தலைப்பு

செவ்வாய், 16 மார்ச், 2021

நக்சல் தீவிரவாதியை நன்னெறி பக்தராக்கிய பாபா!

Amazing Transformation story of Philip M Prasad(Ex-Naxalite)

இறைவன் சத்ய சாயி எத்தனை கருணை மயமானவர். அழுக்கையும் தனது அரவணைப்பால் துவைத்து.. அன்பால் வெளுத்து பரிசுத்தம் செய்பவர். பல கொலை செய்தவரையே பக்தி எனும் கலை செய்ய வைத்த கடவுள் சத்ய சாயி பொழிந்த பேரன்பு பதிவாக இதோ.. பாலக்காட்டைச் சேர்ந்த பிலிப் மாத்யூ பிரசாத், மதநம்பிக்கை அதிகமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர். பிலிப்பின் பள்ளிப்பருவம் இனிமையாக கழிந்தது.

பின்னர், மேற்படிப்பிற்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு மார்க்சிய சிந்தனை உள்ள நண்பர்கள் கிடைத்தனர். அதன் விளைவாக அவர், தீவிர நாத்திகர் ஆனார். 17 வயதில் மார்க்சிய இயக்க மாணவர் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார் .

18 வயதில் கட்சி உறுப்பினர் ஆனார்.பின்னர் அவர் தீவிர நக்சல் இயக்கத்தில் சேர்ந்தார். மேற்கு வங்காளத்தில் தொடங்கப்பட்ட தீவிர நக்சல் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் இவரும்  ஒருவர். 21 வயதில் கல்லூரி படிப்பை துறந்து, கேரளாவில் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினருக்கு ஆதரவாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.நிலக்கிழார்களுக்கு எதிராகவும், போலீஸ்காரர்களுக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிப் போராடினார்.


இவரது அமைப்பினர், 1968 டிசம்பர் இரண்டாம் நாள்,பல் பள்ளி காவல் நிலையத்தை தாக்கினார்கள். காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். கேரளாவை உலுக்கிய இவ்வழக்கில், இவருக்கு  7 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. சிறையில் அவர் மன நிம்மதி இன்றி தவித்தார். உறக்கம் வரவில்லை. தனது எதிர்காலத்தைப் பற்றிய பல குழப்பமான சிந்தனைகள் தோன்றின.

இந்நிலையில் ஒருநாள், சிறைச்சாலையில் சத்திய சாயி பஜனை நடந்தது. பஜன் முடிந்ததும், பிரசாதமாக கைதிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. ஒரு அன்பர் இவரிடம் வந்து ஒரு ஆரஞ்சு பழத்தை வழங்கினார். பிலிப் அவர்களுக்கு ஏற்கனவே எரிச்சல் அதிகமாக இருந்தது. அந்த ஆரஞ்சு பழத்தை அந்த அன்பரின் தலையை நோக்கி விட்டு எறிந்தார். அது அவரது தலையை சென்று தாக்கியது.

அந்த அன்பர் கோபப்படாமல் இவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு சென்றார். அந்த நிகழ்வு இவரது மனப்போக்கை சற்று மாற்றியது. இரவு முதன்முறையாக இயேசுவின் பிரார்த்தனை பாடல் ஒன்றை பாடினார். இளம் வயதில் குடும்பத்தாருடன் சேர்ந்து பாடும் பாடல் அது. வெகு நாட்களுக்குப்பின் நிம்மதியாகத் தூங்கினார். அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டது.

சிறைச்சாலை நூலகத்திற்குச் சென்று பல்வேறு சமய ஆன்மீக நூல்களைப் படிக்கலானார். மனதிற்கு சற்று அமைதி கிடைத்தது. விடுதலை ஆனதும் படிப்பை முடித்து வக்கீல்  ஆனார். மக்கள் விரும்பும் வகையில் அரசியல் மூலம் தொண்டு செய்தார்.


பிலிப்பின் நண்பர் ஒருவர், அவருக்கு சத்யசாய்பாபா ஒரு அவதாரம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அந்தப் புத்தகம், பிலிப் அவர்களுக்கு பகவான் சத்ய சாய்பாபாவை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அவரது கைப் பையில் ஒரு சாய்பாபா படமும் இருந்தது. யார் அதை அங்கு வைத்தது என்பதும் புரியவில்லை.புட்டபர்த்தி செல்ல வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகமானது.

பிறகு பிலிப், குடும்பத்துடன் புட்டபர்த்தி சென்றார். பகவான் அவரை அன்புடன் வரவேற்று நேர்காணல் கொடுத்தார். அவருக்கும், அவரது மனைவிக்கும் இயேசுவின் படம் பதித்த தங்க மோதிரங்களையும், டாலர்களையும் வரவழைத்துக் கொடுத்தார். அவரது கடந்த கால வாழ்க்கை முழுவதையும் பாபா கூறினார். அவரது கைப் பையில் தாமே படத்தை வைத்ததாகவும் கூறினார். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் உடன் இருக்கிறேன் என்றார்.

கேரளா திரும்பியதும், சுவாமியின் பக்தர் ஆகி,சுவாமியின்  நற்செய்திகளையும், சேவையைப் பற்றியும்,   பாபாவின் தெய்வீகத்தை பற்றியும் பல கூட்டங்களில் பேசினார்.


கோழிக்கோட்டில், ஒரு பெரிய கூட்டத்தில் பாபாவைப் பற்றி பேசினார். பேசி முடித்ததும், ஒரு அன்பர் அவர் அருகில் வந்து,  "பக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து காபி அருந்தி செல்ல வேண்டும்",என பணிவுடன் கேட்டுக் கொண்டார். அந்த பெரியவரின் பெயர், சங்கர ஐயர். இவரும் அவர் வீட்டிற்கு சென்று காபி அருந்தினார்.

 காபி அருந்தும் போது, அந்தப் பெரியவர், "சார், என்னை தெரிகிறதா?", என்று கேட்டார். இவர், தெரியவில்லையே என்று கூறினார்.

பல வருடங்களுக்கு முன்பு, நீங்கள் சிறையில் இருந்தபோது, ஒரு சாயி பஜனை நடந்தது. பஜன் முடிவில், உங்களுக்கு ஒருவர் ஆரஞ்சு பழத்தைக் கொடுத்தார். நீங்கள் அதை அவர் தலைமீது வீசினீர்கள். அந்த ஆரஞ்சு பழத்தை  தங்களுக்கு கொடுத்தது நான்தான்.


அப்போது நான் பகவானிடம், " சுவாமி! இந்த அழகான இளைஞரை நான் மீண்டும் சந்திக்கும்போது, இவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மேலும் நல்ல சாய் பக்தராகவும் இருக்க வேண்டும்." என  மனமாரப் பிரார்த்தித்து கொண்டேன். தங்களை அவ்விதமாகவே பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் சங்கர் ஐயர்.

பிலிப்  சங்கர ஐயரிடம், "உங்களது தன்னலமற்ற பிரார்த்தனை, என்னை பகவானிடம் கொண்டு சேர்த்தது",என்று கூறினார்.
பிலிப், சங்கர அய்யருக்கும்,  பகவானுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

ஆதாரம்: Sathyam Shivam Sundaram - Volume 5 | Pg: 169 - 172

நன்றி: S. Ramesh - Ex-Convenor,  Salem Samithi

 அலட்சியமாய் வீசி எறியப்பட்ட ஆரஞ்சு 🍊 பழத்தை எறிந்தவரும் பழமாக மாறினார்.. அதை வழங்கியவரும் பழுத்த பக்திப் பழமாகவே கனிந்திருந்தார். இதுவே பக்தியின் சுபாவம்.
கல்லெறிந்தாலும் கனிகளையே தருகிறது கற்பகம்..
சொல்லெறிந்தாலும் சுடரையே ஏற்றுபவர் இறைவன் சத்ய சாயி..
சுவாமியின் பேரன்பு என்பது பாய்ந்தோடும் அருவ கங்கை.. அதில் நனைபவர் சிவபிரான் முன் அமரும் நந்தியாகவே மாறிவிடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக