இக்கட்டான சூழ்நிலை எதுவாயினும் பாபா தன் பக்தர்களை கைவிடுவதே இல்லை.. தக்க சமயத்தில் தடுத்தாட் கொள்கிறார்.. தக்க சமயம் என்பது பல பக்தர்களுக்கு துக்க சமயமாகவே இருக்கிறது.. அப்படி ஒரு துப்பாக்கி முனையில் உயிர் ஊசலாடிய சம்பவம் சுவாரஸ்ய சுருக்கமாய் இதோ...
அது 1974... ஃபில்லிஸ் க்ரிஸ்டல் எனும் பாபா பக்தை தனது கணவரோடு மார்ச் மாதத்தில் மும்பையிலிருந்து லண்டனுக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறுகிறார்கள்... சுவாமியின் பரம பக்தர்கள் அவர்கள் இருவரும்... பாபாவே எல்லாம் அவர்களுக்கு... விமானப் பறவை பறக்க ஆரம்பிக்கிறது... சீட் பெல்ட் போடப்பட்டது... பூமி கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளியாகிறது... உயர்ந்த இடத்திலிருந்து பார்க்கும் போது எல்லாமே சிறு புள்ளியாகவே தோன்றுகிறது... மனப்பக்குவமே அப்படி ஒரு உயரத்தை மனிதனுக்கு தருகிறது! ஆக விமானம் மேகத்தை உரசிப் பயணிக்கிறது... அது பெய்ரூட் தாண்டியதும் அங்கு ஏற்கனவே முகமூடி அணிந்திருந்த ஹை-ஜாக்கர்கள் பறக்கின்ற விமானத்தை கைப்பற்றிக் கொள்கிறார்கள்... ஓ' என அலறல்... உஷ் என மிரட்டுகிறார்கள்...மனித முதுகெலும்பை விட பெரிதான துப்பாக்கிகள்... தண்ணீர் குடிக்க வாய் திறக்கும் போது துப்பாக்கியை காட்டினால் அதிர்ச்சியில் தண்ணீர் முகத்திலேயே கொட்டிவிடுவது போல் வியர்வை பொங்கி வழிகிறது பயணிகளுக்கு... பயம் தொண்டைக் குழியை கவ்விப் பிடித்துக் கொள்கிறது... விமானத்தில் ஒரே அமைதி.. தியான அமைதி இல்லை...மயான அமைதி! இப்படி வந்து மாட்டிக் கொண்டு விட்டோமே என விதியை நினைத்து நொந்து கொள்கிறார்கள்... விமானம் கீழ் இறங்குமா? அதற்குள் எத்தனை உயிர் இதோ தெரிகிறதே அந்த மேகங்களோடு மேகமாகுமோ என கடத்தப்பட்டவர்கள் கவலையோடு நினைக்கிறார்கள்... விமானத்தில் பயணிப்பதே பாதுகாப்பின்மை தான்... இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் பரலோகத்திற்கு இலவச டிக்கட் தான்.. அதையும் பொருட்படுத்தாமல் பயண சவுகரியம் கருதி பயணிப்பவர்கள் இது என்ன இப்படி ஒரு இடைஞ்சல் என இதயம் கசந்து போகிறார்கள்...
விமானம் முழுவதிலும் வெடி மருந்தை பரப்பி வைக்கிறார்கள் ஹை-ஜாக்கர்கள்... எப்போது எது வெடிக்கும் என தெரியாது... கால் வைக்கவே அஞ்சுகிறார்கள் பயணியர்... பாலஸ்தீன கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்பதே ஹை-ஜாக்கர்களின் ஒரே மிரட்டல் நிபந்தனை... அந்த விமானத்தை ஓட்டியவரின் பாடு பெரும் பாடு... ஹை-ஜாக்கரில் ஒருவன் விமான ஓட்டுனர் என்றால் எப்போதோ அந்த விமானியை கொன்றிருப்பார்கள்... ஆக பறக்கும் போர்க்களமாக மாறி இருந்தது விமானம்!
ஃபில்லிஸ் க்ரிஸ்டல் கண்கலங்கிய முகத்தோடும்... நடுங்கிய கைகளோடும் பாபாவை கண்மூடி ஆழமாய் பிரார்த்தனை செய்கிறாள்.. "சுவாமி ! நீங்களே ஒரே கதி... எங்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள்! உங்களை விட்டால் வேறு துணையே இல்லை சுவாமி" என மனதோடு பேசி இறைவன் சாயியிடம் இறைஞ்சுகிறார்.. க்ரிஸ்டல் பெயருக்கு தகுந்தாற் போலவே க்ரிஸ்டல் உள்ளம்..
அப்போது அவளுக்குள் பாபா பேசுகிறார்.. பாபா குரலை அவளால் நன்றாக கேட்க முடிகிறது.. பரவசப்படுகிறார்... அருகே அமர்ந்திருக்கும் கணவருக்கு எதுவுமே புரியவில்லை... பாபாவோ "பயப்படாதே.. தைரியமாக இரு.. நான் இருக்கிறேன்.. அந்த ஹை-ஜாக்கர்களிடம் அன்பாக இரு.. உன் உள்ளத்து அன்பை ஊற்று... அவர்களை உன் அன்பால் மாற்று!" என்கிறார்... பாபா பேசியதை தெளிவாகக் கேட்டு அப்படியே செயல்படுகிறார் க்ரிஸ்டல்... பாபாவாவது மனதிற்குள் பேசியதாவது என சந்தேகப்படுகிறவர்களுக்கு... ஒருவர் வாழ்வில் நடந்து கொள்ளும் அணுகுமுறையை வைத்தே அவர்களிடம் கடவுள் பேசுகிறாரா? இல்லை கற்பனை பேசுகிறதா? என்பதை கண்டுபிடித்து விடலாம்...ஒருவர் எவ்வகை மனப்பக்குவத்தில் வாழ்கிறார் என்பதை வைத்தே அவர் கடவுள் சொல்படி வாழ்கிறாரா? இல்லை கற்பனை சொல்படி வாழ்கிறாரா? என்பதை அறிந்துணரலாம்.. இது தான் அந்த ரகசிய சூட்சுமம்...! ஏற்கனவே பயந்து போயிருக்கும் ஒருவர் தனக்குத் தானே "ஹை-ஜாக்கர்களை நேசி!" என்று கற்பனை செய்து மனதிற்குள் பேசி இருப்பாரா? சத்தியமாக இல்லை... பயந்து துக்கத்தில் இருக்கும் ஒருவரால் முதலில் எவரையும் நேசிக்கவே முடியாது... அவரின் கற்பனையும் அதைச் சொல்லாது! உளவியல் விஞ்ஞானம் அது! ஆனால் மெய்ஞானம் முற்றிலும் வேறுவகையானது! இது இறைவன் மொழியே என்பதை ஒருவரின் செயலில் வைத்தே முடிவு செய்துவிடலாம்...
க்ரிஸ்டலும் மிக அன்பாய் நடந்து கொள்கிறார்.. அந்த ஹை-ஜாக்கர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.. அனைவரும் இஞ்சி தின்றதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டிருக்க... அந்த பக்தை ஒருவர் மட்டும் அமுதம் குடித்ததைப் போல் புன்னகை புரிகிறார்... கனிவாக நடந்து கொள்கிறார்... எவரால் பலமணிநேரம் அமர்ந்தே இருக்க இயலும்? கழிப்பறை காரியங்கள் செல்ல வேண்டுமே... சூழ்ந்திருந்த ஹை-ஜாக்கர்களின் இதயத்தை தன் அன்பால் நிரப்புகிறார்... அவர்களால் நம்பவே முடியவில்லை.. ஆச்சர்யப்படுகிறார்கள்... பிறகு அந்த பாபா பக்தையால் அங்குள்ள சூழ்நிலையே மாறிவிடுகிறது! அந்த பக்தை நடந்து கொள்வதைப் பார்த்து அனைவருக்கும் ஒருவித பாதுகாப்புணர்வு ஏற்படுகிறது... ஏதோ குடும்பச் சுற்றுலாவுக்கு இணைந்து மகிழ்ந்து செல்வதைப் போல் நடந்து கொள்கிறாளே என்ற பேராச்சர்யம்... இறுதியில் ஆம்ஸ்டர்டாமில் விமானம் தரை இறங்குகிறது எந்தவித உயிர் சேதமும் இன்றி... அந்த பக்தையின் அன்பால் செயலற்று நின்ற ஹை-ஜாக்கர்கள் பூனை போல் சாதுவாகி தானே முன் வந்து கைதாகிறார்கள்!
(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 207 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி )
ஆகச் சிறந்த அன்பு ஒரு சிறு ஜீவனின் மனதைக் கூட காயப்படுத்துவதில்லை... அன்புக்கு அகந்தையின் அர்த்தம் கூட தெரியாது... அகந்தையால் அன்பை மாற்றிவிட முடியாது.. ஆனால் அன்பால் அகந்தையை மாற்றிவிட முடியும் என்பதே நிதர்சனம்... மனித இனமே வளமை காண ஒரே ஒரு ஆயுதத்தை மனதில் ஏந்தினால் போதுமானது... அதுவே அன்பாயுதம்... அந்த பேரன்பின் ஊற்றே பாபா தான்! அன்பால் மட்டுமே மனித மனதை மட்டுமல்ல இறைவனையே திருப்தி செய்ய முடிகிறது! அத்தகைய அன்பு இதயம் விரிவடையும் போதே பக்தியால் பக்தி தரும் சரணாகதியால் ஏற்படுகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
ஓம் சாயிராம் 🙏🏼
பதிலளிநீக்கு