தலைப்பு

வியாழன், 25 மார்ச், 2021

🇱🇰 ஸ்ரீ சத்ய சாயிபாபா கடவுளே! - மேதகு ஜெ.ஆர். ஜெயவர்த்தனா, முன்னாள் அதிபர், இலங்கை


J.R ஜயவர்தனா (1906 -1996), இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியும்.. நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது அதிபரும் ஆவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் ஜனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

சாய்ராம் நீங்கள் கீழ்க்காணும் இந்தப் பதிவு இலங்கையின் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையின் ஆசிரியரான திரு சச்சிந்தாவுக்கு, ஜெ. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் செப்டம்பர் 1992ல் கொடுத்த பத்திரிக்கைப் பேட்டியிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்குப் பின், நான் பத்திரிக்கைத் துறைக்கு திரும்பியிருந்தேன். செப்டம்பர் 1992ல், 88 வயதான, முன்னாள் அதிபர் ஜெ.ஆர். ஜெயவர்த்தனாவைப் பேட்டி எடுத்தேன். பேட்டிக்குப் பிறகு நாங்கள் இருவரும், தேநீர் அருந்தியபடி இந்தியா, இலங்கை மற்றும் கடந்த ஆண்டுகளின் அரசியல் பிரச்சனைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அதிபர் ஜெயவர்த்தனா திறந்த கழுத்துச் சட்டை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் ஒரு கருப்புக் கயிற்றில் பதக்கம் (டாலர்) ஒன்றை அணிந்திருந்தார். நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அது என்ன என்று கேட்டேன். அவரோ உடனே அதை அவர் கழுத்திலிருந்து கழற்றி, பதக்கத்திலிருந்த சத்ய சாயிபாபாவின் படத்தைக் காண்பித்து, “பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா எனக்குக் கொடுத்தார்” என்றார். ஒருவேளை, என்னுடைய முகத்தில் ஏற்பட்ட நம்பிக்கையற்ற மாற்றத்தை கவனித்திருப்பார் போல. உடனே அவர், “சாயிபாபாவிற்கு ஆறாவது அறிவாற்றல் அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு இருந்திருக்கும் என நம்புகிறேன். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்கிறேன். நான் புட்டபர்த்திக்கு அவரைச் சந்திக்கச் சென்றபோது, மனைவி எலினாவும், தம்பி ஹாரியும் என்னுடன் வந்திருந்தனர். சாயிபாபாவிடமிருந்து விடை பெறும் போது, ஹாரி, பாபாவைப் பார்த்து, “நாங்கள் நாளை காலை தங்களைச் சந்திப்போம்” என்றார். ஆசிரமத்திற்குக் காலையில் தரிசனம் பெறச் செல்லும் திட்டம் எங்களுக்கு இருந்தது. சத்ய சாயிபாபா மென்மையாகப் புன்னகைத்தபடி, “இல்லை, உங்களால் முடியாது” என்றார். அந்த நேரத்தில் அவர் கூறியதன் பொருளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மைப் பொருளை, அன்றிரவுதான் உணர்ந்தேன். ஹாரிக்குப் பெரும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனான்” இவ்வாறு கூறிய ஜெயவர்த்தனா, அன்று முதலே சாயிபாபா தனக்களித்த அந்தப் பதக்கத்தைக் கழுத்தில் அணிந்து வருவதாவும் கூறினார்.


💥 பாபா கடவுளே! -மேதகு ஜெயவர்த்தனா கூறுகிறார்:

“இலங்கையின் அதிபர் என்ற முறையில், நான் பலமுறை பாபாவை அரசு மற்றும் மக்களின் விருந்தினராக, இலங்கைக்கு வரும்படி அழைப்பு விடுத்தேன். வர விரும்பியும், அவருக்கு வருவதற்குச் சந்தர்ப்பம் இல்லாமல் போனது. இருப்பினும் நான் 1990 ஏப்ரலில் பெங்களூர் சென்றபோது, வியாழன் மற்றும் சனிக்கிழமை (19 & 21ம் தேதிகள்) ஆகிய நாட்களில் இரண்டு முறை அவரின் அருளுரையைக் கேட்டிருக்கிறேன்.

அப்போது அவர் என்னுடனும், இலங்கையிலிருந்து என்னுடன் வந்த மற்றவர்களுடனும் மிகச்சரளமாகப் பேசிக்கொண்டு இருந்தார்.


அவருடைய ஆலோசனைகள் எப்போதும் மதப் பெரியோரான இந்து அவதாரங்கள், புத்தர், இயேசு கிறிஸ்து மற்றும் தீர்க்கதரிசி முகமது ஆகியோரின் போதனைகளின் அடிப்படையிலேயே இருக்கும்.

எங்களின் பொதுவான மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கு, அவர் மிக இயல்பாக, அவர் போதிக்கும் புனிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் பதிலளித்தார். அவரது சன்னிதி மற்றும் ஆலோசனைகளால், நாங்கள் அவர்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டோம். 

பாபாவின் அருளால், அசாதாரண நோய் நிவாரணம் பெற்றவர்கள் நேரடியாகவும், அல்லது அவர்களின் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்ட சில அனுபவங்களை நினைவு கூர்கிறேன்.

இப்போது நான் குறிப்பிடுவதை, மிகப் புகழ்பெற்ற, அதி திறமை வாய்ந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் என்னிடம் நேரில் கூறினார். ஒரு நோயாளிக்கு, அவரது குடலின் சிறுபகுதியை வெட்டி எடுக்க அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அது புற்றுநோயாகவும் இருக்கலாம். அவர் அந்த அறுவை சிகிச்சை நிபுணரைச் சென்று பார்த்தார். ஆனால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமலே சென்றுவிட்டார்.

பத்து ஆண்டுகள் கழித்து அதே நோயாளி, அதே மருத்துவரிடம் ஆலோசனை பெறச் சென்றிருந்தார். அவரை அந்த மருத்துவரால் அடையாளம் காண முடியவில்லை. இம்முறை அவருக்கு விந்துச் சுரப்பி பிரச்சனைக்காக உடனடி அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

அவர்கள் அந்த அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது, அந்த நோயாளி, “டாக்டர்! என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டார். டாக்டர் இல்லை என்றார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு குடல் அறுவை சிகிச்சைக்கென்று உங்களிடம் வந்து, அறுவை சிகிச்சை அறைவரை போய், செய்துகொள்ளாமல் திரும்பச் சென்றுவிட்டேன்” என்று நினைவு படுத்தினார்.


அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் எப்படி இந்நாள் வரை உயிருடன் இருக்கிறீர்கள் என்று மருத்துவர் மிக ஆச்சரியமடைந்தார். அதற்கு நோயாளி சொன்னார், “டாக்டர்! அன்று உங்களைப் பார்த்த பின்பு, நேரே பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைத் தனியாகச் சந்தித்து மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன். அவரளித்த அதி அற்புதமான சிகிச்சையினால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமலே வாழ முடிந்தது. மேலும் பாபா, சரியாக அன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் விந்து சுரப்பி பிரச்சனைக்காக உனக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டி நேரிடும். அதை தாமதியாமல் உடனே மருத்துவரை அணுகிச் செய்து கொள் என்று கூறினார். அதனால்தான் இப்போது வந்துள்ளேன்” என்றார்.

நான் பெங்களூருக்கு சுவாமியைப் பார்க்கச் சென்ற போது, இந்துவோ அல்லது பாபாவின் பக்தரோ அல்லாத அந்த மருத்துவரே இதை என்னிடம் நேரில் கூறினார்.

நான் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவை ஒரு முழுமையான அவதாரமாக ஏற்றுக்கொள்கிறேன். அவர் இவ்வுலகில் இருந்து, அவருடைய ஞானமிக்க வார்த்தைகளால் அறிவுறுத்தி, அதன் வழி நடப்பவர்களை அவர் நேசிக்கிறார்.

சுவாமி சொல்கிறார், “மனித உருவில் உள்ள தெய்வமானது, மனிதனைப் பற்றி மனிதனுக்குக் கற்பிக்கும் போதுதான், அந்த தெய்வத் தன்மையை உணர்ந்து, அதை நேசிக்கும் இயல்பு ஏற்படுகிறது”.

ஆதாரம்: இலங்கை - டெய்லி நியூஸ் நாளிதழ் 2005/06/07/

மேற்கண்ட பத்திரிகை செய்தி போக திரு. J.R ஜெயவர்த்தனா அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை விசாரிக்க இலங்கை சத்தியசாயி அமைப்பின் தலைவர் திரு. உதயநாயகன் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் அளித்த செய்தி பின்வருமாறு.


திரு ஜெயவர்த்தனா அவர்கள் சத்யசாய் பக்தராக வருவதற்கு முன்னரே அவருடைய துணைவியார் சத்ய சாய்பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்திருக்கிறார். மேலும் அவரின் துணைவியார் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 திரு ஜெயவர்த்தனா அவர்கள் ஆரம்பத்தில் பாபா மீது நம்பிக்கை இல்லாமல்தான் இருந்திருக்கின்றார். பின்னர் அவர்களுடைய உறவினர் கேன்சர் நோய் காரணமாக வாழ்வின் விளிம்பில் இருந்திருக்கின்றார்.
மருத்துவர் கை விரித்த ஏலாத சூழ்நிலையில் புட்டபர்த்தி சென்று சுவாமியை தரிசனம் செய்தபிறகு குணமாகிவிட்டதன் காரணமாக இவருக்கு பாபா மேல் ஆழமான பக்தி ஏற்படுகிறது. பல தரிசனங்கள் நேர்கிறது. ஜனாதிபதியாக இருந்த இவரின் மந்திரி சபையில் பத்து மந்திரிகளும் சுவாமி பக்தர்களாகவே இருந்திருக்கின்றனர். ஷிர்டி சாயியை விடவும் சத்யசாயிக்கு இலங்கையில் பக்தர்கள் அதிகம். இன்னமும் சுவாமியின் லீலைகளை இலங்கை பக்தர்கள் அனுபவித்து வருகின்றனர். J.R ஜெயவர்த்தனா பல முறை இலங்கைக்கு அழைப்பு விடுத்து சுவாமி விஜயம் புரிவதாக சொல்லியும் அது நிகழவில்லை.. ஆனாலும் இன்றளவிலும் சுவாமியின் அவதார விஜயத்திற்காக இலங்கை மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். வாரிசு இல்லாத ஜெயவர்த்தனே கட்சியை அவரது மருமகனான திரு. ரணில் விக்ரமசிங்க தான் இப்போது நடத்திவருகிறார். 

திரு. ரணில் விக்ரமசிங்க

இவர் நான்கு(1993 to 1994, 2001 to 2004, 2015 to 2018 and 2018 to 2019) முறை இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்திருக்கின்றனர். அவரும் சத்யசாயி பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக