தலைப்பு

வெள்ளி, 5 நவம்பர், 2021

அறுவை சிகிச்சைகள் செய்தும் பலனின்றி சுவாமி கொடுத்த விபூதியால் அடுத்த நொடியே குணமான கேன்சர்!

கடல்கடந்த ஒருவரின் கேன்சர் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டும் எந்த ஒரு வித பலனும் அளிக்காமல் போக எவ்வாறு அதனை சுவாமி ஒரு நொடியில் குணமளித்தார்.. அதுவும் ஆரம்பித்தில் அவர் சுவாமி மேல் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவர்... எவ்வாறு மாறினார்.. உடல் தேறினார்... சுவாரஸ்யமாய் இதோ...! 


மகாதேவன் என்பவர் இலங்கை கொழும்பில் வசித்து வந்தார். அவருக்கு சுவாமி பற்றி எதுவும் தெரியாது... ஒரு நாள் அவரது 12 வயது மகன் ஒரு சுவாமி படம் ஒன்றை கொண்டு வந்து கொடுக்கிறான்... இப்படித்தான் சுவாமி தன் வரவை சிலர் வாழ்வில் புகைப்படமாக காலடி எடுத்து வைக்கிறார்... அவன் வயது கருதி அவர் அந்த சுவாமி படத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அவனின் விளையாட்டுப் பொருட்களோடு சேர்த்து வைத்து விடுகிறார் மகாதேவன்... அவருக்கு தெரியாது சுவாமி அலகிலா விளையாட்டுடையார் என... அவரவர்க்கு ஒரு நேரம் வர வேண்டி இருக்கிறது சுவாமியை அணு அணுவாய் அனுபவிக்க.. அந்த நேரம் தனது முதல் கடிகார "டிக்" கை அவரது வாழ்வில் ஒலிக்க ஆரம்பித்தது... ஒரு நாள் மாலை ஒரு புத்தகக் கடையில் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து பார்க்கிற போது திடீரென அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு முழு நீல வண்ணப்படம் கீழே விழுகிறது.. எடுத்துப் பார்க்கிறார்.. அது சுவாமி... அவருக்கான நேரம் "டிக் டிக்" என ஒலிக்கிறது...  மகாதேவனின் காதுகளில் அடிக்கடி சுவாமியின் பெயர் விழத் தொடங்கிற்று... சுற்றி இருக்கும் நண்பர்களும்... செல்கின்ற வீடுகளும் என சுவாமியை நினைவுறுத்திய வண்ணம் இருந்தன... ஏதோ ஒரு சக்தி தன்னை சுவாமியிடம் நகர்த்துவதாக நினைக்கிறார்.. சுவாமி வேறு ? சக்தி வேறா? சுவாமியே சிவசக்தி அம்சம் ஆயிற்றே...! ஆக சுவாமியை இந்தியா வந்து தரிசிக்க விளைகிறார்... பையன் தானும் அடம்பிடிக்க.. முதுகு வலி கொண்ட மனைவியும் வற்புறுத்த.. மூவரும் மும்மூர்த்தியே வழிபடும் மூலமூர்த்தியை புட்டபர்த்தியில் தரிசிக்க விரைகிறார்கள்..

சுவாமியை மூவரும் தரிசிக்கிறார்கள்.. சுவாமியை தரிசித்த அடுத்த நொடி விம்மி அழுகிறார்கள் மகாதேவனின் மனைவி.. சுவாமியின் அதிர்வலைகள் அத்தகையது.. இதயத்தை மட்டுமல்ல ஆன்மாவையே ஊடுறுவக்கூடியது.. இந்த அனுபவம் லட்சக்கணக்கான பேருக்கு நிகழ்ந்திருக்கிறது... சுவாமியை தரிசிப்பது என்பது மெழுகுவர்த்திகள் நெருப்பை சந்திப்பது போல்... அவை நேருக்கு நேர் சந்திக்கும் போது சந்தேகமின்றி பற்றிக் கொள்கின்றன.. பற்றிக் கொண்டால் மெழுகுவர்த்திகள் உருகாமல் என்ன செய்யும்..!!! அப்படி உருகிப் போகிறார் மகாதேவன் மனைவி... அழுத அழுகையோடு சுவாமியின் பாதத்தை இறுகப் பிடிக்கிறார்.. முதுகு வலி காரணமாக எழ முடியவில்லை.. தனக்கு முதுகு வலி சுவாமி எனவும் வாய் திறந்து சொல்ல முடியவில்லை... 

அந்தர்யாமியான சுவாமியிடம் வாய் திறந்து வேண்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.. சுவாமி எனும் கருணா மூர்த்தி அவர்களை தூக்கி நிறுத்தி ஒரு பதக்கம் கொண்ட சிருஷ்டி சங்கிலியை வரவழைத்துக் கொடுக்கிறார்.. சுவாமியின் திவ்ய ஸ்பரிசம் பட்ட அடுத்த நொடியே முதுகு வலி மூங்கிலில் இருந்து புறப்பட்ட காற்றாய் பறந்து போகிறது... தான் கிருஸ்துவ மதமாகிய போதும் மகாதேவன் மனைவி அந்த அனுபவத்திலிருந்து சுவாமியின் பெரிய படத்தை பிரதானமாக வைத்து பஜனை செய்து வர ஆரம்பிக்கிறார் வீட்டில்... பரபிரம்ம சுவாமி யார் எந்த மதம் எனப் பார்ப்பதே இல்லை.. யார் எவ்வளவு பதம் (பக்குவம்) என்றே பார்க்கிறார்!

திடீரென ஒரு நாள் மகாதேவன் அவருக்கு தாடையில் வலி உண்டாகியது‌... டாக்டரிடம் ஓடுகிறார்.. டாக்டரோ ஸ்பெஷலிஸ்டிடம் அனுப்புகிறார்... அந்த ஸ்பெஷலிஸ்ட் சோதித்துப் பார்த்ததில் மகாதேவனுக்கு தாடையில் புற்றுநோய் இருப்பது உறுதியாகிவிடுகிறது... உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.. செய்தால் குணமாகலாம்... ஆனால் நிச்சயமாய் சொல்வதற்கு இல்லை என ஸ்பெஷலிஸ்ட் சொல்கிறார்... அறுவை சிகிச்சை நடக்கிறது... ஆனால் குணமாகவில்லை.. மீண்டும் அறுவை சிகிச்சை நடக்கிறது.. மீண்டும் குணமாகவில்லை.. ஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அறுவை சிகிச்சை செய்தும் குணமாகவில்லை... கண்ணாடியை கழற்றியபடி டாக்டர் கைகளை விரிக்கிறார்.. மருத்துவத்தின் மேலான நம்பிக்கையே மகாதேவனுக்கு போய்விடுகிறது... 

குணமானால் மட்டும் பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என எந்த டாக்டர்களாவது இதுவரை சொல்லி இருக்கிறார்களா? மருத்துவத்தை ஒரு சேவை என்று வேறு சொல்கிறார்களே... என ஞான வார்த்தைகள் தனக்குள்ளே பேசிய படி ... இறுதியில் இறைவனே தஞ்சம் என புட்டபர்த்தி வருகிறார் மகாதேவன்...சுவாமியிடம் தரிசனத்தில் "சுவாமி.. என்னை டாக்டர்கள் கைவிட்டுவிட்டார்கள்... புற்றுநோய் என்னை விழுங்குகிறது" என கண்ணீர் பிசைந்த மொழியோடு மன்றாடுகிறார்...

தனது பக்தர்களின் எல்லாவித பிரச்சனைகளையும் எப்போதுமே சுவாமி கவனித்துக் கொண்டிருக்கிறார்.. அவரவர் செய்கர்மங்களுக்கு தக்கபடி அனுகிரகமும் அளிக்கிறார்... சதா பக்த சிந்தனரான சுவாமி "அய்யோ பாவம்" என சொல்லிவிட்டு நகர்கிறார்... சுவாமி தன்னை கவனிக்கவில்லை போல என தானே கற்பனை செய்து அதிர்ச்சி அடைந்து மயங்கி சரிந்து விழுகிறார் தரிசன வரிசையில்... சுவாமி சதா சர்வ காலமும் பக்தர்களையே கவனித்துக் கொண்டிருக்கிறார்... ஆனால் பக்தர்கள் சிலநேரம் அறியாமையிலும் பலநேரம் கற்பனையிலும் சுவாமி நம்மை எல்லாம் கவனிப்பதே இல்லை என நினைக்கிறார்கள்...  அது மாயையான எண்ணமே அன்றி உண்மையே இல்லை... பொறுமை, நம்பிக்கை என்று தான் தன் பூர்வ அவதாரத்திலேயே பக்தர்களுக்கு உபதேசித்திருக்கிறார் சுவாமி... 

மயங்கிய மகாதேவனை மறுநொடி பார்த்து அந்த இடம் நோக்கி விரைந்து ஒரு குழந்தையை தூக்குவது போல் தூக்கி விபூதி சிருஷ்டித்து அவரது வாயில் இடுகிறார்.. தெளிவு வந்த மகாதேவன் "இது என்ன சுவாமி... விபூதி தேனாய் இனிக்கிறது..." என வியப்புடன் கேட்க.. சுவாமியோ அவர் தலையை தடவி கொடுத்தபடி புன்னகைத்து விட்டுப் போய்விடுகிறார்... அந்த நொடியிலிருந்து தலை வலி நிற்கிறது.. தாடை வலி இல்லை... குறைந்த உடல் நிலை கூடத் தொடங்குகிறது...  இலங்கை திரும்பும் முன் சுவாமியிடம் உத்தரவு வாங்கும் போது சுவாமியோ "உன்னை நான்கு முறை குணமாக்க முயன்றேன்.. உன் கர்மா... நேரில் வந்தபிறகு தான் உன்னை குணமாக்கும் படி இருந்தது.. இப்போது எந்த தொந்தரவும் இல்லை... நீ உயிர் பிழைத்தது ஆச்சர்யமில்லை.. நீ இனிமேல் பண்பட்டவனாக மாற வேண்டும்.. அதுவே முக்கியம்... யாருக்கும் தீங்கு இழைக்காத நல்ல மனதுடன் நீ வாழ வேண்டும்! " என்று ஆசி கூறி அனுப்புகிறார்...

டாக்டர்கள் கைவிரித்த கேஸ் அது... சுவாமி கேன்சரை குணமாக்கி உயிரை மீட்டுத் தந்துவிடுகிறார்... இப்படி ஒன்றல்ல இரண்டல்ல.. லட்சக்கணக்கான பேர்களுக்கு இது நிகழ்ந்திருக்கிறது... பணம் இருந்தால் எதையும் சாதித்து விட முடியும் என நினைப்பது எவ்வளவு அறிவீனம்!! பணம் இருந்தால் உயரிய மருத்துவமனையில் பல்வேறு டாக்டர்கள் புடைசூழ சிகிச்சை அளிக்கப்படலாம்... ஆனால் வலியை யார் அனுபவிப்பது? டாக்டர்கள் அனுபவிப்பார்களா? இல்லை... "கர்மாவே!! என்னிடம் கோடிக்கணக்கான பணம் இருக்கிறது உனக்கும் தருகிறேன்.. என் வலிகளை எடுத்துவிடு!" என கர்மாவுக்கும் லஞ்சம் கொடுத்தால்.. "சரி பிரபு !! உடனே எடுத்துவிடுகிறேன்!" என சொல்லுமா? அது கை கொட்டி சிரிக்கும்!! 

தேவைக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் இறுதி நாட்களில் மருத்துவமனைகளுக்கே செலவளிக்கப்படுகின்றன என்பது நிதர்சன உண்மை...

ஆனால் சுவாமியிடம் சரணாகதி அடைந்து விட்டாலோ கர்ம கரைதலுக்கான அத்தனை வழிகளும் சுலபமாக நடைபெற்று... மனநிம்மதியுடன் வாழ முடிகிறது!!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 223/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமி சர்வ சகலத்தையும் கவனிப்பவர்.. குணமாக்குபவர் என்பது இந்த அனுபவம் வழி நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது... மருத்துவத்துக்கும் அப்பாற்பட்டது சுவாமியின் மகத்துவம்... தனக்கு தெரியாததை தெரியாது என ஒப்புக் கொள்ள இயலாத மனித இனத்திற்கே ஆச்சர்யமானவர் தான் சுவாமி... சுவாமி என்பவர் சோதனைக் கூடமல்ல ஆராய்ச்சி செய்து விடையை கண்டறிய.. அது நடக்கவும் இயலாது‌..‌சுவாமி என்பவர் தியான மண்டபம்... அணு அணுவாய் அனுபவிக்க மட்டுமே நம்மால் முடியும்!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக