தலைப்பு

திங்கள், 11 அக்டோபர், 2021

விளாங்காயை நிலவாக மாற்றிய பாபாவின் வினோத லீலை!


நிலவே நிலவே வா வா என்று அன்னையர்கள் நிலவை அழைத்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுவர். நாம் அழைத்தால் விண் நிலவு மண்ணுக்கு வருமா.? ஆனால் அழைக்காமலே வந்து பாபாவின் கையில் அடைக்கலமானது நிலவு . நம்ப இயலவில்லையா? பதிவுக்குள் செல்வம். படித்தபின் தெளிவோம்... 


🌹நமக்கு விளங்காத விளாங்கனி மாயம்:

அது ஒரு பனிவிழும் கார்த்திகை மாதம்.1973ம் ஆண்டு டிசம்பர் 8ந்தேதி. அதிகாலைப் பயணமாக பாபா பிரசாந்தி நிலையம் விடுத்து, பிருந்தாவனுக்குப் புறப்பட்டார். ஒரு மணி நேரப் பயணம் முடிந்தபின், பாபா தன்னுடன் புறப்பட்ட மூன்று கார்களை, மனித நடமாட்டமற்ற ஒரு காட்டின் இடையே உள்ள ஒரு வெற்றிடத்தின் அருகே நிறுத்துமாறு பணித்தார். அனைவரும் காரிலிருந்து இறங்கினர். பாபா மிகக் குதூகலமான முக பாவத்துடன், வேடிக்கையான பல செய்திகளை கூறிக்கொண்டே வந்தார். அந்த இடத்தின் அருகே ஒரு பெரிய விளா மரமும், அதன் உச்சாணிக்கிளையில் பெரிது பெரிதாக சில விளாம்பழங்களும் இருந்தன. அந்த பழங்கள்மீது கற்களைவீசி, அவைகளை விழ வைக்க சிலர் முயன்றனர். ஆனாலும் ஒரு சிறிய பழம்  தான் கீழே விழுந்தது.                             


              

🌹பாபாவின் கரங்களில் அடக்கம் சூரிய சந்திரர்கள்:

பாபா அந்தப் பழத்தை கையில் எடுத்தார். இளஞ்சூரியனின் பொன்நிறக் கதிர் ஒளியில் அதை தமது கையில் தூக்கிப் பிடித்த பாபா, "இப்போது நாம் சந்திரனைக் காணப் போகிறோம்" என்று கூறியவாறு, அந்த விளாம்பழத்தை தமது கைக்குள் வைத்து மூடினார். கையைத் திறந்த பாபாவின் கரத்தில் கண்டது என்ன? காலைக் கதிரவன் வானத்தில் இருக்க, மோன நிலவோ பாபா கரங்களில் இருந்தது. ஆம் நிலவின் ஒரு சிறிய உருவகம் அவர் கரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதிசயத்தின் உச்சத்தில் அனைவரும் "ஆ" என வாய் பிளந்து வியந்து நின்றனர். 

அது ஒரு ஒளி ஊடுருவக் கூடிய வட்டமான பொருளாக இருந்தது. விளிம்புகளில் மெல்லியதாகவும் நடுப்பகுதி தடித்தும் காணப்பட்டது. அதன் வழியே சூரிய ஒளி அற்புதமாக ஊடுவியது. அதன் உள் தோற்றம் விநோதமாக மாறிக் கொண்டே இருந்தது.சில இடங்களில் இருள் படர்ந்தும், சில இடங்களில் ஒளியுடன் கூடிய நரம்புகள் போன்ற அமைப்புடனும் இருந்தது. சில இடங்களில்  ஒளிரும் புள்ளிகள், மற்றும் கோடுகளும் காணப் பட்டன. அதி அற்புத அழகோடு அந்த குறு நிலவு ஜொலித்துக் கொண்டுதிருந்தது.

தமது கரத்தில் அதைப் பிடித்திருந்த பாபா, அது நிலவின் சிறிய உருவம் , நிலவின் பிரதிபிம்பம் என்றார் . நிலவின் இருபுறத்தையும், நாம் தனித்தனியாக போட்டோ எடுத்தால் எப்படி தோற்றம் அளிக்குமோ, அப்படியே இருந்தது பாபாவின் கையில் இருந்த அந்த சிறிய நிலவின் இரு பக்கங்களும். அதன் ஒளிரும் புள்ளிகளும் கோடுகளும் நிலவின் மலைகளும், தாதுக்களும் ஆகும் என்றார் பாபா. இந்த  சிறிய நிலவைப் புகைப்படம் எடுத்து, பெரிதாக்கிப் பார்த்தால், நிலவில் உள்ள அனைத்துப் பொருட்களும் துல்லியமாக அதில் காணப்படும் என்றார் பாபா.

நிலவின் நேர்த்தியை, பகவான் விவரித்து முடித்ததும், காலைச்  சிற்றுண்டிக்கான நேரம் வந்துவிட்டதால், அனைவரும் சுவையான சிற்றுண்டி அருந்த ஆரம்பித்தனர். அந்த நிலவின் பிம்பத்தை பாபா ஒரு அன்பரிடம் கொடுக்க, அதை அவர் தமது சட்டைப்பையில் போட்டுவிட்டு, சிற்றுண்டி அருந்தினார். பாபாவின் அருள் இருந்தால்  நிலவும் நம் சட்டைப் பைக்குள் வர, வானும் நமக்கு வசப்படும் அல்லவா? சாப்பிட்டு முடித்ததும் பாபா கையை நீட்ட, அந்த அன்பரும் அந்  நிலவை பாபாவிடம் கொடுத்தார்.பாபா அந்த சிறிய நிலவைச் சூரியனின் கதிரொளியில் காட்ட, நிலவின் ஓரங்களில் ஆழ்ந்த பொன்நிறக் கதிர்கள் ஊடுருவி பளிச்சிட்டன. "இது சூரிய உதயக் காட்சி" என பாபா உற்சாகமாக கூறினார். அனைவரும் அந்த ஜாஜ்வல்யமான சூரிய உதயத்தை அனுபவித்தவுடன், பாபா அந்த குட்டி சந்திரனை கையில் வைத்து மூடித் திறந்ததும், அந்த இடத்தில் மறுபடியும் விளாம்பழம் காணப்பட்டது.

🌻 அண்டங்கள் அனைத்தும் ஆண்டவனின் படைப்பு. அவற்றை ஆட்டுவிக்கும் சூத்ரதாரியும் அவரே. உலகத்தையே ஒரு பாயாய் சுருட்டி கையில் வைக்க ஆண்டவனால் முடியும். அவரால் ஒரு நிலவை தமது கையில் பிடிக்க இயலாதா பாபாவின் மகிமையை உணர்ந்து, நமக்கு நல்லதொரு வழிகாட்டி அவர் என நினைந்து இறைவன் சாயியிடம் நம்மை ஒப்படைத்து மனம் தெளிவோம். நலம் பெறுவோம். 🌻

ஆதாரம்: www.srisathyasai.org.in/pages/bhagawan/miracles/One.htm

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக