தலைப்பு

வெள்ளி, 4 மார்ச், 2022

ஒரு ஊதுவத்திப் புகை வழிகாட்ட இருசாயியும் ஒன்றே என உணர்ந்த பக்தை!


மிகுந்த விசித்திரமான அனுபவம் ஒரு பக்தைக்கு நிகழ்ந்திருக்கிறது... இந்த அனுபவங்கள் முழுக்க புகையும் புகை சார்ந்த இடமும்...அதனூடே மாயை எனும் மனப் புகையையும் எவ்வாறு சுவாமி விரட்டுகிறார் என்பது இதோ....


நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்... இறைவனில்லாமல் அற்புதங்களும் நிகழாது.... அற்புதங்கள் என்பதற்கும் நிகழ்வுகள் என்பதற்குமான வித்தியாசம் ... அற்புதங்கள் பக்தர்களின் கேள்விகளின் விடையைத் சுமந்து கொண்டு வரும்! பெரும்பாலான மனிதனின் நிகழ்வுகள் அவனின் கர்மாவை சார்ந்தே நிகழ்கின்றன... அற்புதங்களோ இறைவனின் கருணையோடு நிகழ்கின்றன...!


பெசன்ட் நகர் மகளிர் மன்றத்தில் நூலாசிரியரும் அவருடைய தோழியான அனுராதாவும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள்! ஒரு சமயம் அனுராதாவின் தாயார் ஊரிலிருந்து வருகிறார்...! அவர் தீவிரமான ஷிர்டி சாயி பக்தர்... "என்ன இருந்தாலும் எனக்கு ஷிர்டி பாபாவிடம் தான் ஈடுபாடு அதிகம்...அவர் போல் ஆகுமா?" என்பாராம்...இது தான் ரூபத்தில் சிக்கிக் கொண்டு சாராம்சத்தை விட்டுவிடுவது! ஒரு மாவில் செய்யும் பணியாரங்கள் வடிவத்தில் வேறாயினும் ருசி ஒன்றே! ருசிக்காமலேயே தான் உண்ட பணியாரம் மட்டுமே ருசி... மற்றவை எல்லாம் கசப்பு என்கிற கற்பனை வகையைச் சார்ந்த மொழி அது! ஆனால் அவரின் 2 மகளோ பர்த்தி சுவாமியின் பக்தைகள்... 2 சுவாமி அனுபவங்களையும் அவள் சொல்லிக் கொண்டிருக்கிற அந்த நேரம் இளைய மகளுக்கும் தாய்க்கும் ஒரு விவாதம்..."நீ எப்போதுமே அந்த முதியவரையே தான் புகழ்ந்து கொண்டிருப்பாய்... எங்கள் சுவாமியின் மேல் உனக்கு நம்பிக்கையே இல்லை..." என்கிறாள்... ஏதோ வருத்தத்திலிருந்த அந்த அம்மையார் "ஆமாம் நீ அந்த பரட்டைத் தலையரையே நம்பிக் கொண்டிரு... அவர் அப்படி என்ன உங்களுக்கெல்லாம் செய்துவிட்டார்?" எனப் பேசிவிடுகிறார்... 2 மணி நேரம் வாதம் நீடிக்கிறது... இரவாகிவிடுவதால் சாப்பிடச் செல்கிறார்கள்... வாதத்தால் எந்தப் பயனும் இல்லை... சமையல் எப்படி செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருப்பதாலோ... அல்லது சாப்பிடாமலேயே என் சமையல் தான் சிறப்பு... உன் சமையல் மட்டம் எனப் பேசிக் கொண்டிருப்பதாலோ பசி அடங்குவதே இல்லை!


உணவருந்தி விட்டு ஒரு புத்தகத்தை அந்த ஷிர்டி சுவாமி பக்தையான அம்மையார் திருப்புகிறார்... சடாரென ஒரு வாசகம் படித்து ஸ்தம்பித்து உறைகிறார்... "என்னை ஏன் ஏளனம் செய்கிறாய்? நான் உன் அன்னை!" இது தான் அந்த வாசகம்... வாயடைத்துப் போகும் அந்த ஷிரடி சுவாமி பக்தை கண்ணீர்த் துளியை தன் மன்னிப்பின் மொழியாகக் கசிகிறார்! அன்னை தானே சுவாமி!! அன்னையிடம் கோபித்தாள் அன்னை பதிலுக்கு கோபிப்பாளா? நிகழ்ந்தால் ஏதும் தனக்கு நிகழட்டும் தன் பிள்ளைகள் பிழைக்கட்டும் என நினைப்பது தான் தாய்ப்பாசமே...! அந்தப் புத்தகம் திருப்புகையில் சுவாமி அளித்த பதில் போல் பல்வேறு பக்தர்க்கு நிகழ்ந்திருக்கிறது ... குறிப்பாக அமெரிக்க வாழ் பக்தை ஜெயந்தி மோகன் அவர்களின் அனுபவம் இதற்கு நூதன சான்று!! அதையும் நம் சத்யசாயி யுகத்தில் பதிவு செய்திருக்கிறோம்!! 


அந்த அம்மையார்க்கு தன்னை "அன்னை" என சுவாமி சொன்னவுடன் ஆடிப்போய்விடுகிறார்... அவர் புதுவை அன்னையின் பத்தையும் கூட... புதுவை அன்னைக்கு மாடி அறையில் தினந்தோறும் வெள்ளைப் பூ சாற்றி ஊதுவத்தியும் ஏற்றுவார்... அந்த அறையில் சுவாமி படமும் மாட்டப்பட்டிருக்கிறது...ஒரு முறை ஏதோ கோபத்தில் சுவாமி படத்தை கழற்றி நேர் எதிர் ஓரத்தில் இருக்கும் பீரோவில் வைத்து விடுகிறார்... அன்றும் புதுவை அன்னைக்கு வெண்பூ சாற்றி ஊதுவத்தி ஏற்றுகையில்... ஒரு அதி அற்புதம் நிகழ்கிறது... அந்த ஊதுவத்திப் புகை நேராக சென்று பிறகு வளைந்து பீரோவுக்குள் புகுந்து உள்ளே சென்று கொண்டிருக்கிறது... தலையை திருப்பி மேலே பார்க்கிறார்... மின்விசிறியும் இயங்கவில்லை... புகை மிக நிதானமாக அந்த பீரோவுக்குள்ளே சென்று கொண்டிருக்கிறது... பீரோவை திறக்கிறார்... சுவாமி குறும்புச் சிரிப்போடு அபய ஹஸ்தம் தூக்கியபடி திருப்பத்தில் காட்சியளிக்கிறார்...!  சடாரென அந்த திருப்பத்தை எடுத்து.. ஆம் திருப்ப(ட)த்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு அரவணைக்கிறார்... "என்ன செய்துவிட்டார்?" என்று அவர் கேட்ட கேள்விக்குறி... "என்ன செய்துவிடவில்லை!" என ஆச்சர்யக்குறியாக மாறிவிடுகிறது... இப்படி கோடிக்கணக்கான கேள்விக்குறிகளின் முதுகை நிமிர்த்தி ஆச்சர்யக்குறிகளாக மாற்றிவிடுவது என்பது சுவாமிக்கு சர்வ சாதாரணம்!


மகிளா விபாக்'கை சேர்ந்த மண்டலி படம் நூலாசிரியரிடம் இருக்கிறது...ஒருமுறை அந்த சுவாமியின் திருப்படத்தை சுமந்து கொண்டு செல்கிறார்.. மண்டலியில் கலந்துரையாடல் முடிந்து மீண்டும் சுவாமி திருப்படத்தை வசுதேவர் சுவாமியை சுமந்தபடி... பரதன் சுவாமி பாதுகையைச் சுமந்தபடி நூலாசிரியர் மார்போடு அணைத்துக் கொண்டு நடந்து இல்லம் நோக்கி வருகையில்... ஒரு தெருவில் குப்பைகளை தீவைத்துக் கொளுத்தியதில் ஒரே புகை... ஊதுவத்திப் புகையல்ல ஊதி ஊதிப் பெரிதான துர்நாற்றப்புகை... அய்யய்யோ இந்தப் புகையைக் கிழித்தபடி சுவாமியை சுமந்து செல்ல வேண்டுமா "சாயி ராம்!" என இதயம் கனக்கிறது... மாற்று வழியில் செல்லலாம் என்றால் பெரிய சுற்று அது... "சுவாமி!" என மெது மெதுவாக அடி எடுத்து நகர்கையில் "ஆச்சர்யங்களும் ஆச்சர்யப்படவே" என்கிற வகையில் கண்களை மறைக்கும் அந்த துர்நாற்றப்புகை இரண்டாகப் பிரிகிறது... பிரிந்து நூலாசிரியருக்கு வழிவிடுகிறது... எதற்காக வசுதேவர் உதாரணம் சொல்லப்பட்டது என இப்போது புரிந்திருக்கும்... ஸ்ரீ இராகவேந்த்ர சுவாமிகளின் பக்தர் அவரின் சமாதி நிகழ்விற்கு வர துடிக்கிற போது ஒரு ஆறு வழிவிட்டதே அப்படி...! கண்கலங்கிய படி நூலாசிரியர் அந்த இடைவெளி வழியில் இமைவெளி நனைந்தபடி நகர்ந்தபடி இல்லம் வந்து சேர்ந்துவிடுகிறார்! 

அதர்மமே சுவாமியிடம் அடிபணிகிற போது துர்நாற்றப்புகை சுவாமியின் திருப்படத்தை என்ன செய்துவிட முடியும்?!


(ஆதாரம்: அற்புதமும் ஆன்மீகமும்-1/ பக்கம் : 30 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


அண்ட சராசரங்களை அடக்கி ஆள்வதும்... மகான்களுக்கும் ஸித்த சக்தி அளிக்கிற பேராற்றலும் சுவாமி எனும் திருரூபத்தில் சம்பவாமி யுகே யுகே என திருஅவதாரம் நிகழ்த்திய படி திகழ்கிறது!! அந்தப் பெருங்கருணையாலேயே பூமி தன் சமநிலையை அடைந்தும்... சரணாகதியை மனிதன் அடைய முக்தியை வழங்கியும் வியாபிப்பதில் சைதன்ய ஜோதியான சுவாமிக்கு சாதாரண புகை ஒரு பகையே இல்லை!! அதையும் இயக்குபவர் சுவாமியே என்பதை உணர முடிகிறது! 


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக