தலைப்பு

செவ்வாய், 22 மார்ச், 2022

சிலோன் முல்லைத் தீவு பக்தையின் மகனையும் சேர்த்து குணப்படுத்திய மகிமா சாயி!

உடல் நலம் குன்றிய உள்ளன்பு பக்தரை சுவாமி எவ்வாறு உவகையோடு அழைத்து உறுதியாய் கனவில் ஊட்டச்சக்தி அருளி உருகிய படி தனது கருணையை கரைபுரண்டு பெருகச் செய்கிறார் என்பதை இலங்கை முல்லைத் தீவின் மகிமா வாசனையோடு இதோ...


அவர் பெயர் குணப்பிரியா...! இயற்கை தனது இருக்கையை விரித்து அமர்ந்த அழகான இலங்கையின் பேரழகான முல்லைத் தீவு... ஆதித்தமிழர்கள் அங்கே தான் தனது பாதி வாழ்க்கையை வாழ்ந்தார்கள்... குணப்பிரியாவின் குழந்தைக்கு அப்போது 16 வயது. அது 1990. சுவாமியின் பேரன்பு எப்படிப்பட்டதெனில் அது தனக்கு துரோகம் செய்பவரையும் தூய்மை செய்து தனது பாதங்களில் விழ வைத்து தெய்வீகப் படுத்தும்...!  அப்படி இருக்கையில் பக்தி செய்பவரை சுவாமியின் பேரன்பு சும்மா விடுமா?! ஒருநாள் குணப்பிரியாவின் மகன் தயாநிதிக்கு ஜுரம் எழும்பி படுக்கையில் விசிறி அடித்தது... டாக்டர்கள் பாவம் என்ன செய்வார்கள்!? அவர்களின் மருந்து மாத்திரை எனும் அலோபதி அஸ்திரம் வேலை செய்யவில்லை! சிலோன் வவுனியா ஹாஸ்பிட்டல்... மலேரியா என குளுகோஸ் ஏற்றுகிறார்கள்...பலனில்லை... பிறகு அனுராதபுரம் ஹாஸ்பிட்டல்...வசதியில்லை என கொழும்பு ஜெனரல் ஹாஸ்பிட்டல்... Microcytis Anemsa என அறியப்பட்டு வைத்தியம் அமெரிக்காவில் மட்டுமே.. 32 லட்சம் ஆகும்... லோ லோ என அலைந்தனர்...சென்னை அப்பல்லோ கூட கைவிரித்தது! 


          ஐந்து வகை நிலப்பரப்பை கொண்ட பூமியை நோயும் நோய் சார்ந்த இடமுமாய் மாற்றி வைத்திருக்கிற இதுபோல் ஆகச் சிறந்த கலியுக ஊழி ஏதுமில்லை!! அதற்காக இறைவனின் இரு பாதத்திலேயே நாம் விழுந்ததாக வேண்டும்!!

பக்கத்து சமிதிக்கு சென்று வருகிறார் குணப்பிரியா. தயாநிதியையும் அழைத்துப் போகிறார்... சுவாமியை தரிசித்து வரலாம் என்கிறான் தயா. செஞ்சிலுவை சங்கம் சார்ந்த தயாள தேவா என்பவரால் பண உதவி பெற்று பரமதயாள தேவனை தரிசிக்கச் செல்கின்றனர்...! பாஸ்போர்ட் விசா எல்லாம் ஒரே நாளில் தயார்! தன் பக்தரை எந்த நேரத்தில் இழுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த நேரத்தில் பனித்துளியை இழுக்கும் சூரியனாய் இழுத்துக் கொள்கிறார் சுவாமி!! முதல் வாய்ப்பு தூர தரிசனம்... பிறகு அறையில் தயாவுக்கு தீவிர ஜுரம்.. தரிசனம் காண இயலவில்லை... தூங்கிவிடுகிறான்... வெளியே தரும் அதே தரிசன நேரத்தில் சுவாமி தயாவின் கனவிலும் தோன்றி தரிசனமும் பாதநமஸ்காரமும் தருகிறார்...ஆம் ஆம் ஆம் என்று கூறி சிரித்துவிட்டு மறைந்து விடுகிறார்! உடனே எழுகிறான்...ஜுரம் குறைந்து விட்டிருந்தது... அடுத்த நாள் சுவாமியின் ஹாஸ்பிட்டல் திறப்பு வைபவம்... அதற்கு தயாவும் செல்கிறான்... நடந்து சென்று நடந்தே திரும்புகிறான்... தாயே ஆச்சர்யப்படுகிறார்... மாலை தரிசனத்தில் நோயாளிகள் அமரும் இடத்து முதல் வரிசையில் அமர்ந்தபடி "சுவாமி நோயின் காரணமாக பள்ளி படிப்பையும் விட்டுவிட்டேன்... நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என எழுதியிருந்த அவனது கடிதம்...சுவாமி சிரித்தபடி அதை வாங்கிக் கொள்கிறார்!! எத்தனைக் கடிதங்கள்! எத்தனை கோரிக்கைகள்! இதுவரை எவ்வளவு கோடி கிலோ கடிதங்களை சுவாமி வாங்கியிருப்பார்...! அத்தனையையும் ஒட்டு மொத்தமாய் சேர்த்தால் இந்தப் பூமிப் பந்தையே புதைத்துவிடலாம்... ! ஏன் வாங்கினார்? வெள்ளைக் காகிதமாய் நம் இதயம் மாறுவதற்காகவே பிள்ளைக் காகிதங்களை வாங்கினார் பரமன்! சுவாமியால் ஓவியமோ கவிதையோ வெற்றுக் காகிதத்தில் தான் வரையமுடியும்! சுவாமி அதில் வரைவதற்கு முன்பே நாம் ஏன் அதில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருக்க வேண்டும்?!

தயா அதுவரை அருகே 7 தரிசனங்கள்... பொது தரிசனம் பல என பெற்று வர... நோய் படிப்படியாக குறைந்து வருகிறது! சில மலை போன்ற பூர்வ கர்மாக்கள் ஒரே நொடியில் குறைவதில்லை... சுவாமியும் அதை அனுமதிப்பதில்லை... செய்ததை செய்தவரே அனுபவிக்க வேண்டும்.. அது தான் நியதி, நெறி! மிக நேர்மையான இறைவன் சுவாமி! மிக நேர்மையான இறைவனை மிக மிக நேர்மையோடே  அணுக வேண்டும்!

         "உடனே தயாவை என்னருகே தேரில் ஏறச் சொல்!" என குணப்பிரியாவுக்கு தேர் தரிசனத்தோடு கனவில் வந்து அருள்புரிகிறார் சுவாமி. "நீ என்னருகே இருக்க வேண்டும்!" என்கிறார் தயாவிடம் தரிசனத்தில் சுவாமி. இப்படியே 4 மாதங்கள். பர்த்தி டாக்டரை பார்க்கிறான் தயா. டாக்டர்களோ சுவாமியிடம் "சுவாமி! இலங்கையிலிருந்து ஒரு பையன்..." என இழுக்கிறார்கள்...

"எனக்கு தெரியும்...! நீங்கள் அவனை செக் அப் செய்யுங்கள்... மற்றதை நான் கவனித்துக் கொள்கிறேன்!" என்கிறார் சுவாமி. அவனை சோதனையிடுகிறார் டாக்டர். 9 சதவிகிதம் ஹீமோகிலோபின் குறைந்திருக்கிறது. சுவாமி 19 விபூதி பொட்டலங்களை டாக்டர்கள் மூலம் கொடுத்து அனுப்புகிறார்!  2 மாதத்தில் பூரண குணமடைகிறான் தயா. 

 அன்று தரிசனத்தில் தயா தாயாரான குணப்பிரியாவுக்கு வயிற்றுவலி... பாதியிலேயே அறைக்கு திரும்புகிறார்!தயாவுக்கோ அருகாமை தரிசனம்! தியானம் செய்கிறான்... சுவாமி வந்து சிம்மாசனத்தில் அமர்வது மனக்கண் முன் தெரிகிறது.. கண் திறக்கிறான்... சுவாமி இவனின் கர்மாவை முறைக்கிறார்! தாளாது கீழே குனிகிறான்... பஜனை தாளத்திற்கு சுவாமி பாதமசைப்பது பதமாக தயாவுக்கு இதமாக இருக்கிறது! பின் தலையை நிமிர்த்துகிறான்... குறும்புக்கார சுவாமி அவனை சிரித்தபடியே பார்க்கிறார்! 

 டாக்டர் வசுந்தராவோ "சுவாமி உன் கண்ணை உற்று நோக்கியபடியே தன் கண் கொண்டு தரிசினம் தருவது எத்தனை பாக்கியம்" என்கிறார்!

தனது வயிற்று வலியோடு அறைக்கு உறங்கப் போன தாயாருக்கு சுவாமி கனவு. "உடம்பை அலட்டிக் கொள்ளக் கூடாது! உன் மகனை நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்கிறார். வருத்தம் மறைகிறது!  வயிற்றில் கட்டி கண்டறியப்பட்டு... ஆப்ரேஷனுக்கு தயார் தாயார்! சுவாமி ஒரு சிருஷ்டி தோடம்பழத்தை டாக்டர் மூலம் அனுப்ப‌... அதை சாப்பிட்ட தாயார் குணப்பிரியாவின் வயிற்று வலி நீங்குகிறது! இதற்குள் விசா முடிகிறது.. சுவாமி கனவில் சென்று "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்கிறார்... தரிசன வரிசையில் தயா "அம்மாவுக்கு ஆப்ரேஷன் " என்கிறான்! சுவாமியோ "S S S" என்கிறார்! அந்த SSS என்பதற்கு என்ன விளக்கம் என நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை! ஹாஸ்ப்பிட்டலில் நாளை அறுவை சிகிச்சை குணப்பிரியாவுக்கு... விபூதி மஞ்சள் குங்குமம் தலையணை அடியில் இருப்பதாக கனவு வருகிறது... ஆப்ரேஷன் சக்சஸ். 21 நாள் கடந்து சுவாமி 8 விபூதி பொட்டலம் கொடுத்து இலங்கைக்கு திரும்பச் சொல்கிறார்! ஆனால் குணாவோ டாக்டர் வசுந்தராவிடம் சுவாமியை விட்டுப்போக மனமில்லை என அழுகிறார்... சுவாமியை விட்டு யாரேனும் அகல முடியுமா? "ஒருவரையும் நீ ஒதுக்குவதில்லை" எனும்படி சுவாமி அனைவரையும் அரவணைக்கிறார்...!

       "டாக்டர்கள் மாற்ற முடியாததை நான் மாற்றிவிட்டேன்" என சுவாமி கனவில் குணாவுக்கு அறிவுறுத்த... குணமாகாது குணாவாக இல்லாத குணா சுவாமியால் குணமடைந்து பெயருக்குத் தகுந்தாற் போல் குணப்பிரியாவாகிறார்!!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 5 / பக்கம் : 136 / ஆசிரியர் : திருமதி சாயி சரஜ் ) 


எந்த கண்டமானாலும் அதில் வாழ்பவர்க்கு எந்த கண்டமானாலும் தன் மேல் நம்பிக்கையும் பக்தியும் வைத்துவிட்டால் சுவாமி காப்பாற்றி கரை சேர்க்கிறார்! பக்தியே மிகவும் உயர்ந்தது! சக்தி வாய்ந்தது! பக்தி எளிமையானதே ஆனால் வாய்ப்பதற்கு அரியது! பக்தியையே ஒருவர் அரும்பாடுபட்டு சம்பாதிக்க வேண்டியது...! காரணம் அது மட்டுமே ஜென்ம ஜென்மமாய் தொடர்கிறது!! மற்ற அனைத்தும் நடு ஆற்றிலேயே மனிதரை கை கழுவிவிட்டு மூழ்கிவிடுகிறது!! அவ்வளவு பெரிய சுவாமி இதயம் இருக்கிற போது மனிதன் ஏன் நீர்க்குமிழுக்குள் நுழைந்து வாழ ஆசைப்பட வேண்டும்?


   பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து: