தலைப்பு

திங்கள், 28 மார்ச், 2022

டாக்டர்களால் கைவிடப்பட்ட தன் மாணவருக்கு கண்பார்வை அளித்த கண்ணப்ப சாயி!


தீராத பிணிகளைத் தீர்த்தார். வாராது சென்ற உயிர்களை மனித உடலுக்குள் செலுத்தி  மறுபடியும் உயிர்ப்பித்தார். பாபா செய்யாத அற்புதங்கள் உண்டோ. செய்த அற்புதங்களுக்கு கணக்குதான் உண்டோ. இவை அனைத்தும் அவரது கை அசைவிலே, அசைவில் பெருகும் லீலா விபூதியிலே விளைந்த கருணையால் அன்றோ. பாபாவின் எண்ணற்ற லீலைகளில் மற்றுமொரு அமுதச் சொட்டு. கண் இழந்த தம் மாணவர்மீது கருணை கொண்டு, கை அசைந்த விபூதியால் அதைக் குணப்படுத்திய விந்தை. பாபாவின்  அந்நாளைய மாணவர் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் கூறும் பாபாவின் மற்றுமொரு திவ்ய கருணாலீலையைக் காண்போமா... 


நான் பாபாவின் பெங்களூர் கல்லூரியில் இளங்கலை முடித்து முதுகலையில் சேர முயன்றேன். அங்கு இடம் கிடைக்காததாலும், அப்போது  புட்டபர்த்தியில் முதுகலை படிப்பு ஆரம்பிக்கப்படவில்லை ஆதலாலும் , அனந்தபூரில் தனியார் கல்லூரியில் முதுகலை சேர்ந்தேன். அச்சமயம் புட்டபர்த்தி கல்லூரியில்  வார்டனாகப் பணி ஆற்றிய எனது சீனியர் என்னை அழைத்து, "ரவி, விரைவில் அகில உலக மாநாடு ஒன்று நடக்கவிருக்கிறது. அதில் ஏசுபிரான் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகம் ஒன்றை நடத்த பாபா அனுமதி அளித்து உள்ளார். நீயும் அதில் நடிக்கிறாய்" என்றார். இதன்பின் ஸ்வாமியும் என்னை அழைத்து, நான் செய்யப் போகும் கதாபாத்திரம் பற்றிக் கூறினார். அதன்படி கண் தெரியாதவனாக நடிக்கும் என்முன் ஜீசஸ் கிரைஸ்ட் வந்து என் கண்களைத் தொட, எனக்குப் பார்வை திரும்பிவிடும். 


🌹உனக்கும் பார்வை கொடுக்கிறேன் மூன்றுமுறை சொன்ன பாபா:

நாடக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது... 


ஜீசஸ் வந்து கொண்டிருக்கிறார். அப்போது "எனக்கு கண்பார்வை தாருங்கள்" என நான் வேண்ட, ஜீசஸ் உனக்கு என்மீது பூரண விஸ்வாசம் உண்டா எனக் கேட்க, ஆம் என நான் சொல்கிறேன். பிறகு ஜீசஸ் என் கண்மீது தமது கையை வைக்க எனக்கு கண் பார்வை கிடைத்து விடுகிறது. இந்த சீன் ஒத்திகை நடக்கும் நேரத்தில் பாபா அங்கு வந்தார். "பார் பாபா வந்ததினால் தான் உனக்கு கண் பார்வை கிடைத்தது" என்றார். அனைவரும் இதை ஒரு ஜோக்காக எண்ணி சிரித்தோம். மறுநாளும் இவ்வாறே பாபா வந்து, "சாயிபாபா வந்ததால் உனக்கு பார்வை கிடைத்தது" என்றார். மூன்றாவது முறையாக, பாபா நாடக ஒத்திகைக்கு வரும் முன் தமது தரிசனத்தை முடித்துவிட்டு வந்தார். "ரவிகுமார், நீ சற்றுமுன் பெரும் கை தட்டல் ஒலிகளைக் கேட்டாயல்லவா. அங்கு அமர்ந்திருந்த 18 வயது பிறவிக் குருடான பெண்ணுக்கு , கண் பார்வையை அளித்தேன். அதனால் தான் கைதட்டல். அது போல உனக்கும் நான் கண்பார்வை அளிப்பேன்" என்றார். எனக்கு அப்போது இதன் முக்கியத்துவம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.


🌹பாபாவின் தீர்க்க தரிசனம்:

இதன் பிறகு ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. அப்போது பர்த்தியில் Ph.d. மாணவனாக பயின்றுகொண்டிருந்தேன். 


ஒருநாள் பரிசோதனைக் கூடத்தில் தனியாக ஒரு பரிசோதனையை செய்ய முயலுகையில், அந்த விபரீதம் நிகழ்ந்தது. சோதனைக்குழாய் வெடித்து அதிலிருந்த சல்ப்யூரிக் அமிலம் கண்களில் தெறித்து, தாங்க இயலாத எரிச்சலுடன்  அங்குமிங்கும் அலறிக் கொண்டு ஓடினேன். கண்களை தண்ணீர் கொண்டு கழுவிட, சல்ப்யூரிக் அமிலம் கண்களில் அதி வேகமாக பரவ ஆரம்பித்தது.மருத்துவ மனையிலும் கண் டாக்டர் யாரும் இல்லாததால், என்னை பெங்களூர் போகும்படி கூறினர்.நான் மறுத்துவிட்டேன். "பாபா இங்குதான் இருக்கிறார். அவர் தரிசனத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்" எனக் கூறினேன். அவ்வாறே என்னை  பாபாவின் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். பாபா வருவதை அருகில் இருந்தவர் ஒரு நேரிடை விமர்சனம் போல எனக்குக் கூறிக் கொண்டு இருக்கையில், என் எதிரில் அங்கியின் சலசலப்பு கேட்டது. 


ஆம்.பாபா அருகில் வந்துவிட்டார். பாபா என்னிடம் மூன்று பாக்கெட் விபூதி கொடுத்துவிட்டு,!.. "இதை தினம் 3 வேளையாக 3 நாட்களுக்கு உபயோகி. எல்லாம் சரியாகிவிடும்" என்றார். வாங்கி அதை 3 நாட்கள் தரித்துக் கொண்டேன். முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை. மூன்றாம் நாள் இரவு மிகுந்த மனவேதனையுடன், நாற்காலி. யிலேயே சாய்ந்து உறங்கி விட்டேன். நான்காம் நாள் காலை விடிந்தது. காபியுடன் ஒருவர் வந்து என்னை எழுப்பினார். சார் . என் உடையின் நிறம் என்ன ? அவசியமற்ற இந்தக் கேள்வி என்னைக் குழப்பினாலும்  சரியான விடையை  அளித்தேன். அவர் கூறினார். சார் உங்கள் கண் குணமாகிவிட்டது. ஆமாம். இந்தமகிழ்ச்சியான உண்மை என்னைத் திக்குமுக்காட வைத்தது. அன்றைய காலை தரிசனத்தில் பாபா கூறினார் "உனக்கு கண் பார்வை சரியாகிவிட்டது. நீ இனி கண்ணாடி அணிந்து, கவனமாக வேலை பார்" மனம் விம்ம, நன்றி கண்களில் நீராகப் பெருக்கெடுக்க நான் பாபாவின் பாதங்களைப் பற்றி என் கண்ணீரால் நனைத்தேன்.


🌹பாபாவின் வற்றாத அருள் ஊற்று:

மறுபடியும் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன், பாபாவின் ஆணைப்படி கண்ணுக்கு கண்ணாடி அணிந்தபடி . இம்முறை கண்ணாடி நழுவி கீழே விழுந்து உடைந்துவிட்டது. ஆராய்ச்சி  கடைசி கட்டத்தில் இருந்ததால் , தொடர்ந்து ஆசிட்களை கலந்து முடிவுகளை அறிய வேண்டியிருந்தது. இப்போதும் அது நிகழ்ந்துவிட்டது. ஆராய்ச்சிக் குழாய் வெடித்து ஆசிட் கண்களில் சிதற, அருகில் உள்ளவர்கள் பதறி தண்ணீரால் அதை கழுவ, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். கண்களை பரிசோதித்த டாக்டர், நான் நிரந்தரமாகப் பார்வையை இழந்துவிட்டதாக கூறிவிட்டார். செய்வதறியாது, மறுபடியும் பாபா தரிசனம் காண , கண்களில் பேண்டேஜுடன் சென்றேன். 


தரிசனம் தர ஆரம்பித்த பாபா ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துவிட, ஓடோடி வந்தார். நான் சொன்னேன் அல்லவா, கவனமாக இருக்கும்படி "எனக் கடிந்த வண்ணம், விபூதி ஸ்ருஷ்டித்துக் கொடுத்தார். மறுநாள் கண் பேண்டேஜை  அவிழ்க்க கண் டாக்டரிடம் சென்றேன். பலமுறை என்னை பரிசோதித்த அவர் நம்பமுடியாமல் கூறினார் "இப்போது உங்கள் கண் பார்வை சிறப்பாக உள்ளது"


🌻சாயிராம். பாபாவின் கருணை விசித்திரமானது. பக்தர்களுக்கு நேரிடும் இடையூறுகளை முன்கூட்டியே அவர் அறிவார். தக்க சமயத்தில் அவைகளைத் தீர்த்து, அவர்களைக் காத்து ரட்சிப்பார். ஓம் ஸ்ரீ சாயி தீனஜன போஷகாய நமஹ 🙏🏻🙇🏻‍♂️


ஆதாரம்:  “Love All Serve All” published by Sathya Sai Publications of New Zealand. Page: 302-304.

தமிழாக்கம்: கவிஞர் குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


இவரது மெய்சிலிர்க்கும் நேர்காணலை தமிழில் கேட்க... 
⬇ ⬇ ⬇ 


Courtesy: Radiosai கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக