தலைப்பு

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

இரு அவதாரங்களையும் ஆண்களை விட அதிகம் உணர்ந்து கொண்டு முதலில் பக்தி செலுத்திய பெண்மணிகள்!

எவ்வாறு இரண்டு யுகங்களிலும் பெண்களே ஆண்களை விட அவதாரங்களை நொடிப் போதில் உணர்ந்து பக்தி செலுத்தி வருகிறார்கள் எனும் ஆச்சர்ய பொருத்த அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!

ஒருமுறை துவாபர யுகத்தில் பூஜாரி பண்டிதர்களின் குடும்பத்திற்கு தனது அருளை வழங்க வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சங்கல்பிக்கிறார்! அவர்கள் மிகவும் சிரத்தையாக யாகம் செய்து வருபவர்கள்! ஆகவே தனது நண்பர்களான கோபர்களை அழைத்து தனக்கும் மேய்ச்சலுக்கு அழைத்து வந்த பசுக்களுக்கும் பசிப்பதாகவும் கொஞ்சம் உணவு தர வேண்டும் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் தூது அனுப்புகிறார்.... அது அருட் தூது! யாசகத் தூதில்லை! கோபர்களோ அந்த புரோகித பண்டிதர்களிடம் "எங்களது ஸ்ரீ கிருஷ்ணரும் பசுக்களும் பசியோடிருக்கின்றனர்... உங்களிடமிருந்து கொஞ்சம் உணவை கேட்டு வாங்கி வரச் சொன்னார்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னவற்றையே அவர்கள் சொல்ல... அவர்களோ யாகம் நடத்தும் பரபரப்பில் ... அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமை ஓரளவுக்கு தெரிந்திருந்தும்... அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்காமலும் உணவு தராமலும் வெறுங் கையோடு அனுப்பிவிடுகின்றனர்... பெருத்த ஏமாற்றத்தோடு ஸ்ரீ கிருஷ்ணரிடமே வற்றிய நதி போன்ற முகத்தோடு கோபர்கள் வெறிச்சோடி திரும்புகின்றனர்! 

பிறகு நடந்ததை அவர்கள்  சொல்ல.. ஒரு பூரண புன்னகை சிந்தியபடி.. "ஒன்றும் பிரச்சனை இல்லை.. நீங்கள் மறுபடியும் சென்று அந்த புரோகிதர்களின் மனைவிமார்களிடமே உணவு கேளுங்கள்! நிச்சயம் தருவார்கள்!" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! அவர்களோ சற்று தயங்க... "ம்ம் ... தயங்காமல் செல்லுங்கள்!" என்று உறுதியோடு அவர் முழங்க...

கோபர்களும் புரோகிதர்களின் மனைவிமார்களிடம் வர... அந்தக் கோரிக்கையைக் கேட்டு பூரித்துப் போய்... யாகத்திற்கு தயாரித்து வைத்திருந்த உணவை எடுத்து கோபர்களிடம் தராமல்... தாங்களே அதனை தங்களது கையால் தர விரைந்து ஓடுகிறார்கள்! 


ஸ்ரீ கிருஷ்ணரோ யமுனைக் கரையில் அசோக மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்! புரோகிதர்களின் மனைவிகள் அவரிடம் நெருங்கி.. முதலில் அவரை வணங்கி தாங்கள் கொண்டு வந்த உணவை தர... ஸ்ரீகிருஷ்ணர் அதனை ருசிக்க ருசிக்க உண்டு...

"ஓ புனிதப் பெண்மணிகளே! இங்கே நீங்கள் வந்ததற்காக யாரும் உங்களை குறை கூற மாட்டார்கள்! கவலை வேண்டாம்! அதற்கு மாறாக உங்களைப் புகழ்வார்கள்! என்னை சார்ந்திருப்பதே மனித இனத்திற்கு முக்தி தர வல்லது! என்னை தரிசிப்பது- தியானிப்பது - என் புகழ் பாடுவது- நாம ஜபம் புரிவது இதுவே முக்திக்கான வழி! எனது மகிமையே உங்களை வாழ்வியல் கர்மாவிலிருந்து விடுதலை தரும்!" என்று சத்தியம் உரைக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! 


"சராசரி மனிதருக்கு கடவுளின் பெயரால் கொடுக்கும் தர்மம் கூட வாழ்க்கைத் தளைகளை அறுத்தெறியுமே! அப்படி இருக்கையில் இறைவனே கேட்கிற போது அவனுக்குக் கொடுத்தால்?? எங்களது அருந்துணைகள் அந்தப் புண்ணியத்தை வாறிக் கொண்டு சென்றுவிட்டார்கள்! அவர்களை விட நமக்கு நிறைய தெய்வீக சந்தர்ப்பங்கள் இருந்தும் பேதம் பார்த்து அறிவை இழந்து நம் நிலையை நாமே கண்டு வெட்கப்படும் சூழ்நிலை உருவாகி விட்டதே! அய்யோ ... ஸ்ரீ கிருஷ்ணா எங்களை மன்னிக்க மாட்டாயா?" இதுவே உண்மையை இறுதியில் உணர்ந்த அந்த புரோகிதர்களின் பொது மனசாட்சி மொழியாக இதயத்தில் இழையோடிக் கொண்டிருக்கிறது! அதுமுதல் புரோகிதர்களும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியை ஆன்மா வரை நிரப்பிக் கொள்கிறார்கள்!

(ஆதாரம் : பாகவதம் - 10 : 870 )


இதே போல் கலியுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில்  நிறைய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது... உதாரணத்திற்கு...

     ஒருமுறை சகுந்தலா என்கிற பக்தை , காஃபி போர்ட் இயக்குநர் பாலு அவர்களின் மனைவி... உரவகொண்டாவிற்கு இருவரும் வருகிறார்கள்! அது பால பாபாவின் மாணவப் பருவம்! சத்யம் என்றே பாபாவை அழைப்பர்! (பாபாவே எப்போதும் சத்யம்) பால் வடியும் பால பாபா தனது படிப்பு  எனும் நடிப்பு நாடகத்தைத் தொடர... பள்ளியில் பயில்வதாக தனது  பௌதீக அண்ணன் அவர் வீட்டில் தங்கி இருந்த சமயம் அது! 


அங்கே தம்பதிகள் பாலுவும் சகுந்தலாவும் ஒரு வயதானவரை பார்க்கிற சந்தர்ப்பம் ஏற்படுகிறது! அவர் பெயர் காசிபாட்லா ஸ்ரீ ராமமூர்த்தி! அந்தப் பெரியவர் இருவரை தனது இல்லம் அழைத்து "சத்யம் பற்றி பேசுவதே புண்ணியம்.. ஆன்மீக நன்மை" என்று தனது அனுபவத்தைப் பகிர ஆரம்பிக்கிறார்! 

"எனது மனைவி பெயர் விசாலாக்ஷம்மா ... மிகவும் நல்லவள்! ஆழ்ந்த பக்தியும் ஆத்மார்த்த சரணாகதி உணர்வும் கொண்டவள்! அவள் சத்யத்தை (பால பாபா) அவரின் மிகச் சிறு வயதிலேயே கண்டுணர்ந்தவள்! தனது அவதார பிரகடனத்தை அவர் அறிவிக்கும் முன்பே அந்த ஆழமான உணர்வும் நம்பிக்கையும் அவள் பெற்றது நினைத்துப் பார்க்கவே முடியாத பெரிய விஷயம்! தினசரி ஏதாவது தின்பண்டமோ சிற்றுண்டியோ சத்யத்திற்காக எடுத்துக் கொண்டு போவாள்! இன்று நான் இவ்வளவு சொல்கிறேனே தவிர ஆரம்பத்தில் எனக்கு சுவாமி (சத்யம் / பாபா) மேல் நம்பிக்கையே இல்லை... அவரின் மகத்துவத்தை நான் சரி வர உணரவில்லை என்பது தான் சத்யத்தை பற்றிய சத்தியம்! துரதிஷ்டவசமாக என்னுடைய அவசரக் கோப புத்தியாலும் அந்த காலத்தில் குழந்தைகள் என்னிடம் தள்ளியே இருப்பார்கள்!" என்று அந்தப் பெரியவர் இதயம் திறந்து பேசுகிறார்! 


கண்களின் கண்ணீர் முட்ட அந்தப் பெரியவர் "ஒவ்வொரு வியாழனும் அப்போதே  எனது மனைவி தவறாமல் பாபாவின் பஜனையில் கலந்து கொள்வாள்! வாரம் தவறலாம் ஆனால் அவள் தவறவே மாட்டாள்!  பாபா மேல் அவ்வளவு பக்தி! சரி கலந்து கொண்டு விட்டோம் என்று திருப்தி அடைய மாட்டாள்... வீட்டுக்கு வந்தும் மீண்டும் அவள் பாபா படத்திற்கு பூஜை செய்வாள்! அவள் பிறரது கேலிக்கோ சச்சரவு வார்த்தைகளுக்கு ஆளானதே இல்லை.. அதைப் பற்றி துளி கூட சட்டை செய்ய மாட்டாள்! அவள் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் அவளது சுவாமி பக்தி எனக்கொரு பாடமாக இருக்கிறது!" என்கிறார்!

"நீங்கள் இப்போது புட்டபர்த்தி செல்வதில்லையா?" என்று அந்த தம்பதிகள் கேட்க.. வயதாகிவிட்டால் உடலில் வலுவில்லை என்கிறார்! மேலும் அவரது மனைவி சொல்லி ஒருமுறை புட்டபர்த்திக்கு விஜயம் செய்திருக்கிறார்! அது அவர்களது மகள் கல்யாணத்திற்கு ஆசி வாங்க சென்ற பர்த்தி விஜயம்! "முதலில் நான் புட்டபர்த்தி செல்லவே தயங்கினேன்! ஏனெனில் சிறு வயதாக பாபா இருக்கிற போது எங்கள் வீட்டிற்கு அவர் விளையாட வருவார்.. அந்த சமயத்தில் எல்லாம் பாபாவை நான் சரியாக நடத்தியதே இல்லை! அந்த மன உறுத்தல்! ஆயினும் பாபா மிகவும் கருணையாளர்! நம் பிரச்சனைகளை எல்லாம் தீர்ப்பார்! விசாலாட்சி அனுப்பினாள் என்று சொல்லுங்கள் என்று என் மனைவி கொடுத்த தெம்பில் பாபாவிடம் சென்றேன்!" என்கிறார்!


மேலும் "அது புட்டபர்த்தி.. அது பிரசாந்தி நிலைய தரிசன நேரம்! தயங்கியபடியே அமர்ந்திருந்தேன்! "என்ன உன்னை விசாலாக்ஷம்மா அனுப்பினாளா?" என்று பாபா கேட்டுக் கொண்டே என்னருகே வந்தார்! எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை! 

"ஆக! நீ உங்கள் மகள் கல்யாணம் குறித்து என்னோடு பேச வந்திருக்கிறாய் அல்லவா!" என்று பாபாவே அதையும் தெரிவிக்க...அப்படியே நான்  வியப்பில் ஆழ்ந்தேன்!

"ஒரு பிரச்சனையும் வராது! தகுந்த வரன் பார்!  என்னுடைய ஆசீர்வாதம் அவளுக்கு இருக்கிறது!" என்று பாபா கொடுத்த அருள் மொழியால் நல்ல வரனும் அமைந்து திருமணமும் வைதீக முறைப்படி ஆத்மார்த்தமாக நிகழ்ந்தது! பிறகு என்னுடைய மனமும் பக்குவம் அடைய அடைய நானும் பாபாவை உணர்ந்து கொண்டு பக்தி செலுத்தி வர ஆரம்பித்தேன்... என்ன ஒன்று எனது மனைவி கற்பூரம் போல் உடனேயே பக்தியில் பற்றிக் கொண்டாள்! எனக்குக் கொஞ்சம் தாமதமானது!" என்று அந்தப் பெரியவர் மூத்தோர் மொழி மூவா மருந்து என்பது போல் சொல்லி முடிக்கிறார்!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 70 - 73 | Author : Dr.J. Suman Babu ) 


கருணை - பேரன்பு - வாத்சல்யம் - தயை இவை யாவுமே பெண்மை குணம் வாய்ந்தவை தான்! ஆகவே தான் இந்த பூமியையும் அதன் ரத்த ஓட்டமான நதிகளையும் நாம் பெண்களின் பெயர் சொல்லியே அழைக்கிறோம்! ஆயினும் பெண்களுக்கே உரிய குணமான குடும்பப் பற்று - அதீத கற்பனை - புரளி பேச்சு - சந்தேகம் - தேவையற்ற பயம் - பேராசை - பழிவாங்கும் போக்கு - மாமியார் - மருமகள் பேதம் என்பவற்றை எல்லாம் தாண்டி வரும் போது ஆன்மீகப் பேரானந்தம் அடைவது பெண்களுக்கு அவ்வளவு சிரமமாக இருப்பதில்லை! அந்த ஆன்மீகப் பேரானந்தத்தை அள்ளித் தரவே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் யுகம் யுகமாக அவதரித்து வருகிறார்! புனிதப் பெண்மையை பறைசாற்றவே சக்தி அவதார ஸ்ரீ பிரேம சாயியாக விரைவில் தன்னை பிரகடனப்படுத்தவும் இருக்கிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக