தலைப்பு

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

சுற்றி எரியும் நெருப்புக்கு மத்தியில் சலனமின்றி நிகழ்ந்த சாயி தியானம்!

பல்வேறு வகையான சுவாமி அனுபவம் விதவிதமாய் பல்வேறு சூழ்நிலையில் பலதரப்பட்ட பக்தர்க்கு நிகழ்ந்திருக்கிறது.. அதில் மூன்று சுவாரஸ்ய சுவாமி அனுபவங்களை அனுபவிக்கப் போகிறோம் இதோ... நமக்கு நிகழும் அனுபவம் போல் பிறர்க்கு நிகழும் அனுபவமும் நம்மை சுத்தீகரிக்கும் நெருப்புக்கு சமமே!


சான்பிரான்ஸிகோவிலிருந்து டான்ஹித் எனும் நபர் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இவர் பிரபல மேற்கத்திய யோக நிபுணரான இந்திரா தேவி அம்மையாரின் நண்பர். சுவாமியை தரிசிப்பதற்காக வந்திறங்குகிறார். வரும் வழியே அவரின் கைப்பை தொலைந்து போகிறது. அதில் பணமும்.. அதைவிட அற்புதமான மதிக்க தகுந்த சுவாமி படமும் அதில் இருந்திருக்கிறது.. இரண்டும் களவு போய்விடுகிறது. வருத்தப்படுகிறார். தியானத்தில் கண்மூடுகிறார். "நீ இப்போது வர வேண்டாம்.. என்னை தரிசிக்க நான் எப்போது வரச் சொல்கிறேனோ அப்போது வா" என சுவாமி தியானத்தில் பேசுகிறார். இவரும் சுவாமி சங்கல்பமே இதுவென மீண்டும் அமெரிக்கா செல்கிறார். நாளடைவில் இவரின் நண்பர்கள் இந்தியாவுக்கு செல்வதாக இருக்க... இவரையும் அழைக்கிறார்கள்.. ஆனால் இவரோ இப்போது இல்லை என்று சொல்லிவிட்டு.. சுவாமி ஏதேனும் சமிக்ஞையோ அல்லது தியானத்தில் சொன்னாலோ அப்போது இந்தியா செல்லலாம் என இருக்கிறார்.. அப்போது இவரை தேடி ஒரு பார்சல் வருகிறது.. அந்தப் பார்சலை என்ன இது? யார் அனுப்பி இருப்பார்? என மிகுந்த குழப்பத்தோடு பிரிக்கிறார்.. பிரித்துப் பார்க்கையில் மிகவும் பரவசப்படுகிறார்.

 இவர் இந்தியாவில் தொலைத்த அதே கைப் பை. வாசிக்கும் நீங்கள் நினைப்பது போல் அந்த கைப் பையில் இவரின் விசிட்டிங் கார்டு ஏதுமில்லை.. அவ்வளவு செலவு செய்து அனுப்ப அவர் தொலைத்த இடத்திலிருந்து பக்கத்து ஊரிலும் இல்லை.. இதை யார் அனுப்பி இருக்கிறார் என்பதை இவர் நொடிப்பொழுதில் உணர்ந்து கண் கலங்குகிறார்.. உடனே இந்தியாவுக்கு கிளம்பிவிடுகிறார் சுவாமியை தரிசிக்க...

 சுவாமி பக்தர்களுக்கு எந்தவிதமான இழப்பும் நேர்வதில்லை..‌அப்படியே எதையாவது இழக்கிறார்கள் எனில் அவர்களின் தீய கர்மா விலகுகிறது எனப் பொருள். சுவாமி எது நம் வாழ்வில் நிகழ்த்தினாலும் அது நம் நன்மைக்கே.. இது வெறும் சமாதான சொற்கள் அல்ல.. சத்தியம் பொதிந்த நீதி. பரிபக்குவம் நமக்கு ஏற்பட ஏற்பட இதனை நாம் முழுவதுமாக உணர்கிறோம்!

ஒருமுறை யோக மாதா அன்னை இந்திராதேவியார் காரில் பயணிக்கிறார்... திடீரென காரின் எதிர்ப்புற கண்ணாடியில் காட்சி எல்லாம் மங்க ஆரம்பிக்கிறது.. என்னவென்று புரியாமல் அருகே இருக்கும் பெட்ரோல் பங்க் 'கில் காரை நிறுத்துகிறார். அங்கே ஒரு மெக்கானிக் இவரின் காரை மேற்பார்வையிட .. முன் டயரை பார்த்து அதிர்ந்து போகிறார்.. அதில் ஒரு ஆணி டயரோடு தைத்து இருந்தது... இதே நிலையில் மேலும் அம்மையார் வண்டி ஓட்டி இருந்தால் டயர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்பதை பரபரப்பாக சொல்லி முடிக்கிறார் மெக்கானிக். அப்போது தான் புரிகிறது எதனால் பயணம் சில நிமிடங்களிலேயே தடைபட்டது என.. கண்கலங்குகிறார் சுவாமியை நினைத்து... சுவாமி தன் பக்தரை காப்பாற்றுவதற்காக இந்த இயற்கையை கூட மாற்றி அமைப்பார் என்பதற்கு காட்சி மங்கிய தருணங்களே சான்று.


அமெரிக்காவில் இந்திரா தேவி அம்மையார் மிகப் பெரிய தோட்டம் அமைத்திருந்தார். இதில் சுவாமியை நடுநாயகமாய் அலங்கரித்து ஒரு தியான மண்டபமும் கட்டி இருந்தார். அந்த வீட்டிற்கு சாயி நிலையம் என்று பெயர். பக்தர்கள் அங்கே பஜனைக்காக கூடுவது வழக்கம். ஒருமுறை பக்தர்கள் தியான மண்டபத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது.. தோட்டத்தில் திடீரென தீப்பொறி பற்றிக் கொண்டு இலங்கை எரிந்தது போல் எரிய ஆரம்பித்தது... காட்டுத் தீ போல் இது வீட்டுத் தீ... தோட்டம் முழுக்க அக்னி பூக்கள் பூப்பதைப் போன்று காட்சி கண்ணில் விரிகிறது.. ஆனால் தியானத்தில் மூடிய கண்களை ஒருவர் கூட திறக்கவில்லை... தக தகவென நெருப்பு சூழ்கிறது.‌ பக்கத்து கூடாரத்து பொருட்கள் கூட எரிகின்றன..‌வெந்து தணிந்தது காடு போல் தத் தரிகிட தத் தரிகிட தித்தோம் போடுகிறது நெருப்பின் ஜதிகள். வீடு முழுதும் கரி பிடித்துவிடுகிறது. ஆனால் தியான அறையில் சிறு தூசி கூட படியவில்லை. சுவாமியின் படத்திற்கு முன்னால் போட்டு வைத்திருந்த வெண்ணிற விரிப்பு அப்படியே கொஞ்சம் கூட மங்கவில்லை. அவர்களின் தியானத்திற்கு எந்தவித தொந்தரவுமில்லை.. சுவாமி எனும் பேரண்ட பிரபஞ்ச பேரக்னி முன் பஞ்சபூத அக்னியும் மண்டியிட்டு பணிகிறது! தன் பக்தர்களுக்கான பாதுகாவலை எப்போதும் சுவாமி வழங்கிக் கொண்டே இருக்கிறார்.. நம் நோக்கம் ஆத்ம ஞானம் எனும் உள்நோக்கப்படும் பொழுதே சுவாமியின் கருணையை அணுஅணுவாய் அனுபவிக்கிறோம்!!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 161 / ஆசிரியர் : எஸ் லட்சுமி சுப்ரமண்யம்)


எதை நினைத்தும் கலங்காதிருத்தல்... யார் குறித்தும் அச்சப்படாதிருத்தல்... எந்த சூழ்நிலையிலும் கலவரப்படாதிருத்தல்.. சுவாமியின் பாதத்தை விடாப்பிடியாக பற்றி இருத்தல்.. அப்பற்றே பிற‌ பற்றை நீக்கி ஆன்ம வளம் அளிக்கிறது!! இதுவே பக்தியின் அடிப்படை சுபாவமாக திகழ்கிறது!

 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக