🐶 ரஷிய சைபீரியாவில், ஐரோப்பா கண்டத்தையும் ஆசியா கண்டத்தையும் பிரிக்கும் யூரல் மலைப்பகுதியை கைலாசமாக மாற்றிய பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் அற்புத லீலை!
டாக்டர். சுரேந்திர உபாத்யாயா, உலக நாடுகள் பலவற்றில், சத்ய சாயி நிறுவனங்களால் ஏற்பாடு செய்யும் இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு சேவை செய்பவர். சென்ற இடமெல்லாம் பகவானின் அற்புத லீலைகளை பலவற்றை அனுபவித்தவர்.
இங்கிலாந்தில் உள்ள தேசிய உடல் நலத்துறையில் கண் மருத்துவமாக பணியாற்றியவர் டாக்டர். சுரேந்திர உபாத்தியாயா, சுவாமியின் அத்யந்த பக்தர். பிரார்த்தனை, மற்றும் சேவை இவை இரண்டையும் தன்னுடைய இரு கண்களாக கருதுபவர். எனவே பாபா இவரை உலகிலுள்ள வளரும் நாடுகளில், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஸ்ரீ சத்யசாய் நிறுவனங்களின் சார்பாக நடைபெறும் இலவச மருத்துவ முகாம்களுக்கு பொறுப்பாளராக நியமித்தார்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த காலியா, மற்றும் சோபியா இருவரும் இரட்டைச் சகோதரிகள். காலியா இங்கிலாந்திலும், சோபியா ரஷ்யாவிலும் வசித்தனர். ஒருசமயம் புட்டபர்த்தியில் சுவாமி ரஷ்ய பக்தர்களை நேர்காணலுக்கு அழைத்தார். நேர்காணலின்போது காலியா, ரஷ்யாவில் உள்ள ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில், இலவச மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுவாமி மகிழ்ச்சியுடன் அதற்கு ஒத்துக்கொண்டார்.
சுரேந்திர உபாத்தியாயா அவர்களுக்கு உள்ளூர ரஷ்ய உளவு போலீசார், (KGF) தொந்தரவு செய்வார்களோ என்ற பயமும், ரஷ்யாவின் கரடுமுரடான போக்குவரத்தை பற்றிய தயக்கமும் இருந்தது. எல்லாம் அறிந்த சுவாமி, சுரேந்திர உபாத்தியாயா அவர்களை அழைத்து ரஷ்யாவில் முகாம் நடத்த உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு ஆணையிட்டார். மேலும், “கவலைப்படாதே! முகாம் சிறப்பாக நடைபெறும்! உனக்கு முன்பு நான் அங்கு இருப்பேன், அதை நீயும் உணர்வாய்!”, என்றும் ஆசி வழங்கினார். தெய்வீக ஆசானின் வார்த்தைகள் அவரது கவலையைப் போக்கின.
மருத்துவத் துறையின் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், தாதியர்கள், நிபுணர்கள் என்று பெரிய குழுவே ரஷ்யா சென்றது. ரஷ்யாவின் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களின் சங்கிலித்தொடர் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, சைபீரியாவின் யூரல் பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. குழுவில் சிலர் சைபீரியா செல்லுமளவுக்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? என கேலி செய்தனர், ஏனெனில் அக்காலத்தில் மோசமான கைதிகளை சைபீரியாயாவுக்கு அனுப்பும் வழக்கம் இருந்தது.
சைபீரியாவின் ஊரல் பகுதியில் முகாம் தொடங்குவதற்கு முன், ஊரல் பகுதியின் தலைநகரான ஈகாடெரின்பர்க் சென்று, அங்குள்ள மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.
சுரேந்திர உபாத்தியாயா மற்றும் ரஷ்ய சத்ய சாய் நிறுவனங்களின் தலைவரான சாய் சகோதரர் வாலெரி வெச்சிச்சின் மற்றும் அலெக்சாண்டர் பிலிப்போ சோபியா ஆகியோர் சென்று மக்கள் நல்வாழ்வுத்துறை தலைவரை சந்தித்தனர். அவர் சினேகமற்ற முகபாவத்துடன் இருந்தார். அவரது முகம் பாறை போல் இறுகி இருந்தது. மேலும் அவர் நீங்கள் யார்? உங்கள் தலைவர் யார்? இங்கு நீங்கள் முகாம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு பிரதி பலனாக நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டு ஊடுருவிப் பார்த்தார். சுரேந்திர உபாத்தியாயா பகவானை பிரார்த்தித்துக் கொண்டு பணிவாக, பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா எங்கள் தலைவர்! அவரது வழிகாட்டுதலின் பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
உலகம் ஒரு பெரிய மாளிகை என்றால், அதிலுள்ள பல்வேறு அறைகள் பல்வேறு நாடுகள் ஆகும். அதில் வசிப்பவர்கள், பரஸ்பரம், அன்புடன் பிறருக்கு உதவி செய்து கொண்டு சகோதரர்களாக வாழ வேண்டும். நாங்கள் செல்லும் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் அன்பின் வெளிப்பாடாக இந்த முகாம்களை நடத்துகிறோம். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை. பெருமை கொள்ளும் எந்த விளம்பரத்தையும் நாங்கள் ஏற்பதில்லை என்றார்.
மேலும், ரஷ்ய சகோதர, சகோதரிகளின் அன்பினை அனுபவித்து மகிழவே, நாங்கள் இங்கு தன்னலமற்ற சேவை செய்ய வந்திருக்கிறதாம். அனைவரையும் நேசி! அனைவருக்கும் தொண்டு செய்! என்பதே எங்கள் பகவானின் கோட்பாடு என்றார். சில வினாடிகளுக்குப் பின் தலைவரின் முகத்தில் புன்முறுவல் ஏற்பட்டது. கீர்ரோக்ராட் என்ற இடத்தில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி அளித்து தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
முகாம் நடத்தும் பகுதியை சுரேந்திர உபாத்தியாயா மற்றும் ரஷ்ய சாய் அன்பர்களும் மறுநாள் பார்வையிட செல்ல தீர்மானித்தனர். மறுநாள் வாலேரி ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கின்ற இயற்கை எல்லையாய் விளங்கிய யூரல் மலைக்கு அழைத்து சென்றார். அங்கு உலோகத் தகட்டால் பதிக்கப்பட்ட ஒரு கோடு இரு கண்டங்களையும் பிரிக்கிறது.
ஒருவன் ஒவ்வொரு காலையும் தகட்டின் ஒரு பகுதியில் வைத்துக்கொண்டால், ஒரே சமயத்தில் இரு கண்டங்களில் இருப்பதாக கூறிக் கொள்ளலாம் என்றார் வாலேரி. பனி தீவிரமாக பெய்ய ஆரம்பித்தது! உடலை ஊடுருவ ஆரம்பித்தது! அவர்கள் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு திரும்ப எத்தனித்தனர். ஆனால் வழியில் கார் நின்று விட்டது.
டிரைவர் அதை ரிப்பேர் செய்யும் வரை காத்திருந்தபோது, உடன் வந்திருந்த ஒரு ரஷ்ய இளைஞன் , சுரேந்திர உபாத்தியாயாதிடம் இங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது. பார்க்க சம்மதமா?, என்றான். சைபீரியாவின் பனிபடர்ந்த ஊரல் பகுதியில், சிவன் கோயிலா? என அதிசயித்து உடனே பார்க்க சம்மதம் கூறினார்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த பின், கோவிலை சென்றடைந்தனர். அந்தப் பகுதிக்கு உரிய வகையில் கட்டப்பட்ட மரக்கட்டிடம். கோயிலை நெருங்கும்போதே, லிங்காஷ்டகம் இனிமையாக ஒலித்தது! சுரேந்திர உபாத்தியாயா பிரமித்துப் போனார்! அவரும் மூன்று ரஷ்யர்களும் கோவிலுக்குள் சென்றனர்.
அங்கு அவர் தனது கற்பனைக்கு அடங்காத, கனவிலும் எண்ண முடியாத ஒரு நிகழ்ச்சியை கண்டார். நெடிது வளர்ந்திருந்த ஒரு ரஷ்யர், ‘பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்’ என்று பாடிக்கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை கண்டார். லிங்கத்தின் ஆவுடையாரில் வைக்கப்பட்டிருந்த ஒரு மெழுகுவர்த்தி மங்கலாக ஒளியை தந்து கொண்டிருந்தது! அந்த இடமே ரம்மியமாக இருந்தது! சந்தத்துடன் கூடிய பாடலும் ஊதுபத்தியின் நறுமணமும் சலனமற்ற தெய்வீக அமைதியை தந்தன!
அவர்கள் தரையில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வழிபாடு முடிந்ததும் மெலிதான புன்னகையுடன் வந்த அந்த ரஷ்ய அர்ச்சகர், இனிமையுடன் வரவேற்று, அபிஷேக தீர்த்தம் வழங்கினார். இமாலய முனிவரைப் போல தாடியுடன் ரோஸ் வண்ணத்தில் விளங்கினார். தன்னை போரிஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது பெயர் போரிஷயஹ: ( ஓ ரிஷிகளே) என்பதன் திரிபு என்றார்.
ஆச்சரியம் அடைந்த சுரேந்திர உபாத்தியாயா, அவரிடம் சார், நீங்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறீர்களா? எங்கிருந்து இந்த ஸ்லோகத்தை கற்றீர்கள்? என்று கேட்டார்.
நான் இந்தியாவிற்கு வந்ததே இல்லை. எனது ஆசான் இதனை உச்சரிக்க அகக் காட்சியில் சொல்லிக் கொடுத்தார் என்று கூறினார். உடனடியாக சுரேந்திர உபாத்தியாயா, உங்கள் ஆசான் யார்? எனக் கேட்டார். இந்த கேள்விக்கு விடையாக, ரிஷி போல் தோற்றமளித்த அந்த ரஷ்யர், லிங்கத்திற்கு மேலே மெழுகுவர்த்தியை உயர்த்தினார். மங்கலான வெளிச்சத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் படம் லிங்கத்திற்கு பின்னால் இருந்து சுவற்றின் மேல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
சுரேந்திர உபாத்தியாயாதின் உடல் முழுவதும் ஆனந்த, அதிர்ச்சி அலைகள் பரவின. பிரசாந்தி நிலைய மந்திரில் அன்று பகவான், ‘கவலைப்படாதே முகாம் வெற்றியடையும். நான் உனக்கு முன்பாக அங்கு இருப்பேன். அதை நீயும் உணர்வாய்!’, என்று ஆசீர்வதித்து கூறிய சத்திய வரிகள் நினைவுக்கு வந்தன. சுவாமி பனி நிறைந்த ஊரல் மலைகளை கைலாசமாகவே மாற்றிவிட்டார்., என சுரேந்திர உபாத்தியாயா மகிழ்ந்து கண்ணீர் விட்டார்.
🌻 துயர் நீக்கும் முகாம்கள் வெற்றிகரமாக நடந்து Siberia என்பது Saiberia ஆனது என்பதை கூறவும் வேண்டுமா... இந்த அனுபவம் சுவாமி இறைவன் என்பதை உணர்த்துகிறது. புட்டபர்த்தி எங்கே.. ரஷ்யா எங்கே.. அந்த ரஷ்யாவில் இந்த அபூர்வ சிவாலயத்தில் சுவாமி புகைப்படம் வைத்து.. அதுவும் லிங்கத்தின் மேலே... அந்த ரஷ்ய அர்ச்சகர் வழிபடுகிறார் எனில் எத்தகைய அனுபவத்தை நம் சுவாமியிடமிருந்து அவர் பெற்றிருக்க வேண்டும்.. இது சாதாரண நிகழ்வா! சாதாரண அனுபவமா! சர்வ பூத சாட்சியாக சகல தேசத்தையும் ஆண்டு கொண்டிருப்பவர் சத்யசாயீஷ்வரர் ஒருவரே!!
ஆதாரம்: 'Sathyam Sivam Sundaram ', 6th PART, 8th Chapter
தொகுத்தளித்தவர்: S.ரமேஷ், Ex convenor, Salem Samithi
Sairama
பதிலளிநீக்கு