தலைப்பு

திங்கள், 18 அக்டோபர், 2021

சுவாமியிடம் கொண்டுவரப்பட்ட அதிசய விபூதிக் குழந்தை!

அனிச்சை செயலாய் உடலெங்கும் விபூதி கொட்டிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? திகிலாகவும்.. அமானுஷ்யமானகவும் இருக்கும் அல்லவா!! ஏன் ? எதனால்? அதுவும் ஒரு குழந்தைக்கு...அந்த அதிசய விபூதிக் குழந்தை சுவாமியிடம் கொண்டு வரப்படுகிறது.. என்ன நேர்கிறது என்பதை சுவாரஸ்யமாய் வாசிக்கப் போகிறோம்... 


சுவாமி தரிசனத்திற்கு வந்தவர்கள் லட்சோப லட்சம் மக்கள்.. அவர்கள் பன்முகமானவர்கள். இன்னவர்கள் தான் வந்தார்கள் என குறிக்கவே இயலாது.. ஜாதி/மத/ இன/ மொழி/ தேச பேதம் கடந்து சுவாமியை தரிசிக்க வந்தவர்கள் பற்பலர்... எந்தவிதமான வட்டமும் சுவாமிக்கு இருந்ததில்லை... தேசம் ஆள்பவர் முதல் தூய்மை தொழிலாளர் வரை... மகான்கள் முதல் மகாபாவிகள் வரை சுவாமியை அருகில் சென்று தரிசிக்காதவரே இல்லை...‌ இப்படிப்பட்ட தரிசன கூட்டத்தினரில் மிக வித்தியாசமான ஒரு சம்பவம் நடக்கிறது... மிக விசித்திரமான சம்பவம் அது..

பொதுவாக சுவாமி எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டவர்.. தினசரி பேசுகிற சுவாமி திடீரென பாராமுகமாக சென்று நம்மை உள்முகமாக திருப்புவார்.. தினசரி புன்னகை புரியும் சுவாமி.. திடீரென கண்டு கொள்ளாமல் மனப்பக்குவம் அளிப்பார்.. இதனை பல பக்தர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.. அவரவர் வாழ்வில் மிக முக்கியமானதென்றால் சுவாமி வழிகாட்டுவார்... மிக நெருங்கிய நண்பனான அர்ஜூனனுக்கே போர்க்களத்தில் மட்டுமே கீதை புரிந்தார்..

சதா சர்வ காலமும் தன்னை மடியில் ஏற்றிவைத்து சுவாமி பால் சோறு ஊட்ட வேண்டும் என சில பக்தரின் எதிர்ப்பார்ப்பு உள்முகமாக திரும்பி ஞானப்பாலை அருந்த வேண்டிய காலகட்டம் இது...

அந்த சம்பவம் அப்படிப்பட்ட ஒன்று... ஆனால் யாருக்கும் புரியவில்லை... புட்டபர்த்தி அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து குழந்தை ஒன்று சுவாமியிடம் கொண்டு வரப்பட்டது! அதன் பெற்றோர் அதிகம் படிக்காதவர்களே.. ஆனால் படித்தால் மட்டும் ஞான ஊற்று பெருக்கெடுத்துவிடுமா? எல்லா அறிதலும் ஆன்ம உணர்தலுக்கு இட்டுச் சென்றுவிடுகிறதா...! கல்வி அறிவில்லாத பரமஹம்சர் தான் எளிதாக இறையனுபூதி எய்தினார். படித்தவர்கள் தன்னையும் குழப்பி பிறரையும் குழப்புகிறார்கள்... ஆனால் அவர்கள் எளியவர்கள். அந்தக் குழந்தையோ ஞானம் பிரகாசிக்கும் கண்களுடன்... தெய்வீக தேஜஸுடன் ஒளிர்ந்தது... அது பிரச்சனையில்லை.. அது மனமகிழ்ச்சியே...ஆனால் அந்தக் குழந்தையின் உடம்பிலிருந்து விபூதி பொடிப் பொடியாக உதிர்ந்த வண்ணம் இருக்கிறது... இதுவே அவர்களின் மிரட்சிக்கு காரணம்.. அது அனிச்சை செயலாக நிகழ்கிறது...இதற்கு மருத்துவ உலகம் என்ன பதில் சொல்ல முடியும்? மருத்துவர்கள் தாங்கள் கற்ற புத்தகத்தை வைத்தே வைத்தியம் செய்பவர்கள்.. இதற்கு மாந்த்ரீக உலகம் என்ன பதில் சொல்லும்? அவர்கள் ஆவி பிடித்திருக்கிறது.. அதைப் போக்க வேண்டும் என பணம் பறிப்பார்கள்... செய்வினை என்பார்கள்.. ஜோதிடர்கள் கிரகக் கோளாறு... பரிகாரம் செய்ய வேண்டும் என மீண்டும் நம் கஜானாவிலேயே கை வைப்பார்கள்..

 இதற்கு என்ன தீர்வு ? ஒன்றும் புரியவில்லை.. பிஞ்சுக் குழந்தை.. விபூதிக்குவியலில் இருக்கிறது... மக்களின் அச்சம் மிகுந்த குழம்பிய மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இங்கே சம்பாதிப்பவர்கள் தான் அதிகம் இந்த விசேஷ கலியுகத்தில்...

ஆனால் அந்த விபூதிக் குழந்தையின் பெற்றோர்களோ சுவாமியிடம் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.. மிக நல்ல முடிவு அது.. இறைவன் தருவானே தவிர எவரிடமிருந்து எதையாவது பெறுவானா? அமுத சுரபி யாசிக்குமா? கிரகங்களை தனது காலடியில் கட்டி வைத்திருக்கும் கடவுள்... கிரக கோளாறு பரிகாரம் செய் என்பாரா?  பிறகு கடவுள் எதற்கு? சர்வ தேவதா அதீத ஸ்வரூபன் இன்ன இன்ன தெய்வங்களுக்கு கூலி கொடு.. பலி கொடு...  என்பாரா? பிறகு பரப்பிரமம்ம் எதற்கு? அப்பேர்ப்பட்ட பரப்பிரம்மத்திடம் தஞ்சம் அடைகிறார்கள்... மிக பாதுகாப்பான தஞ்சம் அது! கல்வி அறிவில்லா எளியவர்களுக்கு அப்படி தோன்றி இருக்கிறது... அப்படி ஒரு எண்ணத்தை தோன்ற வைத்திருக்கிறார் சுவாமி...

பிரசாந்தி நிலையத்தில் வந்து தங்குகிறார்கள்.. சுவாமி பக்தர்கள் பலரும் அந்த அதிசய விபூதிக் குழந்தையை பார்க்க ஆவலுடன் வந்து போகிறார்கள். சுவாமி அந்தக் குழந்தையை பார்த்து ஆசீர்வதித்து குணப்படுத்துவார் என எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் சுவாமி அந்த இடத்தின் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை... சுவாமிக்கு அந்தக் குழந்தை வந்திருப்பது தெரியாதா? அதன் காரணம் புரியாதா? சுவாமிக்கு எந்த விஷயத்தை எப்போது செய்ய வேண்டும் என நன்கு தெரியும்! ஆகவே பக்தன் எந்த விஷயத்திற்கும் அமைதியடைந்து சுவாமி சங்கல்பம் என அவரிடம் அனைத்தும் ஒப்படைத்துவிடுவதே சரணாகதி! இதை இப்போதே நீ செய்ய வேண்டும்.. இதை அப்படி செய்யாமல்... இப்படி செய்ய வேண்டும்.. நான் சொல்லும் போது தான் நீ திரும்ப வேண்டும் என சுவாமிக்கு எவராலும் கட்டளையிட முடியாது! பிரகலாதன் இடவில்லை... துருவன் இடவில்லை.. மீரா இடவில்லை..

அப்படி அவர்களும் பொறுமையோடு காத்திருக்கிறார்கள்... ஓரிரு நாட்களில் குழந்தை உடம்பிலிருந்து தானாக உதிர்கின்ற விபூதி நின்றுவிடுகிறது! மற்ற குழந்தைகளைப் போல் அது விளையாட ஆரம்பிக்கிறது... பக்தர்களுக்கு மிகுந்த ஆச்சர்யம் ஏற்படுகிறது... சுவாமியிடம் ஒரு பக்தர் அந்தக் குழந்தைக்கு நிகழ்ந்ததைப் பற்றி ஆச்சர்யமாக தெரிவித்து கேட்கிறார்.. அப்போது சுவாமி "அந்தக் குழந்தை ஒரு யோக பிரஷ்டன்" என்கிறார்...

மேலும் சுவாமியே அந்த யோகப்பிரஷ்டன் எனும் சொல்லை விளக்குகிறார்...

"வாழ்க்கையில் முக்தி நிலை அடைந்தவர்கள் யோகிகளாக வாழ்கிறார்கள்... சந்தர்ப்ப வசத்தால் தவறு செய்கிற போது மீண்டும் பிறந்து மறு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டி வருகிறது..‌ அப்படி வந்து பிறக்கும் குழந்தை தான் யோகப்பிரஷ்டன்... அப்படிப்பட்ட குழந்தை அது... அது தன் முற்பிறவியில் ஞான மார்க்கத்தில் முன்னேறியதை உணர்த்தும் விதமாகவே அதன் உடம்பிலிருந்து விபூதி பொழிந்தது‌.. அதன் கண்களின் ஞான ஒளி வீசியது..." என தெளிவாக எடுத்துக்கூறி அந்த உன்னத பிஞ்சு ஞான ஆன்மாவை தூரத்திலிருந்தே ஆசிவழங்கி அனுப்பி விடுகிறார்...

"மனதில் அகந்தையோ... வீண் பெருமையோ இல்லாமல் பகவானிடம் ஈடுபட வேண்டும்! அப்படிச் செய்ய முடியாதவன் முக்தி நிலையை அடைய முடியாது! மனத்தூய்மை இல்லாதவன் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட போதும் மீண்டும் பிறவி எடுக்க நேரிடும்" என்று கூறி சுவாமி இதய இருட்டுக்கு விடியல் தருகிறார். எல்லோரும் சுவாமியிடம் வருகிறார்கள் .. இல்லை.. சுவாமியால் சுவாமியிடம் வரவழைக்கப்படுகிறார்கள்... 

     "உங்களுடைய மனதில் ஆசை/ கர்வம் / துயரம் பற்றி இழுத்தாலும் பரவாயில்லை.. என்னிடம் வாருங்கள்.. வாய் விட்டு உங்கள் மன அழுக்குகளைச் சொல்லுங்கள்.. நான் உங்கள் மன அழுக்குகளை நீக்கி நிச்சயம் தூய்மையை தருகிறேன்... ஏனெனில் நீங்கள் அனைவரும் என் குழந்தைகளே!" என்கிறார் சுவாமி. 

 மன அழுக்குகளை சுவாமி சொல்லும் ஆன்ம சாதனையாலும்.. அதோடு கூடிய தன்னலமற்ற சேவையாலுமே துவைத்து வெளுத்தெடுக்க முடிகிறது.. துவைத்தலுக்கு தேவைப்படுகிற தண்ணீரும் படிகாரமும் போல் சேவையும் ஆன்ம சாதனையும்... அகத் தவத்திற்கு மிஞ்சிய பரிகாரம் ஏதும் பூமியில் இல்லை... உடம்பு மட்டும் கோவிலுக்குள் இருந்து.. மனமானது குட்டிச் சுவரின் மேல் ஏறி இருந்தால் எங்கிருந்து ஞானம் வரும்?

(ஆதாரம்: பகவான் பாபா/ பக்கம் : 212/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்கிறார்கள்.. ஆனால் சுவாமியே குணமளிக்கிறார்... அப்பாடா நம் பாரங்களை சுவாமியிடம் ஒப்படைத்துவிட்டோம் எனும் பரம சமாதானத்தையே பிரார்த்தனைகள் தர வேண்டும்.. இன்று தீருமா? நாளை தீருமா? எனும் பக்குவமற்ற எதிர்ப்பார்ப்புகள் கலந்த கோரிக்கைகள் பிரார்த்தனைகள் அல்ல... பிரார்த்தனைகள் தியானத்திற்கான முதல் படி.. தியானம் சரணாகதிக்கான கடைசிப் படி!

  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக