ஒரு ஆராய்ச்சியாளரை திக்குமுக்காட வைத்து... அவருக்கு தன் மகிமை உணரச் செய்து... தன் மடியில் இழுத்து அமர்த்தி அனுகிரகம் புரிவதில் சுவாமிக்கு நிகர் சுவாமியே... சூழ்நிலை சிருஷ்டி கர்த்தா சுவாமி என்பதற்கான சிறந்த உதாரணமும் அடங்கி இருக்கிறது மிக சுவாரஸ்யமாய் இதோ...
டாக்டர் ரேயஸ் கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார் ரேயஸ். அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட பாடம் வேதாந்தம்.. வேதாந்த விஞ்ஞானியான அவர் உலக ஞானிகள் பகிர்ந்த வேதாந்த குறிப்புகளை ஆவலோடு சேகரித்து அறிகிறார்... பிலிப்பைன்ஸ்'சில் படிக்கும் போதே எல்லா மதங்களுக்கான வேர்களை தேடிச் சென்று அறிந்தவர்... இந்தியாவுக்கு வந்து தன் ஆராய்ச்சிக்கான பொருட்களை சேகரிக்க வேண்டும் என ஆவல் அவருக்கு இருந்தது..
கலிஃபோர்னியாவில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வரும் அவர் சுவாமியை பற்றி கேள்விப்படுகிறார்... பசிக்கிறவனுக்கு பாயாசத்தின் வாசனை அறியாமல் போய்விடுமா? அந்த தேடல் அமெரிக்காவில் அருகிலேயே வசித்து வருகிற இந்திராதேவி அம்மையாரின் இல்லத்திற்கு வந்து சேர்கிறது.. சுவாமி அருளிய ஆன்மீக விசா அவர்களிடமே முக்கியமாக இருந்தது.. ஆகவே தான் அமெரிக்கர்களுக்கு முக்திபுரியை நோக்கிய பயணம் பெரும்பாலும் அந்த தெய்வத்தாயிடம் இருந்தே ஆரம்பித்தது...
சுவாமி பஜனை / அதிர்வலைகள்/ போதனைகள்/ யோகா வகுப்புகள் என அங்கே சுவாமி ஆன்மீகம் அமர்க்களப் படும்... சர்க்கரையை தேடி ஓடும் எறும்புகளுக்கு சக்கரைப் பொங்கலே கிடைத்தால் எப்படி இருக்கும்! அப்படி இருந்தது டாக்டர் ரேயஸுக்கு...கனவில் சுவாமி அவருக்கு தரிசனம் அளிக்க ஆரம்பிக்கிறார்... ஆனால் அந்தக் கனவுகள் எல்லாம் தனது ஆவலால் தான் நிகழ்கிறது என ஆரம்பத்தில் நினைக்கிறார்.. சுவாமி சங்கல்பமின்றி எதுவுமே நிகழாதபோது... சுவாமி வரும் கனவுகள் சுவாமியின் சங்கல்பமும் அதீதமான கருணையினாலுமே நிகழ்கிறது... மனிதன் தூக்கத்தில் வருகின்ற கனவுலகமும்... எழுந்த பின் வருகின்ற நினைவுலகமும் வேறு வேறு என நினைக்கிறான். இரண்டுமே கனவுலகமே என்கிறார் அஷ்டவக்ர முனிவர் தன் அஷ்டவக்ர கீதையில்... அக விழிப்பு அடையாத வரை புறவிழிப்பு என்பது விழிப்பு நிலை அல்ல... இப்படி இருக்கையில்... சுவாமியை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகிறது டாக்டர் ரேயஸுக்கு...
தன்னுடைய பள்ளியை இன்னும் ஆன்மீக மயமாக்க வேண்டும்.. யாரும் வேலை /பணம் என்ற ஒரே நோக்கோடு இங்கு வந்து படிக்கக் கூடாது... விழுக்கல்வியே முக்கிய வேராக இருக்க வேண்டும் என்றெல்லாம் திடமான திட்டம் வகுக்கிறார்... இவை எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமே இல்லை என்கின்றனர் சுற்றி உள்ளோர்... கல்வி என்பது அகக் கண்களை திறப்பதற்குத்தான் என சுவாமியே வலியுறுத்தி இருக்கிறார்... ஆகையால் டாக்டரும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருக்கிறார்...
டாக்டர் ரேயஸ் குடும்பத்தினருக்கு இந்தியா வந்து சுவாமியை தரிசிக்க போதுமான பொருளாதாரம் இல்லை... கலங்கிப் போகின்றனர்... நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கையில் உடைந்துபோன உலையைப் போல் அவர்களது நிலை... அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிற சுவாமி சும்மா இருப்பாரா.. அவரே சூழ்நிலை சிருஷ்டி கர்த்தா... ஒருநாள் சுவாமி பஜனை நிகழ்ந்த பிறகு சில பக்தர்கள் அவரைத் தேடி வருகிறார்கள் "நாங்கள் இந்தியா செல்கிறோம் சுவாமியை தரிசிக்க.. நீங்களும் வரவேண்டும்.. பயண ஏற்பாடுகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்...கவலைப்பட வேண்டாம்" என்கின்றனர்.. இவர்கள் யாரிடமும் தனது நிலையைச் சொல்லி அவர் முறையிடவில்லை... சுவாமி அவர்களின் வழி அந்த சூழ்நிலையை உருவாக்குகிறார்.. சுவாமிக்கு தன் பக்தர்கள் அனைவரும் தனது கருவிகளே!! சுவாமிக்கு யாரை வைத்து எந்த நேரம் என்ன செய்ய வேண்டும் என தெள்ளத்தெளிவாக தெரியும்! டாக்டருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. சுவாமியின் புகைப்படம் பார்த்து அவரது கண்ணீர் பேசியது! ஏற்கனவே டாக்டருக்கு தரிசிக்கும் ஆவல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததில் சமர்ப்பயாமி என குடம் குடமாக நெய்யைவிட்டு கிளம்பிவிடுகின்றனர் அந்த சுவாமி பக்தர்கள்...
ஆனால் அவர்களுடைய ஒரே மகளான அனிதா தனது முதல் பிரவசத்திற்காக நியூயார்க்கில் காத்திருக்கிறார்.. டாக்டர் ரேயஸின் மனைவியோ தனது மகளோடு இருக்க வேண்டுமே.. என்ன செய்வது என தவித்துப் போகிறார்... இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... தபலாவிற்கு ஒரு பக்கம் அடி.. மிருதங்கத்திற்கோ இரு பக்கமும்... அப்போது தான் தப்புத் தாளமாய் தாங்கள் சுவாமி தரிசனத்திற்கு வர இயலாத சூழ்நிலை என அந்த பக்தர்களிடம் தயங்கி தயங்கி சொல்கிறார் டாக்டர் ... ஓ பிள்ளை பாசம் வென்றுவிட்டதே என தொலைபேசியின் எதிர்முனையில் கேட்டவர்கள் நினைத்திருக்கலாம்... அது தான் இல்லை...
அவர் பேசிய அடுத்த நாள் காலை டாக்டர் ரேயஸின் மனைவிக்கு கண்கள் தக்காளிப் பழமாய் சிவந்து போகின்றன... கண்களை திறக்கவே முடியவில்லை... வந்து சோதித்துப் பார்த்த மருத்துவர் இந்த நிலையில் உங்கள் மகளின் பிரசவ உதவிக்கு நீங்கள் செல்லக்கூடாது.. சென்றால் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுவிடும் என அவர் எச்சரிக்கிறார்.. சுவாமி பக்தர்கள் பர்த்தி செல்லும் நாளும் நெருங்குகிறது.. சரி அங்கேயே செல்வோம் என இருவரும் மீண்டும் தாங்கள் வருவதாக அவர்களிடம் அறிவிக்க... புட்டபர்த்திக்கு அதாவது இந்தியாவுக்கு விமானம் ஏறுகிற அந்த அதிகாலை படுக்கையை விட்டு எழுகிறார் டாக்டரின் மனைவி... கண்களில் தக்காளியும் இல்லை வெங்காயமும் இல்லை.. தெள்ளத்தெளிவாக கண்கள் குணமாகி சுவாமி தரிசனத்திற்காக தயாராக இருக்கிறது.... எப்படி இது சாத்தியம்... மருத்துவர் இன்னும் ஒரு வாரம் ஓய்வெடுக்க சொல்லி இருந்தாரே..
அப்போது தான் சிறிதாவது ஆறும் என்றாரே என்றெல்லாம் கேள்விகள் ஓடுகிறது டாக்டருக்கு... ஒரு சூழ்நிலையை உருவாக்க சுவாமியால் எதையும் செய்ய முடியும் என அப்போது தான் உணர்கிறார்...ஆக பக்தன் தீர்மானிப்பதில்லை சுவாமியே தீர்மானிக்கிறார்... எல்லாவற்றையும் சுவாமியே தீர்மானிக்கிறார்... அந்த தீர்மானத்தை பூரண பக்தி அப்படியே ஏற்றுக்கொள்கிறது!! அப்படியே இருக்கிறார்கள் சுவாமி பக்தர்கள்!
விமானப் பறவையின் அலகு இந்தியா எனும் ஆலமரக்கிளையில் அமர்கிறது.. அந்த ஆலமரத்தையே தாங்கும் வேரைத் தேடி பெங்களூர் வொயிட் ஃபீல்ட் வருகிறார்கள்.. ஆனால் சுவாமி இப்போது தானே புட்டபர்த்தி சென்றிருக்கிறார்.. ஒரு மணி நேரம் முன்பு வந்திருந்தால் தரிசித்திருக்கலாம் என பதில் கிடைக்கிறது.. ஆனால் டாக்டர் குடும்பமும் வந்திருந்தவர்களும் சோரவில்லை... சுவாமி படத்தை மாட்ட ஆணி அடித்துவிட்டு .. அந்த ஆணி உறுதியாக இருக்கிறதா? என அதை அசைத்துப் பார்ப்போமே அதைப் போல்... சுவாமி சிறிதாக அசைத்துப் பார்க்கிறார்.. சுவாமி பக்தர்கள் என்றாலே சுவாமி பக்தியில் உறுதியாக இருப்பவர்கள் என்றே பொருள்.. அப்படித்தான் இருக்கிறார்கள் அத்தனை சுவாமி பக்தர்களும்...பக்தர்களாகிய அந்த பக்தி விளக்கப் பொருட்கள் பரம்பொருளை தேடி புட்டபர்த்தி கிளம்புகின்றன...
சுவாமி அனைவருக்கும் நேர்காணல் தருகிறார்.. விபூதி பிரசாதம் வழங்கிய பிறகு நீங்கள் காலையில் எதுவும் உணவருந்தவில்லையே என கருணையோடு கேட்கிறார்.. அதுதான் சாயித்தாய்... ஒரே சத்தியத் தாய்.. அந்தத் தாய் இவன் நமக்கு என்ன கொண்டு வந்திருக்கிறான் என எந்த சமயத்திலும் எதிரே பார்க்காதவள்... நாம் என்ன தரலாம் என்றே நினைப்பவள்.. நம்மிடமிருந்து தனக்காக எதையும் எதிரே பார்க்காத அந்த காருண்யத் தாயான சுவாமியிடம் நாமும் எதையுமே எதிரே பார்க்காமல் பக்தி செலுத்துவது ஒன்றே நம் ஒரே கடமை...ஒரே குறிக்கோள்... ஒரே தர்மம்.. என்றே சுவாமியின் கருணையை நினைக்க நினைக்க இப்படியே பக்தி செலுத்த தோன்றுகிறது! சுவாமி உடனே வெண்ணெயை சிருஷ்டித்து அனைவருக்கும் தருகிறார்... எத்தனை வெண்ணெய் பானையை உடைத்தவர் சுவாமி... அவரின் வெண்ணெய் சிருஷ்டி ஒன்றும் வியப்பானதல்ல.. தன்னையே தருபவருக்கு வெண்ணெய் தருவதா இயலாது! ஆளுக்கு சிறிதளவு.. அப்படி ஒரு வெண்ணெய் ருசியை அவர்கள் அதற்கு முன் சாப்பிட்டதே இல்லை.. கையளவு வெண்ணெய் வயிற்றளவை நிறைத்து விடுகிறது... வியந்து போகிறார்கள்... அது வெண்ணெய் அல்ல சுவாமியின் இதயம் என எத்தனைப் பேர் அப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்!!
நேர்காணல் அறையில் கூடி இருப்பவர்கள் டாக்டர் ரேயஸை பற்றி சுவாமியிடம் சொல்கிறார்கள்... சுவாமிக்கு தெரியாதா! "சுவாமி.. இவர் ஒரு ஆன்மீக கல்லூரியை நிறுவ முயற்சிக்கிறார்.. அதற்கு உங்கள் அருள் வேண்டும்" என்கிறார்கள். டாக்டர் ரேயஸின் கையில் ஒரு பித்தளை சொம்பை சிருஷ்டித்துத் தருகிறார் சுவாமி.. அதிலிருந்து விபூதி அமுத சுரபி யாக பொங்கி வழிகிறது...அமுதசுரபி என்பது பிரத்யேகமாக செய்யப்படுகின்ற பாத்திர வகையறாவை சேர்ந்ததல்ல... சுவாமியால் எந்தப் பாத்திரத்தையும் அமுதசுரபியாக மாற்ற முடியும்!
"நீ எப்படி இது நடக்கப் போகிறது என கலங்கி இருந்தாய்.. அது எனக்கு தெரியும்.. பயப்படாதே! உன்னுடைய முயற்சியில் உனக்கு வெற்றி கிடைக்கும்.. நீ அங்கு ஆன்மீக ஒளி பரப்பி .. இதைப் போல் பிரகாசிக்க வைப்பாய்" என டாக்டர் ரேயஸை உற்றுப் பார்த்து சுவாமி ஆன்மீக கல்லூரி பற்றி தீர்க்கமாகப் பேசுகிறார்..
பல்கலைக்கழகமே நிறுவி விட்டது போன்ற பூரிப்பு இதயத்தில்.. சுவாமி சொன்னால் அது நிகழ்ந்தே விடும் என்ற சத்தியம் அவரும் புரிந்துகொண்டிருக்கிறார்... "இதைப் போல் பிரகாசிக்க வைப்பாய்" என சுவாமி சொன்னது சில நொடிகளில் அனைவருக்கும் புரிகிறது.. டாக்டர் ரேயஸ்'சிடம் சுவாமி சிருஷ்டித்து அளித்த அந்த பித்தளை விபூதி சொம்பு தங்கமாக மாறிவிடுகிறது...
பிறகு.. வெளி தரிசனத்தில் "உனக்கு என்ன வேண்டும்?" என சுவாமி டாக்டரை கேட்கிறார்...என்ன கேட்பார்..!! பூரண திருப்தி எதிரே வந்து நிற்கையில் என்ன கேட்பார்..!! சுவாமி நின்றிருக்கிற மணலில் விழுகிறார்.. மணலில் சுவாமியின் பாதச்சுவடுகளோடு சேர்ந்து மல்லிகையின் வாசனைச் சுவடுகளும் மணம் பரப்ப "சுவாமி.. இந்த அமைதியும்... இந்த மனநிறைவும்... எனக்கு என்றும் கிடைத்தால் போதும்!" என சுவாமியிடம் டாக்டர் சொல்ல.. புன்னகைத்துவிட்டு சுவாமி அங்கிருந்து நகர்கிறார்...
பர்த்தியில் சிலநாள் தங்கி கிளம்புகின்றனர்... புத்துணர்ச்சியோடு திரும்புகிறார் டாக்டர்... திரும்பி வந்தபிறகு பல்கலைக்கழகம் அமையும் வேலை துரிதமாய் நிகழ்கிறது... நிறைய பண உதவி வருகிறது... உலகத்தவருக்கு படி அளக்கும் சுவாமி சொல்லிய வாக்கு.. ஐஸ்வர்ய வாக்கல்லவா...தங்களது அனுபவங்களை பகிர இந்திராதேவி அம்மையாரிடம் செல்கிறார்கள் டாக்டர் தம்பதிகள்.. பிறகு சுவாமியின் ஒரு வீடியோ டேப்'பை பார்க்கிறார்கள்...அப்போது சுவாமியின் முகத்திற்கு பதிலாக இயேசு நாதர் போன்ற தாடியுடன் கூடிய முகம் தோன்றி... "என்னை உனக்கு தெரியவில்லையா... நீ எந்த உருவில் வழிபட்டாலும்...நான் அந்த உருவில் உனக்கு அருள் பாலிப்பேன்" என்கிறார்... கண்களை விரல்களால் தடவி தடவிப் பார்க்கிறார்.. டாக்டர் ரேஸ் மனைவி ஆச்சர்யத்தின் முகட்டிற்கே சென்று "ஓ" என அலறி.. தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரிக்கிறார்... அனைவரும் டாக்டர் மனைவிக்கு மட்டுமே நிகழ்ந்த அந்த பிரத்யேக அனுபவத்தை எண்ணி வியக்கிறார்கள்..
"நான் பார்த்தேன்.. எனக்கு தெரிந்தது... ஆண்டவன் பூமியில் வந்து நடப்பதை... பக்தர்கள் முன் பேசுவதை... கை தூக்கி ஆசீர்வதிப்பதை நான் கண்டேன்... அந்த அவதாரம் சுவாமியே!!! " என கண்ணீர் கோதாவரியாய் பெருக்கெடுத்து ஓடப் பேசுகிறார்... அனைவரும் சுவாமியின் வீடியோ காட்சியை தரிசிக்க.. டாக்டர் ரேயஸ் மனைவிக்கோ அவர்கள் வழிபடும் இயேசு கிறிஸ்துவாக தரிசனம் அளிக்கிறார் சுவாமி..
சுவாமியை சர்வதேவதா அதீத ஸ்வரூபன் என பக்தர்கள் கொண்டாடுவது எவ்வளவு சத்தியம்!!!
(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 227 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)
சுவாமி வியப்புக்கும் அப்பாற்பட்டவர்... நமது வியப்பு கூட ஒரு எண்ணத்திலிருந்தே உதயமாகிறது.. ஆனால் சுவாமியோ நமது எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்... எல்லா இறை ரூபங்களும் அவரே என்பது இந்த அனுபவம் வழி உணர முடிகிறது! எண்ணமற்ற நிலையில் தனது வண்ணங்களை வெளிச்சமிட்டபடி வீதி உலா வருபவர் சுவாமி... சுவாமி என்பவர் அண்டசராசரம் சுற்றி வரும் காற்று போல்... அந்தக் காற்று நம்முள் சுவாசமாக இயங்கி ஆன்மீக வாழ்க்கைக்கு உயிர் தரட்டும்.. நல்லதொரு உயரம் தரட்டும்!!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக