தலைப்பு

சனி, 26 மார்ச், 2022

வியாதிகள் பரவுவதற்கான காரணம் என்ன? எச்சரிக்கிறார் பாபா

இக்காலத்தில் வியாதிகள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை... சொந்த வீடு என்ற ஒன்றை கட்டிக் கொண்டு மனிதன் வாழ்கிறானோ இல்லையோ சொந்த வியாதிகளோடு வாழ்கிறான்! உடல் சார்ந்த நோய்களுக்கு மனம் சார்ந்த நோய்களே மிகப் பெரிய காரணமாகி இருக்கின்றன... இதோ பாபாவே தனது தெய்வத் திருவாய் மொழியால் விளக்குகிறார் இதோ...


"ஆசைகள் அதிகமாகிவிட்டதால் மக்களின் ஆட்டங்கள் அதிகமாகிவிட்டன... உடலாலும் மனத்தாலும் ஓயாத அலைச்சல்களில் தேவையில்லாத சுமைகளை தூக்கி வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்... புகைபிடிப்பது , மதுபானம் , நெடுநேரம் க்யூ நின்று இறுக்கமாக கும் இருட்டில் அமர்ந்து மனத்தை கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் சினிமாக்களை பார்ப்பது... பண வேட்டையில் பறப்பது.. அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு தொண்டையையும் நரம்பையும் சக்தி விரயம் செய்து நலிவித்துக் கொள்வது... நாகரிகம் என்று நினைத்துக் கொண்டு கூடை போல் முடி...கசகசப்பு உடை என திரிவது... கண்ட இடத்தில் கண்ட வேளையில் கண்டத்தைத் தின்பது... எதிலும் ஒரு ஒழுக்கம் இல்லாமல் ஒரே டென்ஷன் மயமாக்கிக் கொண்டிருப்பது ஆகியவற்றால்தான் இப்போது இதயநோய் , ரத்த அழுத்தம், டி.பி, ஈஸினோஃபிலீயா, புற்று நோய் எல்லாம் அதிகமாகியிருக்கின்றன... நிம்மதியாக , லேசாக எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தால் முக்கால்வாசி வியாதி வரவே வராது! எல்லாவற்றையும் விட அகங்காரம் இல்லாமல் அதனால் ஏற்படும் விரோதமும் விவாதமும் இல்லாமல் அன்பாக இருக்கப் பழக்கிக் கொண்டால் அந்த அன்பு தரும் ஆனந்தமே மகத்தான ஆரோக்கியமும் தரும்!" என்கிறார் அகில உலகத்தை காப்பாற்றி ரட்சிக்கும் அக்கறை மிகுந்த ஒரே பிரபஞ்சத் தாய் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!


(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 246 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)  


புற்று நோயை விட ஆன்மாவுக்கு கேடு தருவது பற்று நோய்.. பற்று எனும் நோய்... அதிக காரம் சாப்பிட்டால் உடலுக்கு ஒவ்வாது.. இன்னொரு காரம் இருக்கிறது அது ஆன்மாவுக்கே ஒவ்வாது... அதுவே அகங்காரம்.. மற்றொரு காரம் உலகத்திற்கே ஒவ்வாது.. அதுவே அதிகாரம்! ஆக பாபா சொல்லும்படி நாம் வாழ வேண்டும்.. அப்படி வாழ்ந்தால் தான் "பாபா என்னை காப்பாற்று!" என வேண்டிக் கொள்ளும் தகுதியும் உரிமையும் நமக்கு வருகிறது.. நம் இஷ்டம் போல் நாம் வாழ்ந்துவிட்டு கேடு வருகையில் இறைவனை பழிப்பது என்பது ஆகச் சிறந்த மனித அறியாமை.. கூடுதலான தீய கர்மா! ஆக‌..பாபா சொல்படி நாம் பரிபக்குவமாக வாழ்ந்து உடல் ஆரோக்கியம் - மன ஆரோக்கியம் - ஆன்ம ஆரோக்கியம் என மூன்று வகை ஆரோக்கியத்தையும் பேணி பாதுகாப்போம்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக