தலைப்பு

வெள்ளி, 15 அக்டோபர், 2021

பாபா வரவழைத்த ஷீரடி பிரசாதம்... கொடுக்கக் கொடுக்க குறையாமல் கூடையில் நிறைந்த அற்புதம்!

ஸ்ரீ சத்யசாயியின்  திவ்ய கரங்களின் மகிமை, வானத்தின் வீச்சை விடவும், கடலின் ஆழத்தை விடவும் பெரியது. "பஸ்மோத்பவ கர பவபய நாசன" என்ற பஜன் வரிகள் காதில் ஒலிக்கின்றன அல்லவா. அவர் கரம் பட்டால், சாதாரண பாத்திரம்கூட அட்சய பாத்திரமாக மாறிவிடுகிறது...


தாம் சாயிபாபா என்று தன் தகப்பனாரை உணர வைக்க மல்லிகை மலர் எடுத்து பாபா தரையில் வீச, அதில் "சாயிபாபா" என்று தெலுங்கு எழுத்து  உருவாயிற்று. இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு  காலையில் பள்ளிக்குச் சென்ற சத்யா, சிறிது நேரத்தில் திரும்பி வந்து, நான் உங்கள் சத்யா அல்ல, சாயிபாபா எனக் கூறி அவதாரப் பிரகடனம் செய்தார். ஸ்வாமியின் இந்த தெய்வீக அறிவிப்புகள், அவர் ஷீரடி பாபாவின் அவதாரம் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இதை  நாம் அறிந்து, நமது நம்பிக்கையை பசுமரத்து ஆணிபோல் பதிய வைக்க, இப்பதிவின் அற்புதச் செய்திகளை படிப்போம்.



🌹ஷீரடியிலிருந்து தருவித்தேன்.. பாபா அளித்த அதிசய பழங்கள்:

அவதாரப் பிரகடனத்திற்கு பிறகு, சில காலம் கழிந்த பிறகு பக்தர்கள் சூழ பகவான் பாபா அமர்திந்திருந்தார். அச் சமயம், பாபா தம் கை அசைவில் பழங்கள் நிறைந்த ஒரு கூடையை வரவழைத்தார். அந்த அபூர்வப் பழங்களை அப் பகுதியில் இருந்த யாவரும் அதுவரை  பார்த்ததுமில்லை, ருசித்ததும் இல்லை.  அருகிலிருந்த அவரது அத்தை ( தகப்பனாரின் சகோதரி) அந்தப் பழங்கள் எங்கிருந்து வருகின்றன என  வியப்புடன் கேட்க, அவை ஷீரடியில் இருந்து வருகின்றன என பாபா கூறினார். பிறகு அந்தப் பழங்கள் அங்கு கூடி இருந்தவர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூடையில் சுமார் 40 பழங்கள் தான் இருந்த போதிலும், அள்ள அள்ளக் குறையாமல் அட்சயமாக பழங்கள் பெருகி, அனைவருக்கும் பிரசாதமாக கிடைத்தது .  பாபாவின் தெய்வீக சக்தியை இது நிருபணம் செய்து அனைவரையும் பக்திப் பரவசப்படுத்தியது. 



🌹ஷீர்டி பாபாவாக மாறிய பர்த்தி பாபா:

பக்தர்களின் இடையறா ஏக்கமான வேண்டுதல்களுக்கு இறைவன் செவி சாய்க்கிறான். அதுபோலவே, பகவான் சத்யசாயி பாபா, தமது அத்தையின் உள்ளார்ந்த வேண்டுதலுக்கு இணங்க ஷீரடி சாயிபாபாவாக காட்சி அளித்தார். அந்த புனித அம்மையார் இதுபற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.

"அந்த அறைக்குள் பிரவேசித்த பின், பாபா தமது கரங்களால் என் கண்களை மூடி, பிறகு திறந்தார். அந்த அறையின்  ஒரு மூலையை பார்க்கச் சொன்னார்... ஆஹா. எப்படி விவரிப்பது அந்த திவ்ய தரிசனத்தை!  ஷீர்டிபாபா அங்கு தமது வழக்கமான தோற்றத்துடன்!, கால்மீது கால் போட்டபடி அமர்ந்திருந்தார். அவர் நெற்றியிலும் கரங்களிலும் விபூதி அணிந்திருந்தார். அவரது அருகில் இருந்த ஊதுவத்தியில் புகை எழுந்து பரவிக் கொண்டிருந்தது. ஒரு திவ்ய ஒளியில் அவரது தேகம் ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. ஒருவித சுகந்த நறுமணம் அங்கு பரவியிருந்தது.

"எல்லாம் பார்த்து விட்டாயா" என்று பாபா கேட்க, ஆம் , என்ன ஒரு அற்புத திவ்ய தரிசனம் என்றேன் நான்.

மனிதர்களாகிய நம்மில் அனேகர் மறதி மன்னர்களாக வலம் வருகிறோம். பல நாட்களுக்குமுன்  நடந்த சம்பவங்கள், ஏன், அன்று காலை உண்ட சிற்றுண்டி கூட சிலர் மறந்துவிடுதுண்டு. அப்படி இருக்கையில் பூர்வஜென்ம நினைவு எப்படி நமக்கு ஏற்படும். ஆனால் பாபா,  தமது தெய்வீக சக்தியால். முக்காலத்தைப் பற்றி மட்டுமல்லாமல் எக்காலத்தையும் பற்றியும் எளிதாக இயம்ப முடியும். ஷீர்டி பாபா பற்றி சிறு வயதிலேயே பல பஜன் பாடல்களை இயற்றி, அவற்றை தம் தோழர்களுக்குக் கற்பித்தார் நம் சத்ய சாயி பாபா. அப்பாடல்களில், ஷீர்டியின் துவாரகமாயி, பூட்டி கோயில், சமாதி மந்திர், அங்கிருந்த வேப்ப மரம் முதலியவை இடம் பெற்றதுடன், "பவித்ரமான உதி" பற்றியும் கூறி பஜன்களை இசைப்பார் பாபா.


🌻 அவரும் இவரும் ஒன்றே என பாபா பலமுறை பக்தர்களிடையே கூறி வந்துள்ளதை  மேற்கண்ட சம்பவங்களால் உணர்வோம். பகவானின் பொற்பாதம் பணிந்து அவரது அருள் பெறுவோம். 🌻

தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக