தலைப்பு

சனி, 16 அக்டோபர், 2021

பக்தர்களின் வாழ்க்கைக் கப்பலை கலங்கரை விளக்கமாய் இருந்து வழிகாட்டி கரை சேர்க்கும் சுவாமி!


சுவாமி தன் பக்தர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான நகர்வுகளிலும் எவ்வாறு வழிகாட்டி.. பாதையை தெளிவாக்கி.. அணுகுமுறையை இலகுவாக்கி முன்னேறுவதற்கு மூச்சாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் மிக சுவாரஸ்யமாய் இதோ... ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் அல்லவா!! 


பெங்களூரில் ஒருவர். சுவாமி பக்தர். பெயர் பத்மநாபன். அவர் ஒரு டாக்டர். தன்னுடைய 23 ஆவது வயதில் சுவாமியை முதன்முதலில் தரிசிக்கிறார்.. மிக இளவயது. அந்த வயதில் பாதை பிறழாமல்  சுவாமியை நோக்கி நகர்வது பூர்வ புண்ணியமே. புண்ணியக்காரர் பத்மநாபன். முதல் தரிசனத்திலேயே சுவாமி அவரிடம் "இரண்டு மாதங்கள் கழித்து உன்னுடைய மனைவியுடன் என்னை வந்து பார்!" என்கிறார். அந்த இளம் டாக்டருக்கு எதுவும் புரியவில்லை.. அவருக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை... அதுவும் 23 ஆவது வயதில் திருமணமாவது! ஆனாலும் நம்பிக்கை இருந்தது சுவாமி சொல் நிச்சயம் நடந்தேறும் என... சுவாமி அனைத்தும் அறிவார். காரணம் உலக நிகழ்வுகளை நடத்துவதே சுவாமி தான்! இல்லை எனில் மனைவியுடன் வா என சுவாமி ஏன் சொல்ல வேண்டும்?! அந்த சம்பவம் அதையே சுட்டிக்காட்டுகிறது!


திடீரென அடுத்த மாதமே ஒரு நல்ல இடத்தில் திருமண நிச்சயம் ஆகிறது.. திருமணம் அரங்கேற சுவாமியை தன் மனைவியோடு தரிசிக்கிறார்... அப்போது அவரிடம் சுவாமி "மல்லேசுவரத்தில் ஒரு பல் மருத்துவ நிலையம் வை. நன்றாக முன்னுக்கு வருவாய்" என்கிறார்... இதைப் பற்றியும் டாக்டர் பத்மநாபனுக்கு எந்த உத்தேசமும் இல்லை. மருத்துவரான அவரின் பிராக்டிஸ் ஆரம்ப நிலையிலேயே இருந்தது... அங்கே நிறுவுவதற்கு போதுமான பொருளாதாரம் வேண்டும்....  சரி என சுவாமி சொல்லை ஏற்றுக்கொண்டு,  சுவாமி விட்ட வழி என சமாதானமாகிறார். அது தான் பக்தி. அந்த பக்தியானது சுவாமி சொல்லை நம்பும்... அது நிச்சயம் நடக்கும் என உணரும்... சுவாமி சொல்லை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தன்னால் ஆக வேண்டிய செயலைச் செய்யும்.. செயலுக்கான பலனைப் பற்றி நமக்கென்ன கவலை என சுவாமியின் சொல்லை மட்டும் செயலாக்குவதற்கான கருவியாக இருக்கும்.. அப்படி திகழும் போது உள்ளே சமாதான கங்கை ஊற்றெடுக்கும்... டாக்டருக்கும் எடுத்தது!

இந்தியாவை விட்டுச் செல்லும் ஒரு நபர் சுவாமி சொன்ன அதே இடத்தில் 25 ரூபாய் வாடகைக்கு தனது இடத்தை கொடுத்துவிட்டுப் போகிறார். பிரம்மித்துப் போகிறார் டாக்டர். சுவாமி சொல் தவிற வேறொன்றும் நிகழ்வதில்லை என்பதை இந்த அனுபவம் வழி உணர்கிறோம்! சரி.. இடம் கிடைத்தாயிற்று... இப்போது மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்க வேண்டுமே என நினைக்கிறார்... டாக்டர் பத்மநாபனுடைய தந்தையின் நண்பர் ஒருவர் எங்கிருந்தோ வந்து சேர்கிறார்... விலையுயர்ந்த பொருட்களை அவருக்கு வழங்குகிறார்! "உனக்கு சவுகரியமான போது சிறுக சிறுக இதன் விலையை கொடுத்தால் போதும்" என்கிறார்... டான் டான் என வேலை நடக்கிறது. அது நடக்கும்.. நடந்தே தீரும்.. காரணம் அது சுவாமியின் சொல்... சுவாமி வேறல்ல சுவாமி சொல் வேறல்ல!

சுவாமியே டாக்டர் பத்மநாபனின் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகிறார்... யாருக்காக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தன் கைகளால் சுமந்தாரோ அவரை தனது தலை மேல் தாங்கியது அந்த மருத்துவமனை! அந்த இடத்திலேயே சுவாமி அவருக்கு வெள்ளி கிருஷ்ண விக்ரகத்தை சிருஷ்டி செய்து தனது கருணைப் பரிசாக சுவாமி வழங்குகிறார். கிருஷ்ணரே கிருஷ்ணரை வழங்கிய காருண்ய பொழுதது! அந்த மருத்துவமனை மட மடவென முன்னேற்றம் காண துவங்குகிறது!


ஒரு வருடம் கடந்து சுவாமியை அவர் தரிசிக்கையில் "நீ ஒரு நம்பிக்கையான டாக்டரிடம் நீ உனது தொழிலை கொஞ்ச காலம் ஒப்படைத்துவிட்டுப் போக தயாராக இரு!" என்கிறார் சுவாமி. 

"ஏன் சுவாமி? நான் எங்கே போகிறேன் ?" என கேட்கிறார் பக்தர்.

"அமெரிக்காவுக்கு ஓர் ஆண்டுகாலம் போகப்போகிறாய்‌... மேல் படிப்பு படிக்க வேண்டியதாயிருக்கும்" என்கிறார் சுவாமி. 

அவருக்கு மேற்படிப்பு படிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை.. அதை யோசிக்கக் கூட இல்லை... அமெரிக்காவில் அவருக்கு யாருமில்லை... ஆனாலும் சுவாமி சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்... சரி சுவாமி என்கிறார். எப்படி நிகழப் போகிறது? என அவருக்கு தெரியாது.. ஆனால் அது நிச்சயம் நிகழும் என அவருக்கும் தெரியும்! அது நிதர்சன அனுபவம்.. அந்த நிதர்சன சத்தியத்தை பக்தி இதயம் ஏற்றுக் கொள்ளும்... அந்த பக்தி இதயம் அந்த பல் டாக்டருக்கு இருந்தது... அந்த ஆண்டு கடைசியில் பெங்களூரில் உலகப் பல் மருத்துவ மாநாடு நடை பெற்றது... அதில் சிகிச்சை முறை பற்றி ஒரு சுவாரஸ்ய உரை நிகழ்த்தி அனைவர் மனதையும் கவர்கிறார்.. மாநாடு நிறைவு பெறுகையில் அவரிடம் ஒருவர் "நீங்கள் அங்கே மேல் படிப்பு படிக்கலாம்.. சம்மதம் என்று சொல்லுங்கள்... எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்து தருகிறேன்" என்கிறார். பத்மநாபன் பதில் சொல்ல இயலாமல் பிரம்மித்து நிற்கிறார்.. சுவாமியை நினைத்து ஆனந்தக் கண்ணீரை உதிர்க்கிறார்... 

(ஆதாரம் : பகவான் பாபா/ பக்கம் : 211/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமி தன் பக்தர்கள் அனைவருக்கும் அவரவருக்கான வாய்ப்பை ஒரு குறைவுமின்றி சமமாகவே வழங்குகிறார்... அதை சரணாகதி இதயத்துடன் ஏற்று வாழ்வில் மேன்மை அடைவதும்...  சுவாமி சொல்லை சந்தேகப்பட்டு தவறவிடுவதும் உலகில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.... 

ஏணிகள் தரவேண்டிய இடத்தில் சுவாமி சிறகுகளையே தருகிறார்.. ஆனால் பறக்க சோம்பேறித்தனப்பட்டால் அது நம் குற்றமா? சுவாமி குற்றமா?


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக