தலைப்பு

திங்கள், 22 மார்ச், 2021

ஆற்றில் மூழ்கி இறந்தவரை கரையில் மீட்டு உயிர்ப்பித்த இறைவன் பாபா!


சுவாமி பரிபூரண இறைவன். அவரின் பேரருள் வெளிப்பாடே.. தனது பக்தர்களை கணப்பொழுதில் காப்பாற்றுவதும்.. உதவி செய்வதும்... எந்த மனித ரூபத்திலும் சட்டென தோன்றி அதே ஆபத்து நேரத்தில் உயிர் மீட்பதும் என அவரின் காவலுக்கு தேச கால கட்டுப்பாடுகளும் இல்லை... நன்றி என்று தன் பக்தர்கள் சொல்லியே ஆக வேண்டும் என எந்தவித எதிர்பார்ப்பும் சுவாமிக்கு எப்போதும் இல்லை.. இப்பேர்ப்பட்ட இறைவன் எங்கேயும் இல்லை எனும் சத்தியத்தை உணர்த்தும் பதிவு இதோ...

இலங்கை திருகோணமலை மண்ணின் மைந்தன் எஸ்.டி சிவநாயகம் ஐயா அவர்கள் இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிக்கையாளர். தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிக்கைகளின் ஸ்தாபக ஆசிரியர். இன்றைய புகழ்பூத்த பல தமிழ் பத்திரிகையாளர்கள் அவர்தம் மாணவர்கள்.யானும் சிவநாயகம் ஐயாவின் நிழற்கீழ் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் பணிபுரிந்த வேளை எழுத்துத்துறை நுட்பங்களை, உத்திகளை பயின்றமையை பெறும்பேறாக நன்றியுடன் போற்றுகிறேன்.

சுவாமியுடன் திரு. சிவநாயகம் ஐயா

ஆரம்ப காலத்தில் சீர்திருத்தவாதியாக இருந்த அவர் பின்னர் உறுதிமிக்க சாயி பக்தனாக மாறியமை பகவான் அருளாலன்றோ! கொழும்பு ஸ்ரீ சத்ய சாய்பாபா நிலைய ஸ்தாபகத் தலைவர் சிவநாயகம் சாயி சேவையில் ஈடுபட்டவர். ஆசிரியர் துறையில் நீண்டகாலம் சேவையாற்றிய அவரது பாரியார் மங்களம் தனது கணவருடன் இணைந்து, கொழும்பு ஸ்ரீ சத்ய சாய்பாபா நிலைய மங்கையர் அமைப்பின் தலைவியாக பணி பல ஆற்றியவர்.

சிவநாயகம் ஐயா அவர்கள் தனக்கே உரிய பாணியில் படிப்போர் மயிர்க்கூச்செறியும் வண்ணம் கூறும் பகவான் சத்ய சாயிபாபாவின் அற்புதம் கேளிர்:-

அந்தச் சடலம் தரையில் கிடத்தப்பட்டிருந்தது. இரவு மூன்று மணி இருக்கும் எங்கும் அரை இருட்டு. வானில் பிறைச்சந்திரன் முகிலில் மறைந்து மங்கி இருந்தான். கூடச் சென்ற சாய் யாத்திரிகள் துடித்துப் போனார்கள். செய்வதறியாது வட்டமாக நின்று சாய்ராம்! சாய்ராம்! என்று ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்களோடு மட்டக்களப்பைச் சேர்ந்த டாக்டர் அமரசிங்கம் என்ற மருத்துவரும் யாத்திரிகர் ஆக வந்திருந்தார். அவர் ஓடிவந்து கூட்டத்தை பிரித்துக்கொண்டு சடலத்தின் நெஞ்சில் கை வைத்து பார்த்தார். பின் நாடி பிடித்து பார்த்தார். பக்கத்தில் நின்றவர் வைத்திருந்த டார்ச் லைட் அடித்து சடலத்தின் மூடியிருந்த கண்களை சற்று பிரித்து உள்ளே ஒளியைப் பாய்ச்சி பார்த்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டே நின்றேன். அவர் அண்ணாந்து பார்த்து பரிதாபமாக உதட்டை பிதுக்கினார். நான் திகைத்தேன் அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது அதற்கு முன்பாக நடந்ததைக் கேளுங்கள்:-

இது நடந்து இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டன 1966ஆம் ஆண்டில் நாங்கள் 102 பேர் யாத்திரிகர்களாக முதன்முறை சத்ய சாய்பாபாவிடம் சென்றோம். திருச்சியில் இரண்டு பஸ்களில் புறப்பட்ட நாம் பெங்களூர் சென்று ஒய்ட் ஃபீல்டில் பகவானை தரிசித்து திரும்புகையில் சென்னை வந்து, அங்கிருந்து சிதம்பரம் தரிசனத்திற்காக சென்று கொண்டிருந்தோம். காலை 5 மணிக்கு சிதம்பரம் கோயிலுக்குள் புகுந்து நடராஜ பெருமாளை தரிசிப்பது என்பது எங்கள் திட்டம்.


சிதம்பரம் நகரத்தை அடைந்து காலை கடனை முடித்து கொண்டு தரிசனத்துக்கு போவதற்கு வசதி இருக்காது என்ற காரணத்தினால் வழியிலேயே ஏற்ற இடத்தில் தாமதித்து காலை கடனை முடித்துக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்தோம். வழியில் ஒரு காட்டாறு ஓடிக்கொண்டு இருந்தது. அதன் மேலே உறுதியான இரும்பு பாலம் அமைந்திருந்தது. அதையொட்டி 2 பஸ்களையும் நிறுத்தி விட்டு, கீழே இறங்கி அனைவரும் கையில் டார்ச் லைட்டுகள் உடன் பற்றைகளை தேடிச் சென்றோம்.

எங்களோடு வந்தவர்களில் மகேசன் என்று ஒருவர், அவர் கையில் தூக்குச் சொம்பு ஒன்றையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் மொள்ளுவதற்காக ஆற்றங்கரையில் இறங்கினார். அங்கு சிமெண்ட் கட்டு இருந்தது. அதில் கால் வைத்தபடி குனிந்து தண்ணீர் எடுக்கையில் விழுந்து விட்டார். அந்த நேரம் நானும் என் மனைவியும் பாலத்தின் மேலே நின்று கொண்டிருந்தோம். என் கையில் பிரகாசமான மூன்று பற்றிடார்ச் இருந்தது. தண்ணீரில் ஏதோ விழும் சத்தம் பெரிதாக கேட்கவே டார்ச் அடித்து பார்த்தேன். ஒருவர் நீரில் மூழ்கியபடி, நீர் ஓட்டத்தினால் இழுத்துச் செல்லப்படுவதை கண்டோம். சடலம் போய்க்கொண்டே இருந்தது.

எல்லோரும் ஓடி வந்தார்கள். நாங்களும் வேகமாக கீழே இறங்கி சாய்ராம்! சாய்ராம்! என்று ஓலமிட்டோம். அவ்வளவுதான் எங்களால் செய்ய முடிந்தது. அந்த ஆற்றில் குதித்து மூழ்கியவரை காப்பாற்ற எங்கள் யாருக்குமே துணிவு ஏற்படவில்லை. அதற்கு காரணம் இரண்டு. யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதோடு தண்ணீரின் ஆழம் எவ்வளவு இருக்குமோ என்று தெரியாத நிலை.

இப்படியாக நாம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எங்கிருந்தோ ஒருவர் வந்தார். என் மனைவி நின்ற இடத்திலே கையில் கொண்டு வந்த பிரம்பு கூடையை வைத்தார். தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து போட்டார். திடீரென்று தண்ணீரில் பாய்ந்து வேகமாக நீந்திச் சென்று மகேசனை பிடித்துக் கொண்டுவந்து அலாக்காக தூக்கி தரையில் கிடத்தினார்.

அப்போதுதான் நானும் என் மனைவியும் அவரைப் பார்த்தோம். ஏதோ ஒரு குக்கிராமவாசி போன்று காணப்பட்டார். இடுப்பில் மட்டும் ஒரு வேட்டியை கொடுக்காகக் கட்டியிருந்தார். மேல் தேகம் திறந்தே இருந்தது. சட்டை எதுவும் இல்லை. அவர் யாருடனும் பேசவும் இல்லை. இந்த நேரத்தில்தான், நான் ஆரம்பத்தில் சொன்னபடி டாக்டர் அமரசிங்கம் ஓடி வந்து சடலத்தை பரிசோதனை செய்தார். மகேசன் இறந்துவிட்டார் என்றே முடிவாகி இருந்த நிலை.


அப்போது அந்த கிராமத்து பேர்வழி கீழே குனிந்து மகேசனுடைய கன்னத்தில் தட்டினார். என்ன ஆச்சரியம்! நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என கருதப்பட்ட மகேசன், கண்விழித்தார். தேகத்தை அசைத்தும்கொண்டார். நாங்கள் எல்லோரும் ஆனந்தம் அடைந்தோம். என்றாலும் எங்கள் கண்களின் முன்னால் ஓர் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உணரவில்லை.

மகேசனை கைகொடுத்து தூக்கிவிட்ட அந்த உயிர் காத்த மனிதருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லலாம் என்று தேடினால் அவரை காணவில்லை. எங்கோ மாயமாக மறைந்துவிட்டார். அப்போதுதான் எங்களுக்கு மயிர்க்கூச்செரிந்தது. நடந்தவற்றை நாங்கள் எண்ணிப்பார்தோம். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சுற்றுவட்டாரத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு குடிமனைகள் இருந்ததாகத் தெரியவில்லை. எங்கிருந்தும் ஒரு குப்பி விளக்கின் ஒளி கதிர் கூட காணப்படவில்லை .

அப்படியான பிரதேசத்தில் அந்த நேரத்தில் எந்த கிராமத்தான் அங்கு வந்து இருக்க முடியும்? அப்படி ஒருவன் வந்தாலும் என்ன நடந்தது என்பதை அவன் அறிந்திருக்க நியாயமில்லை. நடந்தவற்றையெல்லாம் முன்கூட்டியே அறிந்தவன் போல, முன்னேற்பாடு எதுவும் இன்றி வந்ததும் வராததமாக எப்படி தண்ணீரில் குதித்து செய்ய வேண்டியவற்றை செய்திருக்க முடியும்?

இந்தியாவில் எந்த ஒரு சிறிய காரியம் செய்தாலும் ஒரு கிராமத்தான் செய்த காரியத்தை தம்பட்டம் அடித்து அதற்கான கூலியை ஒன்றுக்கு நாளாக கறக்க த்தான் முயற்சி செய்வான். தண்ணீரில் குதித்து தக்க சமயத்தில் இந்த மனிதரை காப்பாற்றி இருக்கிறேன் எனக்கு நூறு ரூபாய் தாருங்கள் என்று அவன் பேரம் பேசாமலும், காசை வாங்காமலும், அந்த இடத்தை விட்டு போவானா?

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது அங்கு வந்து அந்த நேரத்தில் காப்பாற்றியவர் வேறு யாரும் அல்ல. சத்ய சாய் பகவான் தான் என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டனர். இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்ததை எங்கள் கண்களால் நிதர்சனம் கண்டது நானும் எனது மனைவியும் மட்டுமல்ல. எங்களோடு யாத்திரையில் வந்த 202 கண்களும் கூடவே கண்டன என்பது உண்மையாகும்.

1971ஆம் ஆண்டு சத்ய சாய்பாபாவின் 46வது பிறந்தநாள் கொண்டாட்டம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் காலஞ்சென்ற டாக்டர். நல்லைநாதன் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில் என்னை ஒரு சொற்பொழிவு ஆற்றுமாறு கேட்டிருந்தார்கள்.

நான் பேசும்போது, சிதம்பரத்தின் அருகே நடந்த சம்பவத்தை 'பாபாவின் அருளால் மாண்டவர் மீண்ட கதை' என்று சொன்னேன். அப்படி சொல்லிவிட்டு 'மகேசன் ஒரு சிறந்த சாயி பக்தர்' சாய்பாபாவின் பிறந்த நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார். இங்கே கூடியிருக்கும் இந்த பெருங்கூட்டத்தில் அவர் வந்து இருக்கவும் கூடும். அவர் வந்திருந்தால் தயவுசெய்து எழுந்து நிற்க்கும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன்' என்று சொன்னேன்.

உடனே மகேசன் கூட்டத்தின் பின் பகுதியில் கூடியிருந்த சாயி பக்தர்களின் நெரிசலுக்குள் இருந்து எழுந்து நின்று தமது முகத்தை சபையோருக்கு காட்டினார். சபையில் ஒரே கலகலப்பும், கைதட்டலும் ஏற்பட்டன. சத்ய சாயி பகவானின் மிகப் பெரிய அற்புதங்களில் ஒன்றை அனைவரும் அறிந்து இறும்பூதெய்தினர்.

கிறிஸ்துநாதர், இறந்தவரை உயிர் பெற்று எழச் செய்தார் என்று பைபிளிலும், இறந்தவர்களை திரும்பவும் பிறந்தெழசெய்தார் திருஞானசம்பந்தர் என்று தேவார வரலாற்றிலும், நாம் படிக்கிறோம் அல்லவா? மகான்கள் செய்வது ஒரு வரையறைக்கு உட்பட்டது.. ஒரு கால/தேச பரிமாணத்திற்கு உட்பட்டது.. ஆனால் இறைவன் புரிகின்ற லீலா விநோதங்கள் அண்ட சராசரங்கள் கடந்தது... அதற்கென ஒரு வரையறையும் / கட்டுப்பாடுகளும் இல்லை.. அத்தகைய அதிசயங்களை இந்த கலியுகத்திலே செய்யக் கூடியவராக, ஒரு அற்புத அவதார புருஷராக விளங்குகிறார் நமது இதயவாசி இறைவன் ஸ்ரீ சத்ய சாய்பாபா.

இது கேட்ட மாத்திரத்தே புட்டபர்த்தி யாத்திரை வந்த அடியார்கள் தம் தலைமேல் கைகூப்பி பகவான் பாபாவை மனதில் கூறுவர்:

 'என்னே! என்னே! எங்கள் சாய்பாபா அற்புதம்!'

ஆதாரம்: இலங்கை காலைக்ககதிர் நாளிதழ் - 31/12/2020 பக்கம் 13 || ஆக்கம் - வே. வரதசுந்தரம்

ஆக்கம் - வே. வரதசுந்தரம்

நன்றி: எஸ்.என். உதய நாயகன் ஸ்ரீலங்கா சத்யசாயி மத்திய நிலையம் கொழும்புகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக