தலைப்பு

புதன், 24 நவம்பர், 2021

ஒரு பல் டாக்டருக்கு தொண்டையில் ஏற்பட்ட வறட்டு இருமலை கேன்சராவதற்கு முன் தடுத்த கருணாமூர்த்தி சுவாமி!

சுவாமி மேல் பெரிதாக ஈடுபாடில்லாத ஒரு பல் மருத்துவருக்கு தொண்டையில் கேன்சர் அறிகுறி தென்படுவதற்கு முன் தனது பக்தராக்கி தடுத்தாட் கொண்ட மகத்துவ சுவாமியின் மருத்துவ சிகிச்சை சுவாரஸ்யமாய் இதோ...


டாக்டர் கேக்கி ஒரு பல் மருத்துவர். பார்ஸி வகுப்பை சேர்ந்தவர். பம்பாயில் (இப்போது மும்பை) பிரபல வைத்தியராக பணியாற்றி வந்தார். டாக்டர் கேக்கியின் சகோதரிக்கு பிரசவத்தில் கோளாறு ஏற்படுகிறது... அதைப் பற்றி அவர் தன் நண்பரிடம் தெரிவிக்க அவர் சுவாமி படமும் விபூதியும் கொடுக்கிறேன்... கொண்டு போய் கொடுங்கள்.. சுவாமி கவனித்துக் கொள்வார் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்... டாக்டருக்கோ பெரிதாக நம்பிக்கை இல்லை.. நீங்களே கொடுத்துவிடுங்கள் என்கிறார்... கொடுக்கிறார்... சுகப்பிரசவம் ஆகிறது.. அது சுவாமியால் தான் நேர்ந்தது என அப்போது அவர் உணரவே இல்லை... எல்லோருக்கும் சுவாமியை உணர ஒரு காலகட்டம் வருவது போல் அவருக்கும் வந்தது....

சில மாதங்களில் கேக்கி ஒரு தீவிர நோய்க்கு ஆளாகிறார்... பல் விஷயம் என்றால் அவரே கவனித்துக் கொள்வார்.. அது தொண்டையில் ஏற்பட்ட இருமல்... தாங்க முடியாத இருமல்... இருமும் போது இதயக் கூடே உடுக்கையாய் அசைகிறது... அவருக்கு புகை பழக்கமே இல்லை... நில நடுக்க சப்தமாய் ஒவ்வொருமுறையும் இருமுகிறார்... குடலே வெளியே வந்து விடும் அளவிற்கு இருமுகிறார்... புகழ்பெற்ற ஈ.என்.ட்டி நிபுணரை சந்திக்கிறார்... அவர் கேக்கியை சோதிக்கையில் கழுத்துப் பகுதியில்  கோலி உருண்டை அளவிற்கு ஒரு கட்டி இருப்பதை கண்டுபிடிக்கிறார்...  "அது புற்று நோய் அடையாளமாக இருக்கலாம் எதற்கும் உடனே அறுவை சிகிச்சை செய்வது நல்லது " என்கிறார்... 

இருமலை விட இந்த செய்தி அதிகமாக சப்தமிட்டு இதயத்தை வலிக்கச் செய்தது.. அப்போது தான் தன் திருமண விஷயமாகவும் பேசி அது கைகூடி வர... பூ மேல் பற்றி எரியும் பட்டாசுப் பொறியாய் கல்யாணக் கனவு சிறுக சிறுக பொசுங்குகிறது... தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களையும் அவருக்கு தெரியும்...அது நேர்ந்தால் இரண்டு ஆண்டு வரை பேசவே முடியாது... ஊமையான ஒரு பல் மருத்துவரிடம் யார் வந்து பல்லைக் காட்டி வைத்தியம் பார்ப்பர்...? ஒருவேளை கேன்சராக மாறிவிட்டால்... மணம் முடிக்கும் நேரத்தில் உயிரே முடிந்துவிடுமோ என்ற அச்சம் இருமல் தொண்டையை இறுகப் பிடித்தது... உலை பொங்கும் பானையை விதி தனது இடது காலால் தட்டிவிட்டு பல்லைக் காட்டி அந்த பல் மருத்துவரிடம் சிரிப்பது போல் தோன்றியது...

தனது பிரச்சனையை பெண் வீட்டாரிடம் தெரிவிக்கிறார்... அறுவை சிகிச்சை செய்துவிட்டபின் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்...இது அவர்கள் தரப்பு நியாயம்.. சரியானதே... முதலில் தொண்டையில் கத்தி பிறகு தான் கழுத்தில் தாலி என்று சொல்லிவிடுகின்றனர்... தொண்டைக்கும் கழுத்துக்கும் என்ன தொன்னூறு கிலோமீட்டரா தூரம்? ஆனால் அவர் பார்த்து நிச்சயமாகி இருந்த பெண்ணோ "இனியும் தள்ளிப் போட வேண்டாம் ... நாம் திருமணம் செய்து கொள்ளலாம்... பிரச்சனையை சேர்ந்தே சந்திக்கலாம்" என்கிறார்... மனைவி அமைவதெல்லாம் சுவாமி கொடுத்த வரம் என்பதன் விளக்கமாக அவர்கள் இருக்க... வீட்டில் இல்லற விளக்கேற்ற சம்மதிக்கிறார்கள்... பிறகு ஒரு நாள் டாக்டர் கேக்கியின் நண்பர் தூய பக்தர் சுவாமி தூதுவர் தெய்வத்திரு கஸ்தூரி சாயிராம் எழுதிய சத்யம் சிவம் சுந்தரம் காவியத்தை அவருக்கு வழங்கியும்... அது திருப்பப்படாமலேயே இருக்கிறது... அதை திருப்பினால் தான் அவருக்கு திருப்பம் என்பது அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...

அந்த பல் டாக்டர் பல்லைப் போல் இறுகியே இருந்தார்... பனியைப் போல் உருகிடும் அவர் பொழுதுக்காக காலமும் காத்திருந்தது... இருமல் அவருக்கு தினசரி வந்தாலும்...அந்தப் பொழுதோ அவருக்கு ஒரு இரவில் வந்தது...

ஒரு நாள் இரவு நேரம் தூக்கம் வரவில்லை அந்தப் புத்தகத்தை திருப்புகிறார்... திருப்பியவர் ... அதற்குள்ளேயே  மூழ்கிவிட ஆரம்பிக்கிறார்... பக்கங்கள் அவரை தன் பக்கம் இழுத்துக் கொண்டன... அந்தப் பல் பனியாக ஆரம்பிக்கிறது... ஒரே இரவில் சுவாமி புத்தகத்தை படித்து முடிக்கிறார்... சுவாமி மேல் நம்பிக்கையும் பக்தியும் உதயமாகிறது! அன்றிலிருந்து பிரார்த்தனையும் செய்ய தொடங்குகிறார்...

பக்தி மணத்தோடு சேர்ந்து அவர்கள் இருவருக்கும் நல்லபடியாக மணமும் நிகழ்கிறது!  தேனிலவுக்கு பெங்களூர் வருகிறார்கள்.. தெய்வ நிலவு அப்போது அங்கே வொயிட் ஃபீல்ட்டில் ஒளிவீசிக் கொண்டிருந்தது... டாக்டருக்கோ செல்ல ஆர்வம்.. ஆனால் மனைவி சம்மதிப்பாளா? என்ற வினா கொக்கி போக விடாமல் தடுக்கிறது.. சுவாமி அழைத்தாலன்றி யாரும் அவரது அவதாரத் திருமண்ணை பாதத்தால் தொழுதல் இயலாது...!

பம்பாய் வருகிறார்கள் இறுதியாக... ஆனால் இருமலோ விட்டபாடில்லை... அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள பயம்... தன்னை நம்பி ஒரு பெண் வேறு... தொண்டையில் உள்ள கட்டி முற்றி புற்றுநோயாகிவிட்டால்? என பற்பல கவலைகள் பல் மருத்துவர் கேக்கிக்கு...இந்த நிலையில் சுவாமி பம்பாய்க்கு வருகிறார்.. கேள்விப்பட்ட கேக்கிக்கு கால்கள் தரையில் இல்லை..‌ ஒரு குருஷேத்திரமே மனதிற்குள் தினந்தோறும் நிகழ.. தர்ம ஷேத்திரத்திற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டுன் என தயக்கத்தோடு கேட்க... இல்லற எஜமானியோ அவசியம் போகலாம் என ஆச்சர்யத்தை அவர் மேல் தூக்கி எறிகிறாள்... பெங்களூரில் நிகழ்ந்த சுவாமி தரிசனத்திற்கே உங்களோடு செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்ததை பகிர... அவருக்கு மேலும் ஆச்சர்யம் பூச்சொரிய .. இருவரும் உடனே கிளம்புகிறார்கள்..‌ சுவாமி தரிசனம் ஆகிறது... உன் தாயாரோடு நாளை வா என சுவாமி உத்தரவிடுகிறார்..!

அடுத்த நாள் காலை... மனைவி மற்றும் தாயோடு சுவாமி தரிசனத்திற்கு செல்கிறார் டாக்டர். தாயாருக்கு சுவாமி விபூதி சிருஷ்டித்துத் தர.. "உனக்கு ஆஸ்துமா இருக்கிறது தானே..‌இதை உட்கொள்... சரியாகிவிடும்!" என்கிறார்...

உடனே தாயாரோ "சுவாமி.. என் மகனுக்கு புற்றுநோய் வரும் என டாக்டர்கள் சொல்கிறார்களே!" என கால்களில் விழுந்து கதறி அழுகிறார்..

"தாயே... கேக்கி உன் மகன் அல்ல... என் மகன்.. அவனுக்கு புற்றுநோய் வரும்படி நான் விடமாட்டேன்!" என சுவாமி கூறியதும் மெய் சிலிர்த்துப் போகிறார் டாக்டரின் தாயார்...

"சுவாமி.. இவளுக்கும் உடம்பு சரியில்லை" என தன் மனைவியை கேக்கி சுட்டிகாண்பிக்க... சுவாமி சிரித்தபடி "உனக்கு இன்னும் தெரியவில்லையா...! உன் மனைவி கர்ப்பமாயிருக்கிறாள்...ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்!" என்கிறார். மேலும் டாக்டர் கேக்கிக்கு சிருஷ்டி விபூதி அளித்து ஆசி கூறி அனுப்புகிறார்... இருமலோடு வந்தவர்... இதமான இதயத்தோடு செல்கிறார்... சிருஷ்டி விபூதி உட்கொள்ள ஆரம்பிக்கிறார்... படிப்படியாக இருமல் காணாமல் போகிறது... சுவாமி சொன்ன தேதியிலேயே அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறக்கிறது...

ஒரு நாள் திடீரென இருமல் கண்டது.. பயந்தே போய்விட்டார் டாக்டர்.... எக்ஸ்ரே எடுத்த நிபுணரின் சோதனை ஒருபுறம் நிகழ்கிறது... இவரோ பயந்து நடுங்கியபடி மருத்துவமனை கட்டிலில் சாயிராம் சாயிராம் என சொல்லியபடி சாய்ந்திருக்கிறார்... நிபுணர் சிரித்தபடியே வந்து கேக்கியின் தோளில் கை வைத்து இது அந்த இருமல் இல்லை... சாதாரண இருமல் தான்... உங்கள் தொண்டையில் உருவாகியிருந்த கட்டி சென்ற இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.. பெரிய மிராக்கிள் இது!" என சொல்லவும்... அமைதிப் பெருமூச்சோடு ஆனந்தக் கண்ணீரையும் சேர்த்து பொழிகிறார் டாக்டர் கேக்கி...

(ஆதாரம்: பகவான் பாபா / பக்கம் : 249 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


நோய்களையும் பிரச்சனைகளையும் நாமே உருவாக்குகிறோம்..‌அதற்கான கர்ம நிவர்த்தியை சுவாமியே வழங்குகிறார்...! கர்மாவை உருவாக்கிக் கொள்ளும் மனிதனால் அதை போக்கிக் கொள்ள சுவாமியின் பாதத்தில் சரணடைந்தே ஆக வேண்டும்... வேறு வழியே இல்லை... சுவாமி சொல்படி வாழ்வது ஒன்றே கர்ம கரைதலுக்கான ஒரே உபாயம்... அதற்கு நிபந்தனையற்ற தூய பக்தியும்... பக்தியால் ஏற்படுகின்ற மனப்பக்குவமும்... மனப்பக்குவம் தருகின்ற "ஏற்றுக் கொள்ளும் தன்மையுமே" அவசியப்படுகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக