தலைப்பு

வியாழன், 21 அக்டோபர், 2021

சுவாமியின் லீலைகளை நேரில் கண்டு விடையறியாமல் திணறிய இரண்டு விஞ்ஞானிகள்!

விஞ்ஞானத்திற்கு எதுவுமே ஆராய்ச்சிக்கு உட்பட்டது தான்...விஞ்ஞானிகள் காற்றையே பரிசோதிப்பவர்கள்... அப்படிப்பட்ட இரண்டு மனோ தத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மெய்ஞான சுவாமியை அணு அணுவாய் ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள்.... பிறகு என்னென்ன சுவாரஸ்யம் நிகழ்கிறது...இதோ...!


ஆராய்ச்சியாளர்களான விஞ்ஞானிகள் எதையுமே ஆராய்ந்து தான் ஏற்றுக் கொள்வார்கள்... அவர்களை பொருத்தவரை எல்லாமே ஆராய்ச்சிக்கு கீழே உள்ளவை தான்... ஆராய்ச்சிகளுக்காகவே வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள்... ஒரு பக்கம் இராணுவத்திற்கு... இன்னொரு பக்கம் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு... உலகமே இதற்காகத் தான் அதிகம் செலவு செய்து கொண்டிருக்கிறது..

ஆராய்ச்சியாளர்கள் இருவகையினர் ஒருவர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.. இன்னொரு வகையினர் மனோ தத்துவ ஆராய்ச்சியாளர்கள்...

              அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களான ஓஸிஸ் மற்றும் ஹாரல்ட்ஸன் இருவரும் புட்டபர்த்தியை நோக்கி படை எடுக்கிறார்கள்....அது 1974 ... அமெரிக்காவில் புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணர்கள் அவர்கள்...மரணத்தின் நேரத்தில் (at the hour of death) என்ற பிரபலமான புத்தகம் எழுதியவர்கள்...விர்ஜீனியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் (University of Virginia School of medicine, USA) பார்வை நேர பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள்... இருவருக்குமே சுவாமி தரிசனம் அளித்து நேர்காணல் தருகிறார்... அந்த அறையில் சுவர்களை தவிர வேறொன்றும் இல்லை... சுற்றி முற்றி பார்க்கிறார்கள்... சுவாமி செய்கிற லீலைகளை கேள்விப்பட்டுத் தான் வந்திருக்கிறார்கள்.. அந்த லீலைகள் எவ்வகையை சேர்ந்தவை...அதன் உத்தி என்ன? இந்த ரகசியத்தை கண்டே பிடித்திட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள்...ஆகவே நோட்டம் இட்டபடி இருக்கிறார்கள்...நாற்காலியை தவிர வேறெதுவும் இல்லை.. தரை விரிப்பு மட்டுமே இருந்தது.. அதையும் சோதிக்கிறார்கள்.. சுவாமி அவர்களுக்கு விபூதி பிரசாதம் சிருஷ்டித்து அளிக்கிறார்...பிறகு ஜபத்தின் முக்கியத்துவம் பற்றி பேசி தனது கைகளை சுழற்றுகிறார்.. நான்கு கண்களும் கழுகுக் கண்களாய் மாறி அதையே உற்று நோக்குகின்றன.. சுவாமி சட்டென இரு சிருஷ்டி உத்திராட்ச மாலை எடுத்து ஆளுக்கொன்றை கையில் தருகிறார்... இருவரும் திகைத்துப் போகிறார்கள்... விபூதியை பெற்றபோதும் சுவாமியின் சட்டையில் ஏதாவது பைகள் இருக்குமோ? என சந்தேகப்படுகிறார்கள்... ருத்ராட்ச மாலைகள் பெற்ற போதும் அதையே நினைக்கிறார்கள்.. சுவாமி அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு புன்னகைத்த வண்ணம் அந்த இரு ருத்ராட்ச மாலைகளை வாங்கிக் கொண்டு சில நிமிடம் தனது கைகளில் வைத்துக் கொண்டு மீண்டும் அவர்களிடமே தருகிறார்.. இப்போது அந்த இரு ருத்திராட்ச மாலையிலும் ஒரு சிலுவை கோர்க்கப்பட்டிருந்தது.... சர்வ மதமும் சம்மதம் என்பதை சுவாமி உணர்த்துகிறார்...அந்த மாலைகளில் ரத்தினம் பதிக்கப்பட்டிருக்கிறது... சுவாமி உருவம் பதித்த டாலர் ஒன்றும் இருக்கிறது.. எல்லாம் ஓரிரு விநாடிகளில் சுவாமி மாற்றியதை நேருக்கு நேர் தரிசிக்கின்றனர்..


அவர்கள் இருவரும் சுவாமியின் வஸ்திரங்களை துவைக்கின்ற இடத்திற்கு சென்று அவரின் வஸ்திரங்களை சோதித்துப் பார்க்கிறார்கள் அதில் பைகளே இல்லை... சந்தேகம் தீர்ந்து அந்த லீலைகள் எல்லாம் எப்படி சாத்தியம்? என மேலும் வியக்கிறார்கள்... 

இன்னொரு நாள்... இருவரும் சுவாமியுடன் பேசிக் கொண்டிருக்கின்ற போது... "உன் கை விரல் மோதிரம் சரியாக இருக்கிறதா எனப் பார்" என சுவாமி கேட்க... அந்த இருவரில் ஒருவர் தன் கைவிரலை பரிசோதிக்க மோதிரத்தில் பதிக்கப்பட்டிருக்கின்ற பச்சைக் கல்லை காணவில்லை... அவர் அந்த நேர்காணல் அறைக்கு வந்திருந்த போது அது இருந்தது... அதைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் இப்போது காணவில்லை.. அறை முழுக்க தேடுகிறார்கள்... ஆனால் இல்லை...

அடுத்த நாள் தனது மூளியான மோதிரத்தை ஓஸிஸ் சுவாமியிடம் நீட்டுகிறார்.. "உனக்கு பழையபடி அந்தப் பச்சைக் கல் மோதிரம் வேண்டுமா?" என சுவாமி கேட்க... அது தனக்கு பரிசாக வந்தபடியால் நிச்சயம் வேண்டும் என்கிறார்... சுவாமி அந்த மோதிரத்தை வாங்கி கைமூடி திறக்கிறார்.. அந்தப் பச்சைக் கல் மோதிரத்தில் பதிந்திருந்தது!!

இருவரின் இதயமும் புறாவாய் புல்லரித்துப் படபடத்தது!

லாஸ் ஏஞ்சல்ஸ்'சிலிருந்து வந்திருந்தவர்களோடு நேர்காணல் அறையில் அந்த மனோ தத்துவ ஆராய்ச்சியாளர்களும் அமர்ந்திருந்தார்கள்... "உங்களுக்கு மணமாகி 33 ஆண்டுகள் முடிந்திருக்கிறது... அப்படித்தானே!" என அவர்கள் மட்டுமே அறிந்த விஷயத்தை சுவாமி கேட்ட உடன்.. லாஸ் ஏஞ்சல்ஸ் தம்பதிகள் மட்டுமல்ல இந்த இரண்டு பேர்களும் மிரண்டு போகிறார்கள்... சுவாமி தன் கைகளை சுழற்றுகிறார்.. சிருஷ்டி மோதிரம்... இதனை கணவருக்கு மனைவி... சிருஷ்டி பவுன் மாலை அதில் தாமரைப்பூ வடிவ டாலருடன் ... இதனை கணவர் மனைவிக்கு என மாற்றி மாற்றி அணிவிக்க அங்கேயே அவர்களின் மணநாளை சுவாமி கொண்டாடி குதூகலப்படுகிறார்... அந்த இரண்டு சிருஷ்டிப் பரிசுகளிலும் சுவாமியின் உருவம் பதிவாகி இருந்தது.. 


  சுவாமி அவ்வாறு தனது கைகளை சுழற்றிய போது அந்த இருவரின் மோப்ப கண்களும் சுவாமி கைகளையே விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்தவாறு இருந்தன... அந்த நேரத்தில்.. சுவாமியின் சுழலும் கைகளுக்கு அடியில் ஒரு ஒளியை அவர்கள் தரிசித்து வியந்து போகிறார்கள்... ஆனால் அந்தப் பொருட்கள் எப்படி வந்தன? என அவர்களுக்குப் புரியவே இல்லை...

சுவாமி புட்டபர்த்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே பக்தர் வீட்டு பஜனையில் கலந்து கொள்கிறார்... அப்படி கலந்து கொள்ளும் போதே ஆபத்திலிருந்து இன்னொரு பக்தரை காப்பாற்றுகிறார்... அப்படி காப்பாற்றுகிற அதே நேரம் வேறொரு பக்தர் படைக்கின்ற உணவை ருசிபார்க்கிறார்.. அப்படி ருசி பார்க்கின்ற போதே இமயத்து யோகிகளின் தியானத்தில் தோன்றி ஆன்மீகத்திற்கும் வழிகாட்டுகிறார்.. இப்படி ஒரே நொடியில் சுவாமி புரிகின்ற விநோத திருச்செயல்கள் ஏராளம் என பிற பக்தர்கள் பகிர்வதை கேட்டு இருவரும் அசந்து போகிறார்கள்...

இறுதியாக சுவாமியிடம் "நாங்கள் 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்பவர்கள்... மனிதர்கள் எங்களுக்கு ஆராய்ச்சிப் பொருட்களே... ஆனால் உங்கள் சக்தியை எங்களால் ஆராய்ந்து அளவிட முடியவில்லை... நீங்கள் உண்மையில் மனித அளவுகோள்களுக்கு அப்பாற்பட்டவரே!" என இருவரும் மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்கிறார்கள்... இந்த சிருஷ்டி லீலைகளுக்கான காரணம் கேட்கிறார்கள்.. அதற்கு கருணையோடு சுவாமி ...

"உங்களுக்கு அறிவுரை சொல்வதற்கு முன்.. நான் உங்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்! உங்கள் மனத் துயரங்களைப் போக்க நான் முன்வரும் போது நீங்கள் என்னை சரண் அடைகிறீர்கள்... அப்போது உங்களுக்கு நான் பக்தி மார்க்கத்தை காட்டுவது எளிதாகிறது... அப்போது உங்கள் இதயத்தை பண்படுத்தவும் என்னால் முடிகிறது!" என்கிறார்.


இந்த இருவரும் தங்களது சுவாமி அனுபவங்களை 1987 ஆம் ஆண்டு மகிமைகள் என் சந்திப்பு அட்டை (Miracles are My Visiting Cards) என்ற புத்தகமாக்கி முந்நூறு பக்கங்களுக்கும் ஆழமாய் பிரசுரித்திருக்கிறார்கள்... முழுமுதற் பொருளான சுவாமி பற்றிய இது ஒரு முழுமையான விசாரணை அறிக்கை... புத்தகமாக...

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 237 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


ஓடுகின்ற தண்ணீரில் எப்படி எழுதியதை வாசிக்க முடியாதோ அப்படி மனம் கடந்த சுவாமியை மனதால் ஆராய முடியாது.. மனதை மனிதனால் நிறுத்தக் கூட முடியாது.. அதுவாக நின்றால் தான் உண்டு.. அதற்கான சூழ்நிலையை ஆத்ம சாதனை ஏற்படுத்துகிறது... எப்படி வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகிறதோ அப்படி.. அந்த தவக்கனல் மனிதனின் மனதை ஆவியாக்குகிறது... உள்ளங்கையில் தேனை ஊற்றிய பிறகு இது மலைத் தேனா..? காட்டுத் தேனா...? எந்த மலர்? எந்த தேனீ? எப்போது எடுத்தது என ஏன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க வேண்டும்?? அதில் என்ன கிடைக்கப் போகிறது ?? அது அபத்தம் அல்லவா... சுவாமியை அனுபவிக்க வேண்டுமே அன்றி ஆராய்ச்சி செய்வது நேர விரயம்..‌!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக