தலைப்பு

செவ்வாய், 9 மார்ச், 2021

Oh My God என்பதை கூட அழைப்பாக ஏற்று விபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய God சத்யசாயி!


சுவாமிக்கு எந்த தேசமும் தனது தேசமே.. எந்த கலாச்சாரமும் தனது கலாச்சாரமே .. எந்த மதத்தின் மனிதரும் அவரின் குழந்தைகளே! எந்த மொழியில் அழைத்தாலும் சுவாமி காப்பாற்றுகிறார்.. ஆம்!! பகவான் பாபா, ஆத்மார்த்தமான எல்லா பக்தர்களையும் சுயநலமற்று காப்பார்! ஒருமுறை பகவானே! என்றால் போதும்! சாதகனின் வீட்டு வாசலுக்கே சென்று அருள்புரிவார். அதிலும் சத்யசாயி எனும் தன் திருப்பெயரை அழைக்க தெரியாதவர்களுக்கு கூட சுவாமியே ஓடோடி வந்து உயிரை ஆபத்திலிருந்து மீட்கிறார்‌.

ஒருமுறை U.S'ஸில் ஒரு ஆசிரியை தனது மாணவர்களுடன் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு சிறிய சுற்றுலா போல் சென்றார். சுற்றி இருக்கும் இயற்கை எழிலைப் பார்த்தபடி திளைத்திருந்தார். அவரின் பிஞ்சுப் பருவ மாணவர்களும் சுற்றுலா பயணத்தை அனுபவித்துக் கொண்டே இருந்தனர். பொதுவாக விபத்துகள் தந்தி அடித்து வருவதில்லை. ஆபத்தும் விபத்தும் கண் இமைக்கும் நேரத்தில் உயிரையே பறித்து விடும் படி மின்னல் நொடிகள் அவை. சந்தோஷமாக பயணித்துக் கொண்டிருந்த அவர்களின்  நடுவழியில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நின்றது. உயிரை கைகளில் பிடித்தபடி ஆசிரியையும் மாணவர்களும் அந்த மின்னல் நொடிகளை சந்தித்தார்கள்.
ஆசிரியர் மனதிற்குள் தனது தாய்மொழியான ஆங்கிலத்தில் பிரார்த்தனை செய்கிறார்.
இப்பேர்ப்பட்ட இக்கட்டில் பலரின் மனம் நின்றுவிடுகிறது. காப்பாற்று என்பதை கூட வேண்டிக் கொள்ள நிறைவற்றுப் போய்விடுவர். அப்படி அந்த ஆசிரியை வேண்டினார் என்றால் அதுவும் சுவாமி சங்கல்பமே!! நல்ல வேளை குழந்தைகளுக்கு ஒன்றும் நேரவில்லை! ஆம் அந்த நல்ல வேளை சுவாமி வேளையே!! இல்லாது போயிருந்தால் இவரின் தலைமைப் பொறுப்பில் சுற்றுலாவுக்கு வந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் என்ன பதில் சொல்ல முடியும்? பெருமூச்சு விட்ட ஆசிரியை, "ஸ்வாமி! மிக்க நன்றி-எங்களை காப்பாற்றியதற்கு!" என முணுமுணுத்தார்.

ஒரு மாதம் கழித்து பிரசாந்தி நிலையம் வந்தார். அவரைப் பார்த்த உடனே சுவாமி இன்டர்வியூவிற்கு கூப்பிட்டார்! சுவாமிக்கு நன்றி தெரிவித்த அந்த ஆசிரியை, "உங்களை அழைக்காமலே, நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள் சுவாமி" என்றார். கருணையோடு சுவாமி பதில் கூறினார். "ஓ! மை காட்! ஸேவ் அஸ்!(Oh! my God! Save us!) என்று கூப்பிட்டாய் அல்லவா! அது போதுமே!" என்றார். அதைக்கேட்டு கண்களில் நீர் மல்க நன்றிப் பெருக்கில் அப்பெண்மணி திகைத்தார்! அது போதுமே என்று சுவாமி சொன்னது எத்தகைய மொழி.. அளப்பரிய கருணை மொழி.. சுவாமி நம்மிடம் பூரண பக்தியோடு கூடிய சரண்கதியை தவிர எதையும் எதிர்பார்க்கவில்லை என்பது புரிகிறது. அதை உணர்ந்து கொண்டதால் தான் அந்த ஆசிரியையின் கண்களில் ஆனந்த பாஷ்பம் சொரிந்திருக்கிறது.

ஆதாரம்: Sai Darshan P 156
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்

🌻 சுவாமி கடவுள். அந்தக் கடவுளுக்கு சாஸ்திர சம்பிரதாயம் கூடிய பூஜை புனஸ்காரங்கள் எதுவும் தேவையில்லை. சுவாமி இதயத்தையே கேட்கிறார்.எல்லா யாக வேள்வி முதலிய பூஜை சடங்குகள் செய்தும் இதயத்தில் பரஸ்பர அன்பு இல்லை எனில் விழலுக்கு இறைத்த நீராக பயனில்லாமல் போய்விடுகிறது. பக்தி ஒன்றே இருக்குமானால் இவை எதுவும் செய்யாமல் சுவாமியிடம் சரணாகதி அடைவதற்கான பிறவிப் பக்குவம் நிறைந்துவிடுகிறது!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக