தலைப்பு

திங்கள், 21 மார்ச், 2022

திராவிடர் கழகத்து முனுசாமியை முரட்டு பக்தராய் மாற்றிய பரமாத்ம பாபா


நாத்திகர்கள் இறைவன் இல்லை என சொல்பவர்கள்... எல்லா சொல்லிலும் பாபா குடியிருக்க... " இல்லை " என்ற சொல்லிலும் ஆம் என்றபடி பாபா நிறைந்திருக்கிறார் என்பதை நேர்காணல் வழி உணர்ந்த தி.க முனுசாமி பாபாவிடம் வைத்த கோரிக்கை என்ன..? சுவாரஸ்யமாய் இதோ...

நாத்திகர்களையும் நேசிக்க வேண்டும் என நமக்கு கற்று தருபவர் பாபா. புலன்களுக்கு அப்பாற்பட்ட பாபாவை புலன்களுக்கு அப்பாற்பட்டே தியானத்தில் உணரமுடிகிறது! அப்பேர்ப்பட்ட இறைவனை இல்லை என்று சொல்லி தீயாய்ப் பிரச்சாரம் செய்து வந்தவர் திராவிடர் கழகத்து முனுசாமி.. திரு பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் கழகம் தொடர் நாத்திகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.. அதில் இணைந்து முனுசாமியும் செயல்படுகிறார்.. ஒரு முறை பாபா ஒரு பொய் - போலி என தவறாக நினைத்து அவரின் முகத்திரையைக் கிழிக்க ஆலோசித்து.. அவரை ஆராய்ச்சி செய்வதற்காகவே புட்டபர்த்தி வருகிறார் முனுசாமி... முனுசாமிக்கு உடனே கருணை கூர்ந்து நேர்காணல் தருகிறது நம் சாமி! நேர்காணலில் முனுசாமிக்கு நேர்ந்த அனுபவத்திற்கு பிறகு தலைகீழாக இருந்தவர் அப்படியே நேராக மாறிவிடுகிறார்...அந்த நேர்காணல் அனுபவத்தை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே இல்லை...ஆனால் வெளிப்படையாக பாபா பக்தராக மாறுகிறார் முனுசாமி... உள்ளே அவருக்கிருந்த சந்தேகங்களும் மறைந்து போய்விடுகின்றன... வெளியே பக்தனாக காட்டிக் கொண்டு உள்ளே ஆயிரம் சந்தேகக் கற்பனையோடு இருப்பதைக் காட்டிலும் நேர்மையான நாத்திகரை பாபா எப்போதுமே விரும்புகிறார்! அந்த நேர்காணல் அனுபவத்திலிருந்து சுவாமியிடம் மிகவும் உரிமையோடு நடந்து கொள்கிறார் முனுசாமி... முதுகு வளைந்து கை கூப்பி இப்படி எல்லாவிதமான வெளிப்புற பாவனைகளும் முனுசாமிக்கு அறவே தெரியாது... வேடன் கண்ணப்பனுக்கு சடங்குகள் தெரியாது ஆனால் பக்தி இருந்ததே அது போல்... நாத்திகம் பேசிய வாய் இப்போது நாயகன் சாயியை பேசுகிறது! அதுவும் பூரண உணர்தலோடு பேசி வருகிறது...! 


அவருடைய வித்தியாசமான குணங்களில் ஒன்று அடித்துப் பேசுவது.. அப்போது நாத்திகம்.. பாபா உணர்த்திய பிறகு ஆன்மீகம்...! ஒருமுறை அவரின் மகனுக்கு தீராத வயிற்றுவலி.. எந்த மருத்துவத்திற்கும் சரியாகவில்லை...நேராக புட்டபர்த்திக்கு அழைத்துக் கொண்டு போகிறார்... சுவாமி முனுசாமிக்கு நேர்காணல் தருகிறார்... கை அசைத்து சிருஷ்டி விபூதி தந்து "கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்கிறார்... அதற்கு தடாலடியாக பக்தர் முனுசாமியோ "சாமி இந்தக் "கொஞ்ச நாள்" சமாச்சாரம் எல்லாம் வேணாம்... இப்போ இந்த நிமிஷமே பையன சரி பண்ணுங்க... இல்லாட்டி ஊருக்கு போறத்துக்கள்ளயே வயத்த வலின்னு சொல்வான்.. ஊருக்கு போன அப்றம் பாபா'ட்ட போனியே இன்னும் சரியாகலயான்னு கேலியா பேசுவாங்க.. இந்த ரோதனை எல்லாம் வேணாம்... இப்பவே நீங்க சரிபடுத்தினாத்தான்... இந்த ரூமை விட்டுப் போவேன் !" என்கிறார்... அதுவும் சாதாரணமாகச் சொல்லவில்லை... பாபாவின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறார் முனுசாமி! முரட்டு பக்தி அது! இறைவனுக்காக பிள்ளையை வெட்டி கறி சமைத்துப் படைக்கத் துணிந்த பக்தி அது! 



தம்மை உரிமையோடு கேட்கிற பக்திக்கு மெச்சி பாபா.. அந்த வயிற்று வலி மகனை நேர்காணல் அறையின் தடுப்புத் திரைக்குப் பின்னால் அழைத்துப் போகிறார்... உடனே மருத்துவமனையின் மருந்து நெடி பரவுகிறது... ஸர்ஜரிக் கருவிகளின் சப்தம் திரைக்கு உள்ளிருந்து கேட்கிறது... ஒரு சில நிமிடங்களில் வலியே இன்றி அறுவை சிகிச்சை முடிக்கப்பட்ட முனுசாமி மகன் நடந்து வருகிறான்.. அவன் வயிற்றுப் பகுதியில் தையல் கோடுகளுக்குப் பதிலாக விபூதிக் கோடுகள்... "சாமி" என கால்களில் விழுந்து கதறி அழுகிறார் முனுசாமி...

அது பக்தி... கையைப் பிடித்துக் கேட்ட பக்தரின் நிலை உணர்ந்து அருள்கிறார் இறைவன்.. அது கருணை...!

(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 251 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


பக்தி இதயம் மிகவும் நேர்மையானது.. எதற்கும் அஞ்சாது! பம்மாது! தவறு எனில் ஒப்புக் கொள்ளும்... அப்படி பக்தி வருகிற நாத்திகர் பக்தராகிறார்... தான் பக்தன் என்று ஒருவன் நினைக்கிற அகந்தையைக் காட்டிலும் நாத்திகம் சிறந்ததே! நாத்திகர்கள் தூங்குகிறவர்கள்... அவர்களை பாபா எளிதாக எழுப்பிவிடலாம்... சிரமம் என்பது பக்தர்களின் போர்வையில் தூங்குவதைப் போல் நடித்துக் கொண்டிருப்பதே! "ஏற்றுக் கொள்ளும் தன்மை" இல்லாமல் இருப்பதே! பாபா வழியில் நடக்காமல் பாபா மொழியை மட்டும் பேசிக் கொண்டிருப்பதே! அக மாற்றம் நிகழ்வதற்கே ஆன்மீகம் தேவைப்படுகிறது! நன்றியில்லா ஒரு போலியான பக்தனை விட நேர்மையான நாத்திகன் எளிதில் உண்மையான பக்தனாகிவிடுகிறான்... !

  பக்தியுடன் 
வைரபாரதி

1 கருத்து: