தலைப்பு

புதன், 16 மார்ச், 2022

ஒரு ஜப்பான் இளைஞனின் தாயை ஜப்பானுக்கே சென்று குணமாக்கிய சுவாமி!

தன் மேல் கசப்பு கொண்டவர்களையும்... வெறுப்பவர்களையும் எப்படி சுவாமி தன் பேரன்பால் அகம் மாறச் செய்கிறார் என்பதை உருக்கமாய்... ஜப்பானிய நெருக்கமாய் அனுபவிக்கப் போகிறோம் சுவாரஸ்யப் பதிவாக இதோ...


கடின உழைப்புக்கும்... கடமை தவறாமைக்கும் பெயர் போன ஜப்பானிலிருந்து பல மாணவர்கள் இந்தியாவை சுற்றிப் பார்க்க வருகிறார்கள்... அங்கே செருப்பு தொழிற்சாலையில் ஸ்டிரைக் என்றாலும் கூட ஒரு பாத காலணியை உற்பத்தி செய்து ஸ்டிரைக் என தன் எதிர்ப்பை காண்பிப்பார்களே தவிர யாரும் வீட்டில் முடங்குவதில்லை...அப்படிப்பட்ட தேனீ தேசத்திலிருந்து வருகிற மாணவர்கள் புட்டபர்த்தி வருகிறார்கள்...அதில் ஒரு மாணவனுக்கு புட்டபர்த்தி பிடிக்கவில்லை... நண்பர்கள் அழைத்துப் போனதால் வருகிறான்...இங்கே என்ன இருக்கிறது...? அந்த காவி மனிதரை தவிர எதுவுமில்லை...அவரைப் போய் கடவுள் என்கிறார்கள்... வெறுப்பும் கசப்பும் இதயத்தை கவ்விப்பிடிக்கிறது! தரிசன நேரம்... பிற மாணவர் ஆர்வமாய் என்ன தான் நடக்கிறதென அமர்ந்து கொள்ள... வேண்டா வெறுப்பாய் அவனும் அமர்கிறான்...

          புத்தரின் ஞானமாய் போதிமரத்துத் தென்றலாய் சுவாமி அசைந்து வருகிறார்! அந்த ஜப்பான் இளைஞனின் முன் நிற்கிறார்... அவனோ மிக தைரியமாக "நான் உங்களை வெறுக்கிறேன்" என பேசிவிடுகிறான்... சுவாமி அவனை அப்படியே உற்று நோக்கி சிரித்துவிட்டுப் போய்விடுகிறார்...! அய்யோ இப்படி ஒரு இளைஞன் பேசலாமா? என நினைக்கலாம்...இல்லை.. அவனிடம் தவறில்லை... அவன் இதயம் திறந்து வெளிப்படையாகவே இருந்திருக்கிறான்... உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசவில்லை... சுவாமிக்கு முன் கூனிக்குறுகி கைகூப்பி நடித்துவிட்டு... பிறகு சுவாமி சென்று விட்டார் என நினைத்துக் கொண்டு செருக்கடைந்து அவன் இருக்கவுமில்லை... அவன் முகமூடி அணிந்து கொள்ளவுமில்லை... பாசாங்கு இதயம் அல்ல அவனுடையது... சுவாமியை தவறாகப் புரிந்திருக்கிறான் அவ்வளவே!! 


பிறகு ஒரு மரத்தடியில் ஜப்பானிய இளைஞர்கள் பேசிக் கொண்டிருக்க... சுவாமியின் கார் அந்தப் பக்கம் வருகிறது.. சுவாமியைப் பார்த்தபடி ஓடுகிறார்கள்... அவன் முறைத்துக் கொண்டே மெதுவாக காரின் பக்கம் நெருங்குகிறான்...குழுமிய இளைஞர்களிடம் பேசிவிட்டு சுவாமி அவனை நோக்குகிறார்..."உங்களை நான் அறவே வெறுக்கிறேன்!" என மீண்டும் சொல்கிறான்... சுவாமி புன்னகைத்து விட்டு கையைச் சுழற்றுகிறார்... அதில் ஒரு சிருஷ்டி இதய வடிவ பென்டன்ட்... ஒரு குறைபட்ட இதயவடிவம் அது... கையில் தருகிறார்... வாங்கிப் பார்த்து ஆச்சர்யப்படுகிறான்... காரணம் அது அவனது இதயத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.. இது அவன் தாய் மற்றும் மருத்துவரைத் தவிர யாருக்குமே தெரியாத ரகசியம்... ஆனாலும் நண்பர்கள் சூழ்ந்து இருப்பதால் அவன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை... சுவாமி உடனே சொல்கிறார்... "உன் தாய் உடல் நலமின்றி மரணப் படுக்கையில் இருந்தாள்... கவலைப்பட வேண்டாம் பங்காரு...அவளை ஜப்பானுக்கே உன் வீட்டுக்கு சென்று காப்பாற்றிவிட்டேன்!" என்கிறார் மிகுந்த கனிவோடு... அவன் நம்ப மறுக்கிறான்... "நீங்கள் பொய் சொல்கிறீர்கள்... நான் இங்கே வருகிறேன் என சொல்லிவிட்டுத்தான் வந்தேன்..


 வரும் போது அவ்வளவு ஆரோக்கியமாகத்தான் இருந்தாள்... உங்களை நான்  நம்ப வேண்டும் என்பதற்காக நீங்கள் சொல்லும் நாடகமே இது... என்னால் அதை நம்பவும் முடியாது.. நீங்கள் தான் இறைவன் என என்னால் ஒருபோதும் ஏற்கவும் முடியாது!" என்கிறான்.. சுவாமி அவனையே உற்றுப் பார்த்துவிட்டு புன்னகை செய்கிறார்... சுவாமியின் கார் மௌனமாக நகர்கிறது... பாவம் நல்லவன் தான் அந்த ஜப்பானிய இளைஞன்... ஆனால் ஏதேதோ கற்பனையை மனதில் நிரப்பிக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறான்... அவனிடம் சுயநலமில்லை... ஏதோ அந்த காவி மனிதரிடம் சக்தி இருக்கிறது... எதை எதையோ கை மூடி வரவழைக்கிறார்... நாம் ஆசைப்பட்டதை எல்லாம் அவரை வைத்து சாதித்துக் கொள்வோம் என்ற சுயநல நினைப்பெல்லாம் இல்லை அவனிடம்... 

 ஆக தரிசன நேரத்தில் கூட அவனின் ஜப்பானிய நண்பர்கள் போய் வந்தார்களே தவிர அவன் செல்லவில்லை...அறையிலேயே முடங்குகிறான்... முடங்குவது என்பது ஜப்பானியர்களுக்கு பிடிக்காத செயல்! அப்போது அவனுக்கு ஒரு தந்தி வந்ததில் அவனை அழைக்கிறார்கள்.. செல்கிறான்... தந்தியைப் பிரித்துப் பார்க்கிறான்...படிக்கிறான்... கண்கலங்குகிறான்...சரியான முகவரி தானா? ஆம் அவன் வீட்டிலிருந்து தான் வந்திருக்கிறது... அதில் எழுதியிருந்த அவன் தாயின் எழுத்தை வாசிக்க வாசிக்க உடல் சிலிர்க்கிறது... 


"நீ இந்த தேதியில் புட்டபர்த்தியில் தானே இருப்பாய்.. நீ சென்ற உடனேயே எனக்கு உடல் நலம் சரியில்லாமல் மோசமாகிவிட்டது...அப்போது என் தலைமாட்டில் காவி மனிதர் ஒருவர் தோன்றி... "உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றவே  நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்!" என்று சொல்லி வெள்ளை நிறப் பவுடர் போல் ஒன்றை நெற்றியில் இட்டு சாப்பிடக் கொடுத்தார்... உடனே சரியாகிவிட்டது... காவி உடை அணிந்திருந்தார்... தலைமுடி புஸ் புஸ் என்றிருந்தது...இது தான் அவர் அடையாளம்! நீ ஜப்பான் வருவதற்குள்...அவர் யார்? எங்கே இருக்கிறார்? என விபரம் தெரிந்துவிட்டு வா... சந்திக்க முடிந்தால் அவருக்கு நன்றி சொல்!" என எழுதியிருந்தது... அந்த விரைவுத் தந்தி அவனின் விரைவுக் கண்ணீர் பட்டு நனைந்தே போகிறது...! 

தரிசனம் முடித்து வருகிற தன் நண்பர்களிடம் அதை பரவசமாய்ப் பகிர்கிறான்...அவனது தாய்க்கு நண்பர்களோடு சேர்ந்து இந்தியாவில் ஏதோ புட்டபர்த்தி போகிறான் என்று மட்டும் தான் தெரியுமே தவிர சுவாமியை தெரியாது...ஒரு புகைப்படம் கூட அவர்கள் வீட்டில் இல்லை... அவர்கள் சுவாமி பக்தர்களும் இல்லை... அவனோ இங்கே வந்தபிறகு சுவாமியையே வெறுத்துக் கொண்டிருக்கிறான்... இப்போதே சத்தியம் உணர்ந்து...அவனது கற்பனை கண்ணீரோடு சேர்ந்து உடைந்தும் போகிறது!

ஆகவே உடனே மாலை தரிசனத்திற்குச் செல்கிறான்...சுவாமி அவன் அருகே வருகிறார்...சுவாமி பாதங்களைப் பற்றி அழுகிறான்... இரக்கமும் கருணையுமே வடிவான ஸ்ரீ சத்யசாயித் தாய்... "பங்காரு!" என அவன் தலையைக் கோதிவிட்டு நகர்ந்து போகிறார்! ஆனால் அன்றிலிருந்து அவன் மனமோ சுவாமி மேல் ஏற்பட்ட பக்தியிலிருந்து நகரவே இல்லை!! 

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -1 / பக்கம் : 35 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமி லட்சக்கணக்கான மனிதர்களுக்கு தனது கருணையை நிரப்பியிருக்கிறார்... அவர் கருணையைப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் சுவாமியிடம் நன்றியோடிருக்க வேண்டும்! நன்றியோடு இருப்பது என்பது சுவாமியிடம் விடாப்பிடியான பக்தியோடும்... பிறரிடம் பவ்யமாகவும்... வினயமாகவும் இருப்பதே! நன்றி உள்ளவர்க்கு எப்படி அகந்தை வரும்?! அந்த மனப்பக்குவத்தையே சுவாமி நம்மிடமிருந்து விரும்புகிறார்! நன்றி இல்லாத மனிதர் நடமாடும் பிணத்திற்கு சமம்!! எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு... அந்த உய்வையே தருகிற சுவாமி மேலான நன்றியைக் கொன்றவரின் வம்சங்களே உய்வது சாத்தியமா?! இதய நன்றியின் வெளிப்பாடே இமய நிகர் பக்தியும்... இதய நெகிழ் ஆன்ம சாதனையும்...!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக