தலைப்பு

வியாழன், 11 நவம்பர், 2021

சுவாமியின் லீலைகளை பரிகாசம் செய்தபடி சவால் விட்டு தோற்று ஓடிய ஹட யோகி எல்.எஸ்.ராவ்!


சுவாமி புரிகின்ற திருலீலைகள் யாவும் பொய்.. அதை நிரூபிக்கிறேன்..‌என் எதிரில் அவரை வந்து லீலை புரிய சொல்லுங்கள் என்று சவால் விட்டு.. நான் அதை விட லீலைகள் செய்வேன் என இறுமாந்து பேசி... சாயம் வெளுத்து திசை தெரியாமல் தலை தெறிக்க ஓடிய ஒரு ஹடயோகியின் சம்பவங்கள் மிக சுவாரஸ்யமாய் இதோ...


ஒருமுறை பம்பாய் (மும்பை) நகரமே கலவரப்பட்டது... ஒரு அதிசய மனிதரை காண அலைமோதியது... அந்த அதிசய மனிதர் தான்...ஹடயோகி எல்.எஸ் ராவ். அவர் அமிலங்களை கடகட கடவென தண்ணீர் போல் குடிப்பவர்... கண்ணாடித் துண்டுகளை கற்கண்டு துண்டுகளாய் ரசித்து ருசித்து கொண்டா கொண்டா என சபையோர் முன் சாப்பிட்டு ஏப்பம் விட்டு கை தட்டல்கள் பெறுபவர்... தனது யோக ஸித்திகளின் மூலம் இப்படி அவர் செய்து வந்ததால் அவருக்கு புகழும் பணமும் குவிந்தது...ஆக அவர் குணம் குனிந்தது... கூட்டம் சேரச்சேர தன்னை மறந்தார் அந்த ஹடயோகி... இப்படி இருக்கையில்... சுவாமியை பற்றி அவரிடம் சுற்றி உள்ளவர் பேச.... "அவர் என்னைப் போல் ஒரு ஹடயோகி தான்!" என சுவாமியை பற்றி அவர் தனது கற்பனைச் சான்றிதழை வாய்வழி பிரசுரிக்க ஆரம்பிக்கிறார்... அதோடு விட்டால் பரவாயில்லை... அப்போது இறுமாந்து அவரின் நாக்கு சுளுக்கிக் கொள்கிறது... பல யோகிகள் விழுகின்ற இடமும் இதுவே... "அவர் என்ன பிரமாதமான காரியத்தை செய்துவிட்டார்...? ஒரு லட்ச ரூபாய் பந்தயம் கட்டுகிறேன்...நான் செய்பவற்றை அவர் செய்யட்டும்!! (அவர் சொல்வது... கண்ணாடியை கடித்து தின்பதும்...அமிலம் அருந்துவதும்) பார்க்கலாம்!" என்று சபையினர் முன் சவால் விடுகிறார்...  இது பம்பாயின் புகழ் பெற்ற வாரப் பத்திரிகையான "பிளிட்ஸில்" வெளிவருகிறது...‌

பம்பாய் நகரத்து படித்த மக்கள் இவரை மேலும் கிளர்ச்சி அடைய வைக்கிறார்கள்... பற்றி எரிகின்ற வீட்டில் பெட்ரோல் ஊற்றுவதைப் போல் "நீங்கள் அப்படி செய்யக்கூடிய சாகசம் தான் என்ன?" எனக் கொக்கியை வீசுகிறார்கள்... "நானா? நான் நீரின் மேல் நடப்பேன்.. உடம்பைப் பஞ்சாக்கிக் கொள்வேன்... நீரில் நடந்தால் என் உடல் மூழ்காது... இதை பாபா செய்து காட்ட முடியுமா? ஒரு லட்ச ரூபாய் பந்தயம்" என்று ஆணவச் சொற் குதிரையை அவிழ்த்துவிடுகிறார்... அந்த ஆணவக் குதிரை இவரையே இறுதியாக மேயப் போகிறது என தெரியாமல்...அவர் விரித்த வலையில் அவரே மாட்டிக் கொள்கிறார்... 


இந்த அதிசய அறிவிப்பு "பிளிட்ஸ்" பத்திரிகையில் முதல் பக்கத்தில் எல்.எஸ்.ராவ் படம் ஒருபுறம் மற்றும் சுவாமி  படம் இன்னொரு புறம் என வந்திருந்தது... பாபா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? எனும் ஆர்வ மிகுதியில் பம்பாய் கடலலையாய் மனித மன அலைகள் கொந்தளித்தன... பக்குவப் பரம்பொருளான சுவாமி எதுவுமே பேசவில்லை... அந்த ஹட யோகியால் அவ்வாறு நீரில் நடக்க முடியுமா? என பதில் கேட்டு ஆயிரக்கணக்கான கடிதங்கள் அந்தப் பத்திரிகைக்கு வந்தன... அதையும் அந்த பத்திரிகை வெளியிட்டது... இதை வியாபாரமாக்க திட்டமிட்ட சில பம்பாய் வியாபாரதாரிகள் பெரிய இடத்தை தேர்ந்தெடுத்து.. பெரிய நீச்சல் குளம் ஏற்பாடு செய்யப்பட்டு "எல்.எஸ்.ராவ் நீரில் நடக்கப் போகிறார்" என விளம்பரப் பதாகைகள் ஒரு இடம் பாக்கியில்லாமல் எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப் பட்டன... கூட்டம் குவிந்தன... வீடுதோறும் இதைப் பற்றியே பேச்சு... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொள்கிறார்கள்... பொதுமக்கள் யோகியின் சாகச சாதனைகளை ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்... பத்திரிகை நிருபர்கள் ஈக்களாய் குவிந்தனர்... அந்த நாளும் வந்திடாதோ என்பது போல் அந்த நாள் அன்று அரங்கேறியது... காட்சி ஆரம்பமாயிற்று... எல்லோரும் மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டு என்ன நடக்கப் போகிறதோ என புருவம் அசையாமல் பார்த்த வண்ணம் இருந்தனர்...


அந்த ஹடயோகி அரங்கிற்குள் வருகிறார்.. மக்கள் ஓ என்று சப்தம் எழுப்புகிறார்கள்... சிலர் கால்களில் விழுகிறார்கள்.. அவரும் சீரியஸான முகத்தை வைத்து சாகஸத்தில் இறங்குகிறார்... முதலில் மூச்சைப் பிடித்தபடி சில பயிற்சி மேற்கொண்டு... பத்து நிமிட தியானத்தில் இருக்கிறார்... பிறகு சாதாரணமாக புல்வெளியில் நடக்கப் போவது போல் சாதாரண முகபாவனையுடன் தண்ணீரில் கால்களை வைக்கிறார்... அந்த நொடி சுற்றி முற்றி எந்த சப்தமும் இல்லை.. பார்த்திருப்பவர் முகத்தில் ஈ ஆடவில்லை... குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கான மயான அமைதி... அப்படி இருக்கையில் வலது காலை வைத்த அவரது முதல் அடி .. அந்த அடி.. அதே அடி .. அவர் அகந்தையை அடித்தது.. பத்தடி ஆழத் தண்ணீரில் மூழ்கிப் போகிறார்... காணாமல் மறைந்து விடுகிறார்... கரையில் நின்றவர்கள் தண்ணீரில் குதித்து அவரை கரை ஏற்றி சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது... அவர் விழும் போது கொப்பளித்த தண்ணீர் போல் அதைப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தவர்கள் இதயம் கொந்தளிக்கிறது...தண்ணீரைச் சுற்றி வெடிக்கும் எரிமலைக் குன்றுகளாய் பார்வையாளர்களின் கண்கள் சிவக்கின்றன.. ஏமாறும் வரை தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது மனதிற்கு தெரிவதில்லை.. பொருள் விரயம்.. நேர விரயம்... அந்த ஹடயோகி மூர்ச்சை தெளிந்து எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்க்கிறார்... எதற்கும் மக்கள் மசியவில்லை... கண்ணாடியை கடிக்கிறார்.. அமிலத்தை குடிக்கிறார்.. நம்புங்கள் என்கிறார்... இவை எல்லாம் ஏமாற்று வித்தை.. பணத்தை திருப்பி கேட்க அந்த அமைப்பாளர்களிடம் கியூ கட்டி நிற்கிறார்கள்...

பிறகு பிளிட்ஸ் பத்திரிகை அந்த களேபர நிகழ்வையும் பதிவு செய்திருந்தது... இதைப் போல் போலியான வாக்குறிதிகளில் ஏமாற வேண்டாம் என்ற குறிப்பும் அதில் இருந்தது...

"சாதனைகள் பெரிது அல்ல... அவற்றைப் பயிற்சிகளின் மூலம் யாரும் செய்யலாம்... அதன் பயனாக கிடைக்கும் அடக்கமும் பணிவும் தான் மிகவும் பெரிது... இதனை அடைய முடியாவிட்டால் மூங்கில் கூடையில் தண்ணீர் இறைப்பதற்கு சமம்.. கூடை தான் மேலும் கீழுமாக வருமே தவிர தண்ணீர் அதில் தங்காது... சாதனைகளினால் கர்வம் அதிகமானால் பயிற்சிகள் தான் தொடருமே தவிர ஞானம் வாய்ப்பதே இல்லை!"

இதைச் சொன்னது யார் என பார்க்கிறீர்கள்... சாட்சாத் நம் சுவாமி தான்..

மேலே சுவாமி சொன்ன வாசகங்களில் ஒரு வார்த்தை கூட விலக்காமல் முழுதாய் பிரசுரமாகி இருந்தது... ஆம் அதே பத்திரிகையில் தான்... பிலிட்ஸ் பத்திரிகை... அந்தப் பத்திரிகை ஆசிரியர் கராஞ்சியா தீவிரமான சுவாமி பக்தர்..

சுவாமியின் ஒவ்வொரு அவதார வைபவ தினத்தன்றும் சிறப்பு மடலும் வெளியிட்டு வருகிறார்கள்...அது மட்டுமல்ல...

அந்த சுவாமி வாசகங்களோடு 

"வாழ்க்கையில் எனக்கு ஒளி பிறக்க காரணமாக இருந்தது பகவான் பாபாவின் அருட்பார்வை தான்" என்ற தன் சொந்த சுவாமி அனுபவங்களையும் தன்னுடைய பத்திரிகையிலேயே அவர் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது!!


(ஆதாரம்: பகவான் பாபா / பக்கம் : 253/ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


🌹வாசித்தவர்கள் கவனத்திற்கு:

இந்தப் பதிவானது ஹடயோகம் தவறு என்றோ... ஹடயோகி எல்.எஸ் ராவ் தவறானவர் என்பதையோ குறிப்பிடுவதற்காக அல்ல... ஹட யோகிகளால் தண்ணீரில் நடக்க முடியும்.. நெருப்பில் படுக்க முடியும்... சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.. இமயத்து யோகிகள் அவ்வாறு செய்வதை சிலர் பார்த்து தங்கள் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்... ஹடயோக விஞ்ஞானம் முறையான பயிற்சியால் சாத்தியமாகும் ஒன்று தான்... அது பிரச்சனை இல்லை... அகந்தையை கரைக்க முடியாத ஆத்ம சாதனை ஆத்ம சாதனையே அல்ல... அகந்தையிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்... பிறரை இழிவு படுத்துகிறேன் என நாம் நினைக்கப் போனால் நாம் தான்  இழிவாவோம் என்பதை உணர்த்துவதற்காக பதிவான பதிவே இது...

சுவாமி அனைவரோடும் அன்பாகவே இருப்பவர். ஹடயோகி எல்.எஸ்.ராவ் கூட சுவாமியின் குழந்தையே... மகன் தாயிடம் சவால் விட்டால் பதிலுக்கு தாயும் சவால் விடுவாளா? மாட்டாள். என் குழந்தை அறியாமையில் பேசுகிறான் என்றே நினைப்பாள்... அப்படியே சுவாமியும்...

சுவாமி நிகழ்த்துவது செப்படி வித்தையல்ல அது இறைப் பேராற்றல்... எந்த மந்திரவாதியும் மக்களுக்கு சேவை செய்ததாக இதிகாச/ புராணத்தில் கூட இல்லை... சுவாமி மனித சேவைக்காகவே அவதாரம் எடுத்திருப்பவர்... அதை எல்.எஸ்.ராவ் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்... நாம் புரிந்து கொண்டாலும்.. கொள்ளாவிட்டாலும்  இறைவன் எப்போதும் இறைவனே!! 

அனைத்தும் அறியும் சுவாமி அமைதியாகவே இருக்கிறார்... எதுவுமே அறியாத மனிதன் தான் அலட்டிக் கொண்டும் புலம்பிக் கொண்டும் திரிகிறான்... சுவாமி மேலான பக்தியே மனிதனை சாவகாசப்படுத்தி.. சமாதானமாக்கி...புத்தியை தெளிய வைத்து... மனதை சலனமில்லா நிலைக்கு கொண்டு வந்து... அகந்தையை கரைத்து... அந்த ஆணவக் கரைத்தலை வைத்தே சுவாமிக்கு ஆரத்தி காட்டுகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக