தலைப்பு

செவ்வாய், 30 மார்ச், 2021

இமயமலையின் கங்காலிஹட்'டில் மனமாற்றம் அடைந்த தொழு நோயாளியின் மகன்!


அண்டசராசரத்தை இயக்கும் இறைவன் சத்யசாயியின் இறை ஆளுமைக்கு உட்பட்டதே எல்லா உலகத்தின் பிரதேசங்களும்... அப்பேர்ப்பட்ட இறைவன் சத்யசாயி மனமாற்றம் செய்வதற்காகவே பூமிக்கு இறங்கி வந்தவர்! அப்படி அவர் செய்த மனமாற்றங்களின் ஓர் உன்னத அனுபவப் பதிவு இதோ...

இங்கிலாந்தில் உள்ள தேசிய உடல் நலத்துறையில் கண் மருத்துவமாக பணியாற்றியவர் டாக்டர். சுரேந்திர உபாத்தியாயா, சுவாமியின் அத்யந்த பக்தர். பிரார்த்தனை, மற்றும் சேவை இவை இரண்டையும் தன்னுடைய இரு கண்களாக கருதுபவர். எனவே பாபா இவரை உலகிலுள்ள வளரும் நாடுகளில், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஸ்ரீ சத்யசாய் நிறுவனங்களின் சார்பாக நடைபெறும் இலவச மருத்துவ முகாம்களுக்கு பொறுப்பாளராக நியமித்தார்.

சுவாமி ஒருமுறை டாக்டர்.சுரேந்திர உபாத்யாயா அவர்களை அழைத்து , நேபாளத்தை எல்லைக் கோடாகக் கொண்ட இமயத்தின் ஒரு மூலையில் இருக்கும் "கங்காலிஹட்" (Gangal hut) என்ற கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்த ஆணையிட்டார். அதனை பணிவுடன் ஏற்று, பல்துறை மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தன்னார்வலதொண்டர்களுடன் Dr.உபாத்யாயா கங்காலிஹட் சென்று முகாமை தொடங்கினார்.

டாக்டர் உபாத்தியாயா குழுவினர், முகாம் நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியில் ஜாஹேஸ்வரில் உள்ள சிவலிங்கத்தை வழிபாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது! சிவமகிமா புராணத்தின்படி முதல் சிவலிங்கம் அங்கு தோன்றியதாக ஐதீகம் உள்ளது! கங்காலிஹட்டை சுற்றி பல தொகுப்பு கிராமங்கள் இருந்தன. அங்கு வசித்த மக்கள் மிகவும் ஏழைகள்! அந்த கிராமங்கள் அனைத்தும் நகரில் இருந்து வெகு தொலைவில் இருந்தன. அவர்களுக்கு எந்தவித மருத்துவ வசதியும் அருகில் இல்லை. பகவானின் நல்லெண்ண தூதுவர்களாக, பணிவுடன் உபாத்யாயா குழுவினர் செய்த சேவை, கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது. 

முகாம் தொடங்கிய சில நாட்களில், ஏராளமான நோயாளிகள் வரத்தொடங்கினர்! கூட்டம் நிறைந்த ஒரு நாளில், திடீரென சலசலப்பு தோன்றியது காரணம் ஒரு தன்னார்வலர் ஒரு தொழுநோயாளி ஒருவரை அழைத்து வந்து கொண்டிருந்தார். 

அங்குள்ள மக்கள் அவனை "குஷ்டரோகி" என்றே அருவருப்புடன் அழைத்தனர்! அவன் ஒரு பெரிய போர்வையை உச்சந்தலையிலிருந்து உடல் முழுவதும் போர்த்தியபடி வந்து கொண்டிருந்தான். அவன் நெருங்குவதை கண்டதும், சிலர் வேகமாக அங்கிருந்து நகர்ந்தனர். கிராமமக்கள் அவனது உடைமையோ, அவனோ, மேலே பட்டு விடாதபடி எச்சரிக்கையாக இருந்தனர். 

சேவை பணியாளர் அவனை ஒரு நாற்காலியில் அமர வேண்டினார்! அவன் தயங்கவே, டாக்டர் உபாத்தியாயா அவனை வற்புறுத்தி அமர வைத்தார். அவன் போர்வையை விலக்கி தன் உடலை காண்பிக்கவே மிகவும் தயங்கினான். அவன் பயந்து நடுங்கி கொண்டிருந்தான்! தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்! நான் சாக விரும்புகிறேன்! என்னை கவனிக்க யாரும் இல்லை, என்று திரும்ப, திரும்ப கீரல் விழுந்த ரெக்கார்டு போல கூறி அழுது கொண்டிருந்தான். டாக்டரும் சேவா தள பணியாளர்களும் அவனை ஆறுதல் படுத்தினர். 

இந்த தொழுநோயாளி அந்த கிராமத்தில், அவனது மகன் குடும்பத்தாருடன் இருந்துள்ளான். கிராமத்தினர், அவனது நோய் எல்லோருக்கும் தொற்றிக் கொண்டு விடும் என்ற அச்சத்தினால், அவனது மகனை அழைத்து, உனது தந்தையை ஊருக்கு வெளியே உள்ள குடிசையில் விட்டுவிடு! மீறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம்! என்று மிரட்டியுள்ளனர். பயந்து போன மகன் தந்தையை ஊருக்கு வெளியே அனுப்பி விட்டான்

அந்த தொழு நோயாளிக்கு சில வேளை உணவு கொடுப்பதோடு சரி! யாரும் அவனிடம் பேசுவதில்லை! இந்த நோய் தொற்று நோய் அல்ல. ஆனால் அலட்சியப்படுத்துதல், இழிவு படுத்துதல் என்பது நோயைவிட மரணத்தைவிட, மோசமான நரகத்தை நோயாளிக்கு ஏற்படுத்தும் என்பதை அங்குள்ளோர் அறியவில்லை.

சேவா தள தொண்டர்கள் அவனை குளிப்பாட்டி, அவனுக்கு புதிய உடைகளை வழங்கினர். 

அவனுக்கு தேநீரும், பிஸ்கட்டும், உணவும் வழங்கிய சேவா தள பணியாளரிடம், அவன் தட்டை வாங்கிக் கொள்ளவே தயங்கினான்! . உங்களுக்கு என்ன பைத்தியமா? உங்கள் பாத்திரத்தை தொட என்னை அனுமதிக்காதீர்கள்! உங்களுக்கும் என் வியாதி வந்து விடும்! என கெஞ்சினான்

அவனுக்கு தேவையான மருந்துகள் டெல்லியில் இருந்தன. அங்கிருந்து மருந்துகள் இரண்டு நாட்களில் வரவழைக்கப்பட்டது. முகாம் முடியும் வரை அவன் அங்கேயே தங்க வைக்கப்பட்டான் அவன் நான் யாருக்காக வாழ வேண்டும்! எனக்கு யாரும் இல்லை! என்று கண்ணீர் சிந்திய போது பகவான் சத்யசாய்பாபா அவனுடன் இருப்பதாக அவனுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே அவன் வேதனைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவன் முகாமில் இருந்தபோது, சேவாதளப்பணியாளர்கள், முறை வைத்து அவனை அன்புடன் பார்த்துக் கொண்டனர்! கொடுமையான பாலைவனத்தில், திக்குத் தெரியாமல், அலைந்து கொண்டிருந்தவன் எதிரே நீர் சுனையுடன் கூடிய பாலைவனச்சோலை தென்பட்டால் அவன் எவ்வளவு ஆனந்தம் அடைவான். அதுபோல அன்பு செலுத்த ஆளின்றி, புறக்கணிப்பு என்ற புதைகுழியில் சிக்கி, மனம் வெதும்பி போய் இருந்த அவனுக்கு சாயி தொண்டர்களின் அன்பு, நெகிழ்ச்சியையும் , வாழ்க்கையில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. 

உபாத்தியாயா குழுவினர் கிராமத்தினருக்கு உடல் நல பராமரிப்புடன், பஜன் பாடுதல், கிராமத்தை சுத்தம் செய்தல், நாராயண சேவை, குழந்தைகளுக்கு பென்சில், நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் போன்ற செயல்பாட்டிலும் ஈடுபட்டனர்! முகாமின் கடைசி நாள் அன்று ஊரார் அனைவரும் வழியனுப்ப திரண்டு வந்திருந்தனர்! ஒரு அபூர்வமான உற்சாகமான திருவிழா கொண்டாட்டம் முடிவுக்கு வந்ததை போல கிராமத்தினர் வருந்தினர்!.

சாய்ராம்! சாய்ராம்! என்று மென்மையாக அன்புடன் வழங்கப்பட்ட, இதுபோன்ற சேவையை அந்த கிராமத்தினர் தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை. முகாம் வெகு சிறப்பாக நடந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்த உபாத்தியாயா, திடீரென அந்த தொழு நோயாளியை நினைத்து வேதனையுற்றார்! அவன் மீண்டும் தொடர் புறக்கணிப்புக்கு ஆளாக போகிறான் அவனது நிலை என்ன ஆகுமோ! என்று எண்ணியபோது அவர் நெஞ்சம் இருண்டு போனதுு... 

அவர் மனதில் பகவானை நிறுத்தி, சுவாமி எங்களது பணி முடிந்தது! இனி இவனை உம்மையன்றி காப்பாற்ற வல்லோர் யார்? தயைக்கும் பிரேமைக்கும் ரூபம் தாங்கிய என் அன்பு சாயி தெய்வமே! அவனை காப்பாற்றுங்கள் என வேண்டினார்

திடீரென கூட்டத்தில் இருந்து அந்த தொழுநோயாளியின் மகன் வேகமாக வந்து மருத்துவக் குழுவினரின் கால்களில் விழுந்தான். ஐயா இந்த பாவியை மன்னித்து விடுங்கள்! எங்கிருந்தோ வந்த நீங்கள் என் தந்தையின் மீது எல்லையற்ற பாசத்தையும், அன்பையும் பொழிந்தீர்கள். பெற்ற மகன் ஆகிய நான், ஊராருக்கு அஞ்சி, அவருக்கு துரோகம் செய்துவிட்டேன்

இனி இந்த ஊரார் என்னை ஒதுக்கி வைத்தாலும் நான் என் தந்தையை கைவிட மாட்டேன் ! என்று ஆவேசமாக கூறி வேகமாகச் சென்று தொழு நோயாளியான அவனது தந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டான். அந்த தொழுநோயாளி கூட்டத்தினரை பார்க்கவில்லை! அவனது மகனை பார்க்கவில்லை! முகாமிற்கு கொண்டு வரப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்தில் இருந்த சுவாமியையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன் தனது குறைந்த கைகளை கூப்பி கொண்டு, ஈர விழிகளுடன், நெஞ்சார பகவானுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தான். 

🌻 ஆம் நம் பகவான் தயைக்கும் பிரேமைக்கும் ரூபம் தாங்கிய பகவான் என்பது சர்வ நிச்சயம். சம்ஹாரம் செய்து பூபாரம் குறைக்கவே கீதை பூபாளமாய் வந்திறங்கியவர் ஸ்ரீ கிருஷ்ணர்.. அகந்தையை மனிதனிடமிருந்து சம்ஹாரம் செய்து அக மாற்றம் தருவதற்கே அவதாரம் செய்தவர் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர். 🌻

ஆதாரம்: 'Sathyam Sivam Sundaram', 6th PART, 8th Chapter 

தொகுத்தளித்தவர்:  S.ரமேஷ், Ex convenor, Salem Samithi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக