தலைப்பு

வியாழன், 21 அக்டோபர், 2021

Man of Miracle புத்தக ஆசிரியர் ஹோவர்ட் மர்ஃபெட்'டுக்கு மூன்றடி வெள்ளைப் பாம்போடு தரிசனம் தந்த சுவாமி!

சுவாமியின் மகிமையை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்களில் மிக முக்கியமானவர் ஹோவர்ட் மர்ஃபெட். அவரது Man of Miracle புத்தகமே பல வெளிநாட்டவர்களுக்கு சுவாமியின் தெய்வீகத்தை உணர்த்த பெரிய வாசல் திறந்து விட்டது! சுவாமி Man இல்லை God என அணு அணுவாய் உணர்ந்து கொண்ட அவரது பிரத்யேக ஆச்சர்ய அனுபவங்கள் இதோ...


ஹோவர்ட் மர்ஃபெட் தனது குடும்பத்தோடு ஒருமுறை ஹைதராபாத்'தில் தங்கி இருந்தார்.  சுவாமி அங்கு விஜயம் புரிந்த பொன்னான சமயம் அது. சுவாமி தரிசனமும்... சுவாமி இடத்திலேயே தங்கும் பாக்கியமும் அவரின் நற்பேற்றை பெரிதுபடுத்தியது. சுவாமியின் பேரன்புக்கு பாத்திரமான இதய சிகிச்சை  நிபுணர் டாக்டர் ஹேம்சந்த் இவரை ஹைதராபாத் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்கிறார். மர்ஃபெட்டோ டாக்டரிடம் தங்களுக்கு எவ்வளவோ பணி இருக்கும் .. ஆகவே தங்கள் உதவியாளரை அனுப்பி இருந்தாலும் போதுமே.. ஏன் வீண் சிரமப்படுகிறீர்கள் எனக் கேட்க.. அதற்கு மருத்துவரோ "இல்லை... சுவாமி தான் உங்களை நானே என் கைப்பட எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போகச் சொல்லி இருக்கிறார்" என்றார். அது தான் சுவாமி கருணை... மேலும் சுவாமி ஒன்றை செய்யச் சொல்கிறார் என்றால் அதற்கு உள்ளார்ந்த காரணம் இருக்கும்... அது நமக்கு அப்போதைக்கு அப்போதே தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.. அதை அப்படியே ஏற்று நாம் நடக்க வேண்டும்.


எல்லா இடங்களுக்கும் சுற்றி காண்பித்து விட்டு இறுதியாக மர்ஃபெட்டை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது மர்ஃபெட் திடீரென மயங்கி விழுகிறார். இதய வலியாக இருக்குமோ என மருத்துவர் ஹேம்சந்த் நினைக்கிறார். சுவாமிக்கு கால் செய்கிறார்.. அந்த ஃபோனை எடுத்த உடனேயே எதையும் சொல்லுவதற்கு முன் நான் வருகிறேன் என ஃபோனை வைத்து விடுகிறார் சுவாமி!

சுவாமி புறப்பட்டு சில நிமிடங்களுக்குள் டாக்டர் வீட்டிற்கு நுழையும் போதே... அவனுக்கு இதய வலி ஒன்றுமில்லை.. அவன் இதயம் நன்றாக இருக்கிறது என நடந்தபடி சொல்லி சுவாமி உள்ளே நுழையும் போது தான் நினைத்த விஷயம் எப்படி சுவாமிக்கு தெரிந்தது என வியந்தபடி சுவாமியை வரவேற்கிறார். சுவாமிக்கு தெரியாத விஷயம் என்ன இருக்கிறது இந்த ஈரேழு உலகத்தில்...!

உங்களுக்கு ஒன்றுமில்லை.. வெய்யிலில் அலைந்த களைப்பு தான் என்று  சிருஷ்டி விபூதியை மர்ஃபெட்டின் நெற்றியில் தடவி விடுகிறார். இந்த மயக்கம் உங்களுக்கு வெய்யிலால் ஏற்பட்டது தான் என சுவாமி சொல்வதை டாக்டரால்  நம்பவே முடியவில்லை. விஞ்ஞானம் ஆரம்பத்தில் குழம்பி அடுத்தவரையும் குழப்பி இறுதியில் மெய்ஞானத்திடம் சரணடைந்து அமைதி பெறும். பிறகு தென் ஆப்ரிக்கா பறக்கிறார் சுவாமி..

டாக்டரோ இதய வலிக்கான மாத்திரைகளையும் சிகிச்சையையுமே தொடர்ந்து அவருக்கு தருகிறார்.  குணமடைந்தாலும் திடீரென ஒருநாள் ப்ளூ காய்ச்சல் வர படுத்த படுக்கையாகிறார்.. சாப்பிட்ட மாத்திரைகளின் பின்விளைவுகளும் அவரின் உடல்நலத்தை பாதித்து சோர்வை தந்துவிட்டிருந்தது! 

வெளிநாட்டு விஜயம் செய்து திரும்பி வந்திருந்த சுவாமி அதே வீட்டில் மர்ஃபெட் படுத்திருந்த மாடியில் தங்கி இருக்கிறார். அவர் அண்ணார்ந்து பார்க்கும் விதானத்தின் மேலே சுவாமி அறை.. அந்த அண்ணார்ந்த பார்வையோ வெறிச்சோடி இருந்தது... சுவாமி தாங்கள் இதே இடத்திற்கு வந்திருந்தும் தரிசிக்க முடியவில்லையே.. இப்படி படுத்துக் கொண்டிருக்கிறேனே எனும் ஏக்கப் பெருமூச்சு சுவாமி அறையை சுற்றி இருக்க.. அந்த நீள் நள்ளிரவு.. திடீரென மர்ஃபெட்டுக்கு புதுவித தெம்பு உள்ளிருந்து ஊற்றெடுக்கிறது.. சோர்வு அந்த வீட்டின் மதில் சுவரில் ஏறி தப்பித்துச் சென்று... அடுத்த நாள் தரிசனத்திற்கு சுவாமியை நெருங்க ... "உங்களுக்கு நான் அனுப்பிய உடல் சக்தி உங்களை சரிப்படுத்தி இருக்க வேண்டுமே" என புன்னகையோடு சுவாமி கேட்க பூரித்துப் போகிறார் மர்ஃபெட்... உடலெங்கும் புல்லரிக்கிறது.. பரவச பூப்பூக்கிறது! பிறகு மர்ஃபெட்டை பெங்களூருக்கு வரும் படி சுவாமி அழைக்கிறார்.. அவருக்கு அங்கே ஓய்வெடுக்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன... அவருடைய அறை தோட்டத்தின் அருகே இருந்தது..  கட்டிலில் சாய்ந்து கொண்டே அவர் தியானத்தில் ஆழ்ந்திருப்பது வழக்கம்...

     அது இரவு நேரம்... மின் விளக்கு எரிந்தும்.. அறையின் வாசற்கதவு திறந்தும் இருந்தது... ஏதோ ஓர் உந்துதல் எழ... திரும்பிப் பார்க்கிறார்... அறை வாசலில் மூன்று அடிக்கு ஆஜானு பாகுவாக வெள்ளை நிற நல்ல பாம்பு படமெடுத்து நிற்கிறது... தியானத்தை நிறைவு செய்திருந்த மர்ஃபெட்டோ அதே பேரமைதியில் கட்டிலில் எழுந்து அந்த பாம்பின் அருகே நின்று கொள்கிறார்.. கை கால் உதற வில்லை.. நடுக்கமில்லை... பீதியில்லை.. 

அவருக்கு துளியும் பயமில்லை... அந்த வெள்ளைப் பாம்பு சீறவுமில்லை... சப்தம் எழுப்பவுமில்லை... அந்தப் பாம்பின் பின்புறமாக சுவாமி காட்சி தருகிறார்... பரவசமுடன் சுவாமியை கை கூப்பி வணங்குகிறார்.. சுவாமியும் சுவாமிக்கு வாகனமாக தோன்றிய அந்த நாகமும் தரிசிக்கும் பாக்கியத்தை அவர் உணரும் போது .. அந்தப் பாம்பு வேகமாக சென்று மறைந்து விடுகிறது... 

 சுவாமி எப்படி இந்த லோகத்து மனிதரே இல்லையோ .. அப்படி அந்த வெள்ளைப் பாம்பும் இந்த லோகத்து ஜீவனே இல்லை‌..

 சுவாமி எனும் சத்தியப் பரம்பொருள் ஒருவர் தான் லோகங்களை இணைக்கும் அகில உலக ரட்சகர்!! ஆகவே தான் நாம் சமஸ்த லோகா சுகினோ பவந்து என வேண்டிக் கொள்கிறோம்!!

(ஆதாரம் : பகவான் பாபா /பக்கம் :  173 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்) 


"சுவாமியின் பேரருள் மனித உடம்பிலும் ... உள்ளத்திலும்...எண்ணத்திலும் ஊடுறுவும் சர்வ வல்லமை மிக்கது!! அந்தப் பேரருளை பெற நமக்கும் சக உயிர்களிடத்தில் பேரன்பு வேண்டும்!! பேரன்பையே பெருங்கருவியாய் பெருங் காரியத்திற்கு  சாயி பேரருள் பயன்படுத்திக் கொள்கிறது!!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக