தலைப்பு

சனி, 27 மார்ச், 2021

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ஸ்ரீ அரவிந்தர் (1872 –1950)


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                          - இறைவன் ஸத்ய ஸாயி

ஸ்ரீ அரவிந்தர் :

பாரத தேசம் பராக்ரமர்களின் தேசம்.  இந்தியா இமயர்களின் வாசம்...
பூமியைத் தோண்டி புதையல் எடுப்பதை விட்டு பூகம்பம் எனும் மனதைத் தோண்டி ஆத்மாவை எடுத்தவர்களோடே சகவாசம் இந்த தேசம்.
அகழ்வாராய்ச்சியை விட்டு அகத்தை ஆராய்ச்சி செய்தவர்களின் ஆன்மீக தேசம் இந்தியா.
இந்தியா என்பது இறைவனுக்கான கர்ப்பப் பை ..
எந்த நாட்டில் பிறந்தாலும் அக விடுதலை (முக்தி) அடைய இந்திய நாட்டிற்கே வந்தாக வேண்டும். வேறு வழியே இல்லை.
ஆன்மீகச் சுடர்களையும் தேசியப் போராட்ட சுயங்களையும் ஈன்ற சிங்க தேசம் வங்க தேசம்.
ஒரு பரமஹம்சர்.. ஒரு தாகூர்.. ஒரு சுபாஷ் சந்திர போஸ்.. ஒரு திலகர்...ஒரு அரவிந்தர்... ஒரு யோகானந்தர் என
எண்ணற்ற எழுச்சியை எழுதி கண்ணற்ற அடிமை இருளை வெளிச்சம் பாய்ச்ச விடிவெள்ளிகளை மையப் புள்ளிகளாக மாற்றியது அது.


ஸ்ரீ அரவிந்தர் ஒரு யுக புருஷர்...

வாழ்க்கை எதை நோக்கி நடக்க வேண்டுமென்பதை மனித மனம் அல்ல இறைவனே முடிவு செய்கிறான்.
அரவிந்தரின் இளமை வாழ்வை வாசிப்பவர்கள் நினைத்துப் பார்த்தால் அவரின் துறவு வாழ்வை எவராலும் கணித்திருக்க வாய்ப்பே இல்லை அவராலும் கூட...

மனிதன் யோசிக்கிறான் ஆனால் இறைவன் சாயியே யாவற்றையும் முடிவு செய்கிறார்..
வங்க தேசம் எங்கே? ஆந்திர தேசம் எங்கே? புதுவை தேசம் எங்கே? என்ன அழகானதொரு முடிச்சிடுகிறார் மகா கடவுள் சத்ய சாயி.

வெளி நாட்டில் கல்வி கற்ற அரவிந்தர் புதுவையில்  (பாண்டிச்சேரி) தான் நம் வாழ்க்கைத் தோணி கரையேறும் என அப்போது அவர் தீர்மானித்ததாக அவரின் எந்தப் புத்தகக் குறிப்பிலும் இல்லை..

அனைவர் வாழ்க்கையிலும் இறைவன் சத்ய சாயி எழுதும் திரைக்கதையே.

கொல்கத்தாவில் பெருஞ்செல்வந்தர் குடும்பம். வெளி நாட்டில் (லண்டன்) படிப்பு. ஆங்கில அறிவு தண்ணீர் படும் பாடு. அபார கவித்துவ ஞானம்... புரட்சிகர சிந்தனை.. கத்தியே தீர்வு எனும் உக்கிரம்.
இதுவே இளம் அரவிந்தர்.


தாயகம் திரும்புகிற சமயம். முதல் திருப்புமுனை..

கப்பல் கவிழ்ந்து மகன் இறந்ததாகச் செய்தி. அந்த அதிர்ச்சியில் ராமரை பிரியும் தசரதராய் இறந்துபோகிறார் தந்தை கிருஷ்ண தனகோஷ். அதனால் தாய் மனநோயாளி ஆகிறார்.
வாழ்வின் முதல் நிலையாமை அவருக்கு அரங்கேற்றம்.
பரோடா அரசாங்கப் பணி. மீண்டும் கொல்கத்தா விஜயம்.
தேசியப் போராட்டம். சுதந்திரப் போராட்டம் பற்றி தந்தை எழுதிய பழைய கடிதங்கள் எல்லாம் கண்முன் வருதல்.
வெளிநாட்டு நாகரிக மோகத்தை முதலில் துறத்தல். பிறகே அகத்துறவு
திலகரின் ஸ்வராஜ்யம் பற்றிய ...ஆம் பற்றியதால் போராட்ட ஜோதியாதல். பத்திரிகை நடத்துதல்.


ஒரு கொலைவழக்கில் கைதாதல். அதிர்தல்.
இதுவரை எரிந்த தீ இனி சந்நிதான  விளக்கு ஜோதியாக
இன்னொரு திருப்புமுனை...
சிறை வாழ்க்கையே ஆன்மிக நாட்டம் தருகிறது அரவிந்தருக்கு.
ஸ்வராஜ்யம் என்பது புற விடுதலை மட்டுமல்ல அக விடுதலை என்பதையும் உணர்கிறார் அவர்.

ஒரு குரு தான் பல ஆண்டாய் யோகத்தில் பெற்ற ஸித்தியை அரவிந்தருக்கு அவர் தீட்சை அளிக்க மூன்றே நாளில் பெறுகிறார்.

காரணம் அரவிந்தர் தீவிரமானவர்.
அந்த தீவிரமே ஆன்மிகத்தின் பால் திருப்பப்படுகிறது..
சிறைச்சாலையில் விவேகானந்தர் தரிசனம் தந்து புதுவைக்கு வழிகாட்டுகிறார்.


அவர் ஆரம்பத்தில் அந்தக் குரலையும் காட்சியையும் நம்பாமல் மறுதலிக்கிறார்.

ஆன்மீகத்தில்  எதையும் சற்றென நம்பாதவராகவே ஆரம்ப அரவிந்தர் இருந்தார்.

ஆக.. மூன்றாவது முறையான சுவாமிஜி விவேகானந்தரின் சொல்லிற்கிணங்க வனப்பிரஸ்தம் மேற்கொண்டார் ..

ஆனால் புதுவையோ திரவ வனம்...
கடல் கொஞ்சி அழைத்தது...
குடில் அமைத்துக் குடியேறினார்.


ஒருவர் மகானாக வேண்டுமானால் சுக்கல் நூறாக உள்ளே உடைய வேண்டும்.

தாய் மனநோயாளி ஆனது. தந்தை இறந்தது..
வீண்பழியில் வந்த சிறை வாசம்...
அவரை நொறுக்கியது..
அதனால் மட்டுமே அவரின் உள் தீவிரம் ஆன்மீகத்திற்குத் தாவியது..
இவ்வளவும் பகிரக் காரணம்.. அரவிந்தர் அந்த மகோன்னத நிலையை அடைந்ததற்குப் பின்புலமாய் ஆயிரம் இழப்புகள்.. வெடிப்புகள்.. தியாகங்கள் நிறைந்து இருக்கிறது.

சாதாரண நிலையல்ல..
சாதாரணமாய் வருவதுமல்ல..

கொல்கத்தா வரை தேகத்தாலும்
புதுவை முதல் யோகத்தாலும் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபடலானார்...

அவரின் பிறந்த நாள் பரிசே நமக்கு சுதந்திரம்.. ஆகஸ்ட் 15 அவர் ஜென்ம தினம். அவரே சுதந்திரம் ஈன்ற இந்திய சுதந்திரத் தாய்.


அவர் யோக சாரம் என்பது பிறவி இல்லா பெருவாழ்வும்..
அவரின் தவம் என்பது அதிமனதின் பேராற்றலை பூமிக்கு இறக்குவதுமாகவே இருந்தது...

அதுவே அவரின் மையப் புள்ளி...
அதை நோக்கியே அவரின் அகப் பயணம்.

ஏன் அந்த உந்துதல்?
அதுவே சாயி லீலா..

அது அரங்கேறுவதை அவரே முதலில் அனுபவிக்க வேண்டும் என்பது சுவாமி சங்கல்பம்...

அதி தீவிர யோகி.
தேஜோமயமாய் ஜொலிப்பார்.
உடலை சத்தான உணவால் திடகாத்திரமாய் வைத்திருந்தார்.

உடல் ஒரு ஆன்மிக சாதனம் என உணர்ந்தவர் அவர்.

அதி மனதை நோக்கிய தீவிர தாகம்.. அதி மனம் என்பது மனமற்ற மனம்..


அதாவது எண்ணங்கள் என்பது மனம். சங்கல்பம் என்பது அதிமனம் ( Super Natural Consciousness)

மிக உயர்வான விழிப்புணர்வு...

புத்தருக்கு நேர்ந்தது போல்..

அந்தப் பேராற்றலை பூமியில் இறக்கும் தவ சமயங்களில் அவருக்கு சூட்சும உலகத்து சூட்சும உருவங்கள் எல்லாம் சேர்ந்தே துணை நின்றன..

எல்லா உலகத்து ஆன்மிக சாதகர்களையும் இதை நோக்கியே தவமியற்ற வைத்தவர் அரவிந்தர்..

இதுவே அதிமன தவப் பயணங்களின் பாதையும் அதுவே உட்பொருளும்..

ரகசியத்தை அடியேன் உடைத்தாலும்... அதைப் புரிந்து கொள்ள ஆன்மிக சாதகர்களால் மட்டுமே முடியும்..

இவர்களின் சாதனை கனியும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது..

இவரின் புற அடியார்களும் .. வேற்று உலக அடியார்களும் தவத்தில் கனிந்தனர்


அந்த நாள்.. அந்த நொடி.. அரவிந்த ஆசிரமத்தின் இடம் எங்கும் அதிர்வலைகளாலும்.. பேரொளியாலும் நிரம்ப ஆரம்பித்தன ...

அந்த அதிர்வலைகளை கண்மூடியே தவ பொழுதில் உணர ஆரம்பித்தனர்..
(இன்றும் அந்த அதிர்வலைகளை உணரலாம்)

அதிசூட்சுமம் அரங்கேறப்போவது அரவிந்தருக்கு புரியாமல் இல்லை...
மகா முனிவர் அல்லவா அவர்..

பேரானந்தம் அகம் முழுக்க அவரின் சாதகர்களுக்கும் அப்பிக் கொண்டிருந்தது...

நாள் கணக்கில் இருந்த தவமது.. நேரங்கள் சாரங்களாய் யோகத்தில் ஊறிக் கொண்டிருந்த உற்சவமது..

சாதாரண நிகழ்வல்ல..

எல்லாம் துறந்த தூயவருக்கு கிடைக்கப் போகிற வாழ்வின் விடை.

அவரின் ஒரே கேள்விக்கு நெருங்கி வருகிற ஒரே விடை.

கிணறு வெட்டப் போய் கடலே ஊற்றெடுத்து பெருகுவதான பேராச்சர்ய பொழுதுகள்.

15 ஆகஸ்ட் 1926 அன்று எழுந்த தீவிர தவம்
கண்களைத் திறக்கிறார் அரவிந்தர்..


அப்போது நாள் 24 நவம்பர் 1926 (அதாவது பகவான் சத்திய சாயி பிறந்த அடுத்த நாளாகும்)

கிருஷ்ணரின் அதி மானஸ பேருணர்வு பௌதிக உடம்பில் இறங்கிவிட்டது என்கிறார்...

The Descent of Krishna into the Physical
இது மாபெரும் மகான் அரவிந்தரின் சத்யப் பிரமாணம்...

இதை தனது புத்தகமான
Sri Aurobindo on Himself and Mother
(Page no: 208) (1953 edition)
அதிகாரப் பூர்வமாக அச்சேற்றுகிறார்...


ஏதோ திரைப்படம் பார்த்து பதினைந்து நிமிடத்தில் வண்டி எடுத்து கிளம்பி வருவதல்ல யோக தரிசனம்...

அதில் கரைந்து காணாமல் போனால்.. நேரம் நின்றுவிடும் கடிகாரம் மட்டும் வீணாய்ச் சுற்றும்..

உள்ளே ஆழ்ந்து போகப் போக கால ஓட்டமே இருப்பதில்லை ..

அந்த அனுபவம் விட்டு வெளியே வர அவருக்கு ஒரு நாள் முழுதும் தேவைப்பட்டிருக்கிறது.

அது மாபெரும் கொடுப்பினை..


அவதாரம் நிகழ்கையில் அதை யோக தவத்தால் உணரும் பாக்கியம் சாதாரண செயலில்லை...

வாசிப்பவர்கள் யோசிக்கலாம் அவர் கிருஷ்ணர் பௌதிக உடம்பில் இறங்கிவிட்டார் என்று தான் குறிப்பிடுகிறார் ஏன் சாயி எனப் பெயர் குறிப்பிடவில்லை என..

வேறெந்த ஜனனமும் அப்போதின்றி
23 நவம்பர் 1926ல் சுவாமி அவதரித்ததால் மட்டுமல்ல அரவிந்தரோடு இந்த பிரகடனம் ஒத்துப் போவது...

இதை முன்பே  வெங்காவதூதர் பல ஆண்டுகளுக்கு முன் சுவாமியின் தாத்தா கொண்டம ராஜுவுக்கு அறிவித்ததும் ஒன்று...

வெங்குசா எனும் அவதூதரே வெங்காவதூதர்.. சுவாமியை (ஷிர்டி சுவாமி) முற்பிறவியில் வளர்த்த அவதூத மகான்.

கடவுள் எந்த பெயரில் தன்னை அறிவித்துக் கொள்வார் என்பது கடவுள் மட்டுமே தீர்மானிக்கக் கூடியது..

பரபிரம்ம ரகசியம் அறிந்தாலும் கூட பரபிரம்மத்தின் அனுமதி இன்றி அதை அறிவிக்க மகான்களுக்கு கூட உரிமை இல்லை...

இந்த நாளை அரவிந்த மகான் Victory Day யாக கொண்டாடும் படி அறிவித்தார்...

அந்த அரிய பேராற்றலை.. பேரொளியை அரவிந்தரோடு சேர்த்து அவரின் 24 சீடர்களும் அனுபவித்தார்கள்.


அன்றிலிருந்து தன் தரிசனம் நிறுத்தி.. ஸ்ரீ அன்னையிடம் ஆசிரமப் பணிகளை ஒப்படைத்து தனி அறையில் ஏகானுபூதியில் அவர் ஏற்கனவே அனுபவித்த அந்த பிரபஞ்சப் பேராற்றலோடே ஒன்றிவிட தவத்தில் மூழ்கினார்.சாயுஜ்யமாய் சாயி'ஜ்யம் அடைய அமர்கிறார்.

தவம் என்பது உடல் மறத்தல்.. மனம் கடத்தல்.. ஆன்மா எழுதல்.. அதிர்வலை பெருகல்.. உடலை ஆன்மா பிரிதல்.. பரவெளி வெளிச்சம் பருகல் ... உலகங்கள் சுற்றல்...ஆன்மா உடலை பேருந்தாய் ஏறியும் இறங்கியும் என நொடிக்கு நொடி பரவசமானது...

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக