சுவாமி சத்யசாயி இறைவன். அவரை கட்டுப்படுத்த எந்த உலக சக்தியாலும் இயலாது. நம் கற்பனைக்கும் கணிப்பிற்கும் அப்பாற்பட்டவர் கிருஷ்ணாவதாரமான நம் சுவாமி. பக்தருக்கு ஒன்றென்றால் ஓடோடி வருபவர். காலம் நேரம் என்றெல்லாம் சுவாமிக்கு ஒருபோதும் இல்லை என்பதை உணர்த்தும் உன்னதமான அனுபவப் பதிவு இதோ...
மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. ஷ்யாம்தாஸ் திருச்சியில் இருந்த சாயி மோகன் என்பவரின் மூலம் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு பக்தி கொண்டார்.
கேள்விப்பட்டே பக்தி கொள்பவர்கள் பக்தியின் உயர்நிலையில் வந்துவிட்டவர்கள். பார்த்து வருவது.. சந்தேகம் தீர்ந்து வருவது.. கோரிக்கை நிறைவேறியதும் வருவது.. இவ்வகை பக்தி கடைநிலை பக்தியே!! ஆனால் நீதிபதியோ தான் அளிக்கும் தீர்ப்பைப் போல் நேர்மையானவர்!!
அவர் முதல் முறையாக தனது துணைவியாருடன் புட்டப்பர்த்திக்கு நேரில் சென்று தரிசிக்க வந்தார். கஸ்தூரி அவர்கள் இருவருக்கும் தங்க இடவசதி செய்து கொடுத்தார். இரவு கழிவறைக்கு சென்ற நீதிபதி, தவறுதலாக விழுந்து விட்டார். கால் கட்டை விரலில் நன்கு அடிபட்டு வீங்க ஆரம்பித்து, கால் முழுவதுமே வீங்கிவிட்டது. பெருத்த வலியுடன் நொண்டி நொண்டி மெதுவாக படுக்கைக்கு வந்தார். இன்னும் சுவாமி தரிசனமே நிகழவில்லை அதற்குள் இந்த அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதே! நாம் என்ன தவறு செய்தோம் ! என்ன பிழை என குழம்பி வலியையும் சேர்த்து அனுபவித்தார். அப்படியே தம்பதி இருவரும் கவலையோடு இரவை கழித்தனர். ஓர் இரவு நீள் இரவாகிக் கொண்டு மெதுவாக கடிகார முள் அசைய அந்த முள்ளே அவரின் கால்களில் குத்துவதால் உணர்வு ஏற்பட்டது!
விடியற்காலை சுமார் 5.30க்கு யாரோ கதவைத் தட்டினர். யாரோ எவரோ என திடுக்கிட்டபடி அந்தப் பெண்மணி கதவைத் திறந்தார். சாட்சாத் சுவாமி நின்று கொண்டிருந்தார். இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்! வாய்மொழி பேச இயலாது கண்ணில் நீர் தேங்க உள்ளே வரவேற்றனர்! " என்ன! க்ஷ்யாம் தாஸ்! இரவு கீழே விழுந்து விட்டீர்களா? காலை காட்டுங்கள்" என்று கூறி கட்டைவிரலை இரண்டு முறை முன்னும் பின்னும் தடவினார்!
சுவாமியே தன் பக்தரின் காலை தொடுகிறாரே என்ற வியப்பு ஒருபுறம்.. தன்பெயர் பாபாவிற்கு எப்படி தெரிந்தது? என்ற ஆச்சர்யம் மறுபுறம்.. சுவாமியின் பெருங்கருணையில் திக்குமுக்காடினார். அனைத்தும் அறிந்த சர்வாந்தர்யாமி என்பதால் சுவாமியும் ஒரு தெய்வீகப் புன்னகையுடன் எனக்கு தெரியும் என்று கூறி, "விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது சரி செய்துவிட்டேன் சரியாகிவிடும்" என்று கூறி விபூதி வரவழைத்து கொடுத்து சென்றார். இருவரும் பாத நமஸ்காரம் செய்தனர்.
கால் வலி வீக்கம் எல்லாம் உடனே குணமாகி, மகிழ்ச்சியுடன் இரண்டு நாட்கள் தங்கி, தரிசனம் செய்து திருச்சி சென்றனர்.
சாயி மோகனிடம் தங்களுக்கு நடந்ததை கூறி தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதை பகிர்ந்து கொண்டனர்.
ஆதாரம் : Sri T.R SAI MOHAN Personal Narration
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்
🌻 சிலரது சந்தேக மன வீக்கத்தையும் சுவாமியே கருணை கூர்ந்து பேரருள் எனும் தனது தொடுகையால் குணமாக்கி... தான் ஒரு மகான் அல்ல.. தானே இந்தப் பிரபஞ்சத்து பரம்பொருள் என்பதை அனுபவிக்க வைக்கிறார். இறைவன் சத்ய சாயியே என்பது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல அனுபவம் சார்ந்தது.. அந்த பேரனுபவம் ஆன்ம பக்குவத்திற்கு ஏற்ப அந்தந்த கால கட்டத்தில் மனித ஆன்மாக்களை அனுபவிக்க வைத்து ஆனந்தப்படுத்துகிறார்!! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக