பாபா மேல் நம்பிக்கையே இல்லாத ஒரு சீனருக்கு நிகழ்ந்த பேராபத்திலிருந்து இருமுறை காப்பாற்றி தான் யார் என பாபா உணர்த்திய அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...
சங் ஆ தை அந்த சீனரின் பெயர்... அவர் மலேஷியா பெடலிங் ஜாயாவில் வசித்து வருகிறார்... அவர் பிறப்பினால் மெதாடிஸ்ட் கிறிஸ்துவர்... ஆனால் கடவுள் நம்பிக்கை எதுவும் இல்லை... ஆனால் அவரின் குடும்பத்தினர் பாபாவை கடவுளாய் வழிபடுகின்றனர்...உயிரோடு இருப்பவரை யாரேனும் வழிபடுவார்களா? வெறுப்பாகிறது அவரின் நம்பிக்கையின்மை... முட்டாள்கள் இப்படித்தான் ஏமாறுகிறார்கள் என தனக்குத்தானே சமாதானமாகி கடந்து போகிறார்.. அவர் விமர்சனம் செய்த சமயங்களிலும் அவர்கள் பாபா வழிபாட்டினை நிறுத்தவே இல்லை... உழைப்பிலும் அழிப்பிலும் சீனர்களின் சுறுசுறுப்பு அபாரமாக இருக்கும்... அப்படி கடின உழைப்பாளி அவர்! கடின உழைப்பு தான் காப்பாற்றும்.. கடவுளா காப்பாற்றுகிறார்? என நினைக்கும் அதி மேதாவிகளில் அவரும் ஒருவர்...
ஒருமுறை அந்த சீனர் 1976 ஜனவரி 7 ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு பெடலிங் ஜாயாவில் உள்ள தனது மாமனார் வீட்டிலிருந்து ஸுபாங் எனும் கிராமத்தில் தன் பண்ணைக்கு செல்வதற்கு ஸ்கூட்டரில் பயணிக்கிறார்... 40 கிலோ பதப்படுத்தப்பட்ட உரத்தை உடன் கொண்டு செல்கிறார்... பாரம் தாங்காத பயணமது... மயிற்பீலியையே அதிகம் ஏற்றினால் வண்டி குடைசாய்ந்துவிடும் என்கிறது தமிழ் இலக்கியம்! அதனால் தான் சுவாமி "Less Luggage - More Comfort " என்கிறார்! ஆம் அவரின் வண்டி குடைசாயப் போகிறது... அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...அந்த சாலையில் யாருமே இல்லை... இருட்டு வேறு... குதித்து விடலாம் என சாட முனைகிறார்... உடனே ஒரு குரல் ... "Don't jump .. Balance ... Balance " (குதிக்காதே ... சமநிலைப் படுத்து) என்பதாக கேட்கிறார்.. நிமிர்ந்து பார்க்கிறார்... பாபா அந்தரத்தில் தோன்றியபடி பேசுகிறார்... மீண்டும் அதையே விரல் அசைத்துச் சொல்கிறார்... அவருக்கு ஒரே ஆச்சர்யம்... அந்த பாபா சொல்லில் உள்ள சக்தி அவரை சமநிலைப் படுத்தி... பதட்டத்தைக் குறைத்து ... அப்படியே தட்டுத்தடுமாறி வண்டி வேகம் குறைய ... வண்டியோடு சாலையில் சாய்கிறார்... உதட்டோரம் லேசான அடி.. சிறு சிராய்ப்பு... பெரிதான உடல்சேதத்திலிருந்து பாபா காப்பாற்றிவிடுகிறார்...எப்படி அந்த விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி ஒருதுளி கூட அவர் முகத்தில் இல்லை...? மருத்துவர்களே ஆச்சர்யப்படுகிறார்கள்... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது பழமொழி... மரத்துக்கு வந்தது ஒரே ஒரு இலையோடு போனது போல் அந்தச் சீனர் தப்பிக்கிறார்.. அவர் தடுமாறிய போது தெய்வமே வந்ததே தவிர அவரின் அதிபுத்திசாலித்தனமோ... கடின உழைப்போ... பணமோ... உறவோ யாரும் எதுவும் காப்பாற்றவில்லை என்பது நிதர்சனம்.. அப்படி ஒரு நிலை வந்தால் தான் பாபாவே நம்மை தாங்கிப்பிடித்துக் காப்பாற்றுகிறார் என்பதே நம் தெளிவில் பன்னீர் தெளிக்கிறது!
மீண்டும் மனம் பிடித்து ஆட்டுகிறது! காப்பாற்றினார் அதற்காக எல்லாம் அவரை கடவுள் என எப்படி ஏற்பது ? எனும் ஒரு சந்தேகம். மனம் என்பதே சந்தேக மூட்டை! அது இதயத்தின் சத்தியக் கதறல்களை செவிமடுத்துக் கேட்டதே இல்லை... திமிர்.. அந்த மனத்திமிரை நையப் புடைத்தால் மட்டுமே பக்குவமாகிறது!
8 மாதங்களுக்கு மேல் செப்டம்பரில் ஒருநாள் பிற்பகல் பொழுது மழைப் பொழுதாகி இருந்தது... அந்தச் சீனர் காரை எடுத்துக் கொண்டு பண்ணை வீட்டிலிருந்து மாமனார் வீட்டுக்குப் போகிறார்... போகிற சாலையில் ஒரு திருப்பம்... ஒரு லாரி சமநிலை இழந்து அவரின் காரை நோக்கி சரிகிறது... பின் கதவுகள் நொறுங்குகின்றன... அப்போது பாபா ஜோதி ரூபத்தில் தோன்றி அந்த லாரியை காரின் பின்புறம் சரியவிடுகிறார்.. சீனரின் கார் பின்கதவுகள் சிதைந்து போயிருந்தாலும் அவருக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லை.. பாபாவை ஜோதி வடிவத்தில் தரிசித்ததால் விபத்தால் ஏற்படும் பதட்டமும் அவருக்கு ஏற்படவில்லை... அந்த லாரியிலிருந்து மூவர் ஊர்ந்து வருகிறார்கள்...அவர்களே பிற்பாடு உருக்குலைந்த சீனரின் கார் கதவுப்பகுதிகளை சரிசெய்து தருகின்றனர்... இன்னமும் சந்தேகப்படலாமா? என உறுதியாக பாபாவை பற்றிக் கொள்கிறார்... பக்தியில் பற்றி எரிகிறார் சங் ஆ தை... சீனர்கள் கருணையை ஒரு ஆண் தெய்வமாக உணர்ந்து வழிபடுகிறவர்கள்... அதன் பெயர் குவான்யின்...அது வேறு யாருமே இல்லை.. இறைவன் ஸ்ரீ சத்ய சாயி தான்!
(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 330 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
பாபா மேலான நம்பிக்கையும் பக்தியுமே நமக்கான பேட்டரி சார்ஜ்... ஆனால் அதனை தினசரி சார்ஜ் செய்ய வேண்டும்! பாபா மேலான நன்றி வெளிப்பாடே மிகப்பெரிய வழிபாடு... நாம் சில முறை உணர்ந்தும்... பல முறை உணராமல் போயினும் நம்மை தாக்குகிற இன்னலையே மின்னலைப் போல் கணப்பொழுதில் மறையச் செய்கிறவர் சுவாமி! அவரிடம் சரணாகதி அடையவதொன்றே கற்ற கல்விக்கான பெற்ற செல்வத்திற்கான உற்ற உறவுக்கான நன்றி சமர்ப்பணம்!
பக்தியுடன்
வைரபாரதி
🕉 SRI SAI RAM 🙏
பதிலளிநீக்கு