தலைப்பு

செவ்வாய், 15 மார்ச், 2022

அனுப்பிய கடிதம் ஏற்று ஒரு குடும்பத்திற்கே அனுகிரகம் புரிந்த பரம கருணா சாயி!

ஒரு குடும்பத் தலைவரின் கடிதம் ஏற்று அவருக்கும்... அவரின் மகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் சுவாமி எவ்வகையில் அனுகிரகம் புரிந்தார் எனும் ஓர் சுவாரஸ்ய அனுபவம் இதோ...


பர்த்தியில் நூலாசிரியர் வந்திருந்த போது.. அவரை கண்டுவிட்டு கமலா எனும் ஒரு சுவாமி பக்தை அழைக்கிறார்.. பிறகு கமலாவை சந்திக்கையில் அவர் கணவரின் தங்கையான செல்லம்மாள் தங்கள் குடும்பத்தில் சுவாமி நிகழ்த்திய மகிமையை பகிர்ந்து கொள்கிறார்! அவர் 10 வயதிலிருந்து ஷிர்டி சுவாமி பக்தர்...  கணவர் ராமசாமி வணிகவரி அதிகாரியாக பணியாற்றுகிறார்... ஒரு நாள் வயிற்றில் கடும் வலி. ஸ்டேன்லி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்...என்ன பிரச்சனை என்றே கண்டுபிடிக்க முடியவில்லை... எனக்கு ஏதும் ஆனால் நீ என்ன செய்வாய்? என வருந்துகிறார் ராமாசாமி.. "பகவான் இருக்கிறார் பயப்படாதீர்கள்!" என ஆறுதல்படுத்துகிறார் மனைவி செல்லம்மாள்... ஷிர்டி கோவில் சென்று பிரசாதம் பெறுகிறார். அந்த சமயம் "சத்தியம் சிவம் சுந்தரம்" வாசிக்கும் பேறு கிடைக்கிறது... இரு சாயியும் ஒன்றே எனும் சத்தியம் உணர்ந்து.. சுவாமிக்கு கோரிக்கை கடிதம் எழுதி தபால் செய்கிறார்...‌


 "என் கணவருக்கு வந்திருக்கும் நோய் மருத்துவர்களால் கூட என்னவென்றே கண்டுபிடிக்க முடியவில்லை... நீங்கள் தான் துணை இருந்து காப்பாற்ற வேண்டும் சுவாமி" எனும் பிரார்த்தனை வரிகள் தாங்கிய கடிதம் அது! அந்த சமயத்தில் அவரின் இரண்டாவது பெண்ணின் சிநேகிதி விஜி பர்த்தி சென்று வந்ததாக சுவாமி விபூதி

தந்த உடன் அதை ஆச்சர்யமாய் ஏற்று "சாயிராம் சாயிராம்" என உருகி வேண்டி கணவருக்கு தருகிறார்... அதை உட்கொண்டதும் ஒருவித மாற்றம் ராமசாமி உடம்புக்குள்... "ராமசாமிக்கு எதுவும் இல்லை...ஆப்ரேஷனே தேவையில்லை" என மருத்துவமனை அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுகிறது... சுவாமி இறைவன் என உணர்ந்து கொண்டுவிடுகின்றது அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமுமே! 


2 வருடம் கடந்து பரமபக்தர் வேங்கடமுனி வீட்டில் சுவாமியை அவர்களின் குடும்பமே தரிசிக்கிறது... சுவாமி பரிவோடு பேசுகிறார்.. "நீ கடிதம் அனுப்பும் போதே... உன் நோயை எடுக்க சங்கல்பித்துவிட்டேன்!" என பரமகருணையோடு பேசுகிறார்... கண் கலங்கிப் போகிறது ராமசாமி குடும்பம். சுவாமி ராமசாமி மகளான மாலினியை பார்த்தபடி "இவள் படிப்பிலும் மற்ற எல்லாவற்றிலும் முதன்மையானவளாக வருவாள்!" என ஆசீர்வதிக்கிறார்... சுவாமியின் சொல்லே இந்தப் பிரபஞ்சம் இயக்கம் என்பதால்... அவரின் சொல்லே அனுதினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனும் சத்தியத்தின்படி... மாலினி டாக்டர் மாலினி ஆகிறார்... தோஹா (Qatar) என்ற தேசத்தில் தனி கிளினிக் வைத்து சிறப்பாக மருத்துவம் பார்க்கிறார்... புது கிளினிக் திறப்பு விழாவிற்கு சுவாமியின் விபூதி/ புகைப்படம் என அவர் வேண்டிக் கொண்டதன் படி தன் தெய்வ அறிகுறியை சுவாமி காட்டுகிறார்! 1989 ஆம் ஆண்டு மாலினியின் இரண்டாவது பிரசவப் பேறு காலம்.. அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நுரையீரலின் நீர்ப் பிரச்சனையினால் மாலதி சுவாமியிடம் வேண்ட... அவர் சினேகிதியின் வாயிலாக அதற்கான சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கிறார்.. லண்டனில் ஆப்ரேஷன்... முடிந்தும் கூட வலது நுரையீரலில் நீர் உற்பத்தியாக... சுவாமியிடம் செல்கிறார்... மாலினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனத்தில் "சிறு வயதில் என் தாய்க்கு தந்தது போல் எனக்கும் நேர்காணல் தர வேண்டும் சுவாமி !" என எழுதி கடிதத்தோடு காத்திருக்கிறாள்.. காலையில் வாங்காது சுவாமி மாலையில் கடிதம் வாங்கிக் கொள்கிறார். "என்ன வேண்டும்?" என மாலினியிடம் சுவாமி கேட்க.. "விபூதி சுவாமி!" என பதில் வர...சுவாமியும் தருகிறார்...நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்... 

மகளை சென்னை மருத்துவமனையில் காட்ட எக்ஸ் ரேவில் கணையத்தில் தெரிந்த கட்டி...அடுத்த நாள் சோதனையில் மறைந்துவிடுகிறது! சுவாமியால் எது தான் செய்ய இயலாது! சுவாமியை நினைத்து மாலினி மா நதியாய் உருகுகிறார்! 


ஒருமுறை மாலினி தனது தோஹா தோழி குடும்பத்திற்கு ஏற்பட்ட விபத்தால் ஐ.சி.யூவில் உயிர் போராடும் நிலைமைக்கு தள்ளப்பட... சுவாமி தன் தெய்வத்திருக் கரத்தால் அளித்த சிருஷ்டி விபூதியை அவர் நெற்றியில் இட்டு சுவாமியிடம் உருகி வேண்டுகிறார்... ஆனந்த்-பிரியா தம்பதிகளின் பெயர்... சுவாமியின் விபூதி மகிமையால் இரவு பத்து மணிக்கே உயிர் பிழைத்து படார் என கண் திறக்கிறார் ஆனந்த். ஆனந்தம் திரும்புகிறது ஆன்ந்த் பிரியா தம்பதிகளின் வாழ்வில்... சாதாரண ஆனந்தம் இல்லை அது சுவாமி கருணையோடு அளித்த 'பிரசாந்தம்' அது!


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 148 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமி ஒருவருக்கு அளிக்கும் அபயம் அவரின் ஒட்டு மொத்த குடும்பத்திற்குமே அளிக்கப்படுகிறது என்பதற்கு ராமசாமி குடும்பம் சிறு உதாரணம்! அதே சமயத்தில் குடும்பத்தின் மீது பற்றும் வைத்தல் ஆன்மீகம் அல்ல என்பதையும் சுவாமி வலியுறுத்தி தனது ஒவ்வொரு பக்தரையும் முக்தராக அகம் மாற்றம் செய்வதற்கு சுவாமியே பெரிதும் ஆவன செய்கிறார்! அதுவே ஞான வாழ்க்கை... பக்தியே ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது! அந்த ஞானமே சரணாகதியை சகஜ நிலையிலேயே அளித்துவிடுகிறது!


   பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: