பிரசாந்தி நிலையத்தின் ஒவ்வொரு மணல்துகளும், புனிதமானது. பூலோக கைலாசமாக, புனித வைகுண்டமாக, மேலான மெக்காவாக,கருணையான ஜெரூசலமாக, கனிவான கயாவாக, கங்கை, காசி, பத்ரியாக, எதை நினைக்கினும் அதுவாகவே ஆகிடும் அற்புத ஸ்தலம், சர்வ தேவதா அதீத ஸ்வரூப சச்சிதானந்த பர்த்திவாசன் வாழும் திவ்ய பூமி, , பிரசாந்தி நிலையம் ஆகும்.பிரசாந்தி சேவைகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஈடுபட்ட பம்பாய் ஸ்ரீநிவாசன் அவர்களின் அனுபவங்களைப் பார்ப்போம்.
பிரசாந்தி நிலையத்திற்கு வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் செல்லுங்கள். பரமனை பணிந்து, பஜன்களைக் கேட்க மட்டுமல்ல. நீங்கள் இதற்குமுன் சென்றபோது நிகழ்ந்த உங்கள் அனுபவங்களை இசை பாடும் மனதில் மெல்ல அசை போடுங்கள். அது ஒருவிதமான தவப் பயிற்சி. மனதிலுள்ள களைகளை எடுத்து, மனதை மணம் வீசும் மல்லிகை பூந்தோட்டமாக மாற்றவல்லது அது. இந்த புனிதப் பிரசாந்தியின் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொரு நிகழ்ச்சியை நினைவு படுத்தும்.இங்கு நான் சேவையில் ஈடுபட்டபோது பல புனித நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு கூறுகிறேன்.
🌹குல்வந்த் ஹாலில் தங்கத் தாள்கள் ஒட்டும் பணி:
1. விசாலமான சாயி குல்வந்த் ஹாலில் தங்கத் தாள்கள் ஒட்டும் பணி நடந்து கொண்டிருந்த நேரம். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் சேவை புரிந்தேன். ஆறு மாத காலம் தொடர்ந்து இச் சேவையில் ஈடுபட முடிந்தது. காரணம் ஒவ்வொரு நாளும் பகவான் பாபா, வேலைகளின் முன்னேற்றத்தைப் பார்வையிட வருவார். அப்போது அவரின் நெருக்கமான தரிசனத்தை பெற முடிந்தது. இறைவன் அருகில் இருக்க, இயலாதது ஒன்று உண்டோ.மேலும் இப்பணியின் போது, பகவான் பாபாவின், திவ்ய அருட் பருக்கைஇ டையறாது உணர முடிந்தது.
2. குல்வந்த் ஹாலின் மேல் தளத்தில் கலசங்கள் பொருத்த, இரும்புக் கம்பங்களை நிறுவும் பணியில் இரண்டு வெல்டர்கள் ஈடுபட்டிருந்தனர். உணவு இடைவேளையில் , அவர்களுக்கு பாபா அவர்களே தம் கைப்பட உணவைப் பரிமாறினார். என்னே அவர்கள் பெற்ற பாக்யம். ஆயிரம் அன்னையின் அன்பு என்று பாபா கூறுவதன் நேரடி விளக்கம் அல்லவா அது.
3. சாயி குல்வந்த் ஹாலின் தூண் பரப்பில் தங்கத் தாள் ஒட்டும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு நெடு நாளைய பக்தர் "இவ்வளவு அதிகமாக இங்கேயே தாள்களை செலவிட்டு அலங்கரித்தால் மீதி இடங்களுக்கு ஒட்டுவதற்கு தாள்கள் கிடைக்காமல் போய்விடும். பார்த்து வேலை செய்யுங்கள்" என்றார். ஆனால் பாபா பின்னர் பார்வையிட வந்தபோது என்னைப் பாராட்டி, அதே முறையில் மற்ற தூண்களுக்கும் அலங்காரமாக தங்கத் தாள்களை ஒட்டுமாறு கூறினார்.
பகவானின் தர்பாரில் பஞ்சம் என்ற பேச்சுக்கு இடமில்லை அல்லவா? மறுநாளே தாய்லாந்திலிருந்து வந்த பக்தர்கள் தங்கத் தாள்கள் நிரம்பிய நூற்றுக்கணக்கான பெட்டிகளை கொணர்ந்து சாயி குல்வந்த் ஹாலில் இறக்கினர்.
4. இந்த தங்கத்தாள் ஒட்டும் பணியின் போது பாபா அருகில் இருந்து, தக்ககலைநய அறிவுரைகளை வழங்கினார். ஓரிரு சமயங்களில் நான் சில விஷயங்களை விவாதமாகக் கூறியபோதும் ,பாபா என்மீது சினம் கொள்ளாமல். சிரித்தபடி சென்றதை நினைவு கூறாமல் இருக்க முடியாது. புரியாத குழந்தையின், விவரமற்ற பேச்சாக பாபா அதை நினைத்திருக்க வேண்டும்.
ஆதாரம்: பாம்பே சீனிவாசன் அவர்களின் ஆங்கில பதிவு
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
🌻பிரசாந்தி சேவை என்பது நீங்களாகவே முடிவு செய்யும் சேவை அல்ல. அது ஸ்வாமிக்காகவோ, அல்லது பிற பக்தர்களுக்காக நீங்கள் செய்யும் சேவையும் அல்ல. ஸ்வாமி உங்களை கடைதேற்ற, அன்புடன் அழைத்து, சகல வசதிகளும் செய்து கொடுத்து, ஆசி வழங்குவதற்கான அவரின் பெருங்கருணை அது. இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்.🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக