தலைப்பு

புதன், 20 அக்டோபர், 2021

குடிசையில் வாழ்ந்த ஒரு ஏழைக் கிழவியை வாய் பேச வைத்த பரம பவித்ர விபூதி!


அணு அணுவாய் சுவாமியை துறவிகளும் மகான்களும் உணர்ந்து அனுபவிப்பதை போல் மனிதர்கள் உணர்ந்திருக்க அதிக வாய்ப்பில்லை... அப்படி அனுபவித்து உணர்ந்த தூயத்துறவி சுவாமிஜி காருண்யானந்தாவின் அதி அற்புதமான சுவாமி அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...


ஆந்திர பிரதேச ராஜமுந்திரியில் ஒரு ஆசிரமம். அது காருண்யானந்தருடையது. சுவாமி பரம்பொருள் என அணு அணுவாக அனுபவித்து அதை பதிவும் செய்திருக்கிறார் அவர். ரிஷிகேசத்து சுவாமிஜி சிவானந்தரின் சீடர் காருண்யானந்தர். சுவாமியை முதன்முறை கேள்விப்பட்டு தரிசிக்க வேண்டும் என ஆவல் கொள்கிறார். பெரும் சக்தி பெற்றிருக்கிறாரே ... சுவாமி ஒரு சித்தரோ என ஆரம்பத்தில் நினைக்கிறார்.. சிலர் சுவாமியை சித்த புருஷர் .. மகான் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி கடவுள். இதை மகான்களே பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்திருப்பதை நாமும் வாசித்து உணர்ந்திருக்கிறோம்.. அந்த தூய துறவியும் சுவாமியை தரிசித்த மாத்திரத்தில் இறைவன் என உணர்ந்து கொள்கிறார். அவர் பெற்ற / பார்த்த அனுபவங்கள் ஏராளம்... அவர் சுவாமியை தரிசித்து வந்த முதல் அனுபவத்திலிருந்தே ஏராளமான லீலைகள் காருண்யானந்தரின் ஆசிரமத்தில் நிகழ ஆரம்பக்கின்றன... அதன் நீட்சியாக அக்கம் பக்கத்திலும் அவை நிகழ்ந்து சுவாமியின் மகிமையை காற்றாய் பரப்ப.. ஆன்மீக வாழ்க்கைக்கு சுவாசம் அளித்தன...

அவரின் ஆசிரமத்திலிருந்து  சிறிது தூரத்தில் ஒரு குடிசை இருந்தது. அங்கே ஒரு வயதான விதவை குடியிருந்தாள். அவளுக்கு நாலைந்து குழந்தைகள் இருந்தார்கள். முதல் மகன் இஞ்சினியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.. திடீரென ஒரு நாள் அவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறான். அந்த பேரதிர்ச்சியை தாங்கிக் கொள்ளாமல் ஊமையாகிவிடுகிறாள் அவள். தலச்சம் பிள்ளை. தாங்கமுடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்து நாக்கு வீதியை பேச்சுப் போக்குவரத்திலிருந்து ஊரடங்கு செய்துவிடுகிறது!

      ஆறு மாதங்கள் கழித்து சுவாமிஜி காருண்யானந்தர் அந்தக் குடிசைக்குப் போகிறார்... அங்கே அந்த கிழவியை பார்த்து அனுதாபம் கொண்டு தம்மிடமிருந்த சுவாமி விபூதியை எடுத்து "இது பாபாவின் விபூதி" எனக் கூறிக் கொண்டு சுவாமியை வேண்டி அந்தக் கிழவியின் நாவில் விபூதியால் சுழிக்கிறார்...  எப்படி முருகப்பெருமான் வேலால் தன் பக்தர்களின் நாவில் சுழித்து பாட வைத்தாரோ அப்படி.. சுவாமியின் மிகப் பெரும் கருவியாக இருந்தார் காருண்யானந்தர். சுவாமியின் கருவிகளுக்கு உலகாசைகள் இருக்காது.. பந்தபாசங்களின் மீது பற்று அறுந்துவிடும்... துக்கமோ சந்தோஷமோ எதுவும் அவர்களை பாதிக்காது... அச்சமற்ற மனோபாவம்...எளிமை பொறுமையோடு கூடிய சரணாகதி நிலை இதுவே சுவாமி கருவிகளின் வாழ்வியல்‌! அவ்வாறே இருந்தார் காருண்யானந்தர். விபூதியை நாவில் சுழித்தவுடன் கிழவியின் கண்களில் கண்ணீர் வழிந்தன.. கைவிரல்கள் சுவாமிஜியை வணங்க குவிந்தன... 

சிறிது நேரம் அங்கேயே குழந்தைகளோடு உரையாடிய படி இருக்கிறார். சுமார் அரைமணி நேரம் கடந்து அவள் உளறுவது போல் பேசத் தொடங்குகிறாள்.. சிறிது நேரத்திற்கு எல்லாம் பேச்சு வந்துவிடுகிறது... சுவாமிஜி அங்கேயே இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்கிறார்‌..

சுவாமி வேறல்ல சுவாமி விபூதி வேறல்ல என்பது நமக்கு இந்த அனுபவம் வழி புரிகிறது.. சுவாமி விபூதியை நெற்றியிலும் வாயிலும் இட்டுக் கொண்டால் அது சர்வ பாதுகாப்பு.. பாதுகாவல் என்பதும் நம்மால் உணர முடிகிறது... 

தீராத நம்பிக்கை... சுவாமி மேல் திடமான நம்பிக்கை... உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமற்ற அந்த வஜ்ர நம்பிக்கை.. அதையே சுவாமி நம்மிடம் விரும்புகிறார்...  மனிதர்கள் தான் கொசு கடிப்பதற்கே புலம்புகிறார்கள்.. பக்தர்கள் யானையே மிதிக்க வந்தாலும் சுவாமி மீதான திட நம்பிக்கையோடு அமைதியாக அதையும்... எதையும் எதிர்கொள்வார்கள்...

சுவாமிஜியின் ஆசிரம இடமான அதே ராஜமுந்திரியிலேயே சுவாமி ஒருமுறை அகில இந்திய மாநாட்டை ஏற்பாடு செய்யச் சொல்கிறார்...கோதாவரி ஆற்றங்கரை தவிர குறிப்பிடும்படி எந்த அடிப்படை வசதியும் போதாத ஊர் அது... டாக்டர் பகவந்தம் மட்டும் "சுவாமி .. அங்கே வசதி போதாதே" என்கிறார்... 

"கவலைப்படாதே! எல்லா வசதிகளும் வந்துசேரும்...நான் பார்த்துக் கொள்கிறேன்" என்கிறார் சுவாமி. சுவாமி ஒன்று சொன்னால் பிரபஞ்சமே அதை நடத்த தன்னை ஒத்திசைவாக்கும் என்கிறார் ஒரு பேராசிரியர். எத்தனை சத்தியம்!! மாநாடு ஜனவரியில் நடப்பதாக இருந்தது.. அனைவரும் தங்குவதற்கு இடம்/உணவு ஏற்பாடு செய்தாக வேண்டும்! ஏற்கனவே நவம்பர் மாதம் ஆகிவிட்டது... காருண்யானந்தரையும்.. ராமா ராவையும் அதற்காக அனுப்புகிறார் சுவாமி... பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யக் கூடாது என்பது சுவாமியின் வஜ்ர கொள்கை... ஆகையால் பணம் சிறுகச் சிறுக சேரவும் வழியில்லை... ஆம்.. பணம் வசூலிப்பதையும்.. பணத்தை அநாவசியமாக ஆடம்பர செலவு செய்வதையும் சுவாமி விரும்புவதில்லை..‌ சுவாமியின் ஆன்மீக நேர்மை என்பது அப்பழுக்கில்லாதது... அந்த பரிசுத்த ஆன்மீகம் இதுவரை எங்குமே / எவருமே நிகழ்த்திராத ஒன்று.. 

பத்து சுவாமி பக்தர்கள் ஆளுக்கு 5000 கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் 50000 போதாது.. இன்னும் ஒரு மாதமே அவகாசம் இருந்தது... சுவாமி சொல் எவ்வாறு நிகழாமல் போகும்?? சுவாமி சொல் மட்டுமே இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது... மனிதரின் சொல் காற்றில் கரைந்துவிடுகிறது.. ஆனால் சுவாமியின் சொல் அந்தக் காற்றையே இயக்குகிறது!

திடீரென்று விந்தைகள் நிகழ ஆரம்பிக்கின்றன... எங்கிருந்தோ ஒரு மர வியாபாரி லாரியில் விறகுகளை இறக்குகிறார்.. அவர் எல்லா விறகுகளையும் தர முன் வருகிறார்... அவர் சுவாமி பக்தர் இல்லை தான்.. ஆனால் வெவ்வேறு இறை ரூபங்களை வணங்குபவர்களும் சுவாமி பக்தர்களே என்கிற வகையில் யார் தான் நம் சுவாமி பக்தர் இல்லை?! உணவுப் பொருட்கள் லாரியில் வந்து இறங்குகிறது... தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் பழங்களை கொட்டிக் குவிக்கிறார்கள்..

எல்லாம் மின்னல் பொழுதில் அரங்கேறுகிறது...

மாநாட்டில் சுமார் 10,000 பேருக்கு பிரமாதமான விருந்தும்.. சுவாமியின் பேரிருப்பால் வயிறும், இதயமும், ஆன்மாவும் நிரம்பின...சுவாமி டாக்டர் பகவந்தத்தை அழைத்து "வசதிகள் போதாத இந்த ஊரில்... ஏற்பாடுகள் எப்படி இருந்தன?" என ஒரு புன்முறுவலோடு கேட்கிறார்... அர்த்தமுள்ள புன்முறுவல் அது!

"சுவாமி.. எல்லாம் பிரமாதமாக நடந்தேறிவிட்டது... என்னால் நம்பவே முடியவில்லை" என்கிறார்..

அது தான் சுவாமி.. சுவாமி மகிமைகளையும் லீலைகளையும் சொல்லி மாள ஒரு ஜென்மம் போதாது... 

"பணம் போதுமா? இன்னும் வேண்டுமா?" எனக் கேட்கிறார் சுவாமி...

"சுவாமி.. வந்த பணத்திலேயே இருபதாயிரம் ரூபாய் மிச்சமாகி இருக்கிறது" என்கிறார் டாக்டர் பகவந்தம். 

"அந்த பத்து சாயி பக்தர்களுக்கு பிரித்து கொடுத்துவிடு!" என்கிறார்..

அது தான் சுவாமி! யாரும் நஷ்டம் அடையக்கூடாது என நினைப்பவர்.

"சுவாமி.. பணத்தை அவர்கள் திரும்பப் பெறவில்லை.. புட்டபர்த்தி ஆஸ்பிட்டலுக்கே நன்கொடையாக அளித்துவிட்டனர்" என்கிறார் டாக்டர்..

அது தான் சுவாமி பக்தர்கள்... தங்களுக்கு தருவது எல்லாம் சுவாமியே எனும் சத்தியத்தை உணர்ந்தவர்கள். 

ஒரு ஏ.டி.எம் இயந்திரம் தன்னை கோடீஸ்வரன் என உணருமா? இல்லை. அப்படியே சுவாமி பக்தர்களும்... தனக்கு படி அளப்பது சுவாமியே எனும் சத்தியம் உணர்கிறது பக்தி இதயம்... அப்படி உணர்கையில் நஷ்டம் என்ன? அதிர்ஷ்டம் என்ன? எல்லாம் சுவாமி இஷ்டம் என மனதை ஒப்படைத்து மகா அமைதி அடைகிறது.. மன அமைதியை விட மகத்தான செல்வம் இந்திய லோகத்தில் மட்டுமல்ல இந்திர லோகத்தில் கூட இல்லை!!

(ஆதாரம் : பகவான் பாபா/ பக்கம் : 205/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமியால் நிகழ்த்த முடியாதது எதுவுமில்லை என்பதை உணர முடிகிறது‌..எதையும் நிகழ்த்தும் எம்பெருமான் ஸ்ரீ சத்ய சாயி என்பதை தங்களுக்கும் பிறர்க்கும் நிகழும் அனுபவங்கள் வழி உணர்ந்து கொண்டவர்களுக்கு மனக்கவலை என்பதே இல்லை... எதனை தந்தாலும் சுவாமி தருவதெல்லாம் நம் சொந்த நன்மைக்கே என்பதை உணர ஆரம்பிக்கிறோம்... அதில் ஆசை அடங்கி அமைதி தொடங்குகிறது!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக