தலைப்பு

வியாழன், 14 அக்டோபர், 2021

அணு விஞ்ஞானியாக இருந்தவரை வீணை வித்வானாக மாற்றிய ஸ்ரீ சத்ய சாயி சரஸ்வதி!

தற்கொலை செய்து கொள்ள இருந்த ஒரு அணு ஆராய்ச்சியாளரை சுவாமி எவ்வாறு இசையால் தடுத்தாட் கொண்டார் எனும் தனிப்பெரும் அனுபவம்.. சுவாமியால் மட்டுமே அருள் புரிய கூடிய இந்த பிரத்யேக அனுபவம் மிக சுவாரஸ்யமாய் இதோ...


இந்தியாவில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஸ்காட்லாந்தில் அணு ஆராய்ச்சிக்காக மேற்படிப்புக்கு செல்கிறார் முகுந்தன். படிப்பு நிறைவு பெறுகிறது. இங்கிலாந்தில் அணு ஆராய்ச்சி நிலையம் ஒன்றில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். 

முகுந்தன் ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபடுகிறார்.. ஆனால் மன நிம்மதியே இல்லை.. ஆகவே வாழ்க்கையை சூனியமாக உணர்கிறார் முகுந்தன். ஒரு இனம் புரியாத ஏக்கம் இதயத்தில் மையம் கொள்கிறது... விருந்துகளுக்கும் விருதுகளுக்கும் அழைப்பு வருகிறதே தவிற முகுந்தனுக்கு மனநிம்மதிக்கான மருந்து இன்னும் அகப்படவே இல்லை... இந்த சூழலில் இடியும் சேர்ந்து விழுவது போல் இந்தியாவில் முகுந்தனின் ஒரு சகோதரனும் சகோதரியும் இறந்து போகிறார்கள்... சூனியப் புண்ணில் சுண்ணாம்பு வைத்தது போல் எரிகிறது...

               ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து தன் அறைக்கு வந்து ஓவென அழுவார் முகுந்தன்... சுய நம்பிக்கை தளர்கிறது.. தனிமைக் கழுகு பொழுதுக் கோழியை துரத்தி மூச்சு திணற வைக்கிறது... 

இவை ஏதும் உணராத முகுந்தன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானிக்கிறார்...  அந்த சமயத்தில் திடீரென முகுந்தனுடைய  நண்பரான ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனி மேனேஜர் தன் வீட்டிற்கு அழைக்கிறார்.. தன் மனைவியின் வீணையை பார்த்துவிடும்படி கேட்கிறார்.. முகுந்தன் வீணை வித்வான் இல்லை.. ஆனால் வீணையை நாம் பேப்பரில் எழுதி வீணை என வாசிப்பதை விட ஓரளவுக்கு சுமாராக வாசிப்பவர்... நண்பரின் இல்லம் வருகிறார்.. அது ஒரு பழைய வீணை... நன்றாக இருந்த போதும்.. இவர் மீட்டிய போது சுநாதமாகவே (அபஸ்வரமாகவே) வீணை தந்திகள் அழுதன.. எனது கைகள் தழுவும் வீணை அழுகின்றது என முகுந்தனை வைத்துத்தான் கண்ணதாசன் எழுதி இருப்பாரோ... என்னவோ! வீணை பயன்படுமா என்பது சந்தேகம்.. இருந்தாலும் காரில் அதை விவகாரத்து ஆக இருக்கும் மனைவி போல் வேண்டா வெறுப்பாக ஏற்றிக் கொண்டு கிளம்புகிறார்...

வழியில் தட்சிணாமூர்த்தி எனும் தனது நணபர் வீட்டிற்குள் நுழைகிறார் முகுந்தன்... மங்கள இசை முகுந்தனின் காதுகளை முதலில் வரவேற்கிறது... சாயி எனும் நாமம் அவர் இதயத்தில் பன்னீரை தூவுகிறது.. காரணம் முகுந்தனின் தாயும் தந்தையும் ஷிர்டி சுவாமி பக்தர்கள்.. ஆகவே ஷிர்டி சாயி பஜனை என நினைக்கிறார்.. ஒரு விஞ்ஞானியாகிய அவருக்கு பக்தியில் பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை... சுவாமியை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும்.. சுவாமி தான் ஷிர்டி அவதாரம் என்பதை அவர் நம்பியதே இல்லை.. சுவாமி ஒரு மாய மந்திரவாதி என்றே நினைத்து கொண்டிருக்கிறார்.. அந்த நினைவுகளை சுமந்தபடி காலடி எடுத்து வைக்கிறார்.. உள்ளே சென்றதும் .. மிகப் பெரிய சுவாமி படம்.. சுவாமி பஜனை... சுவாமி அதிர்வலைகள்... மெய் மறந்து தன்னையும் மீறி அங்கேயே அமர்ந்து விடுகிறார்...யாரோ ஒருவர் ஒரு வீணையை கொண்டு இவரிடம் தர...அதை ஒரு பாடலை இசைத்தபடி வாசிக்க ஆரம்பிக்கிறார். அனைவரும் வியந்து கேட்கிறார்கள்.... ஏதோ ஒரு கந்தர்வ லோகத்தில் இருக்கிறோமோ என சிலிர்க்கிறார்கள்... முகுந்தன் பாடியது இரண்டு பாடல்கள்... இரண்டுமே பாரத ஞானிகள் எழுதிய பாடல்கள்... "உனக்கு ஈடு இணை யாருமில்லை" இதுபாடலின் பொருள். முகுந்தன் இதற்கு முன் பாடியதே இல்லை.. அந்த இரண்டு பாடல்களை எங்கேயும் கற்றதில்லை... பாடல் நிறைவடைந்து அந்த வீணையை உற்று நோக்குகிறார்.. அது தனது நண்பர் தந்து அழுது கொண்டிருந்த அதே வீணை... அழுத வீணை இப்போது மட்டும் அமுதம் சொட்டுகிறதே! என அந்த வீணையை கை நடுங்கிய படியே மீண்டும் தொடுகிறார் முகுந்தன்... இப்போது தந்தி மீட்டுகிறார் மீண்டும் அழத் தொடங்குகிறது... முகுந்தனுக்கு எதுவும் புரியவில்லை.. ஒருவேளை என்னை பாபா தன் அருகில் இழுக்கத்தான் இப்படி மாய மந்திரம் புரிகிறாரோ என அ(வி)ஞ்ஞானத்தனமாய் யோசிக்கிறார்... அப்போதும் சுவாமியின் தெய்வீகத்தை அவர் உணர்ந்தபாடில்லை...

அன்றிலிருந்து முகுந்தனுக்கு வீணை வாசிக்க நிறைய அழைப்பு வருகிறது.. அவரும் சென்று கொண்டிருக்கிறார்.. இசை அவரது சூனியத்தை சூரிய ஒளியாய் சுடரவிடுகிறது... தற்கொலை புரிய வேண்டும் என்ற எண்ணம் மௌனமாகிறது...மறைந்தே போகிறது...

முகுந்தன் எங்கே சென்று வாசித்தாலும் அது சுவாமி பஜனை மற்றும் சுவாமி பக்தர்களின் வீடாக இருக்கிறது... 


ஒருநாள் புட்டபர்த்திக்கு சுவாமியிடம் சேர்க்க ஒரு கடிதம் எழுதுகிறார்... நீண்ட நெடிய நாட்களாக அவர் இதயத்தை அரித்துக் கொண்டிருக்கிற கேள்வி... அந்தக் கடிதத்தில் "நீங்கள் என்னை தொடர்ந்து வருகிறீர்கள் என எண்ணுகிறேன்...காரணம் எனக்கு புரியவில்லை... நான் விஞ்ஞானியாக பெயரெடுப்பேனா ? இல்லை வீணை வித்வானாக பெயரெடுப்பேனா? என் எதிர்காலம் என்ன? எனக்கு தெளிவாக பதில் கொடுங்கள்!" என எழுதி அனுப்புகிறார்... சுவாமிக்கு தெரியாதா ஒவ்வொருவரின் உள்ளத்தைப் பற்றி!! சுவாமி பதில் கடிதம் ஒன்றும் அனுப்பவில்லை.. பொதுவாக சுவாமி நம்மிடம் சொல்லி நாம் செய்வது குறைவு.. அந்த சூழ்நிலையை உருவாக்கி  நமக்கே தெரியாமல் சுவாமி நம்மை செய்ய வைப்பதே அதிகம்... சுவாமி சிருஷ்டி கர்த்தா... எதையும் சிருஷ்டிப்பவர்.. சூழ்நிலை/ எண்ணங்கள்/ உணர்வுகள் இப்படி நம்மை உள்புகுந்து ஆட்டி வைப்பதே சுவாமி தான்... மனித கர்மா மனிதனை தீமையாக யோசிக்கவும்...தீமை செய்யவும் வைக்கிறது.. சுவாமியே அவனை அதிலிருந்து காப்பாற்றுகிறார்... முகுந்தனும் தனது கேள்வியை சுமந்த படி வீணை வேள்வியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்... 


ஒருமுறை முகுந்தன் வீணை கச்சேரிக்காக பாரிஸ் சென்றுவிட்டு லண்டன் திரும்புகிறார்... லண்டனுக்கு வெளியே பின்னர் என்ற இடத்தில் சீதாராமன் என்ற நண்பரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என உணர்வு மேலெழுகிறது... உடனே செல்கிறார்.. ஓம் சாயி என்று எழுதப்பட்டிருக்கிற வீட்டிற்குள் நுழைகிறார்.. உங்களுக்காகத் தான் அவர் காத்திருக்கிறார் என சொல்லியபடி சீதாராமன் மனைவி வரவேற்கிறார்...அந்த வீட்டில் சுவாமியின் பெரிய படம் மாட்டிய அறை.. அங்கே தான் சுவாமி பஜனை நிகழும்...அவரை சீதாராமன் வரவேற்கிறார்... "கடைசியாக நடந்த கூட்டத்தில் பெயர் தெரியாத ஒருவர் உங்களிடம் இந்த கவரை கொடுக்க சொன்னார்.. கொடுத்து விட்டு சென்றுவிட்டார்" என சொல்லி அந்த கவரை அவரிடம் ஒப்படைக்கிறார்...

முகுந்தன் அதை பிரித்துப் பார்த்து சுவாமி படத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுகிறார்.. கண் அனிச்சையாய் தீர்த்தம் கசிகிறது.. வீணையை ஏந்தி இருப்பது போலான சுவாமி படம்... அதையே சுவாமி பதிலாய் ஏற்கிறார்.. மீண்டும் மீண்டும் கருணை காட்டும் சுவாமியின் பிரபஞ்ச இதயம் கண்டு நெகிழ்கிறார்.. சுவாமியிடம் பக்தி சுரக்கிறது... ஒரு துளி கற்பூரம் என்றாலும்.. ஒரு டன் கற்பூரம் என்றாலும் ஒரே ஒரு தீப்பொறியை தனது வாழ்க்கையில் அது சந்திக்கும் போது உடனே பற்றிக் கொள்கிறது... அதே போல் சிறிய அறியாமையோ... பெரிய அறியாமையோ சுவாமி அனுகிரகம் தெளிவை தந்துவிடுகிறது! அன்றிலிருந்து தனது வேலையை துறந்து வீணையை தனது வேலையாக்கி.. இசையை தனது வாழ்க்கையாக்கி.. சுவாமியை தனது இதயமாக்கிக் கொள்கிறார் முகுந்தன்...

வல்லவனுக்கு புல்லே ஆயுதம் ... சுவாமி பக்தனுக்கு மணிக்கணக்கான அறிவுரை தேவையே இல்லை.. சுவாமியிடமிருந்து ஒரே ஒரு வரி ஞானம் போதும்... ஞானோதயம் வந்துவிடுகிறது!


முகுந்தன் சுவாமியை தரிசிக்க வேண்டும் என ஆவல் மேற்கொள்கிறார்... ஆனால் கடல் கடந்து வரவேண்டும்.. சுவாமியை தரிசிக்க முடியுமா? என்ற ஐயம்.. தனது நண்பரிடம் எழுதிக் கேட்கிறார்...எழுதிய அன்றிரவே சுவாமி கனவில் தோன்றுகிறார்.. முகுந்தனை எழுப்புகிறார்...ஒளிமயமாக காட்சி தருகிறார் சுவாமி.. சிருஷ்டி விபூதியால் அவரின் இடது தோளை தடவுகிறார்..."நீ இந்தியாவுக்கு வந்து என்னை தரிசிக்கலாம்" என்கிறார்.. அப்போது முகுந்தன் ஜெனிவாவில் இருக்கிறார்... சுவாமியின் கனவு உத்தரவால் உடனே கிளம்புகிறார்... சுவாமியை நேருக்கு நேர் தரிசிக்கிறார்... யார் தனது வாழ்க்கையையே மாற்றி அமைத்தாரோ... யார் தன்னிடம் இருந்த தற்கொலை எண்ணங்களை அழித்து நற்கலை வண்ணம் அளித்தாரோ அந்த சாட்சாத்கார சுவாமியை ஆன்மா சிலிர்க்க தரிசிக்கிறார்.. "மகனே... என்னை என் அறையில் வந்து பார்" என சுவாமி அவரை நேர்காணலுக்கு அழைக்கிறார்...

ஒரு வீணை வித்வானும் ஸ்ரீ சத்ய சாயி சரஸ்வதியும் தெய்வீகம் பரப்பும் அந்த தனிமை அறையில்... முகுந்தன் பேசுவதற்கு முன்பே அவரின் வாழ்வில் நடந்தவற்றை எல்லாம் சுவாமியே சொல்லி கனவில் செய்ததைப் போல் சிருஷ்டி விபூதியை அவரது இடது தோளில் தடவுகிறார்.. ஸ்ரீ சத்ய சாயி சரஸ்வதி வீணையை மட்டுமல்ல வீணை வித்வானையே வாசிப்பவர்... வானையே வாசிப்பவருக்கு வித்வானை வாசிப்பது ஒன்றும் அத்தனை சிரமம் இல்லை...

நீ என் இசைக்கல்லூரியில் வீணை கச்சேரி நிகழ்த்து என்கிறார்.. வீணை கச்சேரிக்கு அவருக்கே தெரியாமல் பெங்களூரில் வசித்துவரும் அவரின் தந்தை தாயை வரவழைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் சுவாமி... ஆச்சர்யங்களே ஆச்சர்யப்படும் சுவாமியின் கருணை அத்தகையது!!

கச்சேரி முடிந்து சுவாமி முகுந்தன் குடும்பத்தோடு ஒரு மணிநேரம் செலவு செய்கிறார்..அது செலவு அல்ல அந்தக் குடும்பத்தினரின் ஆன்மாவுக்கான வரவு! 

தன் பிள்ளையைப் பற்றிய கவலையை விடுகின்றனர் பெற்றோர்... சுவாமியே தனது வாழ்க்கை என சரணாகதி அடைகிறது முகுந்தன் எனும் அந்த பக்தி வீணை!!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 216/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


நமது இதய வீணையை சுவாமியே வாசிக்கிறார்.. ஆனால் சுவாமி அதை வாசிக்கும் வண்ணம் நாமே நமது இதயத்தை ஆத்ம சாதனையால் தயாராக்க வேண்டும்!! எந்த ஒரு விறகையும் வீணையாக்க சுவாமியால் முடியும்.. திமிர் பிடித்த வீணையை மீண்டும் விறகாக்கவும் சுவாமியால் முடியும்... பணம்/ புகழ் போன்ற புழுதிபடியா வீணையையே சுவாமி விரும்பி வாசிக்கிறார்... ஒரு வீணையால் தன்னை தானே எப்படி வாசிக்க முடியும்? நல்லதோர் வீணையாய் சுவாமியின் காலடியில் வாழ்வோம்... நம்மிலிருந்தும் சுவாமி எட்டாவது ஸ்வரங்களை உலக காதுகளுக்கு எட்டும் படி சர்வ நிச்சயமாய் வாசிப்பார்!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக