தி ஏவுதல்... அகந்தையோடு மிரட்டுதல். பணக்காரர் ஏழை... ஜாதி இவற்றால் ஒருவரை தாழ்வாக நினைத்தல் / நடத்தல்... இவற்றுக்கும் சுவாமிக்கும் எந்த சம்மந்தமுமில்லை..‌இவற்றுக்கும் ஆன்மீகத்திற்குமே எந்த தொடர்பும் இல்லை... எப்போது நாம் கோபத்தை விடுகிறோமோ அப்போதே நாம் ஆன்மீக வாழ்வில் முதல் அடியை எடுத்து வைக்கிறோம்... அந்த ஆன்மீக வாழ்க்கைக்கு சுவாமியே அச்சாரம் இடட்டும்!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக