தலைப்பு

திங்கள், 7 மார்ச், 2022

வாடகை வீட்டு பக்தர்களுக்காக சொந்தவீட்டுக்காரர் கனவில் தோன்றிய பாபா!

எந்தவித பிரச்சனை தனது பக்தர்க்கு என்றாலும் இறங்கிப் போய் கருணை காட்டுவதில் சாயி அவதாரம் போல் வேறொரு அவதாரம் இல்லை என்கிற அளவில் சுவாமி நிகழ்த்திய அற்புதக் கனவு சுவாரஸ்யப் பதிவாக இதோ...


அது ஒரு சாதாரண குடும்பம்... ஆனால் சாயி பக்தர் குடும்பம்... தனது வாழ்க்கையை மிக எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்... அந்த எளிய சுவாமி பக்தர்கள் தொடர்ந்து தனது இல்லத்தில் சாயி பஜன் நிகழ்த்திக் கொண்டும் வருகிறார்கள்! அந்த வீட்டை வாடகைக்கு விட்டவர் வெளியூரிலிருந்து அவர்களின் தலையில் இடியை இறக்குவதற்காக வந்து இறங்கி.... உடனே வீட்டை காலி செய்து தரும்படியும்... தான் அந்த வீட்டை விற்கப்போவதாகவும் சொல்கிறார்... நல்லவர்களை வாடகைக்கு வைத்தால் நீதிமன்றம் அலைய வேண்டியதில்லை எனும் படி சாயி பக்தர்களாகிய அவர்கள் சரி என வேறு வீடு தேடுகிறார்கள்... பல காலமாய் தங்கிய வீடு என்பதால் மிக குறைந்த வாடகையே... ஆனால் வீடு தேடுகிற போதோ அதைவிட மூன்று மடங்கு வாடகை கொடுத்தால் கூட வீடு எங்கேயும் கிடைக்கவில்லை... சென்னையில் வீடு தேடுவது என்பது திருமணத்திற்கு பெண் தேடுவதை விட சிரமமானது... மாப்பிள்ளை சம்மந்திகள் 8 கட்டளை இட்டால் வீட்டு முதலாளிப் பெண்மணிகள் 80 கட்டளைகள் இடுவார்கள்... பாவம் அவர்கள் ஒவ்வொரு வீடாய் தேடுகிறார்கள்...

15 நாட்கள் கிழிந்த காலண்டர் தேதிகளாய் கடந்து போகின்றன... "வீடு காலி செய்துவிடுவீர்களா?" எனக் கேட்கிறார்... ஒரு மாதம் அவகாசம் கேட்கிறார்கள்... வாடகை வீட்டுக்காரர்களே  உறவுக்காரர்கள் நம்மைப் பகைத்துக் கொண்டாலும் நமக்கு வாடகைக்கு கொடுத்த சொந்த வீட்டுக்காரர்களை நாம் பகைத்துக் கொள்ளவே கூடாது... காரணம் அவர்கள் பொங்கி எழுந்தால் கையில் எடுக்கிற கடைசி பிரம்மாஸ்திரம் "வீடு காலி செய்துவிடுங்கள்" என்கிற அந்த அரும்பெரும் மகாவாக்கியமே! கீதை வாக்கியம் ஏற்படுத்தாத பாதிப்பு கூட எளிவர்கள் நமக்கு சொந்தவீட்டுக்காரர்களின் மகா வாக்கியம் ஏற்படுத்திவிடுகிறது!! அவர்களுக்கும் அப்படி ஒரு பாதிப்பு... 1 மாதம் என்பது 2 மாதங்களாக ஓடிவிடுகிறது! 

சொந்த வீட்டுக்காரர் நுழைகிறார்... "இன்று என்ன குண்டை தூக்கிப் போடப்போகிறாரோ இல்லை வீட்டுப் பொருட்களை தூக்கிப் போடப் போகிறாரோ ?" எனப் பதைபதைக்கிறார்கள்... "என்ன ஆச்சு?" எனக் கேட்கிறார்... "வாடகைக்கு வீடே கிடைக்கவில்லை சார்" என்கிறார்கள் ஒரே அழுகுரல் கோரஸாய்... "சரி... நீங்களே இந்த வீட்டை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்" என்று ஒரே போடாய்ப் போடுகிறார்! அவர்களுக்கு சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை... வீடு வாங்க வசதி இருந்தால் அவர்கள் ஏன் வாடகைக்கு இருக்கப் போகிறார்கள்...? பிரபஞ்சத்தில் இறைவன் வைத்ததே சட்டமாக இருக்கலாம் ஆனால் வாடகைக்கு  இருப்பவர்களுக்கு சொந்தவீட்டுக்காரர் வைப்பதே சட்டம்... அது எவ்வளவு அபத்தமாயினும் அதுவே சட்டம்... சாசனம்...!

"அதிக விலை போகும் இந்த வீட்டை... உங்களுக்காக 1,40,000 ரூபாய்க்கு தருகிறேன்" என்கிறார்.. 80 களில் லட்சம் எல்லாம் கோடிக்கு சமானம்! சரி 4 மாதங்களுக்குள் வாங்கிவிடுகிறோம் என காலத்தை இழுப்பதற்கும்.. பணத்தை யாரிடமாவது கடனாவது கேட்கலாம் என்ற திட்டத்தில் சொல்லி விடுகிறார்கள்...இன்னும் 4 மாதங்களுக்கு எந்த வார்த்தை வெடியையும் வீச மாட்டார் என்கிற தற்காலிக சமாதானம் அவர்களுக்கு! ஆனால் 4 மாதங்களில் ,60,000 ரூபாயே திரட்ட முடிந்தது... நல்ல மனதோடு அவர் இன்னும் 2 மாதங்கள் அவகாசம் தருகிறார்... நல்லவர் தான்...ஆனால் அவருக்கு எப்படியாவது தனது வீட்டை விற்க வேண்டும்...அதிலேயே குறியாக இருக்கிறார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ளமுடிகிறது! ஏன்? எனும் காரணம் தான் புரியவில்லை...இந்த இடைப்பட்ட மாதங்களில் சுவாமிக்கான வீட்டு பஜனை தொடர்ந்து நிகழ்கிறது! "சுவாமி.. எது எங்களுக்கு நல்லதோ... அதையே முடிவு செய்யுங்கள்!" என சுவாமியிடம் கவலையை ஒப்படைக்கிறார்கள்... எளியவர்களுக்கு இறைவனை தவிர வேறு கதியே இல்லை...! ஆனால் பணம் திரட்ட அவர்களால் முடியவில்லை... நிலைமையை யூகித்த அவர்... தான் சொன்ன விலையைப் பாதியாக குறைக்கிறார்‌.. அதாவது 70,000. ஆனால் மீதம் 10,000 கூட அவர்களால் புரட்ட முடியவில்லை... சரி என்ன செய்வது? நேர்மையாக சொல்லிவிடுவோம் என 1 மாதத்திற்குப் பிறகு தீர்க்கமாய் முடிவு செய்கிறார்கள்...!

சொந்தவீட்டுக்காரர் வருகிறார்.. "மன்னிக்க வேண்டும்... நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வீட்டை விற்று விடுங்கள்... எங்களால் அதை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு போதிய பணமில்லை" என கையை விரிக்கிறார்கள் கண்கலங்கிய படி... துரௌபதி கையை விரித்து கண்ணா என கலங்கினாளே அது போல்... அப்போது அந்த சொந்தவீட்டுக்காரர் தனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சர்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்... அவர் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போகிறார்கள் அந்த தம்பதிகள்...


"சில நாட்களாக ஓயாமல் ஒருவர் என் கனவில் வருகிறார்... காவி உடையும் புஸ் புஸ்  தலையுமாய்... சிரித்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.. இந்த வீட்டை சுட்டிக் காட்டியபடி ... "இங்கிருந்து என்னை ஏன் துரத்துகிறாய்? உன்னிடம் தான் நிறைய பணம் உள்ளதே... பிறகு எதற்கு உனக்கு அவ்வளவு பணம் தேவை இந்த வீட்டிற்கு?" என்கிறார்...என்னால் அவர் முன் எதுவும் பேசமுடியவில்லை... அவர் என் மனசாட்சியைப் பிசைகிறார்... யார் அவர்? உங்கள் குடும்ப குருவா? குல தெய்வமா? யார் யார்?" எனப் பெரும் அதிர்வோடு கேட்கிறார்! 

     இருவரும் கண்கலங்கியபடி அவரை தங்களது பூஜையறைக்கு அழைத்துச் செல்கின்றனர்... சுவாமி எப்படி அவரது கனவில் தோன்றினாரோ... அதே சுவாமியின் திருவுருவப்படம்... அதை கண்டவுடனேயே "இவர் தான் இவர் தான் இவரே தான்!" எனப் பரவசமாகிறார்.. "இவர் பெயர்?" 

"இவர் தான் எங்களுக்கு எல்லாம்...எங்களின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ சத்ய சாயி பாபா"

அந்த பதிலை கேட்டவுடன் சிறிய பூஜையறையில் சுவாமியை விழுந்து வணங்கி கண்கலங்கியபடி... "சிரமத்திற்கு மன்னியுங்கள்‌... உங்களால் எவ்வளவு தர முடியுமோ...அவ்வளவு தந்து இந்த வீட்டை உங்களுக்கே எடுத்துக் கொள்ளுங்கள்!" என்கிறார்... இப்படி ஒரு பதிலை எதிரே பார்க்காத அவர்களுக்கு சுவாமியிடம் ஆனந்தமாய் அழுவதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை... அந்த எளியவர்களின் பிரார்த்தனை கூட அதுவாக இல்லை... அப்போது இடியை இறக்கியவர் இப்போது இமயத்தையே தலையில் இறக்கி அங்கிருந்து நகர்கிறார்!!

சுவாமி வீடாக இருந்த ஒரு வாடகை வீடு சொந்த வீடாக மாறிப் போகிறது! அந்த எளியவர்களை அவர்களது இதய வீட்டில் இருந்தபடியே ஆனந்தப் படுத்துகிறார் கருணாமூர்த்தி சுவாமி!

(ஆதாரம்: அற்புதமும் ஆன்மீகமும் -1 / பக்கம் : 33 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


வசதி வாய்ப்பு வந்துவிட்டால் உறவுக்காரர்கள் கூட மனம் மாறிவிட்டதாக ஓடி வந்து வாரி அணைத்து நடிகர் திலகங்களாகி இதயங்களை நனைத்து விடுவார்கள்...ஆனால் சொந்தவீட்டுக்காரர்களின் மனம் மாறுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல... அது வாடகை வீட்டுக்காரர்களுக்கே தெரியும்!! ஓட்டை வீடே ஆயினும் தானே சொந்தமாய்  கட்டிவிட்டபடியால் தாஜ்மகால்களின் ஷாஜகான்கள் அவர்கள்! தன் மேல் என்றாலும் பரவாயில்லை தன் வீட்டில் ஒரு சிராய்ப்பு என்றாலும் கொதித்தெழும் மிக மாயப்பற்றுபிடித்த அவர்களை குளிர வைத்து பக்குவப்படுத்துவது இறைவனால் மட்டுமே முடிகிற காரியம்! அதையே சுவாமி இங்கு செய்கிறார்! அறம் - பொருள்- இன்பம் - "வீடு" என்பதனை மொத்தமாக தவறாகப் புரிந்திருக்கும் மனிதன்... அது அந்த இன்பம் அல்ல...அது நீ கட்டிய அந்த வீடு அல்ல... என்பதை சுவாமியை தவிர யாரால் பக்குவப்படுத்தி மனிதனுக்கு உணர்த்தி விட முடியும்?!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக