தலைப்பு

திங்கள், 25 அக்டோபர், 2021

நடுநிசியில் தன்னந்தனியாக ஸ்வீடன் நாட்டில் வெப்பம் கொப்பளிக்கும் தனி அறையில் மாட்டிக் கொண்ட பக்தை!

யாருமே இல்லாத ஒரு தனிமையில்... உயிரே போகின்ற நிலை வந்தால் எப்படி இருக்கும்? கத்தி அழைத்தாலும் உதவி செய்ய யாருமே இல்லாத கொடும் சூழலில் ஒரு சுவாமி பக்தை மாட்டிக் கொள்கிறார்... அந்த உள் கதறல் சுவாமியின் காதுகளில் விழுந்ததா? எப்படி அந்த பக்தையை மீட்டார்? சுவாரஸ்யமாய் இதோ...

பெங்களூர் பக்தர் பத்மநாபன். அவரின் மனைவி ரோட்டரி கிளப் உறுப்பினர். இருவரும் அசைக்க முடியாத சுவாமி பக்தர்கள்...ரோட்டரி கிளப் சார்பாக நடக்கும் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஸ்வீடன் நாடு வரை செல்ல வேண்டி இருந்தது.. முதலில் தயங்கினாலும் தனது கணவர் அளித்த ஊக்கத்தால் மிக தைரியமாகச் செல்கிறார்... அந்த நாட்டில் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்றிருந்த ஓர் அம்மையார் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடாகி இருந்தது... எலும்பை உறைக்கும் குளிர்.. வாயை திறந்தால் வெண்புகை வரும்.. நிலா யாகம் நடத்துவது போன்ற வெளி சூழ்நிலை...

இரவு வேறு... ஆகையால் அறையை சூடு படுத்தும் சாதனத்தை இயக்கவிட்டு... கதவு ஜன்னல்களை எல்லாம் தாழிட்டு உறங்கச் செல்கிறார்... நடுநிசி இருக்கும்.. கடிகாரம் டங் டங் என சத்தமிட்டு எழுப்பி விடுகிறது... ஒரே நிசப்தம்... ஒரே இருட்டு.. கடிகார காலடிச் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது... தொண்டை எல்லாம் வரண்டு போயிருந்தது... மூச்சு விட முடியவில்லை... ஒரே அனல்... இப்போதே குளித்துவிட்டு வந்ததைப் போல் உடலெங்கும் வேர்வை நதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது.. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை... சூடு படுத்தும் சாதனத்தை குறைக்க முடிவு செய்கிறார்.. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை... அதிகமான சிக்கல் ஏற்பட்டு அது வெடித்துவிடுமோ என அச்சம் இருந்தது.. அதை முன்பின் பயன்படுத்தியதும் இல்லை.. இந்தியாவில் அத்தகைய சாதனம் தேவையில்லையே... மிகுந்த கலவர முகத்துடன் மெதுவாக நடந்து ஜன்னல்களை திறக்க முயற்சி செய்கிறார்... அவை தாமே இயங்குபவை.. ஆட்டோமேட்டிக்...அதன் பொத்தான் எங்கே இருக்கிறதென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை... பத்மநாபன் மனைவி குழம்பிப் போகிறார்...கை கால்கள் நடுங்கத் தொடங்கின... குளிர்ந்தால் தான் நடங்கும்... ஆனால் பயத்திலேயே கால்கள் பரதம் பயின்றன‌... அப்படியே தரையில் நிர்கதி அற்று.. வேரற்ற மரமாய் சாய்ந்து விடுகிறார்...ஒரு ஈ காக்காய் இல்லை... அந்த அறையில் அவர் மட்டுமே தனியாக இருக்கிறார்... உதவுவதற்கு மனித வாடையே வீசவில்லை... தரையில் சாய்ந்தபடி சுவாமியின் திருநாமத்தை உச்சரிக்க ஆரம்பிக்கிறார்... யாருமற்ற சூழ்நிலையில் சுவாமியே கதி என உணர்ந்து கொள்கிறார்... சில வினாடிகளில் கதவுக்கு வெளியே யாரோ வரும் காலடிச் சப்தம் கேட்கிறது...கதவு திறக்கப்படவில்லை... 


அறையின் உள்ளே சுவாமியின் தோற்றம் பேரொளியாக காட்சி அளிக்கிறது... அது கனவா? இல்லை... நிஜம் தான்.. தான் உறக்கத்தில் இல்லை என்பதை துயிலற்ற விழிகள் சாட்சி சொல்கின்றன... "நான் இருக்கேன்.. ஏன் பயப்படற?" என சுவாமி பேசுவது அவர்களின் காதுகளில் தெளிவாக கேட்கிறது... அபய ஹஸ்தம் காட்டுகிறார்...அப்படியே தூங்கிப் போய்விடுகிறார் பத்மநாபன் மனைவி... தெரியாத வீடு...எந்தெந்த சாமான்கள் எந்தெந்த இடத்தில் இருக்கிறதென்பதை அறியாத அவரோ அடுத்த நாள் காலை எந்த தொந்தரவு இன்றியும் எழுகிறார்.. ரோட்டரி கூட்டத்திற்கு கிளம்பிவிடுகிறார்... எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் நேற்றிரவு நிகழ்ந்த அந்த திகில் சம்பவம் மட்டும் மனதின் ஓரமாய் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது...

சில வாரங்கள் கடந்து இந்தியா திரும்பி சுவாமியை தரிசிக்க புட்டபர்த்தி செல்கிறார் பத்மநாபன் மனைவி...

சுவாமி தரிசன கூட்டத்தினிடையே "உன் ஸ்வீடன் பயணம் எப்படி இருந்தது?" என கேட்கிறார்... "ஸ்வாமி.. நன்றாகவே இருந்தது.. ஆனால்??"என தயங்குகிறார்... 

"தெரியும்.. அந்த இரவு நீ தனியாக அகப்பட்டுக் கொண்டு மிகவும் பயந்து போய்விட்டாய்.. அதனால் நான் ஓடி வந்து காப்பாற்ற வேண்டியதாயிற்று!" என சுவாமி சொல்லிய உடன்... அன்று உடம்பெல்லாம் பயத்தில் கொட்டிய தண்ணீர்.. இன்று பரவசத்தில் கண்களின் வழி கொட்டிக் கொண்டிருந்தது...

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் 241/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)

சுவாமியிடம் பக்தி செலுத்துபவர்கள் யாரும் தனியாக இல்லை... சுவாமி இருப்பதால் யாரும் இவ்வுலகத்தில் அனாதைகளே இல்லை.. சர்வ நித்திய புருஷரான சுவாமி இருக்கிறவரை நிராதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை... மனிதனால் தன்னைத் தானே தூக்கிக் கொள்ள முடியாது... அதைப் போலவே இக்கட்டுகள் எல்லோருக்கும் வரலாம் ஆனால் காவல் என்பதை சுவாமியால் மட்டுமே தரமுடியும்...!

சுவாமியின் பேரிருப்பை உணர்ந்து விட்டால் வாழ்வில் நிகழும் இழப்புகள் என்பது ஒன்றுமே இல்லை எனும் சத்தியம் புரிய ஆரம்பிக்கிறது ... "சுவாமி என் கூடவே இருக்கிறார்.. எனக்கென்ன பயம்?" எனும் இந்த ஒற்றை வரி..‌ஆயிரம் மடங்கு யானை பலத்திற்கு சமம்... உண்மையில் நாம் துயரங்களுக்கும்/வலிகளுக்கும்/ இழப்புகளுக்கும் நன்றி செலுத்த வேண்டும்...

அது தானே சுவாமியின் பேரிருப்பை நமக்கு அணுஅணுவாய் உணர வைக்கிறது!!!


  பக்தியுடன்

வைரபாரதி

2 கருத்துகள்: