தலைப்பு

புதன், 17 மார்ச், 2021

வெளிநாட்டு வாலிப கைதியை காப்பாற்றி நல்வழி காட்டிய கடவுள் சாயி!


போதை பழக்கத்திற்கு உள்ளாகி, கைதியாய் இருந்த மேனாட்டு இளைஞனை, நல்ல பாதைக்கு திருப்பி, சாயி சேவைக்கு மாற்றிய, சகலகலா சாயி என்பதன் பரவசப் பதிவு இதோ.. 

ஜெரேமி ஹோபர், அமெரிக்க டென்வர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர். இவரது பெற்றோர்  இயேசுகிறிஸ்துவின் பால் நம்பிக்கை  கொண்ட நல்ல மனிதர்கள். டீன் ஏஜில், ஜெரேமி, இறைவன் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் சில புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. சுவாமியின் அற்புதங்கள் அவரை ஆச்சரியப்பட வைத்தது. ஆனால், அவர் சுவாமியின் போதனைகளை பின்பற்ற வில்லை. ஏனென்றால், ஜெரேமிக்கு மோசமான நடத்தை உள்ள நண்பர்கள் இருந்தனர். அவர்களால் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்திற்கு ஆளானார்.

18 வயதில் போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்தன. மூத்த, வலிமைமிக்க சிறைக்கைதிகள், எளிய, வலிமையற்ற கைதிகளை, அடித்து நொறுக்கி தங்களுக்கு அடிமை வேலை செய்ய வற்புறுத்தினர்.


ஒரு முரட்டு கைதி, ஜெரேமியை சீண்டிக்கொண்டே இருந்தான். ஒரு மதிய உணவின் போது  அவன் ஜெரேமியை அடித்து நொறுக்க ஆரம்பித்தான். அவனை எதிர்க்கும் வலு தன்னிடம் இல்லை என்பது இவருக்குத் தெரியும். தான் ரத்த சகதியில் விழப் போகிறோம் என நினைத்தார். அப்போது, சாய்பாபாவை பற்றி எண்ணினார்.  திடீரென, மற்றொரு கைதி குறுக்கே புகுந்து இவரை காப்பாற்றினார்.

சில நாட்களில் இவருக்கு ஜாமீன் கிடைத்தது. இவரது  வக்கீல், இவர்களிடம்,  முதல்முறையாக குற்றம் செய்தவர் இளம் வயதுக்காரர் என்ற காரணத்தினால், அதிகபட்சமான 10 வருட தண்டனை கிடைக்காது என்றும், குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். வேறொன்றும் செய்ய வாய்ப்பில்லை என உறுதியாக கூறிவிட்டார்.

போலீஸ் அதிகாரி, ஜெரேமியின் பெற்றோரிடம், "உங்கள் மகனை போதிய கண்காணிப்புடன், நல்லவிதமாக நீங்கள் வளர்க்கவில்லை. அதனால், அவன் இளம் குற்றவாளியாகி, இரண்டரை வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கப் போகிறான். திரும்பி வரும்போது இன்னும் மோசமான குற்றவாளியாக வருவான்.", என எச்சரித்தார். ஜெரேமி, தான் அனுபவிக்க போகும் சிறை தண்டனையை எண்ணி மிகவும் பயந்தார். தனது எதிர்காலம் வீணாகி விடும் என கவலைப்பட்டார். தன்னை காப்பாற்ற யாருமே இல்லையா என்று கதறினார்.


தான் படித்த புத்தகத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபா செய்த அற்புதங்கள் நினைவுக்கு வந்தன. "தெய்வீக தந்தையே! நீர் மட்டுமே என்னை காப்பாற்ற வல்லவர். என்னை எப்படியாவது காப்பாற்றும். நான் திருந்தி வாழ்கிறேன்.",என மன்றாடினார்.

 *கடல் கடந்து கதறினாலும் ஓடி காப்பாற்றும் தெய்வம் அல்லவா நம் பகவான்!* 

ஆம்! தெய்வத்தின் தலையீடு அவனைக் காப்பாற்றியது. சில தினங்களில், அரசாங்கத்திடமிருந்து அவனுக்கு கடிதம் வந்தது. அதில்,
"போலீஸ், தங்களிடம் கைப்பற்றிய போதைப் பொருட்களில், போதை தன்மை இல்லை என லேப் ரிசல்ட் வந்துள்ளதால், தாங்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளீர்கள்."  என்ற தகவல் இருந்தது.

அவன், புட்டப்பர்த்தி ஓடிச்சென்று, பகவானின் பாதங்களில் விழுந்து, நன்றி தெரிவித்தான்.

நல்ல மனிதனாக திரும்பி வந்தான். கல்வித் துறையில், முதுகலைப் படிப்பை முடித்தான்.

அவர் இரண்டாம் முறையாக புட்டபர்த்தி சென்று, பகவானை சந்தித்தபோது,


பகவான் அவரிடம், சிறையில் அவன் அடிபடாமல் தான் காப்பாற்றியதையும், அவன் சிறைக்குச் செல்லாமல் தான் காத்து அருள் செய்ததையும் தெரிவித்தார். மேலும் அவனை ஊருக்கு சென்று சேவை பணிகளை செய்யுமாறு ஆலோசனை கூறினார்.

அவன், தனது பெற்றோர்கள் உங்களது பக்தர்கள் ஆகவேண்டும் என சுவாமியிடம் வேண்டினான். சுவாமி அதற்கு, "அவர்கள் நல்லவர்கள். அவர்கள் இயேசுவிடம் செய்யும் பிரார்த்தனை ,என்னையே வந்து சேருகிறது.", என்று கூறிவிட்டார். ஊருக்கு திரும்பிய ஜெரேமி, ஸ்ரீ சத்யசாயி அமைப்பில் சேர்ந்து, ஏழை மாணவர்களுக்கு  கல்வியும், அதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெற்றுத் தரும் உயர்ந்த பணியில் தற்போது 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

நம் சுவாமி பக்தர்களிடம்,

 "நீ உலகத்தின் எந்த மூலையில் இருந்து என்னை கூப்பிட்டாலும், நான் ஓடி வந்து காப்பாற்றுவேன்!", என்று கூறுவார்.

அதை  பகவான் நிரூபித்து விட்டார்.

 ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: சத்தியம் சிவம் சுந்தரம்(தமிழ்), பாகம் 7,pg: 179-184 
நன்றி: S. Ramesh, Ex-Convenor - Salem Samithi.

🌻 இறைவன் சத்யசாயியே பிரபஞ்சப் பரம்பொருள் ..  எந்த தெய்வ வடிவங்களிடம் நாம் பிரார்த்தனை செய்தாலும் அவரே அந்த பிரார்த்தனையை கேட்கிறார். அவரின்றி ஓர் அணுவும் அவனியில் அசைவதே இல்லை. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக