தலைப்பு

செவ்வாய், 2 நவம்பர், 2021

சாலை ஓர பெஞ்சில் அமர்ந்து பாபா தந்த திடீர் தரிசனம்!

அற்ற குளத்தில் அருநீர்ப் பறவைபோல் துன்பம் கண்டு விலகிவிடும் நட்போ, உறவோ அல்ல,பகவான் பாபாவின் பாசப் பிணைப்பு. இன்பத்தில, துன்பத்திலும் எந்த சூழ் நிலையிலும், எப்போதும்,எங்ஙான்றும் நம்மைச் சூழ்ந்து காப்பதே, அவரது கருணையின் தனித்துவம்... 

அங்கிருக்கிறார், இங்கில்லை என பாபாவைப் பற்றி கூற முடியுமா? 

எங்கோ இருந்த பாபா, தன் அருகில் பார்க் பெஞ்சில், ஒரு நண்பனைப் போல அமர்ந்து, உரையாடிய அந்த "திரில்"சம்பவத்தை விவரிக்கிறார் சாயி சகோதரர் வினய் குமார். வாருங்கள் என்னுடன், அவர் கூறுவதைக் கேட்போம்... 


🌹பார்க் பெஞ்சில் அமர்ந்து "வா" என்று கூப்பிட்ட பாபா:

நான் ஒரு காமர்ஸ் பட்டதாரி. கணித பாடம் எனக்கு சற்று கடின பாடமாக இருந்தது. ஆனாலும் அதை என்னால் தவிர்க்க முடியாத சூழ்நிலை. ஏனெனில் நான் பட்டயப் படிப்பை  படிக்க விரும்பிய போது, கணிதத்தை கற்க  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெங்களுர் சி.வி. ராமன் நகரில் வசித்து வந்த எனது நண்பரிடம் (அவரும் சாயி பக்தர்தான்) கணிதம் கற்கச் சென்று வந்தேன். 

மறக்கமுடியாத அந்த நாள், இரவு 8 மணி இருக்கும். நான்  ஸ்கூட்டரில் எனது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன். அந்த வழியில் ஒரு தொழிற்சாலை இருந்தது. அதன் மதிற் சுவர் அருகே ஒரு சிறிய சிமெண்ட் சாலை. அதன் முடிவில் ஒரு பெஞ்ச் போடப்பட்டு இருக்கும். சற்று தொலைவில் ஒரு ரயில்வே கடப்புவழி ( level crossing ) இருந்தது. இரவின் சாலை விளக்கு வெளிச்சத்தில், கிழக்கு பெங்களுரின் அச்சாலையில் எனது ஸ்கூட்டர் பயணம், ரயில்வே கிராசிங் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், ஏதோ ஒரு விநோத சப்தம்,

 "உஸ் உஸ்" என்று குரல் கொடுத்து யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. இயல்பான மனித குண ஆவலோடு,

நான் கழுத்தைத் திருப்பி பார்த்தேன். என் கண்களையே நான் நம்ப முடியவில்லை. அந்த பெஞ்சில் அமர்ந்து என்னை அழைத்தது,பக்தர்களின் இதயவாசியான சாட்சாத்  நமது பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா   அவர்களே.


 🌹பாபாவின் ஏகாந்த தரிசனம்:

கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்பார்களே ! அந்த நிலைதான் எனக்கு. பகவான் ஒய்யாரமாக, தமது கால்களை ஆட்டிய படியே, அந்த பெஞ்சில் அமர்ந்து அன்றலர்ந்த பனிமலர் போன்ற வதனத்தோடு ஆனந்தப் புன்னகை பூத்திருந்தார். செய்வதறியாது நான் ஸ்கூட்டரை அப்படியே  கிடத்திவிட்டு, வேகமாக ஓடிவந்து ஸ்வாமியின். பொற்பாதங்களை இறுகப் பற்றினேன்.

திகைப்பிலிருந்து விடுபட்டபின், நான் காணும் காட்சி கனவல்ல, நிஜம்தான் என உணர்ந்தேன். என் உடல் வியர்த்து இன்ப அதிர்ச்சியால் நடுங்கிக் கொண்டிருக்க, ஸ்வாமி, தமது கைகளை தமது தொடைமீது வைத்தபடி. அமைதியாக வீற்றிருந்தார். ஸ்வாமி கூறினார். "அதோ தெரியும் நிலவைப்பார். காலையில் அது மறையும், பிறகு சூரியன் உதிக்கும்.  அனுதினமும்,இந் நிகழ்வுகள் விண்வெளியில் மாறி மாறி நிகழும். அதுபோல.  இவ்வுலக வாழ்க்கையில் இன்ப,துன்பங்கள் மாறி மாறி வருவது  இயற்கையின் நியதி. ஆனால் நான் மாறாமல் அனைத்து நிலைகளிலும் எப்போதும் உனக்குத் துணையாக இருப்பேன்."

இப்படி கூறிவிட்டு, ஸ்வாமி மெல்ல எழுந்து, ரயில்வே லெவல் கிராசிங்கை நோக்கி நடக்கலானார். செய்வதறியாது நான் அவர் போவதைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் , திடீரென அவர் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். கிழக்கு பெங்களூரில் ஒரு சிமெண்ட் சாலை பெஞ்சில் அமர்ந்து  என்னை அழைத்து, "நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்" என்று ஸ்வாமி சொன்னதுஎல்லாம்,  மறக்கவொண்ணா ஒரு மாயாஜாலக் கதையின் நிகழ்வுகள் போல  என் மனதில்  எதிரொலித்துக் கொண்டே இருக்க,நான் வேகமாக என் ஸ்கூட்டரை ஓட்டி, வீட்டிற்கு வந்தேன். ஸ்கூட்டரை அப்படியே தரையில் சாய் தந்துவிட்டு, மாடியில் என் அறைக்கு சென்றேன். அங்கும் பாபா தமது பாதுகாப்பை உறுதி செய்வது போல், அங்கிருந்த பகவானின் அனைத்துப் படங்களிலிருந்தும் விபூதி வர்ஷித்துக் கொண்டிருந்தது. அந்த அற்புதக் காட்சியை கண்டு மெய் சிலிர்த்து சாய்ராம் சாய்ராம் என மனம் உருகக் கூவி நின்றேன்.

சாய்ராம்  வினய் குமாரின் இந்த அனுபவம் இத்துடன் முடியவில்லை. எப்போதும், எந்நிலையிலும்  உன்னுடன் இருப்பேன் என்று தான் கொடுத்த உத்தரவாதத்தை ஸ்வாமி எப்படி செயல் படுத்தினார் என்பதை  இனி காண்போம்.... 


🌹வினய் குமார் மேலும் கூறுகிறார்:

அன்றிரவு எனக்கு உடல் நடுக்கமுடன் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மறுநாள் ஸ்வாமி, பிரசாத் என்கிற சாயி சகோதரிடம் விபூதி கொடுத்தனுப்பி, நடந்த விவரங்கள் அனைத்தையும் என் தந்தையிடம் கூறச் சொன்னார். பிறகு பிரசாத் என்னையும் சந்தித்து பயப்படவேண்டாம் என்று பாபா சொன்ன நம்பிக்கை செய்தியையும் கூறினார். இரண்டுநாள் கழித்து, பாபாவை நான் தரிசனம் செய்யச் சென்றபோது,

"என்னாச்சு" என பாபா கேட்க, பதில் சொல்லமுடியாமல் அவரது பாதம் பற்றி தேம்பித்  தேம்பி அழலானேன். பாபாவின் பாதுகாப்பு, எப்போதும் எங்கும் அவரது பக்தர்களுக்கு கேடயமாக விளங்குகிறது என்பதை நான்  இச் சம்பவத்தால் தெளிவுற அறிந்து மனமகிழ்ந்தேன்.


🌻கருணத் தெய்வம் பாபாவின் பக்த சம்ரட்சணம் முழுமையானது. அவரது பாதுகாப்பு வளையம் விண்ணிலும் பரந்தது. கடலினும் ஆழமானது. அவரது சங்கல்பம் வஜ்ர சங்கல்பம். சர்வ தேவதா அதீத ஸ்வரூபமான பாபாவைப் பணிவோம். பரமசுகம் பெறுவோம்... 🌻


ஆதாரம்: திரு வினய்குமார் அவர்கள் பெங்களூர் ஒயிட் பீட ஆசிரமத்தில் ஆற்றிய உரையிலிருந்து...

 தமிழில் தொகுத்து வழங்கியவர்: திரு, குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக