தலைப்பு

ஞாயிறு, 21 மார்ச், 2021

புகைப்பதற்கு மூன்று சிகரெட்டுகள்‌ வழங்கிய பாபா!


சீரடி பாபா காலத்தில் வாழ்ந்த சாந்த்பாடீல் அவர்களின் மறுஜென்மம் மற்றும் ஷிர்டி சாயியே சத்ய சாயி என்னும் சத்திய பேரனுபவம் தொடர்பான வாழ்க்கைப் பதிவு.. 

 எவருக்கு எவ்வழியோ அவருக்கு அவ்வழியை அனுகிரகித்து தன்னிடம் ஆற்றுப்படுத்தும் ஆண்டவனே சத்ய சாயி என்பதற்கான ஆச்சர்யமான பேரற்புத பதிவு இதோ.. 

இந்த அற்புதமான நிகழ்வு, சத்யசாயி (ஹையர்) உயர்கல்வி நிறுவனத்தில், பகவான் ஆர்வமாக கவனிக்க, பிரின்ஸ்பால் ஸ்ரீ சஞ்சய் ஸாஹ்னி அவர்களால் விவரிக்கப்பட்டது! இதற்கு முன் இதை முதலில் விவரித்தவர் ஒடிசாவில் அட்வகேட்டாக இருந்த ப்ருத்விராஜ் அவர்கள்! இப்பொழுது ஆன்மிகத்திலும் சேவையிலும் உயர்ந்து விளங்குகிறார்.


சௌத் இண்டியன் கேண்டினில்,1984ல் ப்ருத்விராஜ் வழக்கம்போல் சேவாதள ஒருங்கிணைப்பாளராக சேவை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது வெள்ளை யூனிபார்ம் அணிந்த ஒருவர் இவரிடம், "என்னை நினைவிருக்கிறதா"? எனக்கு தேநீர் வாங்கிக் கொடுத்தீர்களே? என வினவ, ப்ருத்விராஜ்க்கு ஞாபகம் வரவில்லை! அம்மனிதர் "நான் தான் முகமது"! ஞாபகம் வருகிறதா? மூன்று சிகரெட்டுகள் "என வினவ, உடனே 1984ல் நடந்த சம்பவம் ப்ருத்விக்கு நினைவில் தோன்றியது!

1984ல் நடந்தவை.....
சௌத் இந்தியன் கேண்டினில் சேவா முடித்துவிட்டு நண்பகல் உணவிற்குப் பிறகு வெளியே வந்த ப்ருத்விராஜ், பக்கத்தில் உள்ள கோபுரம் கதவருகே சத்தம் கேட்பதை கண்டு விரைந்து சென்றார். ஒருங்கிணைப்பாளர் என்பதால் விவரம் அறிய முற்பட்டார். ஒருவர் கையில் சிகரெட் ஒன்றைப் பற்றி, புகை பிடித்துக் கொண்டிருந்தார். ஒரு வாலண்டியர் இவரை பிடித்து வெளியே தள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏனெனில் ப்ரசாந்தி வளாகத்தினுள் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லை. ப்ருத்விராஜ் அவரிடம் மெதுவாக அன்புடன் பேசி கேட்டுக்கு வெளியே மெல்ல அழைத்து வந்தார்.


அந்த மனிதர் கூறினார்," இந்த இடத்தின் தலைவர் சுருட்டை முடியுடன் இருப்பார். எனக்கு தெரியும். அவர் தான் இந்த சிகரெட்டை எனக்கு கொடுத்தார். ஏன் நீங்களெல்லாம் இதை நான் புகைப்பதை தடுக்கிறீர்கள்"? என்றார்.
இவரிடம் ஏதோ ஒரு சம்பவம் கதையாக நடந்துள்ளது என்பதை உணர்ந்து விட்ட ப்ருத்விராஜ், அவரை "வாருங்கள் டீ சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்"எனக் கூறி குமார விலாஸ் ஹோட்டலுக்கு இட்டுச் சென்றார்.

பகவான் மூன்று சிகரெட்டுகள் கொடுத்தார் என்பதை ப்ருத்விராஜால் நம்பமுடியவில்லை! இதன் பின்னே உள்ள சம்பவங்கள் மிகவும் அற்புதமாக இருக்கப்போகின்றன, பார்ப்போம் என்று நினைத்தார்.

ப்ருத்விராஜ் :-  நீங்கள் உங்கள் கதையை ஆரம்பிக்குமுன் ஒன்று சொல்கிறேன். ஆசிரமத்திற்குள் புகைபிடிக்கக் கூடாது என்பது பாபாவின் உத்தரவு! உங்களுக்கு சிகரெட் கொடுத்திருந்தாலும் ஆசிரமத்தினுள் பிடிக்க சொல்லவில்லையே! நீங்கள் வெளியே வந்து புகைத்திருக்க வேண்டும்.

முகமது :- நீங்கள் சொல்வது சரி சார்! எனக்குத் தோன்றவில்லை.

ப்ருத்விராஜ்:- எப்படியோ விஷயம் முடிந்தது! உங்கள் கதையை சொல்லுங்கள்.

(முகமது கூற ஆரம்பித்தார்) அவர் கோழிக்கோட்டை சேர்ந்தவர்.
(கேரளா calicut) ஒருநாள் மூன்று நபர்கள் இவரை அணுகி தங்களது ஒரு க்ரேட்(crate)/ பெட்டியை முகமதின் படகில் ஏற்றிச் சென்று பம்பாயில் இறக்க சொன்னார்கள். முகமதிடம் மோட்டார் போட் இல்லை. துடுப்பு போட்டவாறே மும்பை வரை ஓட்டி செல்ல வேண்டும். கடினமான வேலை. ஆனால் அவர்கள் உடனே 50 ஆயிரம் ரூபாயும், பாம்பே சென்றடைந்ததும் அங்கு உள்ள இவர்களது ஆட்கள் ரூ.50,000 தருவார்கள் என்றனர். தொகை அதிகமாக இருந்ததால் முகமது ஒப்புக்கொண்டார்.படகைத் தயார் செய்து புறப்படுமுன் அல்லாவைப் பிரார்த்தித்தார். இரண்டு நாட்கள் எந்த பிரச்சினையும் இன்றி பயணித்து கோவா கடற்கரையை அடைந்தார். 


பிரச்னை ஆரம்பித்தது.! கடற்கரை மேலாளர் படகுகளை பிடித்து சோதனைக்காக வைத்துக்கொண்டிருந்தார். அதிகாரி இவரை நெருங்க சிறிது நேரமே இருந்தது. அச்சமயம் பெரிய சத்தத்துடன் ஒரு பெரிய மோட்டார் போட் இவரை நெருங்கியது.  படகின் நடுப்பகுதியில் ஒரு உயரமான பக்கிரி வெள்ளை முடியுடன் தாடியுடன் இவரை நெருங்கி வந்தார். அவர் முகம்மதிடம் பேச ஆரம்பித்தார். உன் படகில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும், நீ மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாய். என்னைத்தவிர வேறு அடைக்கலம் இல்லை என்றார். அவரது ஆதரவான குரல் அவரை நம்பலாம் என்று மனதிற்குப் பட்டது. "விவரமாக பேச நேரமில்லை. பம்பாயில் உன்னை சந்திப்பதாக இருந்தவர்கள் இப்போது ஜெயிலில் உள்ளார்கள். நீ சுமந்து செல்ல நினைத்த பெட்டியில் குழந்தைகளை கொல்லக்கூடிய/ பல குடும்பங்களை கெடுக்கும் போதைப்பொருள் இருக்கிறது. நீ என் படகில் ஏறு. நான் உன்னுடையதை எடுத்துக்கொள்கிறேன். இந்த மாதிரி வேலைகளை செய்வதால் உனக்கு குழந்தைகள் இருக்காது! என்னை நம்பு! இது ஒரு திருப்புமுனையாக உன் வாழ்வில் இருக்கட்டும்! என்று கூறி வேகமாக இடம் மாறிக் கொண்டனர். அதிகாரிகளும் சூழ்ந்துகொண்டனர். சில அதிகாரிகள் படகை சுற்றிக்கொண்டனர். பக்கிரி உடனே தனது ஜோல்னாப் பையிலிருந்து, மாங்காயையும் கத்தியையும் எடுத்து, துண்டுகளாக வெட்டினார். தென்னம் ஓலையில் சுற்றப்பட்டிருந்த வெள்ளை பவுடரை எடுத்து மாங்காய்த் துண்டுகளில் தடவி அதிகாரிகளிடம் நீட்டினார். அவர்கள் சாப்பிட்டு விட்டு அந்த பவுடர் வெறும் உப்புத்தூள் என அறிந்து குழம்பிப் போயினர். அவர்கள் சந்தேகத்துடன் ஒவ்வொரு பொட்டலத்தையும் சோதித்தும் கூட, உப்பு தான் இருந்தது. அதிகாரிகளே குழம்பி தடுமாறினர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த முகமதும் குழப்பம் அடைந்தார். முகமது நினைத்தார், இதுதான் ஒரு சக்தியை உபயோகித்து தனக்கு நல்ல ஒரு வியாபார கூட்டாளியை பிடித்து பணம் பண்ணுவார் என்று நினைத்தார். ஆனால் அந்த பக்கிரி செய்ய நினைத்தது இதயத்திற்கும் இதயத்திற்குமான வியாபாரத் தொடர்பு!!அந்த போதைப் பொருட்களை எடுத்து கடலில் வீசி விட்டார்.எல்லாமே அன்பை பொருத்ததுதான்!! நீ இன்னும் தயாராகவில்லை.இப்பொழுது வீட்டுக்கு போ...பாம்பேயில் யாரும் உனக்காக காத்திருக்கவில்லை.! என் படகை எடுத்துக்கொண்டு போய் மீன் பிடித்து உன் பிழைப்பை நடத்து!இது போல் கடத்தல் வேலைகளை செய்யாதே!


நன்றிப் பெருக்கில் முகமது திக்குமுக்காடிப் போனார். இப்போது அவரிடம் ஒரு மோட்டார் போட்டும் 50,000 ரூபாய் பணமும் இருந்தது. முகமது பக்கீரிடம் அவரது விலாசம் தரும்படி கேட்டார். பக்கிரி கொடுத்த விசிட்டிங் கார்டில் பாம்பேயில் ஒரு காங்கிரஸ் கட்டடத்தின் பெயர் இருந்தது. (அது ஸ்ரீ சாயி ராம் மந்திர் என்னும் பாபா கோவிலை குறிப்பதாக இருந்தது) ஒரு கிறிஸ்தவ பெண்மணி 50,000 ரூபாய்க்கு தனது வீட்டை சாயிமந்திர்க்கு விற்றிருந்தாள்.ரூ 20000/ செலவழித்து அந்த கட்டிடத்தை கோவிலாக ஆக்கி இருந்தனர். அக்கோயில் "குடி பட்வா" தினத்தன்று அப்போது இருந்த மகாராஷ்டிரா முதன் மந்திரியால், 1960ல் திறக்கப்பட்டது. பாபாவின் அமர்ந்த நிலையுடனான சிலை ஸ்ரீ பாலாஜி வசந்த் டலீம் அவர்களால் செதுக்கப்பட்டது. பிறகு அவர் ஜிஃபியில் சென்றுவிட்டார். 
யார் வரிசையில் முந்துவார் என்று முகமதுவால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பக்கீரின் உபதேசத்தை கடைப்பிடித்து, முகமது நல்ல வாழ்க்கை வாழ ஆரம்பித்து, வளமாக இருந்தார். ஆனால் முன்பை விட அதிகமாக புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் மனதில் ஏதோ ஒரு அதிருப்திகரமாகவே இருந்தது. உடனே ஃபக்கீரை பார்க்கவேண்டும் போல் இருந்தது. பாம்பே சென்று அந்த விலாசத்தை கண்டுபிடித்தார்.இவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் அது ஒரு சீரடி பாபா கோயிலாக இருந்தது.(ஏற்கனவே முன் பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளது) 


கோவாவில் தான் சந்தித்த பக்கிரி தான் இவர் என்று உணர்ந்து அதிர்ச்சி அடைந்துவிட்டார். 1918-லேயே சீரடி பாபா இறந்துவிட்டார் என்று கேட்டதும் அதைவிட ஆச்சரியமடைந்தார். ஆனந்தத்தில் விம்மி அழுதார். 1984ல் தான் சந்தித்த பக்கிரி 1918ல் இறந்துவிட்டார் எப்படி உயிருடன் வந்தார்? ஒரு அன்பான கனவான், சீரடி பாபாவின் அற்புத லீலைகளை விவரித்தார். சீரடி பாபா சிலையின் முன்பு நின்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்தார். பிறகு கேரளா சென்றார். அவர் மனது முழுவதும் சீரடி பாபாவே நிறைந்திருந்தார். 

பிறகு இன்னுமோர் அதிசயம் நடந்தது. ஓணம் பண்டிகைக்கு இரு வாரங்கள் முன்பு ஒரு ஊர்வலம் பல்லக்கோடு சென்றது. பல்லக்கில் இரு ஃபோட்டோக்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஃபோட்டோவில் பக்கிரி இருந்தார். மற்றுமொரு போட்டோவில் இருந்தவர் இவருக்கு தெரியாதவராக இருந்தார். 


சில பக்தர்களை விசாரித்ததில் அந்த இன்னொரு போட்டோவில் இருப்பவர் சத்திய சாயிபாபா என்றும், மக்கள் அவரை "சுவாமி" என்று அழைப்பதையும் கூறினர். இரு பாபாக்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் கூறினர். அவர்கள் புட்டபர்த்தியில் இருக்கும் சத்யசாயியை பார்க்க பஸ்ஸில் போகப் போவதாக கேள்விப்பட்டு, தானும் இணைந்து கொண்டார். புட்டபர்த்தியை சென்று அடைந்துவிட்டார். சுவாமி தர்சன் கொடுத்துக் கொண்டே வந்தபோது வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். தன்னை நேர்காணலுக்கு தேர்ந்தெடுத்து அழைத்ததும் வியப்பின் உச்சிக்கே போய்விட்டார். தன் பாதத்தருகே அமர வைத்துக் கொண்டதில் வியப்பு தாங்கவில்லை!

சுவாமி முகமதின் கண்களை பார்த்து, "நீ அதிகமாக புகை பிடிக்கிறாய். அதனால் தான் குழந்தை பிறக்க வில்லை" என்றார். "இதற்கு முன் இதே வார்த்தைகளை கேட்டுள்ளோம்! ஆனால் யார் மூலம் என்று தெரியவில்லை" என நினைத்தார். அப்பொழுது 'கடத்தல்' காரணமாக குழந்தைகள் பிறக்கவில்லை என்றும், இப்பொழுது புகை பிடித்தல் காரணமாக என்றும் கூறப்படுகிறது"! இவ்வாறு நினைவுகள் ஓடின."நீ புகைபிடித்தலை விட்டுவிடு, உனக்கு குழந்தைகள் பிறக்கும் நான் உதவுகிறேன்" என்று கூறிய சுவாமி ஆழமாக பார்த்து, "என்னை உனக்கு நினைவிருக்கிறதா?" என்றார். ஒரு புன்சிரிப்புடன் தனது வலக்கரத்தை முகமதின் தலை மீது வைத்தார். அடுத்து நடந்ததுதான் அற்புதம்...!தான் இன்னொருவர் உடலில் மாறி இருப்பது போல் உணர்ந்தார். 

திடீரென "சாந்த்பாடீல்! அன்பான சாந்த்! நீ உன் பெண்குதிரையை தொலைத்துவிட்டு பதட்டத்துடன் இருக்கிறாயா?"


ஆ..! சின்ன பக்கிரி அங்கே அமர்ந்திருந்தார்.
"ஆமாம் ஐயா !   எனது பெண் குதிரை உலாவச் சென்று எங்கோ தொலைந்து விட்டது" என்று கூறிவிட்டு, இந்தக் பக்கிரியை எங்கோ பார்த்திருக்கிறோம், ஆனால் வயதானவராக இருந்தவர் எப்படி 50 வயது இளையவராக தெரிகிறார்; கறுப்பு தாடியுடன்? என்று வியந்தார். இதே பக்கிரிதான் தன்னை கோவா கடற்கரையில் காப்பாற்றியவர். கொஞ்சம் குழம்பி விட்டார் முகமது! நினைவுகளில் மூழ்கினார். அந்தப் பக்கிரி, "நுல்லா யாடம் அருகில் உனது குதிரை பத்திரமாக மேய்ந்து கொண்டிருக்கிறது. உனக்காக காத்து கொண்டு இருக்கிறது" என்றார்.

சீரடி பாபா - சாந்த்பாடீல் சந்திப்பு - திரைப்படத்திலிருந்து கத்தரிக்கப்பட்ட காட்சி

சாந்த்பாடீல் தனது குதிரையை அழைத்துக் கொண்டுவந்து நன்றி சொல்ல வந்தார். இந்த பக்கிரி சாதாரணமானவர் அல்ல..! ஒரு பெரிய ஞானியாக இருக்க வேண்டும் என நினைத்தார். இதனிடையில் பக்கிரி புகைபிடிக்க தயார் செய்ய முற்பட்டார். அதற்கு நெருப்பு, துணியை ஈரமாக்க தண்ணீர் இரண்டும் தேவைப்பட்டது. பக்கிரி தனது சட்கா எனும் குச்சியை ஓங்கி பூமியில் அடிக்க, நெருப்பு வந்தது. பைப் தயார்!மீண்டும் தரையில் அடிக்க, நீர் வந்தது.அதை வைத்து துணியை ஈரமாக்கினார்.பிறகு சில்லிம் என்னும் அந்த புகைக்குழாயை தான் புகைத்து விட்டு, சந்து பாடீலிடமும் கொடுத்தார். சந்த் பாடீல் ஆச்சரியமடைந்து, பக்கிரியையும் சீரடியில் கல்யாண விழாவிற்கு தான் அழைத்தார். சாந்த் பாடீலின் மனைவியின் சகோதரன் மகனுக்கு கல்யாணம். மனமகள் சீரடியை சேர்ந்தவள். அந்தப் பக்கிரியும் ஒட்டிக்கொண்டு சீரடி சென்றார். அங்கு சென்றடைந்ததும் மஹல் சாபதி என்பவர் பக்கிரியைப் பார்த்து "வாருங்கள் சாயி" என்று வரவேற்றார். அன்று முதல் பக்கிரி சாயிபாபாவானார்!


இவ்வளவு காட்சியும் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. சீரடி பாபா சாந்த்பாடீல் எல்லோரும் கூட மனதில் இருந்து மறைந்தனர். முகமது தற்பொழுது சத்ய சாயி பகவானின் நேர்காணல் அறையில் இருப்பதை உணர்ந்தார். ஒர் அலைபோல் பிரக்ஞை வந்தது. சீரடி பாபா தன் கூடவே இருந்து அடுத்தடுத்த கட்டங்களில் உதவி கொண்டே இருக்கிறார் என்பதை உணர்ந்தார். சென்ற ஜென்மத்தில் சீரடியில் இருந்து அருளியவரே இப்பொழுது இவ்வளவு கிட்டத்தில் சத்யசாயியாக இருப்பதை நினைத்து வியந்தார். சுவாமியின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார்."சுவாமி !என்னை விட்டு விடாதீர்கள்! நீங்கள்தான் என் அல்லா! என்னை உங்களுடனே வைத்திருங்கள்! என்னை பழைய வழியில் போக விட்டு விடாதீர்கள்" என்றார்.
இது மற்றுமொரு திருப்புமுனையாகிவிட்டது. சீரடி சாயி சாந்த் பாடீலுக்கு ஹுக்கா கொடுத்தது போல், சத்யசாயி தன் கையை அசைத்து மூன்று சிகரெட்டுகளை வரவழைத்தார்.சுவாமி அவரை வாழ்த்தி ஆசீர்வதித்து, உனக்கு  இந்த மூன்றையும் தருகிறேன். இந்த மூன்றை மட்டும் புகைத்து விட்டு விட்டால், எல்லாம் சரியாகி விடும். கர்மா, ஞானம் ,பக்தி என்ற மூன்று பரிசை நான் உனக்கு தருகிறேன். என்றார்.

தூப் கெடாவில் உள்ள சந்த் பாட்டீலின் சமாதி.

நேர்காணல் அறையை விட்டு வெளியே வந்து சிகரெட்டுகளை புகைக்க ஆரம்பித்தேன். மூன்றாவது சிகரெட்டை புகைக்கும் போது நீங்கள் வந்து விட்டீர்கள் என ப்ருத்விராஜிடம் சொன்னார்.
பிரமிப்படைந்த ப்ருத்விராஜ் டீக்கு பணம் கொடுத்துவிட்டு குமாரவிலாஸை விட்டு வெளியே வந்தார். (இப்பொழுது அந்த ஹோட்டல் இல்லை) இதுவரை தான் சந்தித்திராத, கேட்டிராத சம்பவங்கள். மிகவும் அற்புதம் நிறைந்தவையாக இருந்தன. 

 அதே முகமது தற்போது கேண்டீனில் ப்ருத்வியை பார்த்து நலம் விசாரிக்கிறார். முகமது முற்றிலும் வித்தியாசமான நபராக மாறி இருப்பது தெரிந்தது. ப்ருத்விராஜ் புன்னகைத்தார்.

முகமது! எப்படி இருக்கிறீர்கள்? உங்களை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி!
நான் இப்பொழுது நிரந்தர சேவாதள்! மற்றவர்கள் என்னை இழுத்து வெளியே தள்ள முற்பட்ட பொழுது, நீங்கள் தான் இனிமையாக புரிய வைத்தீர்கள்! என்னால் உங்களை மறக்க முடியாது, அன்று அருந்திய டீயையும் மறக்க முடியாது என்றார்.

ப்ருத்விராஜ் ஆச்சர்யத்திலிருந்து விடுபட்டு, புகைத்தலை குறைத்துக் கொண்டீர்களா?என்றார். அவரது பதில் ப்ருத்வியை ஒரேயடியாக ஆச்சரியப்பட வைத்தது."குறைப்பதா? நான் இப்பொழுது சிகரெட்டுக்கு அலர்ஜி!" என்றார். நீங்கள் பார்த்த பொழுது புகைத்ததுதான் கடைசி சிகரெட். அன்று முதல் அதைப் பார்த்தால் குமட்டுகிறது. இது சாயியின் லீலை.

தொடர் புகைபிடிப்பதை வழக்கமாக கொண்ட அவரா இப்படி மாறியது என ப்ருத்வி வியந்தார். சுவாமியின் கருணைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். நான்கு வருடங்கள் கடந்து விட்டீர்கள்! சரி இப்போது மகிழ்ச்சியான தந்தையாக இருக்கிறீர்களா? என்றார்.

முகமது சிரித்த வண்ணம் சொன்னார், என்ன சொல்வது என்று தெரியவில்லை.. நான்கு வருடமாக வருடத்திற்கு ஒரு குழந்தை! இந்த தடவை சுவாமியை பார்த்தால், "போதும்" என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம்.

நடந்தவற்றையெல்லாம் கேட்டு, இன்னும் ப்ருத்விக்கு நம்ப முடியவில்லை. சுவாமி வருவது சத்தம் கேட்டது. முகமது தான் சேவாதள். அதனால் கடமையை செய்ய வேண்டும் என்று இடதுபுறமாக ஓடினார். சிறிது நேரத்தில் சுவாமி கேண்டீனுக்கு அழகாக வந்தார். ப்ருத்விக்கு எதிரில் வந்து நீ புகைக்க வேண்டுமா? பக்தி வேண்டுமா? அது அவனுக்கு மட்டும்தான் சுருக்குப் பாதை.. மற்றவர்களுக்கு கிடையாது! என்றார்.

சுவாமி தான் ஒவ்வொருவரின் அந்தரங்கத்திலும் வசிப்பவர் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் நடப்பதை அறிந்து, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையில் மனமாற்றம் நிகழ்த்துகிறார். மூன்று சிகரெட்டுகள் - என்ன வித்யாசமான, தனித்துவமான வழி!!!   

- Received from Aravind Balasubramanya 
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 மதம் கடந்த இறைவன் சத்ய சாயியே நம்மை மனம் கடந்த பரவெளியில் நிரப்பி ஆட்கொள்ளும் ஒரே பரம்பொருள் 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக