தலைப்பு

வெள்ளி, 25 மார்ச், 2022

மரண விளிம்பில் காசிம் வாலேகருக்கு காட்சி கொடுத்து காப்பாற்றிய பாபா!

சிகிச்சை செய்பவர் தனது பக்தர் என்பதற்காக அவரின் பூஜையறை பிரார்த்தனைக்காக சுவாமி எவ்வாறு அவரின் நோயாளி ஒருவரை  மருத்துவமனைக்கே சென்று நொடிப் பொழுதில் காப்பாற்றினார் எனும் நெகிழ்வான அனுபவம் இதோ...


பொதுவாக பிரார்த்தனை தனக்காக/ தன் குடும்பத்திற்காக இன்றி பிறருக்காக இருக்க வேண்டும்...! அந்தப் பிறரிடமிருந்தும் எவ்வித ஆதாயமும் எதிர்பார்க்காத பக்குவ மனநிலையில் இருந்தபடி கண்களை மூடி...கசிந்தபடி பிரார்த்தனை செய்வதே பிரார்த்தனை! பிரார்த்தனையின் அடிநாதமே சுயநலமின்மை... மற்றும் நன்றி வெளிப்பாட்டின் அம்சமே! பிரார்த்தனை என்பது பேராசை மற்றும் பற்றின் செயலல்ல... இது நன்கு தெரிந்திருந்தது டாக்டர் குல்கர்ணிக்கு...

            "நான் என் பக்தரின் பூஜையறை கதவருகிலேயே எப்போதும் காத்திருக்கிறேன்... பக்தரின் பிரார்த்தனை ஏற்று உடன் செயல்பட தயாராக அங்கு இருக்கிறேன்!" என்கிறார் சுவாமி. ஆக பிரார்த்தனைக்கு கருவியாக பயன்பட வேண்டியது இதயமே தவிர மனமல்ல...!

           அந்த பக்தி இதயத்தோடு பிரார்த்தனை செய்ய வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது டாக்டர் குல்கர்ணிக்கு...

ஒருமுறை டாக்டர் குல்கர்ணியின் மருத்துவமனையில் 60 வயது மதிக்கத் தகுந்த காசிம் வாலேகர் எனும் முதிர் பெண்மணி சிகிச்சைக்காக வந்து தங்குகிறார். (Acute Double Pneumonia) நிமோனியா முற்றிய நிலையில் தாக்கி இருக்கிறது... அது நுரையீரலை குறையீரலாக மாற்றி விடுகிறது! டாக்டர் 3 நாள் சிகிச்சை அளிக்கிறார்! சிறிது முன்னேற்றம் எனும் மேகம் கூடி... 4 ஆவது நாள் கலைந்து போகிறது...டாக்டர் அருகிலிருந்து அக்கறையோடு சிகிச்சை அளிக்கிறார்... இதயம் சுருங்க ஆரம்பிக்கிறது... விரிந்த இதயம் கொண்ட டாக்டர் குல்கர்ணியால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை... சேவை நோக்கமாக சிகிச்சை அளிக்கும் மகத்துவ மருத்துவர்கள் இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள் டாக்டர் குல்கர்ணி போல்... வேர்கள் வெளியே தெரியாதது போல் அவர்களும் வெளியே தெரிவதில்லை... அத்தகைய மகத்துவர்களால் ஐசியூவில் இருக்கும் அலோபதியும் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறது! பிறகு டாக்டர் குல்கர்ணி காசிம் வாலேகருக்கு கோரமின் ஊசி செலுத்துகிறார். அதிலும் பலன் இல்லை. அதிக அளவு செலுத்துகிறார்... அதிலும்  பலனில்லை... தொடர்ந்து நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறது! நம்பிக்கை இழக்கிறார்...!

         மனிதன் எப்போது தன் மேல் நம்பிக்கை இழக்கிறானோ அப்போது மனம் இறைவனின் பால் சரிகிறது... பிடிமானம் இழக்கும் போது சரிவு ஏற்படுகிறது...பக்தியும் இறைவனின் பார்வையும் இருந்தால் அந்த சரிவு இறைவனை நோக்கி திரும்புகிறது... அப்படித்தான் சரிந்த அருணகிரியை முருகன் தாங்கியதால் அவர் அருணகிரி நாதரானார்!


டாக்டருக்கு இறைவனை தவிர யார் கதி?! இரவு 1 மணிக்கு வீடு திரும்பி... குளித்துவிட்டு "சுவாமி" என இறைவன் ஸ்ரீ சத்ய சாயி திருப்படத்திற்கு முன் விழுகிறார்! தன் கையில் எதுவுமில்லை என உணர்பவர் இறைவனின் கையை அல்ல காலையே பற்றுகிறார்! அப்படி சுவாமி அஷ்டோத்திரம் சொல்லி காலில் விழுகிறார்.. "சுவாமி! என்னால் ஆனவற்றை எல்லாம் செய்துவிட்டேன்! எதுவும் பயனில்லை... நீங்கள் தான் அந்தப் பெண்மணியை காப்பாற்ற வேண்டும்! உங்களை தவிர எனக்கு வேறு கதி இல்லை! நான் சாதாரண ஒரு மருத்துவன் மட்டுமே... என் மருத்துவத்தையும் நீங்களே காப்பாற்ற வேண்டும்" என மன்றாடி கசிகிறார்!  

         "மருத்துவம் காப்பாற்றுவதாகத் தான் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்...அந்த மருத்துவத்தையே சுவாமி தான் காப்பாற்றி ஆக வேண்டும்!"

         எத்தனை உன்னதமான பிரார்த்தனை டாக்டர் குல்கர்ணி முன் வைத்தது!

டாக்டர் படுக்கிறார். கவலை இல்லாமல் தூங்கிவிடுகிறார். ஆம்! உளமாற பிரார்த்தனை செய்துவிட்டால் கவலைகள் போய்விடுகின்றன... பிரார்த்தனை என்பது பெரிய சுமைதாங்கி! சுவாமியிடம் பிரார்த்தனை செய்த பிறகும் அதையே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அது பிரார்த்தனையே அல்ல! பிரார்த்தனை என்பது நம் மனதை சுவாமியிடம் முழுதாக ஒப்படைத்தல்! ஆம் இதயத்தால் பிரார்த்தனை செய்து மனதை பாபாவிடம் ஒப்படைப்பதே பிரார்த்தனை!


பிறகு விடியும் முன்னே தனது நோயாளியை கவனிக்க கடமையே கண்ணாய்  ஓடுகிறார்! நேற்று வரை இறந்து கொண்டிருந்த காசிம் வாலேகர் எழுந்து உட்கார்ந்தபடி இருக்கிறார்... டாக்டர் அதைப் பார்த்த நொடி ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விடுகிறார்... காரணம் அதை அவர் எதிர்பார்க்கவே இல்லை... உளமார்ந்த பிரார்த்தனையில் எந்தவித நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இல்லை! சுவாமி காசிம் வாலேகருக்கு கொடுத்த விபூதியை டாக்டரிடம் நீட்டுகிறார்...

"என்ன விபூதியா? என்ன ஆனது? யார் வந்தார்? " என மூச்சடைத்து கேட்கிறார் டாக்டர். உடனே காசிம் வாலேகர் "யாரோ ஒருவர் வந்து என் கன்னத்தில் கை வைத்துவிட்டு... பின் தலையில் தட்டியது போல் இருந்தது... அந்த நொடி உடல் கேடு முற்றிலும் சரியானது போல் உணர்வு... பிறகு கண்களை விழித்துப் பார்த்தேன்!" என்கிறார்.. "யார் அப்படி செய்தது?" என டாக்டர் மிக ஆர்வத்தோடு கேட்கிறார்.. "யார் என்றெல்லாம் எனக்கு தெரியாது..‌ அந்த ஆளிற்கு கனமான சுருள் முடி இருந்தது... என் கட்டிலின் அருகிலேயே பக்கவாட்டில் அமர்ந்திருந்தார்... லேசாகத் தான் கழுத்தைத் திருப்பி பார்த்தேன்... அவர் புன்னகை செய்தார்... பிறகு மறைந்து விட்டார்!" என நடந்ததை விவரிக்கிறார் காசிம் வாலேகர்... 

டாக்டர் குல்கர்ணியின் கண்களில் கண்ணீர்த் துளி பெருக ஆரம்பித்துவிட்டது... பெருகி வழிகிறது... உடம்பு சிலிர்க்கிறது... 

அவர் பிரார்த்தனையில் "சுவாமி நீயே மருத்துவமனையில் தோன்றி அவர்களை குணப்படுத்த வேண்டும்!" என்ற எந்த நிபந்தனையும் இல்லை... "உடனே குணப்படுத்து!" என்ற எந்தவித கட்டளையும் இல்லை... நம் இஷ்டப்படி எல்லாம் வளைப்பதற்கு பிரார்த்தனை என்பது மூங்கில் அல்ல... உயிரின் வெளியில் பக்தி காற்றை நிரப்பி இனிமை சேர்க்கும் ஊதுகுழல் அது! ஆகவே தான் டாக்டர் குல்கர்ணியின் புல்லாங்குழல் பிரார்த்தனை தனது இனிமையை கண்வழி கசிந்து கொண்டிருந்தது...!


(ஆதாரம்: அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 141 / ஆசிரியர் : திருப்தி சாயி சரஜ்) 


ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் சுவாமி தனது அவதாரத்தை முடிக்கும் தருணத்தில் இந்த வழியில் தான் வருவார் என இந்திராதி தேவர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருந்தனர்... ஆனால் அவர்கள் நிச்சயம் செய்த வழியில் சுவாமி செல்லவே இல்லை! சுவாமியின் திருவழியை நம்மால் தீர்மானிக்கவே முடியாது! சுவாமி எதை? எப்போது ?எப்படி? செய்வார் என தீர்மானித்து விட்டால் நாமும் இறைவனாகி விடுவோமே! சுவாமி எதையும் எப்படியும் எவ்விதத்திலும் செய்வார்... ஆகையால் தான் அவர் சுவாமி. நாம் மனிதன். மனிதர்கள் பிரார்த்தனை எனும் பெயரில் இறைவனுக்கே யோசனை (ஐடியா) வழங்க முயற்சி செய்யாமல் இறைவனின் காலடியில் தன்னை அப்படியே உள்ளது உள்ளபடி ஒப்படைத்துவிட வேண்டும்! ஆகச் சிறந்த பிரார்த்தனை என்பது சரணாகதியே! அதற்கு மிஞ்சிய மருந்துமில்லை...! மருத்துவமுமில்லை!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக