தலைப்பு

திங்கள், 8 நவம்பர், 2021

ஏன் சுவாமியின் 96 ஆவது அவதாரத் திருநாள் சிறப்பு வாய்ந்தது... அதை நாம் ஏன் கோலாகலமாக கொண்டாட வேண்டும்?


எங்கும் நிறைந்து எல்லாம் அறிந்து எதையும் இயக்கும் பரம்பொருள் மனிதன் தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக மனித உடல் எடுத்து அவதரிக்கிறது... ஆக தனக்காக அன்றி அவதாரம் மனித இனத்திற்காக என்பதால் ஒவ்வொருவரும் சுவாமியின் அவதாரத் திருநாளை கொண்டாட வேண்டும்..

இப்போது வருகிற 96 ஆம் அவதாரத் திருநாள் கூடுதல் சிறப்பம்சமும் முக்கியத்துவமும் வாய்ந்தது... ஏனெனில் சுவாமி ஸ்ரீ சத்ய சாயி எனும் தனது அவதார வாழ்வை 96 ஆம் திருவயதில் நிறைவு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறார்..  ஆகவே இந்த 96 ஆவது அவதாரத் திருநாள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது... இதை வாசிக்கிறவர்களுக்கு சில அடிப்படை சந்தேகம் எழலாம்... அது தான் சுவாமி குறித்த வயதுக்கு முன்பே தனது அவதார வயதை பூர்த்தி செய்து கொண்டு விட்டாரே .. பிறகு இப்போது இந்த 96 இல் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது? என...

ஒன்றை சர்வ நிச்சயமாக அனைவரும் உணர்ந்திருப்போம்... அதிலும் குறிப்பாக சுவாமி பக்தர்கள் தெளிவாகவே இருப்பார்கள்.. அது யாதெனில்... சுவாமியின் திருவாழ்க்கை எனும் இதிகாச சம்பவங்கள் அனைவருக்கும் மனப்பாடம்... 

சுவாமி தனது திருவுடம்பில் இருக்கிற போதே தனது பயணத்திலும்...தனது திட்டத்திலும்... தனது செயல்பாட்டிலும் சுவாமி தான் குறித்த தேதிகளுக்கு முன்பும் செய்திருக்கிறார்.. அதனை ஒத்திப்போட்டும் செயல்பட்டிருக்கிறார்.. ஆக சுவாமிக்கு இது புதிதல்ல... 

சுவாமி துவாபர யுகத்தில் குரு ஷேத்திர போர் நிகழ்வதற்கு முன்பு அமாவாசையை ஒருநாள் முன்பே வரவழைத்தவர் தான்...

அது அந்த சூழ்நிலைக்கு தேவைப்பட்டது...

சுவாமி மாபெரும் வீரனாக இருந்தும் மறைந்து வாலியை அம்பெய்தியவர் தான்.. போர்முறைப்படி தவறாயினும்.. விலங்கை வேட்டையாடத்தான் வேண்டும்... தர்ம நெறிப்படி அது சரியே...  ஆக ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் மட்டுமல்ல... ஷிர்டி அவதாரத்திலும் இளைஞனாக ஷிர்டி யில் தோன்றி மாயமாகி.. ஒரு கல்யாண ஊர்வலத்தோடு மீண்டும் இணைந்து கொள்கிறார்... ஏன்? இப்படி மனிதனால் புரிந்து கொள்ளவே முடியாத பல திருச்செயல்களை சுவாமி புரிந்திருக்கிறார்..

இது ஒன்றும் புதிதில்லை என்பதற்காகவே ஸ்ரீ ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் என யுக இதிகாச உதாரணங்களை வழங்குகிறேன்..

சுவாமியின் ஒரு அம்சமான ஸ்ரீ தத்தாத்ரேயரின் திருவாழ்க்கையை வாசித்தீர்கள் என்றால் (ஸ்ரீ குரு சரித்திரம்) அவரை புரிந்து கொள்வதே கடினம்.... சுவாமியின் ஒரு அம்சமே இவ்வாறு எனில் பரிபூரண அவதாரமான சுவாமியை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அப்படி எளிதாக புரிந்து கொண்டுவிட்டால் நாமும் இறைவனாகி விடுவோம்...


மேலும் புரிந்து கொள்ளுதல் என்பது எண்ணங்களை சார்ந்தவை... அனுபவித்தல் என்பது உணர்வை சார்ந்தது...தேனை எப்படி புரிந்து கொள்ள முடியும்? தேனை அனுபவிக்கத் தான் முடியும்! சுவாமியை அனுபவிக்கவே முடியும்... அனைவருக்கும் சுவாமி அனுபவம் நிரம்ப நிரம்ப ததும்பிக் கொண்டிருக்கிறது... சுவாமி அனுபவங்களின் மனசாட்சி நமக்கு ஒரே ஒரு பாடம் நடத்துகிறது.. அது யாதெனில்.. சுவாமி எது சொன்ன போதும் அது சத்தியம்... எது செய்த போதும் அது தர்மம்... காரணம் அவதாரமே அதற்குத் தான்! காரணம் இன்றி சுவாமி எதையும் நம் வாழ்வில் நிகழ்த்தாத போது... காரணம் இன்றி சுவாமி தனது அவதார நிகழ்வுகளில் அவர் நிகழ்த்தி கொள்வதில்லை... மனிதப் பார்வைக்கு சுவாமி விரைவிலேயே சென்று விட்டார்... காரணம் சுவாமி விரைவிலேயே திரும்புவார் என்பதற்காக விரைவிலேயே சென்றுவிட்டார்... இதை அடியேன் சொல்லவில்லை வாழும் கலை மகான் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருதேவரே தனது இணையதளத்திலும் பதிவு செய்திருக்கிறார்...

சுவாமி தனக்காக வாழ்ந்ததே இல்லை... எந்த நன்மையையும், மனித சௌகர்யங்களையும் தனக்காக செய்து கொண்டதே இல்லை... இது அனைத்து பக்தர்களுக்கும் நன்கு தெரியும்... சுவாமியின் திருவாழ்க்கையின் திருச்சம்பவங்களை ஆழமாய் உணர்ந்தால் சுவாமி தன்னையே இந்தப் பூமியின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்தவர் என்பது புரிய வரும்...

ஆகச் சிறந்த தியாகங்கள் இல்லாமல் கொடூரமான கலியை மனிதர்கள் தாண்டுவது முடியாத காரியம்... மகான்கள் தியாக புருஷர்கள்... அந்த மகான்களுக்கே தியாக உணர்வை ஊட்டுவது சுவாமியே..‌ காரணம் தியாகத்தையே தன் வாழ்க்கை வேள்வியாக உருமாற்றிக் கொண்டவர் சுவாமி... இது அனைவரும் உணர்ந்ததே...

ஒருமுறை சுவாமியே தனது மாணவர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் இப்படியே போனால் நான் சீக்கிரம் என் தேகத்தை துறந்துவிடுவேன் என‌ப் பகிர்ந்ததை அவர்களே ஒருமுறை பகிர்ந்தும் இருக்கிறார்கள்... எல்லாவற்றையும் பூமிக்காக துறந்தவர்..‌உடல் கடந்த சுவாமி உடலையும் துறந்தார்... சுவாமி செய்கை எப்போதும் நன்மைக்காகவே... சுவாமியின் சொல் பிரபஞ்ச வீரியம் மிகுந்தவை... அது நிகழும்.. நிகழ்ந்தே தீரும்...இதை தெளிவுற உணர்த்தவே சிறிது விளக்குகிறேனே அன்றி வேறெதற்காகவும் அல்ல... 

நீ ஏன் நான் விஷம் குடிக்கும் போது அதனை தட்டிவிடாமல்... மிக தாமதமாக வந்தாய் ? என அந்தப் பிஞ்சு பிரகலாதன் சுவாமியை பார்த்துக் கேட்கவே இல்லை... பக்தி கேள்வியே கேட்காது... அதுவே பதிலாய்... பரிபூரணமாய் சரணாகதி அடைந்திருக்கும்...   

நாம் ஆயிரம் விளக்கவுரை தரலாம்... சிலர் பல்வேறு வகையில் யூகிக்கலாம்... ஆனால் அதற்கான மிக தெளிவான விடையை நம் சுவாமி ஸ்ரீ பிரேம சுவாமியாக தன்னை பிரகடனப்படுத்திய பிறகே விளக்குவார்... விளக்கம் தருவார்... தெளிவாக்குவார்!!

 அது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கலாம்? அப்படித் தான் அது நிகழ்ந்திருக்கிறது... சுவாமி ஷிர்டி அவதாரத்தில் தனது அவதார தேதி முதல் தாய் தந்தை பெயர் வரை... சிறு வயது நிகழ்வுகள் எல்லாம் யாரிடமும் பகிராமல் ரகசியமாகவே வைத்திருந்தார்...  பிறகு சுவாமி ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்து அவதார பிரகடனம் புரிந்த பிறகே அந்த ரகசியங்களை வெளிப்படுத்தினார்... அதைப் போலவே இந்த அவதார திருச்செயல்பாடுகளின் வினாக்குறிகளை .. பலரின் கனாக்குறிகளை ஸ்ரீ பிரேம சுவாமியே தெளிவாக்குவார்... இதில் அடியேனுக்கு சந்தேகமே இல்லை... 

 பற்பல ஆச்சர்யக்குறிகளை சுவாமி பக்தர் இதயத்தில் நட்டு வைத்திருந்த போதும் சில கேள்விக்குறிகளும் சிலர் இதயத்தில் தைத்திருக்கவே செய்கின்றன...‌அதற்கான  இதய சிகிச்சைகளை ஸ்ரீ பிரேம சுவாமி நிகழ்த்துவார்.. எப்படி தானே ஷிர்டி சாயி என ஷிர்டி பக்தர்களுக்கு சுவாமி அனுபவப்பூர்வமாய் உணர்த்தினாரோ அப்படி தானே ஸ்ரீ சத்ய சாயி என சுவாமி பக்தர்க்கு ஸ்ரீ பிரேம சுவாமி உணர்த்துவார்... அது ஆன்மா வரை சென்று திடமான உறுதிப்பாட்டை ஏற்படுத்தும்... அவர் வரும்போது வரட்டும் இப்போதென்ன அதைப் பற்றி? என மனிதர்கள் அறியாமையால் பேசலாம்... ஆனால் சுவாமி பக்தர்கள் தெளிவானவர்கள்.. சுவாமி மேல் திடமான பக்தியும்,  நம்பிக்கையும், சுவாமி அனுபவமும் மிக்கவர்கள்... 

நாளைக்கு வருகிற பண்டிக்கைகாக நாம் இன்றே தயாராகிறோம்.... அது போல் நாம் ஸ்ரீ பிரேம சுவாமிக்காக ஆவலோடு பிரார்த்தனை உணர்வோடு அவருக்காக காத்திருக்க வேண்டும்...! இந்த சத்தியத்தை இதயத்தில் இறுத்தியபடி வர இருக்கும் 96 ஆம் அவதாரத் திருநாள் கூடுதல் சிறப்பம்சம் வாய்ந்தது தான்!!

இனி எந்த யுக சுழற்சியிலும் பரப்பிரம்மமே அவதாரம் எடுத்து வரப்போவதில்லை... சாயி அவதாரங்களே கடைசி... இதுவும் சுவாமி முன்பு சொன்னதே... ஆக ஷிர்டி சுவாமி ஆரம்பித்து வைத்து சுவாமி தொடர்ந்து ஸ்ரீ பிரேம சுவாமியோடு நிறைவு பெற இருக்கிறது பரபிரம்ம சாயி அவதார நோக்கம்... ஒரு யாகத்தில் பூர்ணாஹுதி மிகவும் முக்கியமான கட்டம்... அதில் தான் யாகத்தின் பயனும்.. பலனும் அடங்கி இருக்கிறது... அதைப் போல் சாயி அவதார வேள்வியில் ஸ்ரீ பிரேம சுவாமியே பூர்ணாஹுதி... அதில் தான் இந்த ஒட்டு மொத்த உலகமும் புனர் ஜென்மம் பெறப் போகிறது என்பது உறுதி!!

இந்த கலியுகத்தில் கல்கி அவதாரம் ஸ்ரீ ஷிர்டி சாயி - ஸ்ரீ சத்ய சாயி - ஸ்ரீ பிரேம சாயி என மூன்றாக பிரிந்திருக்கிறது... இதற்கு முந்தைய கலியுகத்திலும் பிந்தைய கலியுகத்திலும் இப்படி ஒரு பேரற்புதம் நிகழப்போவதில்லை...

ஸ்ரீ ஷிர்டி சாயியாக நான் உணவை சமைத்தேன்... ஸ்ரீ சத்ய சாயியாக நான் உணவை பரிமாறினேன்... ஸ்ரீ பிரேம சாயியாக நான் அந்த தெய்வீக உணவை ருசிக்க வைப்பேன்... அதை அனைவரும் உட்கொண்டு பரமானந்தம் அடைவர் என சுவாமியே அந்த சத்திய சாராம்சத்தை பகிர்ந்திருக்கிறார்!

(ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாயி ஆனந்ததாயி/ ஆசிரியர்: கருணாம்பா ராமமூர்த்தி/ 

 Journey with Sai, copyright 2002 by the Convenor, Sri Sathya Sai Books & Publications Trust, Prasanthi Nilayam)

பசுவின் வயிற்றுக்கு நான் எதுவும் தர மாட்டேன் ஆனால் பசு மட்டும் என் வயிற்றுக்கு பால் தர வேண்டும் என நினைப்பது போல் தான்... நான் சுவாமியை பூஜை செய்து ஆரத்தி எடுப்பேன் ஆனால் சுவாமி எது சொல்லி இருந்தால் எனக்கு என்ன? என்று இருப்பது அல்லவா...! 

சுவாமி சொல் வேறு சுவாமி வேறல்ல... சுவாமியின் சொல்லை கடைபிடிப்பது வேறு சுவாமிக்கான பூஜை வேறல்ல... இரண்டும் ஒன்று தான்!!

ஸ்ரீ பிரேம சுவாமிக்கான ராஜபாட்டையை விரித்து இந்த 96 ஆம் அவதாரத் திருநாள் அவரின் துரித வருகைக்காக வழிவகை செய்யட்டும்... இதயக்கரம் குவித்து அனைவரும் ஸ்ரீ பிரேம சுவாமியின் திருவருகைக்காக பக்தியோடு காத்திருப்போம்...அதற்கு கட்டியங்கூறும் விதமாகவே 96ஆம் அவதார திருநாள் அமைகிறது...!!

வாழ்க்கையே ஒரு நீண்ட காத்திருப்பு தான்... நமது அந்தக் காத்திருப்பை சுருக்கி மிகவும் அர்த்தமுள்ளதாக்கத்தான் போகிறார் ஸ்ரீ பிரேம சுவாமி!!


  பக்தியுடன்

வைரபாரதி 


🌼 Designed by Sri Sathya Sai Yugam Blog 🌼
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக