தலைப்பு

வெள்ளி, 8 அக்டோபர், 2021

தனது ஒரே மகன் இறந்த போதும் சுவாமி மேல் பிடிமானம் இழக்காத பெரும்பக்தை திருமதி ராமகிருஷ்ணா!

எத்தனையோ பக்தர்களின் வாழ்வில் ஏற்படுகின்ற திடீர் மாற்றங்கள்... ஏமாற்றங்கள்.. பேரிழப்புகள்... பெரும் நஷ்டங்கள் இவற்றின் இடிப் பொழுதுகளிலும் சுவாமி மேல் இம்மி அளவிலும் பக்தி இழக்காத தூயவர்களின் திடமான தருணங்கள்  சுவாரஸ்யமாய் இதோ...


சுவாமி பல பேரை குணப்படுத்துகிறார்.. சிலபேரை உடனே இல்லாமல் பொறுமை காத்து குணமளிக்கிறார்... ஏன் இந்த பேதம்? பல பேரை உயிர் பிழைக்க வைக்கும் சுவாமி.. சென்ற உயிர்களையும் உடம்புக்குள் மீட்டு வரும் சுவாமி... கொடும் விஷம் உண்ட பக்தர்களின் உடம்பிலிருந்து எந்த வித அடையாளமின்றி அந்த விஷத்தினை எடுத்துவிடும் சுவாமி.. சில பேர்க்கு உடனே செய்வதில்லை ... ஏன்? சுவாமியே பதில் சொல்கிறார்...


"நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களும்... நோய்களும் நீங்களே தேடிக் கொண்டவை...பூர்வ பாவங்களால் விளைந்தவை.."  என்கிறார். பாவம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் அதை அனுபவித்தே தீர்க்க வேண்டும்... சுவாமியிடம் அசையாத நம்பிக்கை வைத்திருந்தால் அந்த கொடும் கர்ம பொழுதுகளை எளிதாக கடந்துவிடலாம்.. பக்தியே எதையும் ஏற்றுக் கொள்ளும் இதயத்தை தருகிறது.. பக்தியின் அடிப்படை சுபாவமே அது தான். ஏற்றுக் கொள்வது! எப்போது நான் வேண்டியது நடக்கும் ? என எதிர்பார்ப்பதல்ல பக்தி... அது வியாபாரம். பணத்தை கொடுத்து பொருளை வாங்குவது போல் பிரார்த்தனை செய்து ஆசையை அடையும் நோக்கம் பக்திக்கு இல்லை... காரணம் பக்திக்கு ஆசையே இருப்பதில்லை... யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத சமாதானத்தை பக்தி தருகிறது. நெருப்புக்கு சுடுவது குணம். பக்திக்கு எதையும் ஏற்றுக் கொள்வது குணம். ஏற்றுக் கொள்வது என்பது அய்யோ இப்படி ஆகிவிட்டதே என அதனை அனுபவிப்பது அல்ல... எதனோடும் ஒட்டாமல் சாட்சியாய் இருந்து பார்ப்பது. அந்த தன்மை... அதுவே பெருந்தன்மை.. அப்படிப்பட்டவர்களே பக்தர்கள்...அப்படிப்பட்ட பக்தர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அதனால் தான் யோகியர்க்கும் கிட்டாத சுவாமி தரிசனம் பக்தர்க்கு கிட்டுகிறது!  இப்படிப்பட்டவர்களில் சிலரின் அனுபவங்கள் சிலிர்க்க வைக்கிறது!

நியூயார்க்கிலிருந்து வந்த நிருபர் ஒருவரிடம் சுவாமி துயரங்களை பற்றி விளக்குகிறார்... "அதற்கு ஒரு காரணம் இல்லை என்றால் நான் உனக்கு வேதனையை கொடுப்பேனா? வேதனையை நீ அனுபவிப்பதன் மூலம் பாப கர்மாக்களை நீ எரிக்கிறாய்...அதனால் நீ பரிசுத்தம் அடைகிறாய்... உன் இதயத்தை அந்த வேதனைக்கு வடிகாலாக திறந்துவிடு... இன்பத்தை அனுபவிக்க திறந்துவிடுவது போல்... அது உனக்கு நன்மையை அளிக்கும்.. நீ செய்த தவறுகளை எண்ணி நீ வருந்துவதனால் உனக்கு நிம்மதி கிடைக்கிறது... துன்பத்தை பொறுத்துக் கொள்ள அதிலிருந்து நீ நன்மையை பெற முடியும்" என்கிறார் சுவாமி. 

பாம்பு விஷத்திலிருந்து மருந்து எடுப்பது போல்.. மின்னலிலிருந்து மின்சாரம் எடுப்பது போல்... இன்னலிலிருந்து மனப்பக்குவம் ஏற்படுகிறது. பக்குவமான உணவையே நாம் ஏற்றுக் கொள்வதைப் போல் பக்குவமான இதயத்தையே சுவாமி ஏற்றுக் கொள்கிறார்.. யாராவது கசப்பான காய் கொடுத்தால் நாம் ஏற்றுக் கொள்வோமா? ஆனால் சுவாமியிடம் நம் விஷமான.. மிகவும் விஷமமான மனத்தை கொடுத்தால் அவர் மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பது என்ன நியாயம்?


டில்லி சேர்ந்த பக்தை ஆஷா. ஒருமுறை அவர் சுவாமியிடம் "சுவாமி என் கணவர் ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறார்... அவருக்கு தொண்டையில் புற்று நோய்... அதை அறுவை சிகிச்சையால் குணப்படுத்த முடியாது என சொல்லிவிட்டார்கள்.. நீங்கள் தான் குணமடையச் செய்ய வேண்டும்.." என்கிறார்.. அவரின் புற்றுநோயை சுவாமி உடனே குணப்படுத்தி அனுப்புகிறார். வலியும் வேதனையும் இன்றி அமைதியுடன் வாழ்கிறார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் மட்டும் தான் அவரால் வாழ முடிந்தது.. பிறகு உடல் நீத்தார்.. பிறகு ஆஷாவிடம் சுவாமி "உன் கணவனுடைய கர்ம பலனை அவர் அனுபவித்தே ஆக வேண்டும்.. அதை நான் நீக்க முடியாது... ஆயினும் உன்னுடைய வேண்டுகோளுக்காக அவனுக்கு அனுதாபம் காட்டினேன்... ஒன்றரை ஆண்டுகள் அவனை வலியின்றி வாழ வைத்தேன்.. அவ்வளவு தான்" என்கிறார்.

துடிதுடித்துச் சாக வேண்டிய ஆஷாவின் கணவர் உயிர் அமைதியோடு உலகை நீங்கியது! பிறக்கும் போதே இறக்கும் தேதியையும் நம் கர்ம பலனால் குறித்துக் கொண்டே நாம் பூமிக்கு வருகிறோம்.. நம் பாப/ புண்ணிய கர்ம பலன் பொருத்தே சுவாமி நம் ஆயுளை நீட்டிப்பதும்...அடுத்த பிறவிக்கு கர்மாவை ஒத்திப் போடுவதும்.. அப்படியே விட்டுவிடுவதும்... அது நம் பாப கர்ம வீர்யத்தை பொருத்ததே... இதை உணரும் போது மனம் பவ்யமாகி பிறரை நோகடிக்காத நிலையை அடைகிறது! 


வாஷிங்டனில் பணிபுரிந்த இந்திய டாக்டர் பரணி ஷிர்டி சுவாமி பக்தர். அவருடைய மனைவிக்கு நடக்க இயலாத ஆர்த்தரிட்டிஸ் உபாதை இருந்தது.. ஒருமுறை டாக்டர் கனவில் சுவாமி சென்று "நானே நீ தினமும் வழிபடும் ஷிர்டி சாயியின் மறு அவதாரம்" என்கிறார்.. எழுந்து உடன் நம்ப மறுத்த டாக்டர் ஏதோ மனபிரமையாக இருக்கும்.. மீண்டும் அவரே கனவில் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்கிறார்... மனிதர் எட்டடி பாய்ந்தால்... சுவாமி எண்ணிலா அடி பாய்வார்! அன்றிரவே சுவாமி கனவில் தோன்றி "இப்போது நம்புகிறாய் அல்லவா?" எனக் கேட்கிறார்..‌. தேடித் தேடி வந்து தழுவும் தெய்வம் இந்த ஈரேழு உலகிலும் சுவாமி மட்டுமே! டாக்டர் உடனே புட்டபர்த்தி செல்கிறார்... சுவாமியை அருகில் சேவிக்கிறார்.. சுவாமியோ "உன் கனவில் நான் வந்தபோது நீ நம்பவில்லை.. உனக்காக நான் தொடர்ந்து இன்னொரு முறை வர வேண்டி இருந்தது" என புன்னகை செய்கிறார்.. கண்கலங்கிய டாக்டர் தனது மனைவியின் உபாதையை சொல்கிறார். சுவாமிக்கு தெரியாதா என்ன! அந்தப் பெண்மணியும் ஒரு டாக்டர் தான்... இருவரும் பிரசாந்தி நிலையத்தில் தங்குகிறார்கள்.. பஜனையில் கலந்து கொள்கிறார்கள்... சிறுகச் சிறுக நோய் குணமாகிக் கொண்டிருக்கிறது..

       ஒருநாள் டாக்டரிடம் சுவாமி "உன் மனைவிக்கு அவள் அனுபவிக்க வேண்டிய கர்ம பலன் சிறிது பாக்கி இருக்கிறது... அதனால் சில நாள் சென்ற பிறகு குணமடைந்துவிடுவாள்... அப்புறம் வழக்கம் போல நடமாட முடியும்" என்கிறார்... இதனாலேயே சுவாமி பலபேரை உடனே குணப்படுத்துவதும்.. சிலபேருக்கு காலதாமதம் ஏற்படுத்துவதும்.. அதற்கும் காரணம் சுவாமி அல்ல.. அவரவர் கர்மப்பலனே... 

இதனை உணராமல் சுவாமி மேல் கோபப்படுபவர்களையும் "பாவம் என் குழந்தை அறியாமையால் என் மேல் கோபப்படுகிறான்.." என்பார். பெற்ற தாய் கூட இப்படி சொல்வதில்லை... கட்டிய மனைவி கூட இப்படி நினைப்பதில்லை... ஊதியம் நின்றுவிட்டால் உதவாக்கரை என்ற பட்டத்தையே சமூக உறவுகள் அளிக்கின்றன..வருமானம் நின்றால் எங்கிருந்து வரும் மானம்? ஆனால் சுவாமி ஒருவரையும் ஒதுக்குவதில்லை...

ஆகையால் தான் உலக உறவுகள் வெறும் நம் மனதால் நாமே பின்னிக்  கொண்ட கற்பனை பிம்பங்கள். அதில் சாரம் இல்லை... சுவாமி ஒருவரே ஒவ்வொருவர் வாழ்வின் சாராம்சமும்... சர்வ சத்தியமும்...


கேரள தெள்ளச் சேரியை சேர்ந்த திருமதி ராமகிருஷ்ண பழுத்த சுவாமி பக்தை. ஒரு முறை அவர் தனது மகன், மகள், மருமகளோடு சுவாமி தரிசனம் புரிய வொயிட் ஃபீல்ட் வந்து கொண்டிருந்த பயண சமயத்தில்... வழியில் கார் விபத்தாகி மகன் இறந்து போகிறான்.. மகளுக்கும் அவருக்கும் பலத்த காயம்.. மருமகளுக்கோ வலது காலின் உணர்ச்சி போய்விடுகிறது... ஒரே மகன்.. சீமந்த புத்திரன்.. சாவுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டாள்...புத்ர சோகம் என்பது பெற்றோர்க்கு இழப்புகளின் உச்சம்... மூன்று மாதம் மருத்துவமனை வாசம். குறை சொல்வதற்கே உறவினர்கள் இரையை கொத்தும் கழுகாய் பறந்து வருவார்கள்.. அப்படியே வந்தார்கள்.."ஏன் இன்னமும் அந்த பாபாவையே நம்பிக் கொண்டிருக்கிறாய்? அதனால் எந்த நன்மையையும் கிடைக்கவில்லையே " என்கிறார்கள்.. வெந்த புண்களில் வேலைப் பாய்ச்சுவதே பல உறவினர்களின் வேலை... இன்னமும் அந்த வாய்கள் அளந்தன... மனித நாக்கை விட எந்த நாகமும் கொடியதில்லை என்பது போல் ... "அவரை தரிசிக்கப் போகிற வழியில் தானே உன் மகனை இழந்தாய்" என்கிறார்கள்..  வழியில் செல்பவனை குழியில் தள்ளி விடுவது போல் வம்பால் இதயத்தை அசைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் திருமதி ராமகிருஷ்ணா அசையவே இல்லை.. அபத்த வார்த்தைகளுக்காக ஏன் அசைந்து கொடுக்க வேண்டும்? சுவாமிக்காக எதனையும் தியாகம் செய்வதே பக்தி! எதற்காகவும் சுவாமியையே தியாகம் செய்வதா பக்தி? அந்த அபத்தத்தை திருமதி ராமகிருஷ்ணா செய்யவே இல்லை... யாரோ ஏதோ சொல்லிவிட்டால் மனம் சுவாமியை நினைத்து சமாதானம் அடையாமல்... அந்தச் சொல்லை நினைத்து அல்லாடுவதா பக்தி? 

திருமதி ராமகிருஷ்ணா பழுத்த பக்தை...

நரம்பற்ற நாக்கு , வரம்பற்ற வார்த்தை பக்குவமற்ற இதயத்தைத்தான் பதம் பார்க்கும்! பிரபஞ்சத்தையே அடைகாக்கும் பக்தி இதயத்தை அவை என்ன செய்துவிட முடியும்?

ஓரளவுக்கு குணமான பின் சுவாமியை தரிசிக்க ஆம்புலன்ஸ்'சிலேயே ஏறிப் போகிறார்கள். சுவாமி அவர்களை அந்த வண்டியில் ஏறியே ஆசீர்வதிக்கிறார். "இன்னும் சில மாதங்களில் எல்லோரும் குணமடைந்து விடுவீர்கள்" என்கிறார். "சுவாமி எனக்கு ஏன் இந்த சோதனை.. என் மகனை இழந்துவிட்டேனே?" என கேட்கிறார் திருமதி ராமகிருஷ்ணா. "அம்மா... உன் மகன் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய கர்ம பலன் முடிந்துவிட்டது... அதனால் அவனை என்னிடம் அழைத்துக் கொண்டேன்... ஆனால் அதன் பிறகு உனக்கு என் மேல் நம்பிக்கை குறையுமோ எனப் பார்த்தேன்...ஆனால் அது துளியும் குறையவில்லை... நீ என் மேல் உள்ள பக்தியை துளியும் இழக்கவில்லை.. அதுதான் உனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்" என்கிறார். பக்திக்கு மிஞ்சிய மாமருந்து எதுவும் இந்தப் பூமியில் இல்லை... மனப் பக்குவத்திற்கு மிஞ்சிய விருது இந்தப் பிரபஞ்சத்தில் கூட எதுவும் இல்லை.

(ஆதாரம் : பகவான் பாபா/ பக்கம் : 201/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்) 


சுவாமி பக்தர்கள் நாம் மன நிம்மதியோடு மட்டுமே வாழ வேண்டும்! அதுவே நம் பக்திக்கான வாழ்வியல் வெளிப்பாடு.. மனப்பக்குவமே மன நிம்மதியை தருகிறது! வேறெதுவுமில்லை...!! முன்பின் தெரியாத ஓட்டுனர்களை நம்பி நாம் பேருந்திலும் ரயிலிலும் பயணத்தை நிம்மதியாக மேற்கொள்கிற போது... சர்வ சாட்சிய நித்திய பரம்பொருளான சுவாமியை நம்பி நம் வாழ்க்கைப் பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பது அது எப்படி திடமான பக்தி ஆகும்?


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக