தலைப்பு

சனி, 20 மார்ச், 2021

திடீரென மனநிலை ஸ்தம்பித்து ஜெர்மனியில் தவித்த மாணவரை பாபா மீட்டது எப்படி?


இறைவன் பாபா காலங்களைக் கடந்தவர். தேச எல்லைகளின் வரையறைகளையும் கடந்தவர். தமது மாணவர்களின் மீது அவரது அருட்காப்பு எப்போதும், எவ்விடத்திலும் பரவி அவர்களை பாதுகாக்கும் என்ற பேருண்மைக்கு சான்றாக, பின்வரும் நிகழ்வு திகழ்கிறது.


Dr.B.E பிரதீப் -ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலைய கல்லூரியில் விரிவுரையாளர். "நீ எங்கிருந்தாலும் என்னுடையவன்" என்று பகவான் தமது மாணவர்களுக்கு அளித்த உறுதிமொழியை, பாபா எவ்வாறு செயல்படுத்தி , அந்நிய நாட்டிலுள்ள தமது மாணவரைக் காப்பாற்றினார். இதுபற்றி அறிய Dr. பிரதீப் கூறும் மெய் சிலிர்க்கும் நிகழ்வினை காண்போம்.



🌹 ஆழ்கடலோ, அடர் வனமோ... நீ எங்கிருந்தாலும் நான் காப்பேன்- பாபா:

நான் அப்போது பர்த்தி கல்லூரியில் மாணவன். 2002ல் பாபா கல்லூரி விடுதிக்கு ஒரு சமயம் வந்தபோது மாணவர்களைப் பார்த்து கூறினார். "நீங்கள் என்னுடையவர்கள். நமது பரஸ்பர அன்பின் தன்மையை யாராலும் விளக்கமுடியாது- உங்கள் பெற்றோர்களால் கூட.. நீங்கள் ஆழ்கடலின் அடியில் இருக்கலாம், பாலைவனமோ மலை முகுடிலோ , ஆள் அரவமற்ற இடத்திலோ இருக்கலாம். எங்கிருந்தாலும் இடர் வரும் கால் உங்களை நான் காப்பேன்." ஆம். சாய்ராம்... இது வெற்று உறுதிச் சொற்களல்ல. பாபாவின் செயல்வடிவ கல்வெட்டு சாசனம். இதன் நிரூபணத் தன்மையை கீழ்வரும் சம்பவத்தால் அறியலாம்.



🌹 உடனே செல்- அவரை அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவை:

பர்த்தியில் என் கல்லூரி படிப்பு முடிவுற்ற நிலையில், பகவானின் அருளால் ஆராய்ச்சி மேற்படிப்புக்காக ஜெர்மனி செல்ல நேர்ந்தது. அது 2008ம் ஆண்டு. வழக்கம்போல நான் என் சோதனைக் கூடம் செல்ல தயாரானேன். வழக்கமாக காலை 8.30 மணிக்கு செல்லும் நான் , அன்று ஏனோ தெரியவில்லை, கிளம்பும் மனநிலையில் இல்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது. அப்போது காலை 10.30. என் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் சாயி சகோதரர் வரப் பிரசாத். அவரும் சாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர். அவர் அப்போது இத்தாலியில் இருந்தார் அவர் குரலில் அவசரம் ஓலித்தது. "சாய்ராம்.... அடுத்த விமானத்திலேயே பிராங்பர்ட் செல்லுங்கள். அங்கிருந்து ஒருவரை , அவர் தங்கியுள்ள ஓட்டலிருந்து அழைத்துச் சென்று, உடனடியாக அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள்" தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. அவர் யார். அவருக்கு என்ன நேர்ந்தது. ஏன் இந்த பதட்டமான பயணத்திட்டம். ஒன்றுமே விளங்கவில்லை. மேலும் பிராங்பர்ட் ஒரு பெரிய நகரம். அங்கே சென்று முகம் தெரியாத நபரை எப்படி தேடுவது? அந்த கால கட்டத்தில் கூகுள் மேப் உள்ளடிக்கிய செல்போன் இல்லை. வாட்ஸ்ஆப் இல்லை. சகோதரர் வரபிரசாத் மேலும் கூறியதாவது. "உடனடியாக புறப்படுங்கள். மேல் விவரங்கள் பயண இடையில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். பணம் பற்றி கவலை வேண்டாம்."



🌻 இயங்கினேனா... இயக்கப்பட்டேனா:

யோசிக்க நேரமில்லை. யோசிக்கவும் தோன்றவில்லை. உடனே ஒரு விரைவு ரயில் ஏறினேன். பயண மத்தியில் சகோதரர் வரபிராசாத்திடமிருந்து  கைபேசியில் வந்தது குறுஞ்செய்தி. அதில் பிராங்பர்ட்டில் உள்ள அந்த முகம் தெரியா மனிதரின் பெயர், அவர் தங்கி இருந்த விடுதியின் பெயர் இருந்தது. மற்ற விவரங்கள் இல்லை. மூன்று மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் வந்தடைந்தேன். டாக்ஸி ஒன்று பிடித்து குறிப்பிட்ட அந்த விடுதியை அடைந்தேன். விடுதி பிராங்பர்டின் ஒரு கோடி என்றால், விமான நிலையம் மறுகோடி. அங்கு தான் அவரைக் கண்டேன். அவர் ஆபீஸ் செல்வதற்கான உடையான கோட் சூட் மற்றும் ஷூ அணிந்து காணப்பட்டார். அவரிடம் "சாய்ராம். நானும் சுவாமி கல்லூரி மாணவன்தான். உங்களை இந்தியா அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றேன். அவர் பதில் ஏதும் கூறாமல் புன்னகைத்தார். மற்றபடி ஒன்றும் கூறாமல் நின்றிருந்தார். ஆகவே நான் அவரது துணிமணி மற்றும் இதர பொருட்களை பெட்டிகளில் நிரப்பினேன். இப்போதும் அவரிடமிருந்து எந்தவித பதிலும் வராததால், என்னிடமிருந்த பகவானின் புகைப்படத்தை அவர் கையில் வைத்தேன். இப்போது அவரது புன்னகை சிரிப்பாக மாறியது. ஆயினும் அவர் ஒன்றும் பேசவில்லை. ஆனால் என்னைத் தொடர்ந்து வர தயாரானார். டாக்ஸியில் பயணித்து விமான நிலையம் செல்ல ஏற்பாடுகளில் முனைந்தேன். என்னிடம் டாக்ஸியில் விமான நிலையம் செல்ல போதுமான பணம் இல்லாததால், அருகிலிருந்த அவரது நண்பர்களிடம் உதவி கோரினேன். அவர்கள் இவருடன் சேர்ந்து ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் பணிக்காக பிராங்பர்ட் வந்திருந்தனர். அவர்கள் யாருமே என்னை பற்றி ஒரு விவரங்களைக்கூட கேட்கவில்லை. ஆனால் அதில் ஒருவர் கூறினார் "அவன் பையில் தேவையான பணம் இருக்கிறது." என்று. நாங்கள் டாக்ஸியில் பயணித்து பிராங்பர்ட் விமான நிலையம் வந்தடைந்தோம்.



🌹 விமான நிலைய வியப்பான நிகழ்வுகள்:

மிகப் பிரம்மாண்டமான பிராங்பர்ட் விமான நிலயத்தில்... புனே செல்வதற்கான ஒருவழி டிக்கட் விலை 3800 ஈரோஸ் என்று கூறக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். மாணவனான என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது.மேலும் இந்தியா செல்லும் அன்றைய விமானங்கள் அனைத்தும் கிளம்பி சென்றுவிட்டன. செய்வதறியாது திகைத்தபின், பம்பாய் செல்லும் ஏர்இந்தியா விமானத்தில் அடுத்த நாளுக்கான டிக்கட் 650 ஈரோவில் கிடைத்ததும், அதற்கான கட்டணத்தை அந்த நண்பரே ஏடிஎம் ல் தனது பாஸ்வோர்டை சரியாக பதிவிட்டு எடுத்ததும், பகவானின் தோன்றா வழிகாட்டுதலால் அன்றோ. இந்த செய்தியை சாய்ராம் வரபிரசாத்திடம் கூறி அன்றிரவு தங்குவதற்கு அதே விடுதிக்கு போவதாகக் கூறினேன். "வேண்டாம்.... வேண்டாம்... அந்த விடுதிக்கு திரும்பச் செல்ல வேண்டாம். அங்குதான் சிக்கல் உருவாயிற்று. நமது சாயி நண்பருக்கு அவரது திறமைக்காக வேலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைப் பொறுக்காத மற்றவர்கள் அவரை இழிவாகப் பேச, அச்சொற்கள் ஆழமாக அவர் மனதில் பாய்ந்து நீங்கா வடுவை உண்டாக்கிவிட்டன. அவர் அச் சொற்களின் காயத்தால் மனம் ஸ்தம்பித்து மீளமுடியாமல் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கிறார். ஆகவே வேறிடம் செல்லுங்கள்" என்ன செய்வதென்றே புரியாமல் குழம்பினேன். சாயிராமின் உதவிக் கரம்வேறோரு நண்பர் மூலமாக நீண்டது. அவர், மாற்று ஏற்பாடாக எங்களை , மைன்ஸ் சிடி என்கிற பிராங்க்பர்ட்டின் புறநகரிலுள்ள விநாயக் சின்ஹா என்கிற மற்றுமொரு சாயி மாணவர் வீட்டில் தங்கச் சொன்னார். இரவு உணவை ஒரு ஓட்டலில் முடித்துக் கொண்டோம். தட்டில் போட்ட அனைத்தையும் வீணாக்காமல் சாப்பிட்டார் அந்த சாயி சகோதரர். ( மூன்று நாட்களாக அவர் ஒன்றுமே சாப்பிவில்லை என்பதை பிறகு வரபிரசாத் கூறினார்). அன்றிரவு சாயி சகோதரர் விநாயக் சின்ஹா வீட்டில் தங்கினோம். அன்றைய இரவு மறக்கமுடியாத ஒரு திக்திக் இரவு. படுத்து கண்மூடிய போது குறுகுறு என்ற உணர்வு. கண்ணைத் திறந்தால் நம் நண்பர் நின்று கொண்டு என்னை உற்றுபார்த்துக்கொண்டிருந்தார் . இப்படி பலமுறை நிகழவே பயத்துடன் தூங்காமல் எப்போது விடியும் என காத்திருந்தேன்.     

    


🌹 மனம் மயங்கி, மதி கெட்டு நின்றவர், பாபாவின் புகைப்படம் கண்டவுடன் செய்ததென்ன:

காலையில் எழுந்ததும் அவரை பல் துலக்க குளியலறை அனுப்பினேன். நீண்டநேரம் சென்றும் அவர் திரும்பவில்லை. .பார்த்தால் கையில் பிரஷ்ஷுடன் பல் துலக்க தெரியாமல் நின்றிருந்தார். வேறு வழியின்றி நானே அவருக்கு பல் துலக்கி, குளிப்பாட்டி , ஆடைகளையும் அணிவித்தேன். விமான நிலையம் செல்ல புறப்பட தயார் ஆனேன். ஆனால் அவர் வர இயலாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார். இதற்கிடையில் அவரது தாயாரும் அண்ணனும், அண்ணன் குழந்தைகளும் அவரை தொலை பேசியில் அழைத்துப் பேசினர். ஆனால் அவர் யாருக்கும் பதில் அளிக்கவில்லை. நிலைமையை சரிசெய்ய, பாபாவை வேண்டி, என்னிடமிருந்த பாபாவின் புகைப்படத்தை அவர் கையில் வைத்தேன். சாயிராம்... என்ன ஆச்சர்யம். அவர் உடனே துள்ளி எழுந்து என்னைத் தொடர ஆரம்பித்தார். அங்கிருந்து பஸ், பிறகு டிராம் , அடுத்து மெட்ரோ இவைகளில் பயணம். என் தூண்டுதல் எதவுமின்றி, என்னை தொடர்ந்து பயணித்தார். ஆயிற்று. ஏர்போர்ட் வந்து ஏர் இந்தியா நுழைவாயிலுக்கும் வந்துவிட்டோம். 



🌹 சாயியின் கரம் நீளாத இடம் உண்டோபா பாவின் நாமத்தால் திறக்காத மனம் உண்டோ:

அங்கிருந்த அலுவலரிடம் கூறினேன். "ஐயா. இவர் உடல் நலம் குன்றியவர். விமானத்தில் ஏற உதவி தேவை. அவர் உடனடியாக ஒரு பேட்டரிகார் மூலம் விமானப் படிக்கட்டுவரை அவரை அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆனால் என் மனது கூறியது. இவர் விமானத்தில் ஏறி, உள்ளே தன் இடத்தில் எவ்வாறு சென்று அமர்வார். ஆகவே இது பற்றி அந்த அலுவலரிடம் பேச முற்பட்டேன். "ஐயா... அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலும் உதவிதேவை". இதைக்கேட்ட அந்த அலுவலர் திடுக்கிட்டு, நான் யார், அவருக்கு என்ன உறவு, ஏன் அவரை தனியாக அனுப்பவேண்டும் போன்ற விவரங்களைக் கேட்க, நான் அதற்கான பதில்களைக் கூறினேன். அவர் முடிவு ஒன்றும் கூறாமல், தனது மேலாளரை அழைத்தார். அப்போது கீதா ராஜன் என்கிற பெண்மணிதான் மேலாளர். அவர் வந்து என்னை கேள்விமேல் கேள்வி கேட்டார். நான் அந்த மனநலம் குன்றிய மாணவருக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை , ஒரே பல்கலைக் கழகத்தில் வெவ்வேறு சமயத்தில் படித்தவர்கள் என்றதும், எந்த பல்கலைக் கழகம் என்று கேட்டார். "நாங்கள் ஸ்ரீசத்யசாயி பல்கலைக்கழக மாணவர்கள் என்றேன்." ஐயன் நாமம் கேட்டதும் அவர்கள் "ஓ சத்ய சாயி மாணவர்களா. அதுதானே பார்த்தேன்" என்றார். சாயியின் அன்பெனும் திறவுகோல் திறக்காத பூட்டுண்டோ. பாபாவின் கருணை கரம் நீளாத இடமுண்டோ. இதன்பின் நடந்தவை பாபாவின் அருட் காப்புக்கு ஓர் சாட்சி. விமான ஓட்டியிடம் விவரங்கள் பகிரப்பட்டன. நமது சாய் சகோதரை கவனிக்க தனியான ஒரு ஏர்ஹோஸ்டஸ் நியமிக்கப்பட்டார். டெல்லியில் விமானத்திலேயே, அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. பம்பாயில் அவரும் , உடமைகளும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

🌻 சுவாமி தமது மாணவர்களைக் காக்க எந்த இடத்திலும் வருவார் என்பது மட்டுமல்ல, மற்ற மாணவர்களை எவ்வாறு ஒரு கருவியாக பயன் படுத்தினார் என்பதை ஆச்சர்யமான இந்த அருட்காப்பின் மூலம் அறியலாம். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பக்தர்கள் மற்றும் துயர் உற்றவர்கள் வேண்டும் போது சுவாமி அங்கு இருப்பார். துயர் துடைப்பார். ஓம் ஸ்ரீ சாயி அஸகாய ஸகாயாயனமஹ. 🌻


ஆதாரம்: Sri B.E PRADEEP Interview - Students of Sai

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக